பிரதமர் அலுவலகம்

மேற்கு புறவழி விரைவுச் சாலையில் குண்ட்லி - மனேசார் பகுதி மற்றும் பல்லாப்கர் - முஜேசர் மெட்ரோ தொடர்பு சேவை தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 19 NOV 2018 8:02PM by PIB Chennai

ஹரியானா ஆளுநர் திரு. சத்யதேவ் நாராயண் ஆர்யா அவர்களே, ஹரியானாவின் செல்வாக்கு மிக்க முதல்வர் திரு. மனோகர் லால் கட்டார் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் சவுத்ரி வீரேந்திர சிங் அவர்களே, ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களே, மாநில அரசின் அனைத்து அமைச்சர்களே, சிலர் இங்கு அமர்திருக்கிறீர்கள், சிலர் அங்கே அமர்ந்திருக்கிறீர்கள்; மற்றும் இங்கு பெருமளவில் கூடியிருக்கும் ஹரியானாவின் எனதருமை சகோதர சகோதரிகளே.

உங்கள் மத்தியில் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு என பல முறை கிடைத்திருப்பதாக இப்போது தான் ஹரியானா முதல்வர் சொல்லிக் கொண்டிருந்தார்; இப்போது குறுகிய கால இடைவெளியில் மீண்டும் ஒருமுறை வந்திருக்கிறேன். கடந்த முறை நான் இங்கு வந்தபோது, சவுத்ரி சோட்டு ராம் ஜி யின் பெரிய சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தச் சிலை ஹரியானாவின் பெருமையின் சின்னமாக உள்ளது. இன்றைக்கு, மீண்டும் ஒரு முறை, நான் ஹரியானாவுக்கு வந்திருக்கிறேன். இந்த மாநிலம் ரூ.3300 கோடிக்கும் மேலே பெற்றிருக்கிறது. இன்றைக்கு, அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியைக் காண்பதற்கு உறுதியான ஒரு அடியெடுத்து வைத்திருக்கிறது ஹரியானா.

 

நண்பர்களே,

ஹரியானாவில் அறிவின் ஒளி மட்டுமின்றி, தைரியத்தின் கதைகளும் நிறைய இருக்கின்றன. 18000 அடி உயரத்தில் லடாக்கின் ஹெஜங் மலைப் பகுதியில் நடைபெற்ற போரின் 56வது ஆண்டு தினம் நேற்று வந்தது. பரம்வீர் சக்கரா விருது பெற்ற மேஜர் ஷாய்ட்டன் சிங் தலைமையில் ஹரியானாவின் வீரர்கள் போரில் தீரத்துடன் பங்கேற்றனர். உயிர்த் தியாகம் செய்தவர்களில் பலர் ஹரியானா பகுதியைச் சேர்ந்தவர்கள். ஹரியானா என்பது தைரியம், பொறுமை, புத்திசாலித்தனத்துக்காக தலைநிமிர்ந்து நிற்கக் கூடியது என்று அவர்கள் காட்டியுள்ளனர். ரெஜாங் முகாமில் உயிரிழந்த வீரம் மிக்க வீரர்களுக்கு நான் மரியாதை செலுத்திக் கொள்கிறேன், அவர்களுக்கு சல்யூட் செய்கிறேன்.

நண்பர்களே,

இந்த நாள் ஹரியானாவுக்கு மிகவும் முக்கியமான  நாள். குண்ட்லி - மனேசார் - பல்வால் விரைவுச் சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. முதலாவது கட்டப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக குண்ட்லியில் இருந்து மனேசார் வரையிலான 83 கிலோமீட்டர் நீளத்துக்கான சாலை இன்றைக்கு திறக்கப்படுகிறது. இத்துடன் சேர்த்து 135 கி.மீ. நீளத்துக்கான விரைவுச்  சாலை இப்போது தயாராகிவிட்டது. அதேசமயத்தில், ரூ.500 கோடி செலவில் உருவாக்கப்பட்ட பல்லாப்கர் - முஜேசர் மெட்ரோ பாதையும் திறக்கப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்களும், இந்தப் பகுதியில் போக்குவரத்து தொடர்பில் ஒரு புரட்சியை உருவாக்கும். அதேசமயத்தில் ஸ்ரீவிஸ்வகர்மா கவ்சால் பல்கலைக்கழகத்தின் மூலம் இந்தப் பகுதி இளைஞர்கள் ஓர் உத்வேகத்தைப் பெறுவார்கள்.

