பிரதமர் அலுவலகம்

வாரணாசியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 18 SEP 2018 6:22PM by PIB Chennai

இங்கு பெருமளவு கூடியிருக்கும் காசியை சேர்ந்த எனது இளம் நண்பர்களே, காசியை சேர்ந்த சகோதர, சகோதரிகளே, நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்!

காசியை சேர்ந்த மக்கள் என் மீது காட்டும் அன்பினையும் அரவணைப்பையும் கண்டு நான் பூரித்துப்போகிறேன். இதற்காகவே நேரத்தை உருவாக்கி மீண்டும் மீண்டும் காசிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறேன்.

 சகோதர, சகோதரிகளே,

ஹர ஹர மஹாதேவா !

தந்தை விஸ்வநாதர் மற்றும் தாய் கங்காவின் ஆசிர்வாதத்தோடு மற்றுமொரு ஆண்டு நாட்டுக்கு சேவை செய்ய துவங்கும் வாய்ப்பு கிடைத்தது எனது புண்ணியம். உங்களது அன்பும், ஆசிர்வாதமும் என்னை ஒவ்வொரு நொடியும் நாட்டுக்கு சேவை செய்ய தூண்டுகிறது.

நண்பர்களே,

இந்த சேவையை மேலும் ஒருபடி முன்னேற்ற ரூ. 550 கோடி மதிப்பிலான திட்டங்கள்  தொடங்கப்படுகிறது அல்லது அடிக்கல் நாட்டப்படுகிறது.

இந்த வளர்ச்சி திட்டங்கள் வாரணாசிக்கு மட்டும் அல்லாமல் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு பலன் தரும். மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற அத்யாவசிய தேவைகள் மற்றும் விவசாயிகள், நெசவாளர்கள், கைவினை கலைஞர்களுக்கு புது வாய்ப்பினை உறுதி செய்யும் திட்டங்களும் இதில் அடங்கும்.

அது மட்டும் இன்றி, 21 நூற்றாண்டில் சிறந்த அறிவு சார் மையமாக பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தை மாற்ற புது திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்காக வாரணாசி மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே,

நான் எப்போதெல்லாம் உங்கள் மத்தியில் இருக்கிறேனோ, அப்போதெல்லாம் நான் ஒன்றை நினைவு படுத்தவிரும்புகிறேன். மாற்றத்திற்காக நாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும்  காசியின் கலாச்சாரத்தையம் பாரம்பரியத்தையும் பாதிக்காதவாறு இருக்கும். இந்த நகரத்தின் நெடுங்கால அடையாளத்தை பாதுகாத்தே நவீன வசதிகளும் உட்கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படுகின்றன.

நான்கு நான்கரை ஆண்டுகளுக்கு முன் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று காசி மக்கள் எடுத்த உறுதிமொழியினால்  ஏற்பட்டுள்ள மாற்றத்தை இன்று  கண்கூடாக காணமுடிகிறது அல்லவா? உங்களால் மாற்றத்தை பார்க்க முடிகிறதா? நன்றி!.

காசியின் நிலைமை முற்றிலுமாக கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற அளவிற்கு கைவிடப்பட்ட நிலைக்கு நீங்கள்தான் சாட்சி. ஆனால் தந்தை விஸ்வநாத்தின் ஆசிர்வாதத்தால் வாரணாசியின்  வளர்ச்சியில் புதிய பாதையை நாம் வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளோம் என்பது எனக்கு மிக்காரும் திருப்தியை அளிக்கிறது.

பல வருடங்களுக்கு முன் காசிக்கு பயணம் மேற்கொள்பவர்கள் இங்குள்ள மோசமான வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகளால் மிகவும் சிரமப்பட்டனர்சிக்கி கிடக்கும் மின் கம்பிகள் போல்தான் காசியும் சிக்கலாகவே இருந்தது. அந்த சமயத்தில்தான் அனைத்து சிக்கல்களையும் வளர்ச்சியாக மாற்ற நான் முடிவெடுத்தேன்

