பிரதமர் அலுவலகம்
நேபாளத்தில் ஜனக்பூர் பாராபீகா மைதானத்தில் தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
11 MAY 2018 6:52PM by PIB Chennai
இங்கு குழுமியுள்ள அனைத்து பிரமுகர்களே எனதருமை ஜனக்பூர் சகோதரர்களே, சகோதரிகளே
ஜெய் சியா ராம்
ஜெய் சியா ராம்
ஜெய் சியா ராம்
சகோதரர்களே, சகோதரிகளே,
2014 ஆகஸ்ட் மாதம் நேபாளத்திற்கு முதல்முறையாக பிரதமர் என்ற ரீதியில் நான் வந்தபோது, நேபாளத்தின் சட்டப் பேரவையில் பேசும்போது நான் விரைவில் மீண்டும் ஜனக்பூருக்கு வருவேன் என்று குறிப்பிட்டிருந்தேன். இப்போது சற்று காலதாமதமாக இங்கு வந்திருப்பதற்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். இன்றைய தினம் பத்ரகாளி ஏகாதசி தினமாகும். இந்தத் தினத்தன்றுதான் நான் இங்கு வரவேண்டும் என்று அன்னை சீதாதேவி முடிவு செய்திருக்கிறார். நீண்ட காலமாகவே ஜனக மன்னரின் தலைநகரத்திற்கு பயணமாக வந்து அன்னை சீதாதேவிக்கு எனது மரியாதைகளை சமர்ப்பிக்க ஆசைகொண்டிருந்தேன். எனது நீண்டகால கனவு இன்றுதான் நிறைவேறியது. அதன்படி ஜானகி கோவிலுக்கு வந்துள்ளேன். இந்த ஆசையை நிறைவேற்றியமைக்காக நான் மிகவும் நன்றி உடையவனாக உணர்கிறேன்.
சகோதரர்களே, சகோதரிகளே
இந்தியாவும், நேபாளமும் இரண்டு நாடுகள் என்றாலும், நம்மிடையேயான நட்பு சமீபத்தில் தோன்றியது அல்ல, த்ரேதா யுகத்திலிருந்து நாம் நண்பர்கள். மன்னர் ஜனகரும், தசரத மன்னரும், ஜனகபுரி மற்றும் அயோத்தியாவை மட்டுமின்றி இந்தியாவையும் நேபாளத்தையும் நட்புறவு மற்றும் கூட்டாண்மையால் பிணைத்துவிட்டனர். இந்த பிணைப்பு ராமர்- சீதா பிணைப்பு மற்றும் புத்தர் மற்றும் மகாவீரரின் பிணைப்பும்கூட. இந்தப் பிணைப்புதான் ராமேஸ்வர மக்களை பசுபதிநாத் நோக்கி ஈர்க்கிறது. இந்தப் பிணைப்புதான் லும்பினி மக்களை புத்தகயா நோக்கி ஈர்க்கிறது. இந்தப் பிணைப்பு, இந்த சமயம் சார்ந்த நம்பிக்கை, இந்த அன்பு ஆகியவைதான் என்னை இன்று ஜனகபுரிக்கு வரவழைத்துள்ளன.
மகாபாரதம் மற்றும் ராமாயண காலத்திலிருந்தே ஜனகபுரியுடனான இந்தத் தொடர்பு ஏற்பட்டு நிலைத்துள்ளது. மகாபாரத காலத்தில் பீரத் நகருடனான இந்த இணைப்பு, சிம்ரானா கஞ்ச் மூலமாக தொடர்கிறது. புத்தர் காலத்தில் லும்பினி தொடர்பு ஏற்பட்டது. இந்தத் தொடர்பு பல யுகங்களாக இருந்து வருகிறது. இந்தியாவுக்கும் நேபாளத்திற்குமான உறவுகள் எந்த வரையறைக்கும் உட்பட்டதல்ல, அது நம்பிக்கை எனும் மொழியால், அன்பு என்ற மொழியால், இனம் என்ற மொழியால், மகளை தாரை வார்த்துக் கொடுத்தால் ஏற்பட்ட உறவு என்ற மொழியால் உருவான பந்தம். இது ஜானகி அன்னையின் தலம், இந்த தலமின்றி அயோத்தி முழுமை அடையாது.
