பிரதமர் அலுவலகம்

நான்காவது தொழிற்புரட்சிக்கான மைய தொடக்க விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை

Posted On: 11 OCT 2018 8:00PM by PIB Chennai

உலகப் பொருளாதார கூட்டமைப்பின் தலைவர் திரு.போர்ஜே பிரெண்டே அவர்களே, மாண்புமிகு தொழில் துறை பிரதிநிதிகளே, உலகம் முழுவதையும் சேர்ந்த விருந்தினர்களே மற்றும் நண்பர்களே! இந்த சிறப்பு நிகழ்வில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். உங்களது மதிப்புமிகுந்த நேரத்தை இங்கே செலவிடுவதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் நான்காவது மற்றும் இந்தியாவின் முதலாவது தொழிற்புரட்சி மையத்தின் தொடக்க விழாவில் எனக்கு அழைப்பு விடுப்பது சிறந்தது என்று உலக பொருளாதார கூட்டமைப்பு கருதியது எனக்கு கிடைத்த கவுரவமாக கருதுகிறேன். நண்பர்களே, தொழில் துறை 4.0 என்பது வெறும் தொழில் துறை அல்ல. இது எதிர்காலத்தில் மனிதசமூகத்துக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாக நிச்சயம் அமையும்.

          இன்றைய உலக சூழலில், பிளவுபடுத்துகிற மற்றும் ஒன்றையொன்று சார்ந்துள்ள தொழில்நுட்பங்களின் பாதை, இதுவரை இல்லாதது. பல்வேறுபட்ட தொழில்நுட்பங்களின் இந்த இணைப்பே, நான்காம் தொழில் புரட்சியின் அடிப்படையாக உருவாகியுள்ளது. இந்த தொழில்நுட்பங்களின் பல்வேறு பரிமாணங்கள், மக்களது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் தொட்டுச் செல்கிறது. மற்றும் அவர்கள் பணியாற்றும் முறையை மாற்றுவதுடன், ஒட்டுமொத்த உலகுக்கும் தகவல் தொடர்பை ஏற்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில், சான் பிரான்சிஸ்கோ, டோக்கியோ, பீஜிங் ஆகியவற்றைத் தொடர்ந்து, இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த மையத்தை இங்கு தொடங்குவது, எதிர்காலத்தில் எல்லையில்லா வாய்ப்புகளை நிச்சயம் ஏற்படுத்தும்.

     இதுபோன்ற முன்னோடி நடவடிக்கையை மேற்கொண்டதற்காக உலக பொருளாதார கூட்டமைப்புக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கையில் நான்காவது தொழில்புரட்சி எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் அனைவரும் நிச்சயமாக பார்க்கப் போகிறீர்கள். இந்தத் துறையில் வல்லுநர்களாக உள்ள உங்களுக்கு, இதன் நுணுக்கங்கள் தெரிந்திருக்கும். இந்தப்  புரட்சி இந்தியாவுக்கு ஏன் முக்கியமானது? மற்றும் இந்தப் புரட்சியின் முழுப் பலனையும் பெறும் திறனை இந்தியா இன்று ஏன் பெற்றிருக்கிறது? என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானது.

     இந்தியாவில் வலுவான சுற்றுச்சூழல் அமைப்பு முறை உள்ளது. இதற்கு செயற்கை புலனறிவு (Artificial Intelligence - AI), இயந்திரவியல் கற்றல் (Machine Learning - ML),  பல்வேறு அம்சங்களை இணையம் மூலம் இணைத்தல் (Internet of Things - IoT), பிளாக்செயின் (Blockchain), பெரிய தரவுகள் (Big Data) போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் திறன் உண்டு. இதனால், பல லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவின் வளர்ச்சியை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும். நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்தும் திறன் நம்மிடம் உள்ளது. தனது சக்தி மற்றும் வளங்களை வலுப்படுத்தி, புதிய இந்தியா என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்தியா இன்று பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், நான்காவது தொழில் புரட்சி என்பது, இந்த முயற்சிக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமையும்.

     இதனை தொழில் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக மட்டும் இந்தியா பார்க்கவில்லை. அதன் சமூக கட்டமைப்பை மாற்றுவதற்கான ஊக்கியாகவும் பார்க்கிறது. தொழில் துறை என்பது அடித்தளம், உற்பத்தி என்பது செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் என்பது கருவியாக உள்ளது. இதன் ஒட்டுமொத்த இலக்கு என்பது, சமூகத்தில் பின்தங்கிய மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு பயனளிப்பது மற்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதே ஆகும்.