சகோதர சகோதரிகளே,

இன்றைய நிகழ்ச்சியானது, இரண்டு சூழ்நிலைகளை ஒப்பிடுவதற்கு அழைப்பு விடுக்கிறது. முதலாவது விஷயம், ஒரு தீர்மானத்துடன் சிலவற்றை நாம் செய்யும்போது, அது நிறைவு பெறுகிறது. பாரதிய ஜனதா கட்சி அரசுகளின் பணி கலாச்சாரம் மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளின் சூழ்நிலையைக் காட்டுகிறது. இரண்டாவது விஷயம், முந்தைய அரசின்  பணி கலாசாரம் இதன் மூலம் வெளிப்படுகிறது. அது நமக்கு தொடர்ந்து நினைவுக்கு வந்து கொண்டிருக்கிறது. 8 - 9 ஆண்டுகளுக்கு முன்பே உங்களுக்கு விரைவுச் சாலை கிடைத்திருக்க வேண்டும். இருந்தபோதிலும், அவ்வாறு நடக்கவில்லை. முந்தைய அரசின் பணி கலாசாரம் காரணமாக விரைவுச் சாலை பணி 12 ஆண்டுகளுக்கு இழுத்துக் கொண்டு போனது.

நண்பர்களே,

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போதே இந்த விரைவுச் சாலை தயாராகி இருக்க வேண்டும். ஆனால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு என்ன நடந்ததோ, அதுவே இந்த விரைவுச் சாலை திட்டத்துக்கும் நடந்தது. பிரகதி (PRAGATI) கூட்டங்களில் இந்தத் திட்டத்தைப் பற்றி நான் ஆய்வு செய்யத் தொடங்கியபோது, பல குறைபாடுகள் கண்டறியப் பட்டது எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வந்ததாலும், ஹரியானாவில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு பணியின் வேகம் துரிதப்படுத்தப் பட்டதாலும், விரைவுச் சாலை இன்றைக்கு திறக்கப்பட்டுள்ளது. நீண்டகால காத்திருப்புக்கு முடிவு ஏற்பட்டிருக்கிறது.

சகோதர சகோதரிகளே,

பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது, பணிகளை நிறுத்தியது ஆகிய காரணங்களால் ஹரியானா மற்றும் ஒட்டுமொத்த டெல்லி தலைநகரப் பகுதி மக்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டது. மக்களின் பணம் எவ்வாறு வீணடிக்கப்பட்டது என்பதையும், மக்களுக்கு எவ்வாறு அநீதி இழைக்கப்பட்டது என்பதையும்,  காட்டும் வகையில் முந்தைய அரசின் செயல்பாடு அமைந்திருந்தது.  இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட போது இதன் மதிப்பீடு ரூ.1200 கோடி. இவ்வளவு ஆண்டு காலத்தில் இதற்கான செலவு மூன்று மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துவிட்டது. இந்தப் புறவழி விரைவுச் சாலை திட்டம் உரிய காலத்தில் முடிக்கப்பட்டிருந்தால், டெல்லியின் போக்குவரத்து சூழ்நிலை வேறு மாதிரியாக இருந்திருக்கும். வேறு மாநிலங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் டெல்லி வழியாகச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்திருக்காது. டெல்லிக்குள் நுழையாமல் அல்லது அதன் போக்குவரத்தைப் பாதிக்காமல் புறவழியாகவே போக்குவரத்து சென்றிருக்கும். இந்த விரைவுச் சாலை திறக்கப்படுவதால், டெல்லிக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும்.

நண்பர்களே,

இந்த விரைவுச் சாலை டெல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மாசு அளவைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றும். ஒரு வகையில் வாழ்வதை எளிதாக்கும், பயணத்தை எளிதாக்கும். அத்துடன் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்படும். இந்த விரைவுச் சாலை வசதியைப் பெற்றதற்காக ஹரியானா மற்றும் டெல்லி தலைநகரப் பகுதி மக்களுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லியை சுற்றி 270 கிலோ மீட்டர் நீளத்துக்கு விரைவுச் சாலை இணைப்புகள் முடிக்கப் பட்டுள்ளன.