நமது அன்னையும், நமது நம்பிக்கையும் ஒன்றுதான். நமது இயல்புகளும், நமது கலாச்சாரமும் ஒன்றுதான். நமது வாழ்க்கை முறைகள், நமது பிரார்த்தனைகள் ஆகியவையும் ஒன்றே. நமது கடின உழைப்பின் பிரதிபலிப்புகளும், நமது வீரத்தின் எதிரொலியும் இதில் அடக்கம். நமது நம்பிக்கைகளும், அபிலாஷைகளும் ஒரே மாதிரியானவை. நமது விருப்பங்களும், நமது வழிமுறைகளும் அது போன்றவையே. நமது விருப்பங்கள், நமது நோக்கங்கள், நமது இலக்குகள் அனைத்தும் ஒன்றே. இந்தியாவின் மேம்பாட்டு பயணத்திற்கு மேலும் வேகத்தை அளித்த கடின உழைப்பாளர்களின் பூமி இது. இந்தியாவின் நம்பிக்கை அடிப்படை நேபாளம் இன்றி முழுமையடையாது. இந்தியாவின் நம்பிக்கை மற்றும் வரலாறு , நேபாளம் இல்லாமல் முழுமை பெறாது. நமது யாத்தி்ரை ஸ்தலங்கள் நேபாளம் இல்லாமல் முற்றுப்பெறாது. நமது ராமரும் கூட நேபாளம் இல்லாமல் முழுமை பெறமாட்டார்.
சகோதரர்களே, சகோதரிகளே,
உங்களது பக்தி கடலைவிட ஆழமானது, உங்களது சுயமரியாதை கடல் அலையைவிட உயரமானது. மிதிலையின் துளசி, தூய்மை, கற்பு, கண்ணியம் ஆகியவற்றின் வாசனையை இந்தியாவின் முற்றத்தில் பரப்புகிறது. அதே போல நேபாளத்தின் மீதான இந்தியாவின் அன்பு அந்நாட்டின் பகுதிகள் அனைத்தையும், அமைதி, பாதுகாப்பு. பண்பாடு ஆகியவற்றில் திளைக்கச் செய்கிறது.
மிதிலையின் பண்பாடு, இலக்கியம், கிராமியக்கலை, மிதிலையின் விருந்தோம்பல் ஆகிய அனைத்தும் வியக்கத்தக்கவை. இன்றைய தினத்தில் நான் இவை அனைத்தையும், அனுபவிக்கிறேன். இன்று உங்கள் அன்பை அனுபவிக்கிறேன். உங்கள் ஆசீர்வாதத்தை என்னால் உணர முடிகிறது. மிதிலையின் பண்பாடு உலகில் மிக உயரிய இடத்தைப் பெற்றுள்ளது. கவிஞர் வித்யாபதியின் கவிதைகள் இந்தியாவிலும் நேபாளத்திலும் ஒரே மாதிரியான முக்கியத்துவத்தை பெற்றுள்ளன. கவிஞர் வித்யாபதியின் இனிமையான சொற்கள், இன்னும் கூட இந்தியா மற்றும் நேபாள இலக்கியங்களில் இடம் பெறுகின்றன.
ஜனகபுரிக்கு வந்ததன் மூலம், உங்களது அன்பையும் பாசத்தையும் உணர்ந்த பிறகு, நான் அந்நியர்களுடன் இருப்பதாக ஒருபோதும் உணரவில்லை. எல்லாமே எங்களுடையதைப்போன்றே உள்ளது. ஒவ்வொருவரும் எங்களவரை போன்றே உள்ளனர். ஒவ்வொன்றிலும் அன்பு உள்ளது. சொல்லப்போனால் இவை எல்லாம் எங்களுக்கு சொந்தமானவையே. நண்பர்களே, நேபாளம் ஆன்மீகத்திலும், தத்துவத்திலும் சிறந்த மையமாக உள்ளது. இந்த புனித நாட்டில்தான் லும்பினி அமைந்துள்ளது. இந்த லும்பினிதான் புத்த பகவான் அவதரித்த இடம்.
நண்பர்களே, பூமா தேவியின் மகளான அன்னை சீதாதேவி மனித நன்னெறிகள், கொள்கைகள், பாரம்பரியங்களின் திருவுருவம் ஆவார். இதுவே நமது இரு நாடுகளையும் இணைப்பது ஆகும். ஜனகரின் இந்த பூமி அன்னை சீதா காரணமாக மகளிர் விழிப்புணர்வுக்கு ஆதாரமாக விளங்குகிறது. தியாகம், தவம், அர்ப்பணிப்பு, அறப்போர் ஆகியவற்றின் உருவமாக அன்னை சீதா உள்ளார். காட்மாண்டுவிலிருந்து கன்னியாகுமரி வரை நாம் அனைவரும் அன்னை சீதாவின் பாரம்பரியத்தை பின்பற்றுபவர்கள். அவரது பக்தர்கள் உலகெங்கும் பரவியுள்ளனர்.