இன்று காசியில் ஒட்டுமொத்த மாற்றத்தை நம்மால் காண முடிகிறது. எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது, நான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கும் முன் ஒவ்வொரு முறை காசிக்கு வரும்போதும் இப்படி அபாயகரமாக தொங்கும் மின்கம்பிகளில் இருந்து காசிக்கு விடுதலையே கிடையாதா என்று? இன்று நீங்களே பார்க்கலாம் நகரத்தின் பெரும்பாலான இடங்களில் அதுபோன்ற தொங்கும் கம்பிகள் கிடையாது. மீதமுள்ள இடங்களிலும் தொங்கும் கம்பிகளை அகற்றி மின் இணைப்புகளை பூமிக்கு அடியில் கொடுக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

மின்மயமாக்கல் தொடர்பாக இன்று தொடங்கப்பட்ட ஐந்து முக்கிய திட்டங்களில் தொங்கும் மின் கம்பிகள் அல்லாத பழைய காசியை உருவாக்கும் திட்டமும் அடங்கும். வாரணாசியுடன் அதனை சுற்றி உள்ள கிராமங்களிலும் தேவையான மின் விநியோகம் அளிக்கவேண்டும் என்ற குறிக்கோளை நிறைவேற்ற இந்த திட்டங்கள் வலுசேர்க்கும். அதுமட்டும் இன்றி, மற்றும் ஒரு மின்சார துணை மையத்தை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த மையம் இயங்க ஆரம்பித்த பின் சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த மின்னழுத்த பிரச்சனை வராது.

நண்பர்களே,

கிழக்கு இந்தியாவின் நுழைவாயிலாக வாரணாசியை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனஅதனால், வாரணாசியில் உலக தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கே அரசு முன்னுரிமை அளித்துவருகிறது. 21-ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகள், மருத்துவ வசதிகள், கல்வி வசதிகள் போன்றவை மேம்படுத்தப்படுகிறது.

இன்று காசி எல்..டி. பல்புகளில் வெளிச்சத்தில் மிளிர்கிறது. நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தாய் கங்கை நதியின் பாய்ச்சல் இரவிலும் நன்றாக தெரிகிறது. எல்..டி. பல்புகள் உங்கள் வாழ்க்கையை ஒளிமயமாக்கியது மட்டும் அல்ல, உங்களது மின்சார கட்டணத்தையும் குறைத்துள்ளது. எல்..டி. பல்புகள் பொருத்திய பின் வாரணாசி நகராட்சி நிறைய பணம் சேமித்துள்ளது.

நண்பர்களே,

நான்கு ஆண்டுகளுக்கு முன் காசிக்கு வந்தவர்கள்  தற்போது புதிய சாலைகள் விரிவடைந்திருப்பதை பார்க்க முடியும். பல ஆண்டுகளாக, வாரணாசியில் வட்ட சாலை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டுவருகிறது, அனால் இந்த திட்டம்  கோப்புகளில் மட்டுமே இருந்தது. 2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின், வட்ட சாலை கோப்பு வெளியில் எடுக்கப்பட்டது. இந்த திட்டம் நிறைவேறினால் மோடிக்கு புகழ் வந்து சேரும் என்ற பயத்தில் உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தவிடவில்லை. அதனால், அந்த கோப்பை அவர்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்தனர்.

எனினும், நீங்கள் யோகி அவர்களின் அரசை தேர்ந்தெடுத்தபின் இந்த பணி  மிக விரைவாக முடிவடைந்தது. ஹர்ஹுவாவில் இருந்து காஸி பூர்  வரையிலான நான்கு வழி சாலை பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டதுஹர்ஹுவாவில் இருந்து ராஜா தலாப்  மற்றும் சந்தாவுலிக்கு செல்லும் புதிய சுற்றுப்பாதை பணி வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வழியில், கங்கை நதி  மேல் பாலம் அமைக்கப்படும். இதன் மூலம் வாரணாசிக்குள் நுழையும் சரக்கு லாரிகளின் எண்ணிக்கை குறையும்.

