பிரதமர் அலுவலகம்

உலக வங்கித் தலைவருடன் பிரதமரின் தொலைபேசி உரையாடல்

Posted On: 02 NOV 2018 7:28PM by PIB Chennai

உலக வங்கித் தலைவர் திரு ஜிம் யோங் கிம்மிடம் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று (02.11.2018) தொலைபேசி அழைப்பு வந்தது.   

எளிதாக வணிகம் செய்தலுக்கான தரவரிசையில் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உயர்வுக்காக பிரதமரை திரு கிம் பாராட்டினார்.  125 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஒருநாடு, நான்காண்டுகள் என்ற குறைவான காலக் கட்டத்தில் 65 இடங்கள் உயர்ந்து சாதனை படைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்று அவர் கூறினார்.

பிரதமர் திரு மோடியின் ஊசலாட்டமற்ற உறுதிப்பாடு மற்றும் தலைமைத்துவம் காரணமாகவே இது சாத்தியமாகி உள்ளது என்றும் திரு கிம் தெரிவித்தார்.  இது வரலாற்றுச் சிறப்புமிக்க, முன்னெப்போதும் இல்லாத சாதனை என்று அவர் வர்ணித்தார்.  ஐநா சபையின் சுற்றுச் சூழல் அமைப்பால் புவியின் புரவலர் விருது, சியோல் அமைதிப் பரிசு உட்பட அண்மைக்காலத்தில் பிரதமர் பெற்றுள்ள கவுரவிப்புகளை நினைவுகூர்ந்த திரு கிம் அவற்றுக்காகவும் பாராட்டுத் தெரிவித்தார்.

எளிதாக வர்த்தகம் செய்தலுக்கான இந்தியாவின் முன்முயற்சிகளுக்கு உலக வங்கியின் உறுதியான தொடர்ந்த ஆதரவு  இருக்கும் என்றும் திரு கிம் உறுதியளித்தார்.

எளிதாக வணிகம் செய்வதை ஊக்கப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளுக்கு தொடர்ச்சியான வழிகாட்டுதலையும், ஆதரவையும் அளித்து வரும் உலக வங்கிக்கும் அதன் தலைவருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.  எளிதாக வர்த்தகம் செய்வதை மேம்படுத்தும் இந்தியாவின் ஆர்வத்திற்கு உலக வங்கியின் இந்தத் தரவரிசை உயர்வு ஊக்கத்தை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். 

**************



(Release ID: 1551799) Visitor Counter : 90