நமது புத்ரிகளை நாம் எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை இந்த நாடு நமக்கு காட்டுகிறது. நவீன சமுதாயத்தின் மிகப்பெரிய அவசியமான விஷயம், நமது புத்ரிகளை மதிக்க வேண்டும் என்ற பாடம்தான். நமது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதில் மகளிர் ஆற்றல் பெரும் பங்கு வகிக்கிறது. உதராணமாக இங்குள்ள மிதிலை ஓவியங்களை எடுத்துக்கொள்வோம். இந்த பாரம்பரியத்தை மேம்படுத்துவதில் மகளிர் பெரும் பங்காற்றியுள்ளனர். இன்றைய நிலையில், மிதிலையின் இந்தக் கலை உலகெங்கும் புகழ் பெற்றுள்ளது. இந்த கலை வடிவத்தில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை நாம் காண முடிகிறது. இன்று மகளிர் அதிகாரம் பெறுதல், பருவநிலை மாற்றம், ஆகியவற்றின் காலக்கட்டத்தில் மிதிலை நிலத்திலிருந்து உலகிற்கு கிடைக்கும் முக்கிய செய்தி இதுதான். ஜனகமன்னரின் அரச சபையில் கார்கி போன்ற அறிவுசார்ந்த பெண்களும் அஸ்த்வக்ரா போன்ற ஞானிகளும் இடம் பெற்றிருந்தது ஆட்சி நிர்வாகத்துடன் ஞானத்துக்கும் ஆன்மீகத்துக்கும் எவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டது என்பதை உணர்த்துகிறது.
ஜனக மன்னரின், அரச சபையின் பொதுநலக் கொள்கைகள் குறித்த கற்றறிந்தோரின் விவாதங்கள் நடைபெற்றன. இத்தகைய விவாதங்களில் மன்னர் ஜனகரே கலந்து கொள்வதும் உண்டு. இத்தகைய விவாதங்களின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் நாட்டின் நலன், மக்களின் நலன் கருதி அமல்படுத்தப்படும். ஜனக மன்னரைப் பொறுத்தவரை குடிமக்கள்தான் அவருக்கு எல்லாமும். அவருக்கு தனது குடும்பத்தினர் மீதான உறவும் பாசமும் ஆட்சி நிர்வாகத்தில் ஒரு பொருட்டல்ல. குடிமக்களின் நலன் குறித்து சிந்திப்பது ஒன்றுதான் அவரது கடமை. ஆகையால்தான், மன்னர் ஜனகர் வைதேகா என்றழைக்கப்பட்டார். வைதேகா என்றால் தனது உடலுக்கு அதிக மரியாதை கொடுக்காதவர் என்று பொருள். அவர் பொதுமக்களுக்காக, அவர்களது நலன்களுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர்.
சகோரர்களே, சகோதரிகளே,
இன்று இந்தியாவும் நேபாளமும் பொதுநலன் மற்றும் ஜனக மன்னர் செய்தியை கருத்தில் கொண்டு முன்னேறி வருகின்றன. நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் அரசியல், ராஜீய உறவுகள், மற்றும் முக்கிய அணுகுமுறைகள் ஆகியவற்றுடன் இணைந்துள்ளன. இவற்றுக்கு மேலாக இந்த உறவுகள், நமது தெய்வங்களுடன் தொடர்பு கொண்டவை. தனி நபர்களும் அரசுகளும் வரும், போகும். ஆனால் இந்த உறவுகள் நிலைத்திருப்பவை. நன்னெறிகள், கல்வி், அமைதி, பாதுகாப்பு, வளம் ஆகிய ஐந்தையும் கூட்டாக பாதுகாக்க வேண்டிய தருணம் இது. நேபாளத்தின் மேம்பாடு, இந்த மண்டல மேம்பாட்டுக்கு ஆதாரமானது என நம்புகிறோம். இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே நிலவும் நட்புறவின் இயல்பை கீழ் கண்ட ராமசரிதமானஸில் காணப்படும் இந்த வரிகளால் நன்கு உணர முடியும்.
அதாவது, ஒரு நபர் தனது நண்பனின் துயரத்தை, வேதனையாக உணராவிட்டால், அது மிகப் பெரிய பாவமாக கருதப்படும். எனவே, உங்களது சொந்த துயரமே மலைபோன்று இருந்தால், அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தேவைியில்லை. ஆனால், உங்கள் நண்பனின் துயரம் கடுகளவாக இருந்தாலும், அதனை மலையளவுக்குக் கருதி, உங்களால் முடிந்த உதவியை அவருக்கு செய்ய வேண்டும்.
