குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
சென்னை, எத்திராஜ் கல்லூரியில் 2018, அக்டோபர் 11-ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு ஆற்றிய உரை
Posted On:
11 OCT 2018 1:50PM by PIB Chennai
நாட்டில் உள்ள மகளிர் கல்வி நிறுவனங்களில், பிரதான இடத்தைப் பெற்றுள்ள இந்தக் கல்லூரியின் 70-வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதில், உங்களுடன் நானும் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். 1948-ஆம் ஆண்டு வெறும் 49 மாணவியருடன் தொடங்கப்பட்ட எத்திராஜ் மகளிர் கல்லூரி, இன்று 8 ஆயிரம் மாணவியருடன் சென்னை நகரின் மிகப்பெரிய மகளிர் கல்லூரியாக பரிணமித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
எத்திராஜ் கல்லூரியின் வரலாற்றைக் குறிப்பிடும்போது, அதன் நிறுவனர் திரு. வி.எல்.எத்திராஜ் அவர்களை குறிப்பிடாமல் இருக்க முடியாது. பிரபல வழக்கறிஞராக திகழ்ந்தவர் அவர். 1940-களிலேயே தனது ஆயுட்கால சேமிப்பான 10 லட்சம் ரூபாயையும், தனது இரண்டு மாளிகைகளையும் பெண்கள் தரமான கல்வி பெறுவதற்காக வழங்கிய வள்ளல் திரு. எத்திராஜ் அவர்கள். அந்தக் காலத்தில் 10 லட்சம் ரூபாய் என்பது, சாதாரண தொகை அல்ல. மிகப் பெரும் தொகையாகும்.
நமது நாட்டின் முதல் துணைக் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர் திரு. எத்திராஜ் அவர்கள். பிரிட்டனில் உள்ள டப்ளின் பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வி பயின்று பட்டம் பெற்று, பாரிஸ்டராக இந்தியா திரும்பி, சென்னையில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட தாராள மனம் படைத்த வள்ளல் அவர். வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட குறுகிய காலத்திலேயே, அவரது அறிவாற்றல், அனுபவம் காரணமாக வழக்கறிஞர் தொழிலில் பெரும் பொருள் ஈட்டினார். பிரிட்டிஷ் அரசருக்கு வழக்கறிஞராக அந்த நாட்டு அரசால் முதன்முதலாக நியமிக்கப்பட்ட இந்திய வழக்கறிஞர் அவர்.
வழக்கறிஞர் தொழிலில் உச்சத்திற்குச் சென்றபோதிலும், அவரது மனம் மகளிர் கல்வி பற்றியே உழன்று கொண்டிருந்தது. அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, கொடுமைக்குள்ளான இந்தியப் பெண்களின் அவல நிலை குறித்து அவர் பெரிதும் கவலை கொண்டார். அவரது தாராள குணமும், உறுதியும் இதில் அவருக்கு வழிகாட்டின. அதன் பலனாகவும், அவரது விடாமுயற்சி காரணமாகவும், 1944-ஆம் ஆண்டு எத்திராஜ் மகளிர் கல்லூரி பிறந்தது. கடந்த 70 ஆண்டுகளில், படிப்படியாக இந்த நிறுவனம் வளர்ச்சி பெற்று, ஆயிரக்கணக்கான இளம் மகளிர் வல்லமை பெறச் செய்ததை, இன்று அவர் இருந்திருந்தால் பெரும் உவகை அடைந்திருப்பார்.
மகளிர் வாழ்ந்தால்தான் நாடு நலமடையும். அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய பண்புகள் தழைக்க, இந்தியா மறுமலர்ச்சி பெற, கல்விக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். அதிலும் குறிப்பாக, வளர்ச்சியின் மையப்புள்ளி பெண் கல்வியாகத்தான் இருக்க வேண்டும். ஆணாதிக்கம், அடிப்படை வாதம், தீவிரவாதம், பிற்போக்குவாதம் ஆகியவற்றுக்கு சரியான மாற்று பெண் கல்வி தவிர வேறில்லை.
