பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
“தாங்கள் குழந்தையாக இருந்தபோது, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது குறித்து பாதிக்கப்பட்டோர் எந்த வயதுடையவராக இருந்தாலும் இப்போது புகார் அளிக்கலாம்”: திருமதி மேனகா சஞ்சய் காந்தி
Posted On:
16 OCT 2018 6:33PM by PIB Chennai
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பாஸ்கோ சட்டத்தின் பிரிவுகள் இதர சட்டப் பிரிவுகளை மிஞ்சி செயல்படும் நிலைமை குறித்தும், இத்தகைய குற்றங்கள் குறித்து புகார் செய்வதை கட்டாயமாக்கும் பிரிவுகள் குறித்தும், மத்திய மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சட்ட அமைச்சகத்துடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தியது. குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளுடன் பாஸ்கோ சட்டப் பிரிவுகளை ஒப்பிட்டு ஆய்வு செய்த சட்ட அமைச்சகம், பாஸ்கோ சட்டத்தின்கீழ், குற்றங்கள் பற்றி புகார் செய்வதற்கு 19-வது பிரிவில் எவ்வித காலக்கெடுவும் இல்லை என்று தோன்றுவதாக கருத்து தெரிவித்துள்ளது. குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது, அதுபற்றி புகார் செய்வதற்கு காலக்கெடு எதையும் பாஸ்கோ சட்டம் நிர்ணயிக்கவில்லை. சட்ட அமைச்சகத்தின் இந்தக் கருத்தை அறிந்த மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி. மேனகா சஞ்சய் காந்தி, “தற்போது பாதிக்கப்பட்ட எவரும் எந்த வயதினராக இருந்தாலும், அவர் குழந்தையாக இருந்தபோது பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து புகார் அளிக்கலாம்” என்று கூறியுள்ளார். பாஸ்கோ சட்டத்தின்கீழ், இணையதள வழி புகார் பெட்டி மூலம் இத்தகைய வழக்குகள் குறித்து புகார் செய்யலாம் என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தங்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெரும்பாலும், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அல்லது நன்கு அறிந்த நபர்களாலேயே செய்யப்படுகின்றன என்பதால், குழந்தைகள் இவை குறித்து புகார் செய்ய இயலாத நிலை உள்ளது. இத்தகைய குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் நீண்ட காலத்திற்கு இதுபோன்ற குற்றத்தின் பாதிப்புகளை தொடர்ந்து அனுபவித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பாதிப்புகளை தவிர்ப்பதற்காக வயது வந்த நபர்களும் தற்போது தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது எதிர்நோக்கிய பாலியல் குற்றங்கள் குறித்து புகார் செய்ய முன்வந்திருக்கிறார்கள்.
******
(Release ID: 1549909)
Visitor Counter : 368