சகோதர சகோதரிகளே,

இன்றைக்கு பல்லாப்கருடன் மெட்ரோ தொடர்பு மூலமாக முஜேசர்  இணைக்கப்பட்டுள்ளது. இப்போது பல்லாப்கர் பகுதியும் மெட்ரோ வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பகுதி மக்கள் டெல்லிக்குப் பயணிப்பதற்கு இது உதவுவதுடன், அவர்களுடைய நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தவும் உதவும்.

நண்பர்களே,

போக்குவரத்து தொடர்பு வசதி என்பது தேவையான ஒன்று என்று மட்டும் எங்களுடைய அரசு கருதவில்லை. நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு, அதிகாரம் அளித்தல் ஆகியவற்றுக்கான வழிமுறையாகவும் இது இருக்கும் என எங்கள் அரசு கருதுகிறது. இதுபோன்ற சாலை இணைப்பு, ரயில் இணைப்பு, நீர்வழித்தட இணைப்பு, நெடுஞ்சாலை இணைப்பு மற்றும் ஐ-சாலை இணைப்பு என 21 ஆம் நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்து, ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக இருக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு நாங்கள் பாடுபட்டு வருகிறோம். இப்போது, நாடு முழுக்க ஏராளமான ரயில்வே வழித்தடங்கள் மற்றும் நெடுஞ்சாலை வழித்தடங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டில் பல நகரங்களில், ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை நடைமுறையை உருவாக்குவதற்கான பணிகள் துரிதவேகத்தில் நடந்து வருகின்றன. மக்கள் குறைந்த நேரத்தில் பயணிப்பதை உறுதி செய்வதற்கு நாங்கள் முயற்சி மேற்கொண்டிருக்கிறோம். போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, தொழிற்சாலைகலுக்கு மாற்று நவீன மற்றும் குறைந்த செலவிலான போக்குவரத்து வசதிகள் கிடைக்கச் செய்வதற்கு முயற்சி செய்து வருகிறோம். இந்த அனைத்து முயற்சிகளுடன், சுற்றுச்சூழல் பாதுகாக்கப் படுவதையும் உறுதி செய்வதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம். இதற்கு, மாசுபாட்டைக் குறைக்க உதவும் போக்குவரத்து வசதிகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம். மின்சார ரயில் வழித்தடங்கள் நீட்டிப்பு, மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கான ஆதார வளங்களை உருவாக்குதல் ஆகியவை அந்தத் திசையை நோக்கிச் செல்கின்றன.

நண்பர்களே,

நாட்டில் புதிய தலைமுறைக்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் வேகமான செயல்பாட்டில் நாங்கள் கவனம் செலுத்திவருகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 33000 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளத்துக்கு ரூ.3 லட்சம் கோடியில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முந்தைய அரசாங்கம் 7.5 ஆண்டுகளில் அமைத்ததுடன் ஒப்பிடும்போது, நாங்கள் வெறும் நான்கு ஆண்டுகளில் அதிகமான தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைத்திருக்கிறோம்.

நண்பர்களே,

மக்கள், தொழிலாளர்கள், அலுவலகங்கள், கோப்புகள் எல்லாம் அதுவேதான். ஆனால், நாம் தயாராக இருக்கும் போது, உறுதியுடன் இருக்கும்போது, எந்த இலக்கும் எட்டக் கூடியவையாக இருக்கின்றன. அதனால்தான் 2014-க்கு முன்பு, ஒரு நாளுக்கு 12 கிலோ மீட்டர் அளவில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. இன்றைக்கு ஒரு நாளுக்கு 27 கிலோ மீட்டர் அளவில் நெடுஞ்சாலைகள் அமைக்கப் படுகின்றன. இந்த வேகத்தில், பாரத்மாலா திட்டத்தின் கீழ், 35000 கிலோ மீட்டர்  நீளத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. நெடுஞ்சாலைகள் அமைப்பதில் மட்டும் அல்லாமல், ரயில்வே தொடர்பு ஏற்படுத்துவதிலும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. ரயில்வே வழித்தடம் இல்லாத பகுதிகளுக்கும் ரயில் பாதைகள் அமைக்கப் படுகின்றன; தேவையான அனைத்துப் பகுதிகளுக்கும் ரயில் பாதைகள் நீட்டிப்பு செய்யப் படுகின்றன.

