பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

அடுத்த ஐந்தாண்டுகளில் 5000 உயிரி எரிவாயு ஆலைகள்: மத்திய பெட்ரோலிய அமைச்சர் தகவல்

Posted On: 01 OCT 2018 12:25PM by PIB Chennai

மத்திய அரசு வரும் ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 5 ஆயிரம் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு ஆலைகளை (Compressed Bio-Gas) அமைப்பதில் உறுதியாக இருக்கிறது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

 

மலிவு போக்குவரத்துக்கான நீடித்த மாற்று வழி (Sustainable Alternative Towards Affordable Transportation - SATAT) என்ற முன்முயற்சியை அவர் இன்று தொடங்கிவைத்தார்.

 

இதன்படி பெட்ரோலியப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள பொதுத் துறை நிறுவனங்கள் (Oil Marketing Companies) இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலைகளை அமைத்து, அதை வாகனங்களுக்கு விற்பனை செய்வதை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை அவர் தில்லியில் இன்று (செப்டம்பர் 1) தொடங்கிவைத்தார். இதற்கான விருப்பம் தெரிவிக்கும் படிவம் (Expression of Interest) எண்ணெய் நிறுவனங்களின் இணையதளத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் 2019ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையில் இருக்கும்.

 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், “தற்போது தூய்மை இருவார விழா (Swachhta fortnight) கடைப்பிடிக்கப்படுகிறது. அதில் உயிரி எரிவாயு பயன்பாடு சரியான வழியாகும்” என்றார்.

 

அமைச்சர் மேலும் பேசியதாவது:

 

“உயிரி எரிவாயு சுத்தமானது மட்டுமின்றி விலை மலிவானதும் கூட. எனவே, அதன் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 ஆயிரம் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு ஆலைகளை அமைப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இந்த உயிரி எரிவாயு  வளத்தைப் பயன்படுத்துவதற்கான உத்தரவாதம் ஆலைகளுக்கு அளிக்கப்படும்.

 

அதற்கான தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வித கட்டுப்பாடும் இருக்காது. நகர எரிவாயு பின்னலுக்காக (City Gas distribution network) அரசு ரூ. 75 ஆயிரம் கோடி முதலீடு செய்யும்.

 

இவ்வாறு உயிரி எரிவாயு உற்பத்தி போதிய அளவு எரிபொருள் தேவையை நிறைவு செய்வதுடன், வேளாண் கழிவுகள், கால்நடை சாணம், திடக் கழிவுகள் ஆகியவையும் பயன்படுத்தப்படும். இதனால், விவசாயிகளது வருவாய் அதிகரிக்கும். 75 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் பல லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

 

இந்த உயிரி எரிவாயு துறையில் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் மட்டுமின்றி எரிவாயு விநியோக நிறுவனங்களும், சம்பந்தப்பட்ட இதர துறைகளும் பங்கேற்கலாம்.

 

தற்போது 42 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு (PNG) வழங்கப்படுகிறது. இது ஒன்பதாவது நகர எரிவாயு பின்னலுக்கான (City Gas distribution network) ஏலம் நடைமுறைப்படுத்தப்படும்போது 300 மாவட்டங்களில் இரண்டு கோடி வீடுகளுக்கு விரிவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது.”

 

இவ்வாறு அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் பேசினார்.

 

மலிவு போக்குவரத்துக்கான நீடித்த மாற்று வழி (SATAT) திட்டம் வாகன ஓட்டிகள், விவசாயிகள், தொழில்முனைவோர் ஆகிய பல தரப்பட்டவர்களுக்குப் பெரிதும் உதவும். திடக் கழிவுகள் பயனுள்ள வகையில் கையாளப்படும். கார்பன் கழிவுகளைக் கட்டுப்படுத்தி சுற்றுச்சூழல் காக்கப்படும். அத்துடன், அன்னிய கச்சா எண்ணெயைச் சார்ந்திருக்கும் நிலையும் மாறும். விவசாயிகளின் வருவாயை உயர்த்துவது மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பது என்ற பிரதமரின் கனவை நிறைவேற்றவும் உதவும்.

மேலும் விவரங்களுக்கு : http://www.pib.nic.in/

 

----------



(Release ID: 1548165) Visitor Counter : 411


Read this release in: English , Marathi , Hindi