நண்பர்களே,

காசி வட்ட சாலை காசிக்கு மட்டும் அல்லாமல் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் பலன் தரும். இங்கிருந்து செல்லும் சாலைகள் பீகார், நேபாள், ஜார்கண்ட் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு மிகவும் முக்கியம். இதனாலதான் வாரணாசியில் உள்ள சாலைகள்  மற்றும் பிற மாநில சாலைகள் மேலும் விரிவாக்கப்படுகின்றன. வாரணாசி-சுல்தானிபூர் சாலை, வாரணாசி-கோரக்பூர் பிரிவு  மற்றும் வாரணாசி-ஹண்டியா இணைப்பு சாலை ஆகியவற்றை கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண்: 7 க்கு பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

சகோதர சகோதரிகளே,

வாரணாசியிலேயே பல்லாயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு சாலைத் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முன்பு மஹ்மூர்கஞ்ச்  மற்றும் மண்டுவாதீஹ்  இடையே பயணிக்கும் போது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். நான் உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டியதில்லை பள்ளிக்குழந்தைகளும் மிகவும் சிரமப்பட்டனர். பல ஆண்டுகளுக்குப் பின், மண்டுவாதீஹ் மேம்பால பணி  முடிவடைந்தது. அதேபோல், கங்கை ஆற்றின் மேல் சம்மேகத் பாலம் அமைத்தபின் ராம்நகர் சென்று வருவது மிகவும் எளிதாக இருக்கிறது. அந்தூரா பாலத்தை விரிவாக்கும் கோரிக்கை அந்த பாலத்தை போலவே மிகவும் பழையது. அந்தூரா பாலத்தை விரிவாக்கும் பணி பல ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த பணியும் தற்போது நிறைவடைந்துள்ளது. போஜுவித் -சிந்தோரா சாலை விரிவாக்கம், சிவப்பூர்-புல்வாரியா சாலையை நான்கு வழி சாலையாக மாற்றுவது மற்றும் ராஜா தலப் காவல் நிலையம் - ஜாக்கினி இடையே உள்ள சாலை விரிவாக்கம் போன்ற பல்வேறு பணிகள் வாரணாசியின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மத நம்பிக்கைகள் மற்றும் சுற்றுலா ஆகியவற்றின் அடிப்படையில் முக்கியமான பஞ்சகோசி வழியின் மேம்பாட்டு பணி  வேகமாக செயல்படுத்தப்படுகிறது.

 

பகவத் மேம்பாலம் மற்றும் நீதிமன்ற சாலை இடையே சாலை அமைப்பதற்காக சுமார் ரூ. 750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்பு இது எவ்வளவு சிரமமான பாதை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! சில நிமிடங்களே ஆக வேண்டிய இந்த சாலை வழிப் பயணம் பல மணி நேரம் எடுத்ததுஇந்த சாலையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலால் மக்கள் தங்கள் விமானங்கள் மற்றும் ரயில்களை தவறவிட்டனர். இந்த அத்தனை பிரச்சனைகளும் இந்த சாலை பணிகள் நிறைவடைந்ததும் முடிந்துவிடும்.

நண்பர்களே,

விமானங்களுக்கு செல்லுபவர்களே வாரணாசி வளர்ச்சி அடைகிறது என்பதற்கு சாட்சி. வாரணாசிக்கு விமானம் மூலம் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன், சுமார் 8 லட்சம் மக்கள் பாபத்பூர் விமான நிலையத்திற்கு வருகை தந்துவந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது 21 லட்சமாக உயர்ந்துள்ளது. ஸ்மார்ட் வாரணாசியில் ஸ்மார்ட் மாற்றத்தை அறிமுகப்படுத்த வாரணாசியின் போக்குவரத்து முறை அனைத்து வகையிலும் நவீனமயமாக்கப்படுகிறது. ஒரே முறை போக்குவரத்து மீது பெரும் சுமை ஏற்படாமலிருக்க போக்குவரத்து முறைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றனஇங்கு கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த உத்தரவு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மொத்த நகரத்தின் நிர்வாகம் மற்றும் பொது வசதிகளை கட்டுப்படுத்துவதாக அமையும்.

வேகமாக நகரும் பல்வகை போக்குவரத்து முனைய பணி  நிறைவடைந்தபின், வாரணாசி போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு முக்கிய மையமாக மாறும். இதும் சாலை, ரயில் மற்றும் நீர் போக்குவரத்தை இணைப்பை அதிகரிக்கும். இது வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கு பலன் அளிக்கும்.

காசிக்கு வருகைதருபவர்களின் பயண நேரத்தை குறைக்க படகு சேவை அளிக்கும் பணி  நடைபெற்றுவருகிறது. வாரணாசி மற்றும் ஹல்தியா இடையேயான  தேசிய நீர்போக்குவரத்து எண் . 1-ன்  பணி  நடைபெற்றுவருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களை எரிவாயு வாகனங்களாக மாற்ற பணிமேற்கொள்ளப்படுகிறது.

