குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மகளிருக்கு அதிகாரமளித்தலின் மையமாகப் பெண் குழந்தைகள் கல்வி இருக்க வேண்டும்:குடியரசு துணைத் தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2018 4:07PM by PIB Chennai

மகளிருக்கு அதிகாரமளித்தலின் மையமாகப் பெண் குழந்தைகள் கல்வி இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். ஜாமியா ஹம்ரத் பல்கலைக் கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழாவில் இன்று உரையாற்றிய அவர், மாணவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்குக் கல்விப்புலத்தில் சிறப்பாக இருப்பதையும் தாண்டி, உலக வேலைவாய்ப்புச் சந்தையில் போட்டியிடுவதற்கு ஏற்ப தனித்திறன்களையும் கிடைக்கச் செய்வது அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

பல்கலைக் கழகங்களிலும், நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் சூரிய மின்சக்தியைப் பயன்படுத்துவதோடு, மழைநீர் சேகரிப்பு முறைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார். பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பில் ஈடுபாடுகொள்ளும் வகையில் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் இயற்கையோடு இயைந்து வாழ அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கல்வியின் முக்கியத்துவம் குறித்து விரிவாகப் பேசிய குடியரசு துணைத் தலைவர், பட்டம் பெறுவதை மட்டுமே அது நோக்கமாகக் கொண்டிருக்கக்கூடாது என்றார். கல்வி என்பது, வெறும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கானது அல்ல.  அது, தனிநபருக்கு அதிகாரமளிக்க வேண்டும், பொருளாதார மேம்பாட்டில் உதவ வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

 

பெண்களுக்கான கல்வி அவர்களின் முன்னேற்றத்தில் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றன என்றும், பெண் குழந்தைகளைப்  பாதுகாப்போம் – பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம், செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்றவை பெண்களுக்கு அதிகாரமளிப்பவை என்றும், பெண் குழந்தைகளுக்கான இத்தகையப் பிரச்சாரம் மக்களைக் கவர்ந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

குடியரசுத் தலைவரின் முழுமையான உரைக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

********


(வெளியீட்டு அடையாள எண்: 1550359) வருகையாளர் எண்ணிக்கை : 139
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , Malayalam