நண்பர்களே,
இந்தியாவிலோ அல்லது நேபாளத்திலோ எப்போது இயற்கைப் பேரிடர் ஏற்பட்டாலும், அப்போது இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது. நெருக்கடியான காலகட்டங்களில் ஒருவர் மற்றவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறோம். நேபாளத்தின் வளர்ச்சியில் இந்தியா பன்னெடுங்காலமாக நிரந்தர நண்பராக திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் “அண்டை நாடு முதலிடம்” என்ற கொள்கையில் நேபாளம் தான் முதலில்வருகிறது. இன்று, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை நோக்கி இந்தியா வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அதேவேளையில், நேபாளமும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நட்புறவுக்கு புதிய சக்தி அளி்ப்பதற்காகவே, இன்று நேபாளத்திற்கு வரும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.
சகோதர, சகோதரிகளே,
வளர்ச்சிக்கு முதலாவதும் தலையாயதுமான நிபந்தனை ஜனநாயகம்தான். நீங்கள் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தி வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் நாட்டில் அண்மையில் தேர்தல்கள் நடைபெற்றது. மக்களாகிய நீங்கள் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். உங்களது கனவுகளையும், விருப்பங்களையும், நிறைவேற்றுவதற்கு உத்தரவிட்டிருக்கிறீர்கள். ஓராண்டிற்குள் 3 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்த உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். நேபாள வரலாற்றில் முதல்முறையாக , நேபாளத்தில் உள்ள ஏழு மாகாணங்களிலும், மாகாண அரசுகளை தேர்வு செய்திருக்கிறீர்கள். இது நேபாளத்திற்கு மட்டும் கவுரவம் அல்ல. இந்தியாவிற்கும், ஒட்டுமொத்த மண்டலத்திற்கும் கவுரவத்தை ஏற்படுத்தியுள்ளது. நல்ஆளுகை மற்றும் உள்ளார்ந்த வளர்ச்சி அடிப்படையிலான, சமூகப் பொருளாதார மாற்றத்திற்கான புதிய கட்டத்தில் நேபாளம் அடியெடுத்து வைத்துள்ளது.
பத்தாண்டுகளுக்கு முன்பே நான் கூறியதுபோல, இந்த ஆண்டுநேபாள இளைஞர்கள் துப்பாக்கிக் குண்டுகளைவிட, வாக்குச்சீட்டுகளே சிறந்தது என தேர்வு செய்துள்ளனர். மோதல்கள் நிறைந்த பாதையைக் கைவிட்டு, புத்தரின் பாதைக்கு திரும்பியுள்ள அர்த்தமுள்ள மாற்றத்தை மேற்கொண்டதற்காக நேபாள மக்களை நான் பாராட்டுகிறேன். இந்தியா-நேபாளம் இடையிலான பண்டைக்கால நட்புறவை வலுப்படுத்துவதில் ஜனநாயகப் பண்புகள் மற்றுமொரு இணைப்புப் பாலமாக உள்ளன. மிகச் சாதாரண மற்றும் அசாதாரண மனிதர்களும் தங்களது கனவுகளை இடையூறின்றி நிறைவேற்றுவதற்கான உரிமையை ஜனநாயகம் அளிக்கிறது. இந்த சக்தியை இந்தியா உணர்ந்துள்ளதோடு, தற்போது ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தமது கனவுகள் நிறைவேறுவதை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். நேபாளத்தையும் அதே பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்புவதை, உங்கள் கண்களிலிருந்து கிளம்பும் பொறிகள் மூலம் நான் காண்கிறேன். நேபாளத்தையும், முன்னேற்ற வேண்டும் என்ற கனவுகளை உங்கள் கண்கள் மூலம் நான் காண்கிறேன்.
நண்பர்களே,
நேபாளப் பிரதமர் ஷர்மா ஒலி அவர்களை தில்லியில் வரவேற்கும் வாய்ப்பு அண்மையில் எனக்கு கிடைத்தது. “வளமான நேபாளம் – மகிழ்ச்சியான நேபாளம்” என்பதே ஷர்மா ஒலியின் கனவாக உள்ளது. வளமான – செழிப்பான நேபாளத்தை காணவே இந்தியாவும் விரும்புகிறது. நவீன நேபாளத்தைக் காண விரும்பும் பிரதமர் ஷர்மா ஒலியின் கனவுகள் நிறைவேற, 125 கோடி இந்தியர்களின் சார்பிலும் இந்திய அரசின் சார்பிலும், நான் வாழ்த்துகிறேன். இந்தியாவிற்கும் இதே அணுகுமுறையைத்தான் நான் கடைபிடிக்கிறேன்.
“அனைவரும் இணைவோம்-அனைவரும் உயர்வோம்” என்ற கொள்கையின் அடிப்படையில்தான், இந்தியாவிலும் எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது.