“சமுதாயத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவது கல்விதான்” என்று மறைந்த எத்திராஜ் அவர்கள் கூறுவார்கள். பன்முகத் தன்மையை மதிப்பது, வெவ்வேறு கருத்துக்களுக்கு இடமளிப்பது என்ற உள்ளடக்கிய சமுதாயத்தின்மீது நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதற்கு கல்விதான் அடிப்படைக் கருவி. பழமொழி ஒன்றை நினைவூட்டுகிறேன், “ஒரு ஆணைப் படிக்க வைத்தால், ஒரு தனிநபர் கல்வி பெறுகிறார். ஒரு பெண்ணைப் படிக்க வைத்தால் ஒரு நாடே கல்வி பெறுகிறது” என்பதுதான் அந்தப் பழமொழி.
அன்பார்ந்த மாணவிகளே,
நீங்கள் பயிலும் இந்தக் கல்லூரி பாடப் புத்தகங்களை கற்பிப்பதுடன் நின்றுவிடாமல், மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்சிக்கும் வழிகாட்டுகிறது. அதன் காரணமாகத்தான், எத்திராஜ் கல்லூரியில் பயின்ற மாணவியர், பல்வேறு துறையிலும் சாதனை படைத்து, நாட்டின் பெருமையை பறைசாற்றுகிறார்கள். சில குறிப்பிட்ட நபர்கள் பற்றி கூறுவதென்றால், கலைகளில் பத்மபூஷன் பத்மா சுப்பிரமணியன் மற்றும் பத்மபூஷன் சுதா ரகுநாதன், விளையாட்டுக்களில் தீபிகா பள்ளிக்கல் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா, அண்மையில் ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிதி நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட திவ்யா சூர்யதேவரா ஆகியோரை குறிப்பிடலாம்.
இந்தியப் பெண்கள் தங்கள் திறமையை காட்டாத துறைகளே இல்லை என்று கூறலாம். அரசியலாகட்டும், விளையாட்டுக்களாகட்டும், சேவை அல்லது கல்வித் துறையாகட்டும் இப்படி எல்லாத் துறைகளிலுமே அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சர்வதேச செலாவணி நிதியம்-IMF-ன் முதன்மைப் பொருளாதார அலுவலர் கீதா கோபிநாத், பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொறுப்பிலிருந்த அருந்ததி பட்டாச்சார்யா, விளையாட்டுக்களில் நட்சத்திரங்களாக திகழும் மேரிகோம், சாய்னா நேவால், விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ், டெஸி தாமஸ், பாதுகாப்புத்துறையில் மேஜர் மித்தாலி மதுமிதா, வாய்ப்பு கிட்டுமானால், எந்த உச்சத்தையும் தொடுவதற்கு அவர்கள் தயாராக உள்ளார்கள். அண்மையில், இந்திய ராணுவம் மகளிர் போர் வீரர்களாவதற்கு வாயில் திறந்துள்ளது. இந்திய வளர்ச்சிப் பயணத்தில் மகளிரின் பிரதான பங்களிப்பை உறுதி செய்வதில், நமது நாடு மகத்தான அடியெடுத்து வைக்கிறது.
பெண்கள் என்றால், ஆண்களைவிட கீழானவர்கள் என்று சமுதாயத்தில் நிலவும் கருத்தை நாம் புறம்தள்ள வேண்டும். அது, நமது தொன்மையான தத்துவங்களுக்கு எதிரான கருத்து.
எங்கு பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ அங்கே இறைவன் குடியிருக்கிறான். அதுதான் மகிழ்ச்சி தவழும் இடம் என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நமது நாடு போதித்திருக்கிறது (இதனை விளக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தை எடுத்துரைத்தார்).