சகோதர சகோதரிகளே,

சமூக ஊடகங்களில் வாரணாசி கண்டோன்மென்ட் நிலையத்தில் மக்கள் சந்தோஷமாக புகைப்படம் எடுத்துக்கொள்வதை பார்த்தால் எனது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. கண்டோன்மென்ட் ரயில் நிலையம், மண்டுவா தீஹ் நகர ரயில் நிலையத்தின் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது. இவை நவீனமயமாக்கப்படுகிறது. ரயில் மூலம் காசி வருபவர்கள் புதிய காசியின் வடிவத்தை ரயில் நிலையத்திலேயே காண்கின்றனர்.

நண்பர்களே,

வாரணாசியை அலகாபாத் மற்றும் சாப்ராவுடன் இணைக்கும் ரயில் இணைப்பை இரட்டைப் பாதையாக மாற்றும் பணியும் நடைபெறுகிறது. வாரணாசி முதல் பலியா வரை மின்மயமாக்கல் பணி நிறைவடைந்துள்ளது. வாரணாசி - அலகாபாத் நகர பிரிவு ரயில் இணைப்பை இரடடைப் பாதையாக்கல் மற்றும் மின்மயமாக்கல் பணியும் நடைபெற்று வருகிறது.

உட்கட்டமைப்பு வசதியுடன், வாரணாசியை நாட்டின் மற்றப்பகுதியுடன் ரயில் மூலம் இணைத்தலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் வாரணாசியில் இருந்து பல ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன. நவீன வசதிகளுடன் கூடிய வாரணாசி-தில்லி, வதோதரா, பாட்னா மஹாமனா எக்ஸ்பிரஸ், வாரணாசி- பட்னா ஜனஷதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகியவையும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஹூப்ளி , மைசூர், கவுஹாத்தி  போன்ற நகரங்களுடனான வாரணாசியில் ரயில் இணைப்பும்  வலுவாக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,  

    காசி நகருக்கு சுற்றுலா வருவது தற்போது எளிதாக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் அந்நகரமும் அழகுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது நமது காவலர்கள் அங்கு சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றி, விருந்தினர்களை விளக்குகளால் வரவேற்கின்றனர். கங்கை நதியில் தற்போது படகினால் மட்டுமல்ல கப்பல்கள் மூலமும் பயணிக்க முடியும். கோவில்களை எளிதாக சென்றடைவதற்கு வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா மூலம் மேற்கொள்ளப்படும் இந்த மாற்றத்திற்கான இயக்கம் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது.

சகோதரர்களே, சகோதரிகளே,

  கடந்த 4 ஆண்டுகளில் காசியின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், பாரம்பரிய கலாசாரத்தை அழகுபடுத்தவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  மைதாகின் நகராட்சி கூடத்திலிருந்து மகாத்மா காந்தி தமது விடுதலை இயக்கத்தை தொடங்கினார். பாரம்பரிய மிக்க அந்த பவனின் பெருமையை புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது பழைய நிலைக்கு அந்த கட்டிடம் திரும்பியுள்ளது.

  வாரணாசியின் பெரிய மற்றும் முக்கிய பூங்காக்கள் மீட்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ளன. சாரநாத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒளி-ஒலி காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக சமய மையங்களான புத்தரின் கோட்பாடுகளை விளக்கும் பூங்கா, சாரங்கநாத் குளம், குருதம் கோவில், மார்கண்டேய மகாதேவ் கோவில் ஆகியவை ஏற்கனவே அழகுபடுத்தப்பட்டுள்ளன.

 பைரவ்குண்ட், சாரங்கநாத்குண்ட், லஷ்மிகுண்ட் மற்றும் துர்காநாத் குண்ட் ஆகியவை ஏற்கனவே அழகுப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் காசியில் வசிக்கும் மக்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல தலைவர்களை  சிறப்பான முறையில் வரவேற்றுள்ளனர். ஜப்பான் பிரதமர் திரு. ஷின்சோ அபே, பிரான்ஸ் அதிபர் திரு. மெக்ரோன் மற்றும் ஜெர்மனி அதிபர் திரு. பிராங்க் வால்டர் ஆகியோர் காசி மக்களின் வரவேற்பை வெகுவாக  புகழ்ந்துள்ளனர். ஜப்பான் உண்மையிலேயே காசி நகருக்கு மாநாட்டு மையம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது.

