புவி அறிவியல் அமைச்சகம்

கஜா புயல் அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து கடும் புயலாக மாறக் கூடும்

Posted On: 14 NOV 2018 3:17PM by PIB Chennai

வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு, மேற்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள கஜா புயல் மேற்கு - தென் மேற்கு திசையில் நகர்ந்து இன்று (14.11.2018) காலை 11.30 மணிக்கு சென்னைக்கு கிழக்கே 490 கிலோ மீட்டர் தூரத்திலும், நாகப்பட்டினத்திற்கு கிழக்கு, வடகிழக்கே 580 கிலோ மீட்டர் தூரத்திலும் மையம் கொண்டிருந்தது. இது மேற்கு, தென்மேற்கு திசையில் நகரக் கூடும். அடுத்த 12 மணி நேரத்தில் இது மேலும் தீவிரமடைந்து கடும் புயலாக மாறக் கூடும். பின்னர் மேற்கு, தென் மேற்கு திசையில் நகரும் போது படிப்படியாக வலுவிழந்து நவம்பர் 15 அன்று மாலை தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதியில் பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கரையைக் கடக்கக் கூடும். புயல் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வரை இருக்கும்.

பலத்த மழை பற்றிய எச்சரிக்கை

இந்தப் புயல் காரணமாக நவம்பர் 15 அன்று தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஒரு சில  இடங்களில் பலத்த, மிக பலத்த மழை பெய்யக் கூடும். கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக் கூடும்.

தமிழ்நாட்டின் உட்புறப் பகுதிகளில் நவம்பர் 16 அன்று பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்யக் கூடும். ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்யக் கூடும்.

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்திலும் கடலில் ஒரு மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பக் கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரப்பிரதேசத்திற்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் நவம்பர் 15 வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், தற்போது ஆழ்கடல் பகுதிக்கு சென்றுள்ள மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

*****


(Release ID: 1552743)
Read this release in: English , Hindi , Bengali