நண்பர்களே,

நாட்டின் தேவைகள் மற்றும் மக்களின் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளை நமது அரசு எப்போதும் கருத்தில் கொண்டிருக்கிறது. அதன்படி, ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது; ரயில்களும், ரயில் நிலையங்களும் நவீனப்படுத்தப் படுகின்றன. இந்தியாவில் என்ஜின் இல்லாத நவீன ரயில் ஓடுவதற்குத் தயார் நிலையில் உள்ளது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மேக் இன் இந்தியா திட்டத்தின் பலத்தைக் காட்டுவதாக இந்த ரயில் இருக்கிறது.

சகோதர சகோதரிகளே,

நாட்டின் மனிதவளம் மற்றும் நீர்வளங்கலை அதிகபட்ச அளவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு அரசு முக்கியத்துவம் தருகிறது. நாட்டில் 100க்கும் மேற்பட்ட நீர்வழித் தடங்கள் உருவாக்கப் படுகின்றன. சில நாட்களுக்கு முன்பு, நாட்டின் முதலாவது சரக்கு கண்டெய்னர்  ஆற்றுவழிப் பாதையில் வாரணாசியை அடைந்தது. இப்போது பனாரஸ் - ஹால்டியா நீர்வழித்தடத்தில் கப்பல்கள் மூலமாக சரக்குகள் அனுப்பப்படுகின்றன. அன்னை கங்கை மூலமாக உத்தரப்பிரதேச மாநிலம் வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கப் பட்டிருக்கிறது. அதே சமயத்தில், நாட்டில் விமானப் பயணத்தை மலிவானதாக ஆக்கிட உதான் (UDAN) திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. உதான் திட்டத்தின் மூலம் இணைப்பு வசதி கிடைப்பதற்காக,  ஹிசாரில் ஒரு விமான நிலையம் அமைக்கப் பட்டுள்ளது. சகோதர சகோதரிகளே, அரசின் கொள்கைகள் காரணமாக, சாமானிய மனிதரும் இப்போது விமானத்தில் பயணம் செல்ல முடியும்.

நண்பர்களே,

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், பஞ்சாயத்துகளுக்கு பிராட்பேண்ட் வசதி அளிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. முந்தைய அரசு ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் மூலம் நான்கு ஆண்டுகளில் வெறும் 59 பஞ்சாயத்துகளுக்கு மட்டுமே இணைப்பு கொடுத்தது என்பதையும், எங்கள் அரசாங்கம் ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் மூலம் நான்கு ஆண்டுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளுக்கு இணைப்பு கொடுத்திருக்கிறது என்பதையும், தயவுசெய்து மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருபுறம் வெறும் 59, மறுபுறம் 1 லட்சம்!

நண்பர்களே,

போக்குவரத்து வசதி மேம்படுவதால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. போக்குவரத்து, கட்டுமானம், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்கு உதவுவதற்காக நெடுஞ்சாலைகள், மெட்ரோ அல்லது ரயில் வசதிகள்  அல்லது நீர்வழித் தடங்கள் உருவாக்கம் சுற்றுச்சூழல் முழுமைக்கும் பயன்தரும். ஹரியானா அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன், மாறிவரும் வேலைகளை ஏற்பதற்காக அவர்களைத் தயார் செய்வதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஸ்ரீவிஸ்வகர்மா கவ்சால் பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டியிருப்பது அந்த வகையில் முக்கியமான ஒரு நடவடிக்கை. வேலை வாய்ப்புகளில் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இளைஞர்களுக்கு தொழில் திறன்களை அளிப்பதற்கு இந்தப் பல்கலைக்கழகம் உதவும். இளைஞர்களுக்கு கல்வியையும், தாங்களே சொந்தமாகத் தொழில் தொடங்குவதற்கான அதிகாரத்தையும் இந்தப் பல்கலைக்கழகம் அளிக்கும். தொழில்திறனின் கடவுள் விஸ்வகர்மாவின் ஆசிகளுடன், இந்தப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிர்காலத்துக்கான வழி எளிமையானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

சகோதர சகோதரிகளே,

இன்றைக்கு, ஏற்றுமதிகளில் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக ஹரியானா இருக்கிறது. இவற்றில் 22000-க்கும் மேற்பட்ட சிறு தொழிற்சாலைகளும், MSME-களும், குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளன. இந்தப் பல்கலைக்கழகம் இந்தப் பகுதியில் MSME துறையை  மேலும் பலப்படுத்தும். இந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்து தேர்ச்சி பெற்று வெளியில் செல்லும் மாணவர்கள் குறைபாடு இல்லாத, எந்தப் பாதிப்பும் இல்லாத உற்பத்தி என்ற கோட்பாட்டுடன் பொருட்களைத் தயாரித்து, மேக் இன் இந்தியா திட்டத்தின் பெருமையை மேம்படுத்துவார்கள்.