 நண்பர்களே,

  அடுத்த ஆண்டு தொடக்கத்தில் காசி மக்களின் வரவேற்பை அந்நகருக்கு வரும் ஒவ்வொருவரும் எதிர்நோக்கியுள்ளனர். ஜனவரியில் வெளிநாடுகளில் குடியேறி உள்ள இந்தியர்களுக்காக காசி நகரம் கும்பமேளாவுக்கு  ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக அரசும் பணியாற்றி வருகிறது. உங்களது ஒத்துழைப்பு தவிர்க்க முடியாதது. காசியில் ஒவ்வொருவரும் தாமாக முன்வரவேண்டும். வாரணாசியின் வாசனைத் திரவியம், அதன் பாரம்பரியம் தெருக்களிலும், ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் பிரதிபலிக்க வேண்டும். இதுபோன்ற துப்புரவுக்கும், வரவேற்புக்கும் உரிய எடுத்துக்காட்டை வெளிவாழ் இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் எடுத்தியம்பவேண்டும். பிரவாசி பாரதிய திவாஸ் அன்று இங்கே வரும் மக்களுக்கு நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவர்கள் காசியின் சுற்றுலா தூதர்களாக மிளிர்வதற்கு சிறந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். எப்போது சென்றாலும், காசியைப் பற்றி உற்சாகமூட்டும் கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள்.

சகோதர, சகோதரிகளே,

  தூய்மையை பொறுத்தமட்டில் காசி புதிய மாற்றத்தை சந்தித்துள்ளது. தற்போது துப்புரவு என்பது மலைப் பகுதிகளிலும், தெருக்களிலும், ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் சாதாரண நிகழ்வாகிவிட்டது. துப்புரவுக்கு அதிவேக தீர்வுகள் மட்டுமல்லாமல், குப்பைக்கூளங்களை பத்திரமாக வெளியேற்றவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

  வேண்டாத குப்பைகளை உரமாக மாற்றுவதற்கு கார்சாராவில் பெரிய அளவிலான ஆலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பல மெட்ரிக் டன் எடையிலான குப்பைகள் உற்பத்தியாகின்றன. இந்த குப்பைகள் மக்க வைக்கப்படுகின்றன.  இந்த ஆலையின் மூலம் மின்சக்தி உருவாக்கப்படுகிறது. பவானியா, பொஹாரி, பஹாரியாமந்தி மற்றும் ஐடிஏ வளாகத்தில் உயிரி எரிபொருள் ஆலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

 

நண்பர்களே,

   கங்கோத்ரியிலிருந்து கங்கா சாகர் வரை கங்கை நதியை தூய்மைப்படுத்தவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆற்றைச் சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் அருகே உள்ள கிராமங்கள், நகரங்களிலிருந்து குப்பைகள் அனைத்தும் கங்கை நதியில் வந்து சேர்வதைத்தடுக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படியாக கிட்டதட்ட 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 200க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

  இதை நோக்கத்தில் கொண்டு வாரணாசியில் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தினாப்பூர் மற்றும் ரமணா ஆகிய நகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆலைக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்யவும், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 150க்கும் மேற்பட்ட பொது கழிவறைகளும் நிறுவப்பட்டுள்ளன. இந்த கடினமான பணிகள் மூலம் குடிநீர் வினியோகத் திட்டத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீரை அளவிடும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

 

நண்பர்களே,

  சாலை, மின்சாரம், குடிநீர் ஆகியவை வாரணாசியில் மட்டுமல்ல சுற்றுப்புற கிராமங்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சில கிராமங்களை மேம்படுத்துவது, எனது பொறுப்பாக உள்ளது. நாகேபூர் அதில் ஒரு கிராமமாகும். அங்கே பிரதான குடிநீர் இணைப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாகேபூர், ஜெயபூர், ககாரியா மற்றும் டோம்ரி உள்ளிட்ட கிராமங்களுக்கு சாலை , குடிநீர் மற்றும் மின்வசதி செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத் திடல், சுய வேலைவாய்ப்பு மையங்கள் விவசாயிகளுக்கு சிறந்த வசதிகள் மற்றும் சுகாதார மேம்பாட்டு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