நாட்டின் எந்தவொரு பகுதியிலும் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படாமல் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் அயராத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கிழக்கு அல்லது மேற்கு, வடக்கு அல்லது தெற்கு என எந்தப்பகுதியாக இருந்தாலும், வளர்ச்சி ரதம் அனைத்து திசைகளிலும் வேகமாக பவனி வரவேண்டும். குறிப்பாக, இதுநாள் வரை வளர்ச்சிப் பணிகளே மேற்கொள்ளப்படாதப் பகுதிகளில் அவற்றை மேற்கொள்வதில், எங்களது அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், நேபாள எல்லையை ஒட்டிய இந்தியாவின் கிழக்கு எல்லையாக கருதப்படும் பூர்வாஞ்சல் பகுதியில் சிறப்புக்கவனம் செலுத்தப்படுகிறது. உத்தரபிரதேசம் முதல் பீகார் வரையிலும், மேற்குவங்கம் முதல் ஒடிசா வரையிலும், நாட்டின் பிறபகுதிகளுக்கு இணையாக இந்தப் பகுதியிலும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளோம். இந்தப் பகுதியில் எத்தகையப் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், நிச்சயமாக அது அண்டைநாடு என்ற முறையில், நேபாளத்திற்குத்தான் மிகுந்த பயனை அளிக்கும்.
சகோதர சகோதரிகளே,
சப்கா சாத் – சப்கா விகாஸ் (அனைவருடனும் இணைவோம்– அனைவரும் வளர்ச்சி அடைவோம்) குறித்து நான் பேசும் போது, அது இந்தியாவுக்கானதாக மட்டும் அல்லாமல்அதனை அனைத்து அண்டை நாடுகளும் பின்பற்ற விரும்புகிறேன் என்பதுடன், நேபாளத்தில் வளமான நேபாள், நேபாளிகளுக்கு மகிழ்ச்சி பற்றி ஆலோசிக்கப்படும்போது, நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 125 கோடி இந்தியர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். ஜனக்பூரின் சகோதர சகோதரிகளே, இந்தியாவில் நாம் மிகப்பெரியதொரு உறுதிப்பாட்டை எடுத்திருக்கிறோம். புதிய இந்தியாவை உருவாக்குவதே அந்த உறுதிப்பாடாகும்.
2022ம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதற்குள் புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி இந்தியர்களும் இலக்கு நிர்ணயித்துள்ளனர். ஏழ்மையிலும் ஏழையாக உள்ளவருக்கும் வளர்ச்சிக்கான அதே வாய்ப்பு கிடைக்கும் புதிய இந்தியாவை நாம் உருவாக்கி வருகிறோம். பாகுபாடு எதுவும் இன்றி தாழ்ந்த வகுப்பினர் அல்லது உயர்ந்த வகுப்பினர் இன்றி அனைவரும் மதிக்கப்படுவார்கள். அனைத்துக் குழந்தைக்கும் கல்வி, அனைத்து இளைஞர்களுக்கும் வருவாய் மற்றும் அனைத்து முதியவர்களுக்கும் மருத்துவ வசதிகள் இங்கு கிடைக்கும். வாழ்க்கை எளிதாக இருப்பதுடன் சாமானிய மனிதன் எந்தவொரு வசதிக்காகவும் போராட வேண்டி இருக்காது. சமுதாயத்தில் இருந்து ஊழல் மற்றும் தவறான செயல்கள் அகற்றப்படுவதுடன் அத்தகைய புதிய இந்தியாவை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
நாட்டிலும் நிர்வாகத்திலும் நாம் பல்வேறு முன்னேற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறோம். நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. மேலும் இன்றைய தினம் நாம் மேற்கொண்ட முயற்சிகளை இந்த உலகம் போற்றிக் கொண்டிருக்கிறது. தேச கட்டமைப்பு மற்றும் பொது பங்கேற்புக்கு இடையிலான உறவை நாம் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறோம். நேபாளத்தில் உள்ள சாமானிய மக்களின் வாழ்க்கையை வளமாக்குவதற்கான பங்களிப்பை அளிப்பதில் 125 கோடி இந்தியர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்ற உறுதியை அளிப்பதற்காகவே நான் இன்று இங்கு வந்திருக்கிறேன்.
நண்பர்களே, ஒருவரது இடத்திற்கு மற்றவர்கள் செல்லும் போது நமது உணர்வுகள் மேலும் வலுப்பெறுகிறது. நேபாள பிரதமரின் இந்தியப் பயணத்தை தொடர்ந்து உங்களிடையே வருவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் அடிக்கடி இங்கு வருவது போலவே, இரு நாட்டு மக்களும் இதே வகையில் எல்லைகளுக்கு அப்பால் சுதந்திரமாக பயணிக்க வேண்டும்.