          நண்பர்களே, தொழில் துறை 4.0-ன் பலத்தை நான் யூகித்துப் பார்க்கிறேன். இது சமூக மற்றும் பொருளாதார அமைப்பில் இதுவரை உள்ள பல்வேறு பலவீனங்களை அகற்றும் திறன் பெற்றது. மின்னணு முறையில் மீ்ட்டெடுக்கக் கூடிய (e-reversible)  சாதகமான மாற்றங்களை இந்தியா காண உள்ளது. இந்தியாவில் வறுமையை ஒழிப்பதில், தொழில் துறை 4.0-ஐ பயன்படுத்துவது முக்கியப் பங்கு வகிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தப் புரட்சியின் மூலம், நாட்டில் உள்ள ஏழைகள், பின்தங்கிய மற்றும் புறக்கணிக்கப்பட்ட பிரிவினர் பயனடைவார்கள். இந்தியா போன்ற விரிவான மற்றும் வேற்றுமை கொண்ட நாட்டில் பணியாற்றும் சூழலில், வளர்ச்சியின் வேகம் மற்றும் அளவை அதிகரிப்பதற்கு நமக்கு மின்னணு புரட்சி பெருமளவில் உதவியாக இருக்கும்.

     நண்பர்களே, வலுவான அடித்தளம் இல்லாமல், எந்தவொரு கட்டுமானமும் உறுதியாக நிற்காது. தொழில் துறை 4.0-ன் வெற்றி என்பது, புரட்சியை வலுவாக ஆதரிப்பதற்கு ஒரு நாடு எவ்வாறு தயாராகவும், முன்னேற்பாட்டுடனும் உள்ளது என்பதைப் பொறுத்தே அமையும். நான்காவது தொழில் துறை புரட்சிக்கு தயார்படுத்துவதற்காக கடந்த நான்கரை ஆண்டுகளில் நமது அரசு பல்வேறு முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அனைத்து முயற்சிகளிலும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது என்று கூறுவதில் நான் இன்று பெருமையடைகிறேன். எனது ஆர்வம் மற்றும் நம்பிக்கைக்கான காரணங்களை நான் விரிவாக உங்கள் முன்பு கூற விரும்புகிறேன்.

     நண்பர்களே, தொழில் துறை 4.0-ஐப் பொறுத்தவரை, ஒரு வார்த்தையை நீங்கள் நீக்கினாலும், அதன் அர்த்தத்தை இழந்துவிடும். அந்த வார்த்தை டிஜிட்டல்; வளரும் புதிய இந்தியாவின் பொருளாக இந்த வார்த்தை மாறியுள்ளது. டிஜிட்டல் இந்தியா பிரச்சாரமானது, இந்தியாவில் உள்ள கிராமங்களின் ஒவ்வொரு மூலைக்கும் தொலைத்தொடர்பு டேட்டா-வை கிடைக்கச் செய்துள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் தொலைத் தொடர்புத் துறை கட்டமைப்புக்கு முந்தைய முதலீடுகளைவிட 6 மடங்கு கூடுதலாக முதலீடு செய்து, நாட்டின் தொலைத்தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

     நண்பர்களே, இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டில் 70 கோடி மக்கள் மட்டுமே டிஜிட்டல் அடையாளத்தை வைத்திருந்தனர். இன்று 120 கோடிக்கும் அதிகமான மக்கள், ஆதார் அட்டையை, தங்களது டிஜிட்டல் அடையாளமாக வைத்துள்ளனர். 2014-ம் ஆண்டில் இந்தியாவில் மொபைல் அடிப்படையில் 8 லட்சம் டிரான்ஸ்-ரிசீவர் நிலையங்கள் மட்டுமே இருந்தன. இன்று, இந்த எண்ணிக்கை 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 2014-ல் ஒட்டுமொத்த அடர்த்தி அளவு 75%-ஆக இருந்தது. இது இன்று 93%-ஆக உயர்ந்துள்ளது. ஒருகாலத்தில், மொபைல் இணையதள சந்தாதாரர்களின் எண்ணிக்கை 23 கோடியாக இருந்தது. இது இன்று இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்து 50 கோடிகளைத் தாண்டியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இணையதள இணைப்பு 75%-க்கும் அதிகமான அளவு அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில், 3 லட்சம் கிலோமீட்டர்களுக்கும் மேலாக ஆப்டிகல் பைபர்-களை பதித்துள்ளோம்.