நண்பர்களே,

MSME துறையை ஊக்குவிப்பதற்காக சமீபத்தில் 12 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இப்போது ஹரியானாவின் சிறுதொழில் செய்வோர், ஜி.எஸ்.டி.யுடன் இணைந்திருப்போர் ரூ.1 கோடி வரையிலான கடனை 59 நிமிடங்களில் பெற முடியும். அத்துடன், உற்பத்தியைப் பெருக்குவதற்கு, சந்தைக்கான வாய்ப்பை விரிவுபடுத்துவதற்கு, எளிதான செயல்பாட்டுக்கு பல முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளன.

சகோதர சகோதரிகளே,

நாட்டின் தொழில்முனைவோருக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதற்கு இந்த அரசு விரும்புகிறது. தொழில் துறையில் புதுமை சிந்தனையை நோக்கி இளைஞர்களை அழைத்துச் செல்கிறது. முதலீட்டு ஆதரவைப் பெறுவதில் அவர்களுடைய கோட்பாடு தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில் அக்கறை எடுத்துக் கொள்கிறது. ஸ்டாண்ட் அப் இந்தியா மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டங்கள் இதை மனதில் வைத்துக் கொண்டு தொடங்கப்பட்டன. இந்த சிந்தனை காரணமாகத்தான், நாட்டின் இளைஞர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ், எந்த ஈட்டுறுதியும் இல்லாமல் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமாக, முத்ரா திட்டத்தில் கடன் பெற்றவர்களில் 70%-க்கும் அதிகமானவர்கள் பெண்கள். ஒரு வகையில், இந்தத் திட்டம் பெண்களுக்கு சுயவேலைக்கான முக்கியமான வழிமுறையாக மாறியுள்ளது. ஹரியானாவின் மகள்களும் சகோதரிகளும் இத் திட்டத்தின் பயன்களைப் நிச்சயமாகப் பெறுவார்கள்.

நண்பர்களே,

பெண்களின் வாழ்வை எளிதாக்குவதற்காக எங்கள் அரசாங்கம் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறது. தூய்மை இந்தியா திட்டத்தில் 9 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன; உஜ்வாலா திட்டத்தில் சுமார் 6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் தரப்பட்டுள்ளன. இரண்டுமே பெண்களின் வாழ்வை எளிதாக்கியுள்ளன. மத்திய அரசின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் ஹரியானாவும் முழு ஒத்துழைப்பை அளித்துள்ளது. Beti Bachao Beti Padhao' - இயக்கத்தின் வெற்றியும், Khelo India திட்டத்தின் வெற்றியும் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள். பெருமளவிலான பதக்கங்களை இந்த மாநிலத்தின் மைந்தர்களும், மகள்களும் பெற்று வந்திருக்கிறார்கள். காமன்வெல்த் விளையாட்டுகளாக இருந்தாலும் அல்லது ஆசிய விளையாட்டாக இருந்தாலும், ஹரியானவின் மகள்கள் மற்றும் இளைஞர்களின் வெற்றிக்கான ஆரவாரத்தை உலகெங்கும் கேட்க முடிகிறது.

சகோதர சகோதரிகளே,

மத்தியிலும், ஹரியானா அல்லது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் அல்லது சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் அல்லது வடகிழக்கு இந்தியாவில் மாநிலங்களிலும் உள்ள பாஜக அரசுகள்  Sabka Sath Sabka Vikas'. - என்பதை மந்திரமாகக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. இதன் பயன்கள் பெருமளவில் தெரிய வந்திருக்கின்றன. இந்த அனைத்து முயற்சிகளிலும் ஹரியானா மக்கள் தீவிரமாக ஒத்துழைப்பு தருகிறார்கள் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அடிக்கல் நாட்டுவிழா மற்றும் மேற்கு புறவழி விரைவுச் சாலை, மெட்ரோ அர்ப்பணிப்பு மற்றும் தொழில்திறன் பல்கலைக்கழக திட்டங்களுக்காக மீண்டும் ஒரு முறை பாராட்டு தெரிவிக்கிறேன்.

மிக்க நன்றி!

******

 



(Release ID: 1554711) Visitor Counter : 235


Read this release in: English , Hindi , Marathi