இமயமலை, மலையடிவாரத்தில் உள்ள பண்ணைகள் மற்றும் நிலங்கள், எண்ணற்ற பாதைகள் மற்றும் கரடுமுரடான சாலைகள், பல சிறிய ஆறுகள் மூலம் நாம் இணைக்கப்பட்டிருப்பதுடன் நாம் நமது திறந்த எல்லைகள் மூலமாகவும் இணைக்கப்பட்டிருக்கிறோம். எனினும் இன்றைய காலக்கட்டத்தில் இது போதாது. முதலமைச்சர் குறிப்பிட்டது போல, நாம் மற்றும் நான் அனைத்து தலைப்புகள் குறித்தும் மிக சுருக்கமாக பரிசீலிப்போம். நாம் நெடுஞ்சாலைகள் மூலம் இணைய வேண்டும். நாம் தகவல் தொடர்பு மூலம் இணைய வேண்டும். மின்சார கம்பிகள் மூலம் இணைய வேண்டும். ரயில்வே பாதைகள் வாயிலாக நாம் இணைய வேண்டும். விமான சேவைகளை விரிவுபடுத்தி நாம் இணைய வேண்டும்.உள்நாட்டு நீர்வழிகள் மூலம் நாம் இணைய வேண்டும். ஆகாயம். பூமி, நீர், விண்வெளிஎன எதுவாக இருந்தாலும் நாம் ஒருவருடன் மற்றவர் இணைய வேண்டும். இணைப்பு என்பது முக்கியமானது என்பதால் மக்களுக்கு இடையிலான இணைப்பு மேலும் வளர்ந்து வலுப்படும் என்பதுடன் இதன் காரணமாகவே இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான இணைப்புக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
இன்று கூட நான் பிரதமர் ஒலி அவர்களுடன் இணைந்து ஜனக்பூரில் இருந்து அயோத்தியாவுக்கான பேருந்து சேவையை தொடங்கி வைத்திருக்கிறேன். கடந்த மாதம் பிரதமர் ஒலியும் நானும் இணைந்து பிர்கஞ்ச் என்ற இடத்தில் முதலாவது ஒருங்கிணைந்த சுங்கச் சாவடியைத் திறந்து வைத்தோம். இந்த சுங்கச் சாவடி செயல்பாட்டுக்கு வரும்போது எல்லையில் வர்த்தகம் மற்றும் நகர்வுகள் பெருமளவு எளிதாகும். ஜயநகர் – ஜனக்பூர் ரயில்பாதை அமைக்கும் பணிகளும் மிகுந்த வேகத்தில் நடைபெற்று வருகிறது.
சகோதர சகோதரிகளே,
இந்த ரயில்பாதை அமைக்கும் பணியை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ரயில்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்தால், இந்தியாவில் உள்ள பரந்து விரிந்த ரயில் கட்டமைப்புடன் நேபாளம் இணைக்கப்படும். பீகாரில் உள்ள ராக்சால் மூலம் காத்மாண்டுவை இந்தியாவுடன் இணைப்பதில் நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். இதுமட்டுமல்ல, இந்தியாவையும் நேபாளத்தையும் நீர்வழிகள் மூலம் இணைக்கவும் நாம் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இந்திய நீர்வழிகள் மூலம் நேபாளம் விரைவில் கடலுடன் இணைக்கப்படும். இந்த நீர்வழிகள் மூலம் நேபாளத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்ற நாடுகளால் எளிதாக அணுகப்படுவதுடன் அதன் காரணமாக நேபாளத்தில் புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வேலை வாய்ப்புகள் பெருகும். இந்த திட்டங்கள் நேபாளத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி வணிகம் மற்றும் வர்த்தகத்திற்கும் முக்கியமாகும்.
இன்றைய தினம் இந்தியா மற்றும் நேபாளம் இடையே பெரிய அளவில் வணிகம் உள்ளது. வணிகத்திற்காக நாடுகளுக்கு இடையே மக்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் அவர்களே, இது பற்றி நீங்கள் பேசினீர்கள். வேளாண் துறையிலும் புதிய கூட்டணி குறித்து நாங்கள் கடந்த மாதம் அறிவித்தோம். இந்தக் கூட்டணியின் கீழ் வேளாண் துறையில் ஒத்துழைப்பு மேலும் ஊக்கமளிக்கப்படும். இரு நாடுகளின் விவசாயிகளின் வருவாயை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து சிந்திக்கப்படும். வேளாண் துறையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும்.