     உள்ளாட்சி நிர்வாக கட்டமைப்புகளின் தீவிர ஈடுபாடுகள் மூலமாகவே இது சாத்தியமானது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு, நாட்டில் உள்ள 50 பஞ்சாயத்துகள் மட்டுமே, ஆப்டிகல் ஃபைபர்களால் இணைக்கப்பட்டன. இன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட  பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஒட்டுமொத்தமாக உள்ள 2.5 லட்சம் பஞ்சாயத்துகளையும் ஆப்டிகல் ஃபைபர்கள் மூலம் இணைக்கும் இலக்கை மிக விரைவில் நிறைவேற்ற உள்ளோம்.

     நண்பர்களே, 2014-ம் ஆண்டுக்கு முன்பாக, நாட்டில் 83 ஆயிரம் பொது சேவை மையங்கள் மட்டுமே இருந்தன. இன்று, இந்தியாவில் 3 லட்சத்துக்கும் மேலான பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள தொலைதூரப் பகுதிகளில் 32,000-க்கும் மேலான வை-ஃபை ஹாட் ஸ்பாட்களை வழங்குவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியர்கள் கடந்த 4 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கை முறையில், டிஜிட்டல் இந்தியா பிரச்சாரம், மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

     நண்பர்களே, இந்திய குடிமகன், கடந்த 2014-ம் ஆண்டில் கிடைத்ததைவிட, 30 மடங்கு அதிக மொபைல் டேட்டா-வை தற்போது பயன்படுத்துவதைப் போன்றதே, தொழில் துறை 4.0 மூலம் ஏற்படும்  மாற்றமாகும். இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால், உலக அளவில் அதிகமாக மொபைல் டேட்டா-வை பயன்படுத்தும் நாடாக இந்தியா திகழும் நிலையில், ஒட்டுமொத்த உலகில் மிகவும் மலிவான விலையில் டேட்டா கிடைப்பதும் இந்தியாவில் தான். இதற்கு, 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவில் மொபைல் டேட்டா-வின் மதிப்பு 90 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்ததே காரணமாகும்.

     நண்பர்களே, இதுபோன்றதொரு வளர்ச்சியை உலகின் வேறு எந்தப் பகுதியிலும் உங்களால் கண்டிருக்க முடியாது. இது 2014-ம் ஆண்டிலிருந்து இதுவரை இல்லாத ஒரு மாற்றமாகும். இன்று உலகின் மிகப்பெரும் டிஜிட்டல் கட்டமைப்பு கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஆதார் போன்ற தனிப்பட்ட அடையாளங்கள், யூபிஐ எனப்படும் ஒன்றிணைந்த பணம் செலுத்தும் அமைப்பு, மின்னணு கையெழுத்து முறை (e-sign), மின்னணு தேசிய வேளாண் சந்தை, அரசின் மின்னணு சந்தைப்பகுதி, டிஜிட்டல் லாக்கர் ஆகியவை, இந்தியாவை செயற்கை நுண்ணறிவுத் திறன் மூலம், தொழில்நுட்பத்தில் தலைமையிடமாக மாற்ற உதவிவருகிறது. இதன் காரணமாக, அதிக அளவிலான மக்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்பமானது, இந்த அடித்தளங்களை புத்தாக்கம் செய்வதற்கான வாய்ப்புகளை அளித்துள்ளது. இந்தப் புத்தாக்கங்கள், நாட்டின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையை வலுப்படுத்தவும் செயலாற்றி வருகிறது.