  உங்களின் அயராத ஒத்துழைப்பு காரணமாக காசி, கிழக்கு இந்தியாவுக்கு சுகாதார மையமாக தற்போது உருவாகியுள்ளது. பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவமனைகள் வாரணாசியை வரும் நாட்களில் முக்கிய மருத்துவ மையமாக மாற்றிவிடும். புதிய விபத்து தடுப்பு மையங்கள் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களை பாதுகாக்கும். கட்டுமானப் பணிகளில் உள்ள புற்றுநோய் தடுப்புக்கான புதிய மருத்துவமனை மற்றும் அதிநவீன மருத்துவமனைகள், மருத்துவ சிகிச்சைக்கு நவீன வசதிகளை வழங்கும்.

அண்மையில் பிஎச்யு(BHU)  எய்ம்ஸ் மருத்துவமனையுடன் உலக தரத்திலான சுகாதார நிறுவனத்தைத் தொடங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட்டுள்ளது.

நண்பர்களே,

  இன்றைக்கு பிஎச்யு-வில் வட்டார  கண் மருத்துவச் சிகிச்சை மையமும் தொடங்கப்பட்டுள்ளது. 54 ஆண்டுகளுக்கு முன்னர் லால் பகதூர் சாஸ்திரி இங்கே கண் மருத்துவ துறையைத் தொடங்கி வைத்தார். இதனை வட்டார அளவில் மையமாக விரிவுபடுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த வசதிகள் தொடர்பான மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்ததும், கிழக்கு உத்தரப்பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் நேபாளம் ஆகியவை பயனடையும்.

 

இனி காசியில் வாழும் மக்கள் கண் சிகிச்சைக்காக பெரிய நகரங்களுக்கு செல்லவேண்டிய தேவை ஏற்படாது. எல்லாவித சிகிச்சைகளும் குறைந்த செலவில் மேற்கொள்ளப்படும். மேலும் இந்த நிலையம் அதிக தரம்வாய்ந்த மருத்துவர்களை உருவாக்குவதோடு, சிறந்த ஆய்வுப் பணியை மேற்கொள்ளவும் உதவும்.

நண்பர்களே,

  வாரணாசியில் புதிய மருத்துவமனைகளை தொடங்குவதோடு, ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளும் தகுதி உயர்த்தப்பட்டுள்ளன. பந்தேபூரில் உள்ள தொழிலாளர் காப்புறுதி மருத்துவமனை 150 கோடி ரூபாய் மதிப்பில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. படுக்கைகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும் பல்வேறு சுகாதார நல மையங்கள், மருத்துவமனைகள் ஆகியவை இந்த வட்டாரத்தில் அமைக்கப்படும்.

நண்பர்களே,

  உத்தரப்பிரதேசத்தில் யோகிஜியை, முதல்வராக தேர்ந்தெடுத்த பின்னர் முன்னெப்போதும் இல்லாத வகையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைந்துள்ள யோகிஜி மற்றும் அவரது குழுவினரை பாராட்டுகிறேன். இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, நாட்டின் 50 கோடி ஏழை எளிய சகோதர சகோதரிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்வரை காப்புறுதி வழங்க வகைசெய்கிறது. செப்டம்பர் 23, 2018 முதல் இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

 

சகோதர சகோதரிகளே,

  சுகாதார வசதியோடு, கல்வித்துறையை வலுப்படுத்தவும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பாரம்பரிய கல்வியோடு நவீன கல்வி வசதியும் வழங்கவேண்டும் என மாளவியாஜி கனவு கண்டார். அவரது கனவை நனவாக்கவும் பிஎச்யு-வை விரிவுப்படுத்தவும், பல்வேறு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

  வேத அறிவு 21ம் நூற்றாண்டு அறிவியல் மற்றும் வருங்கால தொழில்நுட்பத் தீர்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. வேதகாலம் சமகாலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வேத அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதுடன், அட்டல் பராமரிப்பு மையமும் தொடங்கப்பட்டுள்ளது.