சகோதரர்களே, சகோதரிகளே,
நவீன காலத்தில் தொழில்நுட்பம் இல்லாமல் மேம்பாடு என்பது சாத்தியமே இல்லை. விண்வெளி தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை இந்தியா உலகின் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக உள்ளது. நேபாளத்தில் நான் முதல் முறையாக பயணம் மேற்கொண்டபோது, நேபாளம் போன்ற அண்டைநாடுகளுக்கு செயற்கைக் கோள்களை இந்தியா அனுப்பி வைக்கும் என்றும் நான் கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம். சென்ற ஆண்டு இந்த எனது உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு தெற்காசிய செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இன்றைய நிலையில் இந்த செயற்கைக் கோள் தனது முழு திறத்துடன் செயலாற்றி வருகிறது. இதிலிருந்து நேபாளமும் பயன்பெற்று வருகிறது.
சகோதரர்களே, சகோதரிகளே,
இந்தியா மற்றும் நேபாளத்தின் மேம்பாட்டுக்காக நாம் முக்கிய அம்சங்களை பின்பற்றி வருகிறோம். பாரம்பரியம், வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய ஐந்து முக்கிய அம்சங்கள் வாயிலாக நேபாளத்தையும் இந்தியாவையும் மேம்பாட்டு பாதையில் முன்னெடுத்து செல்ல விரும்புகிறோம்.
நண்பர்களே,
நேபாளம்-இந்தியா இடையேயான பாரம்பரியம் மட்டுமன்றி, வர்த்தகம், நமது உறவுகளுக்கு முக்கிய இணைப்பாக உள்ளது. மின்சார உற்பத்தித்துறையில் நேபாளம் மிக விரைவாக வளர்ந்து வருகிறது. இன்று இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு 450 மெகா வாட் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்கென புதிய மின்வழிப்பாதையை நாம் அமைத்திருக்கிறோம்.
நண்பர்களே, 2014-ல் நான் நேபாள அரசியலமைப்பு சட்டப்பேரவையில் உரையாற்றிய போது இரு நாடுகளுக்கு இடையே எண்ணெயை லாரிகள் மூலம்தான் கொண்டு செல்லவேண்டுமா, குழாய் பாதை வழியாக நேரடியாக கொண்டுசெல்ல முடியாதா என்று கேட்டேன். தற்போது மோத்திகரி- அமலேக் கஞ்ச் எண்ணெய் குழாய் பாதை அமைக்கும் பணி தொடங்கிவிட்டது என்பது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என நினைக்கிறேன்.
இந்தியாவின் எமது அரசு சுதேஸ்தர்ஷன் என்ற திட்டத்தை நடத்துகிறது , இந்தத் திட்டத்தின் கீழ் எமது வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை ஆன்மீக சிறப்பு மிக்க இடங்களுடன் இணைத்து வருகிறோம். ராமாயாண சுற்று என்ற திட்டத்தில் ராமபிரானும் அன்னை ஜானகியும் கால் பதித்த அனைத்து இடங்களையும் இணைத்து வருகிறோம். தற்போது இந்தத் தொடரில் நேபாளத்தையும் இணைக்கும் வகையில் முன்னேறி வருகிறோம். நேபாளத்தில் ராமாயணத்துடன் தொடர்புள்ள அனைத்து இடங்களையும் இந்தியாவுடன் இணைத்து யாத்திரீகர்களுக்கு குறைந்த விலையில் மிகுந்த கவர்ச்சியான சுற்றுலாத் திட்டங்களை அளிக்க இயலும். இதனால் பெரிய எண்ணிக்கையில் இந்திய மக்கள் நேபாளத்திற்கு வந்து செல்வார்கள். இதனையடுத்து நேபாள சுற்றுலா மேம்பாடு அடையும்.
சகோதரர்களே, சகோதரிகளே,
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் விவா பஞ்சமி அன்று ஜனகபுரிக்கு பயணம் மேற்கொள்கின்றனர். தவிர ஆண்டுதோறும் ஏராளமான யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு எவ்வித இடர்பாடும் ஏற்படக்கூடாது. இதனைக் கருத்தில் கொண்டு ஜனகபுரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை மேம்படுத்தும் நேபாள அரசின் திட்டத்தில் நாங்கள் சேர்ந்து ஒத்துழைக்க உள்ளோம். இதற்கென, ரூ.100 கோடி உதவியை இந்தியா வழங்கும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நேபாள அரசு மற்றும் மாகாண அரசுகளின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். மன்னர் ஜனகர் காலந்தொட்டே ஜனகபுரி தாம் அயோத்தியாவுக்கு மட்டுமின்றி மொத்த சமுதாயத்திற்கும் ஏதாவது ஒன்றை வழங்கி வருகிறது. அன்னை ஜானகியை தரிசனம் செய்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன். ஜனகபுரி சார்ந்த இந்த அறிவிப்புகள் அனைத்தும் 125 கோடி இந்தியர்களின் சார்பில் அன்னை ஜானகியின் பாதத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.