     நண்பர்களே, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு ஆய்வு அடிப்படையிலான சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கு தயாராகும் வகையில், தேசிய உத்தியை இந்தியா ஏற்கனவே உருவாக்கியுள்ளது. உள்ளடக்கிய வளர்ச்சிக்காக, அரசு மேற்கொண்டுள்ள “ஒருங்கிணைந்த முயற்சி, உள்ளடக்கிய வளர்ச்சி” இலக்கைத் தொடர்ந்து, தற்போது “அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு” என்பதை வலியுறுத்தி வருகிறது. ஆராய்ச்சிக்கான சுற்றுச்சூழல் அமைப்பு எவ்வாறு ஏற்படுத்தப்படும், இதனை தகவமைத்துக் கொள்வதை ஊக்குவிப்பது மற்றும் தேவையான திறன் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஏற்கனவே விரிவாக பேசப்பட்டுவிட்டது.

     இந்திய மக்களுடன் தொடர்புடைய துறைகளான, வேளாண்மை, சுகாதாரம், கல்வி போன்றவற்றுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தத் துறைகளில், பல்வேறு சோதனை முறையிலான திட்டங்களுக்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளது. இதனுடன் தொடர்புடைய வகையில், இடம்பெயர்தல் குறித்த மிகப்பெரும் கருத்தரங்கை இந்தியாவில் நாம் அண்மையில் நடத்தினோம்.

     இந்த முயற்சிகளை, மும்பையில் உள்ள உலக பொருளாதார கூட்டமைப்பின் இந்த புதிய மையம், மேலும் ஒன்றுசேர்க்கும். “ஒருங்கிணைந்த முயற்சி, உள்ளடக்கிய வளர்ச்சி” என்ற பாதையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவாகவும், ஊக்குவிப்பாகவும், உள்ளடக்கிய வளர்ச்சி இலக்கை இந்த மையம் முன்னெடுத்துச் செல்லும். புதிதாக உருவாகிவரும் தொழில்நுட்பங்கள் அடிப்படையில், கொள்கைகளை வகுப்பதற்கு இந்த மையம் உதவியாக இருக்கும். இது இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளுக்கும் உதவியாக இருக்கும். தொழில் துறை 4.0-ன் புதிய பரிமாணங்களை பயன்படுத்திக் கொள்ள, பல்வேறு மாநில அரசுகளின் பணியில் புதிய தெளிவை இது நிச்சயமாக ஏற்படுத்தும்.

     மகாராஷ்டிர அரசுடன் இணைந்து அரசு சேவைகளை மேம்படுத்துவதற்காக வான்வழி ஆய்வு (DRONE) மற்றும் இணையதளங்கள் மூலம் இணைத்தல் திட்டங்களுக்கான பணியை இந்த மையம் தொடங்கியுள்ளதாக என்னிடம் தெரிவித்தனர். இந்த தீவிர செயல்பாட்டுக்காக மகாராஷ்டிர முதலமைச்சரை நான் வாழ்த்துகிறேன். இதுபோன்ற பல்வேறு திட்டங்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் வரும் காலங்களில் தொடங்கும் என்று நான் நம்புகிறேன்.

          நண்பர்களே, இந்தியாவில் தொழில் துறை 4.0-ஐ வலுப்படுத்துவதுடன் செயற்கை நுண்ணறிவை விரிவாக்கம் செய்வதன் மூலம், நமது மக்களுக்கு சிறந்த மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சுகாதார வசதிகள் கிடைக்கும். இதனை வேளாண் துறைக்கு விரிவுபடுத்துவதன் மூலம், ஒருபுறம் விவசாயிகளின் விளைச்சல் அதிகரிக்கும். மறுபுறம், தானியங்கள் சேதமாவது தடுக்கப்படும். இதன்மூலம், விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். இந்தத் தொழில்நுட்பம் மூலம், வானிலை, பயிர் மற்றும் விதை விதைக்கும் பருவம் ஆகியவை குறித்து முன்கூட்டியே தெரிவித்து, சரியான முடிவுகளை விவசாயிகள் மேற்கொள்ள உதவியாக இருக்கும். பொலிவுறு நகரங்கள் போன்ற 21-ம் நூற்றாண்டுக்கான கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், நாட்டில் உள்ள கிராமங்களுக்கு இடையேயான இணைப்பை அதிகரிப்பதற்கு உதவுதல் ஆகிய பணிகளையும் இந்த மையம் மேற்கொள்ளும்.