இளம் நண்பர்களே,

  பழங்கால கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் நாம் எப்படி பெருமையுடன்  ஆர்வம் கொண்டிருந்தோமோ, அதுபோல   வருங்கால தொழில்நுட்பமும் நம்மை ஈர்க்கிறது. நாட்டில் உள்ள 80 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தொழில்நுட்ப பரிமாற்றங்கள் குறித்த உணர்வைப் பெற்றுள்ளனர். பிஎச்யு-ல் தொடங்கப்பட்டுள்ள அட்டல் பராமரிப்பு மையம், எதிர்கால தொழில்நுட்பப் பாதையை நோக்கி நடைபோட்டு வருகிறது. இந்த பராமரிப்பு மையம் புதிய துறைகளைத் தொடங்குவதற்கு புதிய சக்தியை வழங்குகிறது.

  புதிதாக தொடங்கப்படும்   80 தொழிற்கூடங்கள், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 20 தொழில்கூடங்களுடன் இணைந்துள்ளன. வாரணாசியின் இளைஞர்களை நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

  கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பணிகளால், கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகள் பலனடைந்துள்ளனர். ஜூலை மாதத்தில்  ராஜா டாலாப் என்ற இடத்தில் அழுகுப்பொருள்களுக்கான மையம் ஏற்படுத்தப்பட்டது. இந்த மையம் பயிர்களுக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதுடன், வாரணாசி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு அதிக வருவாயை ஈட்டும் வகையில் உதவி வருகிறது. காய்கறிகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் ரயில் நிலையத்திற்கும் அருகே இந்த மையம் அமைந்துள்ளது. பழங்கள், மற்றும் காய்கறிகளை வேறு நகரங்களுக்கு அனுப்பி வைக்கவும் இந்த மையம் பயன்படுகிறது.

  இது தவிர, சர்வதேச அரிசி ஆய்வு மைய பணிகள் முழுமை பெறவுள்ளன. உயர்ந்த தரம் மிக்க நெல் ரகங்களை இங்கே பாதுகாப்பாக வைப்பதிலும், காசி முக்கிய பங்கு வகிக்கிறது. வாரணாசியில் வாழும்  விவசாய சகோதர, சகோதரிகளுக்கு மாற்று வருவாய்க்கான வாய்ப்பு கிடைக்க நாம் ஏற்பாடு செய்து வருகிறோம். விவசாயத்துடன் கால்நடை  பாதுகாப்பு, தேனீ வளர்ப்பு ஆகியவற்றையும் மேற்கொள்ளுமாறு விவசாய சகோதர சகோதரிகளை நாம் ஊக்குவித்து வருகிறோம்.

  சில நாட்களுக்கு முன்பு விவசாயிகளுக்கு தேனீக்கள் நிறைந்த பெட்டிகள் வழங்கப்பட்டன. இங்கே அதுபற்றிய புகைப்படங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் தேனீக்கள் நிறைந்த பெட்டிகள் முன்னதாகவே அவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. இதற்கு பின்னால் உள்ள நோக்கமானது, தேனீக்கள் மகசூலை அதிகரிக்க உதவிசெய்வது மட்டுமல்லாமல், தேன் உற்பத்தி மூலம் வருவயைப் பெருக்கும் ஆதாரமாகவும் செயல்படுகிறது. உணவு தானிய  மகசூலுடன் நாட்டில் அதிகளவில் தேன் உற்பத்தி செய்யப்படுவதை அறிந்தால் நீங்கள் பெருமைப்படுவீர்கள்.

சகோதர சகோதரிகளே,

  வாரணாசி மற்றும் கிழக்கிந்தியாவில் உள்ள நெசவாளர்கள், கைவினைஞர்கள் ஆகியோர் மண்வளத்தை பொன்னாக்கி வருகின்றனர். கைவினைத் தொழில், கைவினைஞர்கள் மற்றும் கைத்தொழில் நிபுணர்களுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிடும் வகையில் வர்த்தக வசதி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நெசவாளர்களுக்கு சிறந்த உற்பத்தி வசதிகளை வழங்கிடும் வகையில் பொதுவான வசதிகள் வழங்கும் மையங்கள் 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. நெசவாளர்களுக்கு சிறந்த உற்பத்திக்கான வசதிகளை இது வழங்கும். நெசவு சகோதர்கள் மற்றும் சகோதரிகளுக்கு அவர்களது பணியை எளிதாக்கும் வகையில் வார்ப்பட எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

  மண் மற்றும் களி மண்ணைப் பயன்படுத்தி குயவுத்தொழில் செய்துவரும் சகோதர சகோதரிகளுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் இன்று சகோதர சகோதரிகளுக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர, குயவர்களுக்கு குயவத் தொழிலில் பானைகளுக்கு  அழுத்தம் கொடுக்கவும், களி மண்ணை  உலர வைக்கவும் நவீன எந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. பானைகளை செய்வதற்கும் அலங்காரப் பொருட்களை உருவாக்குவதற்கான நேரமும், உழைப்பும் இதன் மூலம் மிச்சமாகும்.