பாலினப் பாகுபாடின்றி, அனைவருக்கும் கல்வி புகட்டுவது நமது தொன்மையான, வேத காலத்திலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கி, மைத்ரேயி ஆகியோர் நமது பாரம்பரியத்தில் மிக உயர்ந்த கல்விமான்களாக ஒளிர்ந்திருக்கிறார்கள். அவர்கள் படைத்த சாதனை பெண்களுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறது. நமது இதிகாசங்களில் காணப்படும் சக்திவாய்ந்த பெண் தெய்வங்கள் தீய அரக்கர்களை அழித்திருக்கிறார்கள். உதாரணமாக, தசரா விழாவில் நாம் கொண்டாடும் துர்காவையும், சரஸ்வதியையும் குறிப்பிடலாம். தீபாவளியின்போது, லட்சுமியை கொண்டாடுகிறோம். நமது நாட்டின் நதிகளில் பெரும்பாலானவை பெண்களின் பெயரையே தாங்கியுள்ளன. ஆணுக்குச் சமமானவர்கள் பெண்கள் என்பது நாம் பாரம்பரியமாக பின்பற்றும் மரபு. அந்த மரபை புதுப்பிக்க வேண்டும்.
நமது நாட்டின் மகத்தான மைந்தர்களில் ஒருவரும், புனிதமான தமிழ்நாட்டின் மைந்தனுமான சுப்பிரமணிய பாரதி, ஆணுக்குப் பெண் சமத்துவம் பெற்றால்தான் இந்த உலகம் வளமும், அறிவாற்றலும் பெறும் என்று பாடியிருக்கிறார்.
இந்தியாவின் வளர்ச்சியில் மையப்புள்ளியாக இருப்பவர்கள் பெண்கள்தான். இளம் மகளிர் தரமான கல்வியைப் பெறுவதற்கு எத்திராஜ் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் மகத்தான பங்காற்றுகின்றன. பொருளாதார வாய்ப்புகளுக்கு கல்வி நுழைவாயில் என்பதுடன், சமுதாய வளர்ச்சியின் எல்லாப் பகுதிகளுக்குமே அது அடிப்படையாகும். அதனால்தான், இந்திய அரசு மகளிர் கல்வி பற்றி கூறும்போது, ”பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ” அதாவது “பெண் குழந்தைகளை பாதுகாப்போம், அவர்களுக்கு கல்வி புகட்டுவோம்” என்ற கோஷத்தை முன்வைத்துள்ளது.
இன்று, இந்தியப் பெண்கள் திறமையிலும், தற்சார்பிலும் உயர்ந்த நிலையில் உள்ளார்கள். தங்களுக்கு கொடுக்கப்படும் எந்த பொறுப்பையும் அதிஅற்புதமாக செய்து முடிக்கிறார்கள். அவர்களால் வெல்ல முடியாத துறை எதுவுமே இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளார்கள். உலகிலேயே அதிகத் திறமைவாய்ந்த அதிகமான பெண்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. தங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் ஆற்றல், எத்தகையது என்பதை இந்தியப் பெண்கள் புரிந்து வைத்துள்ளார்கள். மருத்துவம் முதல் பொறியியல் வரை, அரசுப்பணி முதல் மலையேற்றம் வரை, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முதல் போர் விமானங்களை இயக்குவது வரை அவர்கள் தொட்ட துறைகளிலெல்லாம் துலங்குகிறார்கள். இந்தியப் பெண்கள் வெற்றிபெறாத துறையே இல்லை என்று கூறலாம். ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது என்று முன்பு கருதப்பட்ட பல திறமைகள் இன்று, பெண்களால் அவர்களைவிட சிறப்பாகவும், எளிதாகவும் கையாளப்படுகிறது.
என்றாலும், சில பகுதிகளில் பெண்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுவதும், அவர்களை துன்புறுத்துவதும் நீடித்துக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது. அந்த சமுதாயத் தீமையை ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும். பாலின சமத்துவத்தை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டு, நாட்டின் 50 கோடி பெண்களின் சக்தியை முழுமையாகப் பயன்படுத்தி, புதிய இந்தியாவை படைப்போம்.
உலக அரங்கில் இந்தியா வல்லரசாகத் திகழ இந்தியப் பெண்களுக்கு வல்லமை அளிப்பது அவசியம். அந்தப் பணியில் எத்திராஜ் மகளிர் கல்லூரிக்கு முக்கியப் பாத்திரம் உள்ளது. நாளைய பெண் தலைவர்களை உருவாக்கும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.