     எளிதான முறையில் இடம்பெயர்தல், போக்குவரத்து மற்றும் நகரங்களில் போக்குவரத்து நெரிசல்களைப் போக்குவது எப்படி என்பது தொடர்பான பிரச்சினைகளுக்கும் இந்த மையம் தீர்வுகாணும். நமது நாடு, பல்வேறுபட்ட மொழிகளால் வேற்றுமை கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) மூலம், பல்வேறுபட்ட பேச்சுவழக்கு மற்றும் மொழிகளிலும் கருத்துக்களை தற்போது பரிமாறிக் கொள்ள முடியும்.

     இதேபோன்று, செயற்கை நுண்ணறிவின் பல்வேறுவகையான  பயன்பாடுகள் மூலம், இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் தினசரி எதிர்கொண்டுவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை அளிக்க முடியும்.

          நண்பர்களே, இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காக  பல்வேறு மட்டங்களில் ஏற்கனவே பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இது “இந்தியாவுக்கு தீர்வுகாணுதல், உலகுக்கு தீர்வுகாணுதல்” என்ற நோக்கத்தை ஒருங்கிணைக்கவும் செய்கிறது. உள்ளூர் தீர்வுகள் என்ற நிலையிலிருந்து உலகளாவிய செயல்பாடுகள் என்ற அளவுக்கு நாம் முன்னேறி வருகிறோம். மற்றொரு தொழில்நுட்பமான பிளாக் செயினின் (Block chain) பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இந்த தொழில்நுட்பமானது, “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுமை” என்ற கனவை வலுப்படுத்தி, ஊக்குவிக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம், சுய ஆளுமை மற்றும் சுய சான்றளித்தல் ஆகியவை வலுப்படுத்தப்படுகிறது. எதிர்கால வாய்ப்புகளும் கண்டறியப்படும். இதன் மூலம், அனைத்து அரசு விதிமுறைகள், முரண்பாடுகள், தலையீடுகள் ஆகியவற்றை  எதிர்கொள்ள முடியும். இந்த செயல்பாடுகளை வலுப்படுத்துவதன் மூலம், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும், ஊழல் மற்றும் குற்றங்கள் குறையும், நமது நாட்டு ஆண்களின் வாழும் முறை மேம்படும்.

     நண்பர்களே, பிளாக் செயின் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதன் மூலம், “எளிதில் தொழில் செய்வது” குறித்த சர்வதேச தரவரிசையில் இந்தியாவை உயர்ந்த நிலைக்கு கொண்டுவர முடியும். இதன் அப்ளிகேஷன்கள் மூலம், அரசின் அனைத்து சேவைகளைப் பெறுதல், இயற்கை வளங்களை கையாளுதல், சொத்துக்கள் பதிவு, ஒப்பந்தம், மின் இணைப்பு பெறுதல் மற்றும் பல்வேறு நிர்வாகப் பணிகளை மேம்படுத்த முடியும். இதனை வலுப்படுத்தும் வகையில், பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான தேசிய உத்தியை வகுப்பதற்கான பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதற்கு மும்பையில் உள்ள உலகப் பொருளாதார கூட்டமைப்பு மையமும் உதவியாக இருக்கும்.

          தனது டுரோன் (Drones) கொள்கையை இந்தியா மிக விரைவில் வெளியிட உள்ளது என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நண்பர்களே, முதலாவது தொழில் புரட்சி ஏற்பட்டபோது, இந்தியா அடிமைநாடாக இருந்தது. இரண்டாவது தொழில்புரட்சி ஏற்பட்டபோதும்கூட, இந்தியா அடிமையாகவே இருந்தது. மூன்றாவது தொழிற்புரட்சி ஏற்பட்டபோது, சுதந்திரத்துக்குப் பிந்தைய சவால்களை எதிர்கொள்ள திணறி வந்தது. தற்போது 21-ம் நூற்றாண்டில் இந்தியா மாற்றம் கண்டுள்ளது. இன்று, நமது நாட்டின் 130 கோடி மக்களின் சக்தியின்மூலம், நான்காவது தொழில் புரட்சியின் பலன்களைப் பெறாமல் இந்தியா இருந்துவிடாது என்பதை முழு நம்பிக்கையுடன் என்னால் கூற முடியும். நான்காவது தொழில் புரட்சியில் இந்தியாவின் பங்களிப்பைக் கண்டு, ஒட்டுமொத்த உலகமுமே ஆச்சரியமடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்; இதுவரை இல்லாத வகையில், கணிக்க முடியாதபடி, யூகிக்க முடியாத அளவுக்கு, இந்தியா தனது பங்கை அளிக்கும்.