நண்பர்களே,

  வாரணாசியில் உள்ள அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீடுதோறும் சமையல் எரிவாயுக்கான குழாய் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கும் சில நகரங்களில் காசியும் ஒன்றாகும். இதற்காக அலகாபாதிலிருந்து வாரணாசி வரை குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. இன்றுவரை எரிவாயு குழாய் இணைப்புக்கான வசதி வாரணாசியில் எட்டாயிரம் வீடுகளுக்குமேல் வழங்கப்பட்டுள்ளது. வரும்நாட்களில் மேலும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இந்த வசதி கிடைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை தவிர, உஜ்வாலா திட்டத்தின்படி, குடும்ப பெண்களுக்கு உதவ வாரணாசியிலும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் 60 ஆயிரம் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

 

நண்பர்களே,

   அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், என்ற வழியில் நடைபோடும் காசி, புதிய ஆர்வத்துடன் வருங்காலத்தை உருவாக்க முனைந்துள்ளது. ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் இந்த உள்கட்டமைப்பு திட்டங்களில் பல திட்டங்கள் முழுமையை எட்டியுள்ளன. சில முக்கிய திட்டங்களான விமானநிலையத்திலிருந்து நீதிமன்றம் வரையிலான சுற்றுவட்டச் சாலை, அரிசி ஆய்வு நிலையம், பினாபூர் – கொய்தா கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பன்முக முனையம், உலகத் தரத்திலான புற்றுநோய் மருத்துவமனை ஆகிய சில முக்கியத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதும் இந்நகரின் மேம்பாடு புதிய உச்சத்தை அடையும்.

  வாரணாசியில் இந்தத் திட்டங்கள்  மூலம் வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகள்  உருவாகும். வாரணாசியின் முன்னேற்றம் தொழில் முனைவோருக்கு புதிய வாய்ப்புகளுக்கு வாயிலை திறந்துள்ளது. வாருங்கள், நாம் அனைவரும் வலுவோடு இணைந்து, வாரணாசியின் இந்த மாற்றத்திற்கான திட்டத்திற்கு நம்மை அர்ப்பணிப்போம்.  புதிய காசி, புதிய இந்தியாவை உருவாக்குவதில்  நாம் அனைவரும் பங்கு பெறுவோம்.

  புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு இருப்பதற்காக நான் உங்கள்  அனைவரையும் மீண்டும் பாராட்டுகிறேன். உங்கள் அன்பும் வாழ்த்துக்களும் எனக்கு உந்துதலாக அமையும் என்று நான் நம்புகிறேன்.

சகோதர சகோதரிகளே,

  நீங்கள் என்னை உங்களது பிரதமராக தேர்வு செய்திருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் உங்களின் முன்னேற்றத்திற்கு நான் பொறுப்பாவேன். இன்று உங்களது பணியை நான் நேரில் கண்டேன். கடந்த 4 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது பணியை செய்து வருகிறேன். மக்களின் பிரதிநிதி என்ற முறையில், உங்களது சேவகன் என்ற முறையில் நீங்கள் எனது முதலாளி அல்லது மேலிடமாகும். எனவே, செலவிடப்பட்ட ஒவ்வொரு காசுக்கு உங்களிடம் கணக்கு காண்பிப்பதை  எனது பொறுப்பாக கருதுகிறேன்.

  நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இங்கே  மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து உங்களிடம் தெரிவிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை மகிழ்ச்சியாக கருதுகிறேன். எனது அடித்தளத்திலிருந்து உங்களது அன்புக்கும், வாழ்த்துக்களுக்கும் நான் மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

  என்னோடு சேர்ந்து சொல்லுங்கள் - தாய் நாட்டுக்கே வெற்றி! தாய் நாட்டுக்கே வெற்றி! தாய் நாட்டுக்கே வெற்றி.!

**************** 



(Release ID: 1549577) Visitor Counter : 426


Read this release in: English , Marathi