பிரதமர் அலுவலகம்
நாடெங்கிலுமிருந்து வந்திருந்த ஆஷா பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்தனர்
இடுகை இடப்பட்ட நாள்:
20 SEP 2018 12:23PM by PIB Chennai
நாடெங்கிலுமிருந்து வந்திருந்த சுமார் 90 ஆஷா பிரதிநிதிகள் இன்று (20.09.2018) பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தனர். தங்களுக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகை, காப்பீட்டுத் தொகை ஆகியவற்றை உயர்த்தி அறிவித்தமைக்காக தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்த அவர்கள், பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.
அப்போது பிரதமர் தாம் சமீபத்தில் நாடெங்கிலும் உள்ள ஆஷா, அங்கன்வாடி பணியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடியதை நினைவு கூர்ந்தார். அன்றைய நாளில் ஆஷா பிரதிநிதிகள் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள், சொந்த விஷயங்கள் ஆகியவற்றுக்காக பாராட்டு தெரிவித்த பிரதமர், இவை அனைத்தும் மேலும் பலருக்கு உத்வேகம் அளிக்கும் என்று கூறினார்.
இன்று ஆஷா பணியாளர்கள் மேலும் பல இத்தகைய சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர். உரிய சந்தர்ப்பத்தில் எவ்வாறு ஏழை தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் உயிரைக் காப்பதில் தங்கள் பணி பேருதவியாக இருந்தது என்பதை அவர்கள் விவரித்தனர்.
ஆஷா பணியாளர்களின் திறன்கள் மற்றும் அர்ப்பணிப்பு சேவையை பிரதமர் பாராட்டினார். காலா அஜார் போன்ற நோய்களை ஒழிப்பதற்கு ஆஷா பணியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளை பில்கேட்ஸ், அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் பாராட்டியதை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
கிராமங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசின் இதர அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதில் தங்கள் ஆற்றலை பயன்படுத்துமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். அரசின் திட்டங்கள், முயற்சிகள் அனைத்தும் எவ்வாறு ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து ஏழ்மையை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டவை என்பதை பிரதமர் விளக்கினார்.
மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை அமைச்சர் திரு.ஜே.பி. நட்டா இந்த நிகழ்ச்சியின் போது உடனிருந்தார்.
********
(வெளியீட்டு அடையாள எண்: 1546807)
வருகையாளர் எண்ணிக்கை : 133