நமது வேற்றுமை, நமது புவிஅமைப்பின் திறன், வேகமாக வளர்ந்துவரும் சந்தை அளவு மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு ஆகியவை, இந்தியாவை ஆராய்ச்சி மற்றும் செயல்படுத்துதலில் உலக மையமாக மாற்றும். இங்கு மேற்கொள்ளப்படும் புத்தாக்கங்களின் பலன்களை ஒட்டுமொத்த உலகம் மற்றும் மனிதசமூகம் பெற முடியும்.

     நண்பர்களே, இன்று இந்த அமைப்பின் முன்பு, மற்றொரு முக்கியமான விஷயத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். இந்த தொழில்நுட்ப முன்னேற்றத்தால், வேலைவாய்ப்பு குறைந்துவிடும் என்று சிலர் அஞ்சுகின்றனர். ஆனால், மனிதசமூகம் இதுவரை உணராத அம்சங்களும், தொழில் துறை 4.0 மூலம் கிடைக்க உள்ளது. இது மிகப்பெரும் அளவில் வேலை முறையை மாற்றியமைக்கும். மற்றும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இதனை முன்கூட்டியே கொண்டுவருவதற்காக திறன் இந்தியா இயக்கம், இந்தியாவில் தொடங்குவோம், இந்தியாவை நிலைநிறுத்துவோம், அடல் புத்தாக்க இயக்கம் போன்ற திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம், நமது நாட்டில் உள்ள இளைஞர்கள், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியும்.

     நண்பர்களே, அடுத்த சில ஆண்டுகளில் உலகம் எவ்வாறு மாறும் என்பதை நம்மில் யாராலும் கணிக்க முடியாது. ஐந்தாவது தொழில் துறை புரட்சி எப்போது ஏற்படும் என்பதையும் யாராலும் கூற முடியாது. முதல் மூன்று தொழில் துறை புரட்சிகள், 100 ஆண்டுகள் இடைவெளிவிட்டு ஏற்பட்டன. ஆனால், நான்காவது தொழில் புரட்சி, 30-40 ஆண்டுகள் முன்னதாக ஏற்பட்டதை நாம் பார்க்கிறோம். கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளில், ஏராளமான அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை காணாமலும் போய் உள்ளன. தொழில்நுட்பமானது நேரத்தை குறைத்துவிட்டது. 4-வது தொழில் புரட்சியிலிருந்து 5-வது தொழில்புரட்சிக்கு 100 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்காது. எனவே, தொழில் துறை 4.0-ல் இந்தியா மிகவும் தீவிரமாக உள்ளது. உங்களிடம் தற்போது உள்ள திறனைக் கொண்டு, ஒன்றிணைய வேண்டியது நேரம் இது.

          வரும் மாதங்களில், இந்தியாவில் தொழில் துறை 4.0-க்கான பூங்கா தொடங்கப்படும். நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், மாநில அரசுகள், சமூக அமைப்புகள், தொழில் முனைவோர் என அனைவரும் இந்த புரட்சியில் இணைய வேண்டும் மற்றும் இந்தக் கனவை நனவாக்க பணியாற்ற வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

     நண்பர்களே, நமது அரசு எதிர்காலத்தை நோக்கிய மற்றும் திறந்த மனதுடன் கூடியது. புதிய இந்தியாவின் நலனுக்காகவும், இந்தியர்களின் விருப்பத்துக்காகவும் எந்தவொரு கொள்கை அல்லது வழிமுறை அல்லது நெறிமுறைகளை உருவாக்க நாம் தயாராக உள்ளோம். உங்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவதற்கு எப்போதுமே நாங்கள் தயாராக உள்ளோம். நமது இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்ல நாங்கள் தீர்மானத்துடன் உள்ளோம். இதனை நாங்கள் எப்போதுமே விட்டுக் கொடுக்க மாட்டோம்.

     நிறைவாக, நான்காவது தொழில் புரட்சிக்கான மையமானது, தனது எதிர்கால செயல்பாடுகள் அனைத்திலும் வெற்றிபெற மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுக்கு நன்றி.

 

***



(Release ID: 1554306) Visitor Counter : 1134


Read this release in: English , Marathi , Hindi , Assamese