பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு. நரேந்திரமோடி, ஒடிசாவில் தல்ச்சேர் உர ஆலைக்கான அடிக்கல்லை நட்டு வைத்து உரையாற்றியதின் தமிழாக்கம்

Posted On: 22 SEP 2018 12:55PM by PIB Chennai

ஒடிசா ஆளுநர் பேராசிரியர் கணேஷிலால் அவர்களே, முதலமைச்சரும் எனது நண்பருமான திரு. நவீன் பட்நாயக் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான திரு.ஜுவல் ஓரம் அவர்களே, திரு. தர்மேந்திர பிரதான் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சத்பதி அவர்களே சட்டமன்ற உறுப்பினர் திரு. பிராஜ் கிஷோர் பிரதான் அவர்களே,  எனதருமை சகோதர, சகோதரிகளே;

இந்த நிகழ்வுக்குப் பிறகு நான் ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளேன். எனவே, நான் இங்கு உர ஆலைத் திட்டம் குறித்து விரிவாகப் பேச விரும்பவில்லை. இந்தச் சிறப்பான தருணத்தில் எனது மகிழ்ச்சியை சுருக்கமாக வெளிப்படுத்த இருக்கிறேன். இந்தத் திட்டப்பணியை முடிப்பதற்காக பணியாற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு வகையில் இந்த உர ஆலையைச் சீரமைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இந்தப் பகுதியில் வாழும் மக்கள் பல ஆண்டுகளாக இது குறித்து கனவு கண்டனர். ஆனால், சில காரணங்களால்  அந்தக் கனவு நனவாகவில்லை. இந்த உர ஆலையை ஒரு போதும் சீரமைக்க முடியாது என்பதால் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.

நாட்டை வளர்ச்சியின் புதிய உச்சிக்கு, புதிய சக்தியுடன், புதிய வைராக்கியத்துடன் கொண்டு செல்வதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம். இதனால் பெரிய அளவிலான திட்டங்களை நாம் புதிய சக்தியுடன் செயல்படுத்த முயன்றுள்ளோம். இதற்கு வலுவான உத்வேகம் அவசியமாகும். அதன் பலனைத்தான் தற்போது இங்கே காண்கிறீர்கள். இந்த உர ஆலை ஏறத்தாழ ரூ.13,000 கோடி செலவில் சீரமைக்கப்படுகிறது.

இந்தியாவில் இது முற்றிலும் புதிய தொழில்நுட்பமாகும். இப்பகுதியில் கிடைக்கும் நிலக்கரியை எரிவாயுவாக்கும் தொழில்நுட்பத்தால் நாடு முழுவதும் பயன்பெற முடியும். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எரிவாயுவையும் உரத்தையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள முடியும். இதனால் நமக்குப் பணமும் மிச்சமாகும்.

இந்த உர ஆலையை மறுசீரமைப்பதன் மூலம் இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும். கிட்டத்தட்ட 4,500 பேர் இந்த திட்டத்தில் இணைந்து செயல்படுவார்கள். இதன் மூலம் கூடுதல் பயன்கள் கிடைப்பதோடு இந்தத் திட்டத்தினால் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் ஏராளமான வசதிகள் கிடைக்கும்.

நவரத்னா, மகாரத்னா, ரத்னா என்பவை பற்றி நாம் கேள்விப்படுகிறோம். சில நேரங்களில் நல்ல செய்திகளும், சில சமயங்களில் மோசமான செய்திகளும் வருகின்றன. எல்லா நவரத்தினங்களும் ஒன்று சேரும்போது இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்கும் போது ஒவ்வொன்றின் திறனும், நிதி உதவியும் இந்தத் திட்டத்தை மறு சீரமைப்பதில் துணை நிற்கும். ஒடிசா மக்களின் தேவைகளை மட்டுமல்ல நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் தேவைகளையும் இத்திட்டம் நிறைவு செய்யும்.

இந்த ஆலையில் உற்பத்தியைத் தொடங்க 36 மாதங்கள் ஆகும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற திட்டங்களை நான் நேரில் வந்து பார்வையிடுகிறேன். உற்பத்திக்கான தேதி பற்றி நான் கேட்டபோது இன்றிலிருந்து (22.09.2018) 36 மாதங்கள் ஆகும் என்று என்னிடம் தெரிவித்தனர். நான் உறுதியாகக் கூறுகிறேன். 36 மாதங்களுக்குப் பிறகு இந்த ஆலையைத் தொடங்கி வைக்க நான் மீண்டும் வருவேன். இந்த நம்பிக்கையுடன் எனது உரையை நிறைவு செய்து முதலமைச்சருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

*****



(Release ID: 1552750) Visitor Counter : 140