அந்தத் திசை நோக்கி நீங்கள் உறுதியாக முன்னேறி வருவது கண்டு நான் பெரிதும் மகிழ்கிறேன்.
நண்பர்களே,
ஜனநாயகத்தின் பலன்களை துய்க்கும் இடத்தில் நாம் தற்போது நிற்கிறோம். நமது மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர், 35 வயதுக்குட்பட்டவர்கள். துரிதமான வளர்ச்சி நோக்கிச் செல்வதற்கு இதுவரை கிடைக்காத அற்புதமான வாய்ப்பு.
கல்வி பயில்வதால் மட்டுமே ஒருவன் வேலைக்கு தகுதியுள்ளவனாக ஆகிவிட முடியாது. 21-ஆம் நூற்றாண்டில் உலகுக்குத் தேவையான அறிவாற்றலைக் கொண்ட திறனையும், மாணவர்களுக்கு வழங்குவதை கல்வி நிறுவனங்கள் தங்கள் கடமையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
புதிய இந்தியாவையும், புதிய உலகையும் படைக்கத் தேவையான அறிவாற்றலையும், திறனையும், நமது குழந்தைகளும், இளைய சமுதாயத்தினரும் பெறுவதை நமது பள்ளிக் கூடங்களும், கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும்.
இதற்கு வலுவான அடித்தளம் அமைப்பதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும். புதுமைகளைப் படைக்கவும், புதிர்களை விடுவிக்கவும் தேவையான வினாக்களை தொடுப்பதற்கு அடிப்படையாக உள்ள கவனித்தல், உள்வாங்குதல், ஜீரணித்தல், வெளியிடுதல் என்ற திறமைகளை அவர்களுக்குள் வளர்ப்பது இன்றைய தேவை. அறிவாற்றலில் புதிய எல்லைகளை தொடுவதில் மாணவர்களுக்கு ஆர்வம் தேவை. அதேசமயம், அறிவுடமையுடன் கூடிய முடிவுகளை எடுப்பதற்கான பண்பாட்டு வழிகாட்டலையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
நண்பர்களே,
தரமான கல்வியை புகட்டும் எத்திராஜ் மகளிர் கல்லூரிக்கு, வாய்ப்பும், நேர்த்தியும் உள்ள கல்லூரி என்ற பட்டத்தை பல்கலைக் கழக மானியக் குழு வழங்கி கௌரவித்திருப்பது, எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆராய்ச்சியில் நேர்த்தியையும், கற்பிப்பதில் பரிமாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி, தேசிய, சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களுடனும், பல்கலைக் கழகங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கண்டுள்ளது.
எத்திராஜ் கல்லூரி மேலும், மேலும் வலுப் பெற்று, இந்தியாவின் மகளிர் கல்லூரிகளில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்று, மத்திய மனித வள ஆற்றல் மேம்பாட்டுத் துறை மற்றும் தேசிய தர நிர்ணய நிறுவனத்தின் விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது கண்டும் மகிழ்ச்சியடைகிறேன்.
கனவு காண்போர் மற்றும் புதிய எதிர்காலத்தை படைக்கும் திறன் படைத்தோருக்கே எதிர்காலம் சொந்தம். அந்த முயற்சிக்கு எத்திராஜ் கல்லூரி அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது என்று நம்புகிறேன்.
இந்த 70 ஆண்டுகால கல்லூரி வரலாற்றில் அதன் வளர்ச்சிக்கும், அதன் மாணவர்களை உருவாக்கவும் உதவிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். அப்படிப் பயின்றவர்களில் ஏராளமானவர்கள் அமைதி, வளம், உள்ளடக்கிய நீடித்த வளர்ச்சி நோக்கிய இந்தியாவின் பயணத்தில் சக்திவாய்ந்த பங்குப் பாத்திரம் வகித்து, முன்னோடியாக இருப்பார்கள் என்றும் நம்புகிறேன்.
உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
ஜெய்ஹிந்த்.
------
(Release ID: 1549361)
Visitor Counter : 1081