இதே போல மேலும் இரண்டு திட்டங்கள் உள்ளன: புத்த சுற்றுலா மற்றும் சமணச் சுற்றுலா. இந்த திட்டங்களில் புத்தர் மற்றும் மகாவீரர் தொடர்பான இந்தியாவின் அனைத்து இடங்களும் ஒன்றுடன் இணைக்கப்படும். நேபாளத்திலும் புத்த சமயம், சமண சமயம் தொடர்புள்ள பல இடங்கள் உள்ளன. இவற்றையும் இணைத்து இருநாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கும், யாத்ரீகர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இணைப்புகளை உருவாக்கலாம். மேலும் நேபாள இளைஞர்களுக்கு இது வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தரும்.
சகோதரர்களே, சகோதரிகளே,
நமது உணவுப் பழக்கங்கள் மற்றும் மொழிகளிடையே அனேக ஒற்றுமைகள் உள்ளன. மைதிலி மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை இந்தியாவிலும் நேபாளத்திலும் ஏறக்குறைய சம அளவில் உள்ளன. மைதிலி கலை, பண்பாடு, நாகரீகம் உலகம் முழுவதிலும் விவாதிக்கப்படுகிறது. இருநாடுகளும் ஒருங்கிணைந்து மைதிலி மேம்பாட்டுக்கு முயற்சி எடுத்தால் இந்த மொழியின் மேம்பாடு எளிதில் சாத்தியமாகும். மைதிலி மொழி திரைப்பட தயாரிப்பாளர்கள் இவற்றை கட்டார் மற்றும் துபாய் நாடுகள் தவிர நேபாளம் மற்றும் இந்தியாவி்லும் வெளியிட இருப்பதாக நான் கேள்விபட்டேன். இந்த வரவேற்கத்தக்க நடவடிக்கையை ஊக்குவிப்பது அவசியம். இங்குள்ள மக்களில் பெரும் எண்ணிக்கையில் ஆனவர்கள் மைதிலி மொழி பேசுவது போல இந்தியாவில் நேபாளி மொழியை பேசுபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், நேபாளி மொழி இலக்கியத்தை மொழி பெயர்க்கும் முயற்சிகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. நேபாளி மொழி இந்திய அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் ஒன்று என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
சகோதரர்களே, சகோதரிகளே,
நம்மிடையேயான கூட்டாண்மை மேலும் வளர்வதற்கான மற்றொரு துறை உள்ளது. இந்தியாவில் மக்கள் மாபெரும் தூய்மை இயக்கத்தை தொடங்கியுள்ளனர். நீங்கள் பீகாரிலோ அல்லது இதர அண்டை மாநிலங்களிலோ உள்ள உங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு செல்லும் போது நீங்கள் இதுபற்றி கேட்டு இருப்பீர்கள் இதனை பார்த்திருப்பீர்கள். கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் கிராமங்களில் 80 சதவீதம் திறந்தவெளி மலம் கழிப்பு அற்றவையாக மாறியுள்ளன. இந்தியாவின் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவியருக்கென தனியாக கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தூய்மை இந்தியா, தூய்மை கங்கை, இயக்கத்தை போல வரலாற்று சிறப்பு மிக்க ஆன்மீக தளமான ஜனகபுரியில் தூய்மை இயக்கத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கென இந்த நகரத்தின் மேயருக்கு நான் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். புராண முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பராமரிப்பு பாதுகாப்பில் நேபாள இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.
குறிப்பாக இந்த இடத்தின் மேயருக்கு, அவரது சகாக்களுக்கு, இந்த இடத்தின் இளைஞர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகிறேன். தூய்மை ஜனகபுரி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல உதவிய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என்து பாராட்டுக்கள்.
சகோதரர்களே, சகோதரிகளே,
இன்று நான் அன்னை ஜானகியை தரிசித்தேன். நாளை எனக்கு முக்திநாத் தாம் மற்றும் பசுபதிநாத் ஆகியோரை வணங்கி ஆசீர்வாதம் பெறும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டுள்ளது. தெய்வத்தின் ஆசீர்வாதத்துடன் நேபாள மக்களின் ஒத்துழைப்புடன் இருநாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்படும் ஒப்பந்தங்கள், வளமான நேபாளம், மகிழ்ச்சியான இந்தியா என்ற கனவை நனவாக்க உதவும் என்று நான் நம்புகிறேன்.
நேபாள பிரதமர் மாண்புமிகு ஒலி அவர்களுக்கும், மாநில அரசுக்கும் நகராட்சிக்கும், நேபாள மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி.
ஜெய் சியாராம்
(Release ID: 1546974)
Visitor Counter : 546