பிரதமர் அலுவலகம்

பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை (ஆகஸ்ட் 30, 2018)

Posted On: 30 AUG 2018 5:50PM by PIB Chennai

நான்காவது பிம்ஸ்டெக் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக நேபாள அரசுக்கும், பிரதமர் திரு. கே.பி. ஷர்மா  ஒளிக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் கலந்துகொள்ளும் முதலாவது பிம்ஸ்டெக் மாநாடு இதுவேயாகும்.  ஆனால், 2016 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டுடன் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.   கோவா மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதில், நமது குழுவினர் பாராட்டத்தக்க அளவு பணியாற்றியுள்ளனர்.

      இது,

  • முதலாவது வருடாந்திர பிம்ஸ்டெக் பேரிடர் மேலாண்மை ஒத்திகைக்கு ஏற்பாடு செய்தல்
  •  தேசிய பாதுகாப்பு அதிகாரிகளின் இரண்டு கூட்டங்களை நடத்துதல்
  • பிம்ஸ்டெக் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் பற்றிய முன்னேற்றம்
  • பிம்ஸ்டெக் மின்தொடர் இணைப்பு தொடர்பான ஒப்பந்தம்.

இந்த விஷயத்தில் அனைத்து உறுப்பு நாடுகள் தூதுக் குழுவினருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேன்மை தங்கிய தலைவர்களே,

நம் நாடுகள், பல நூற்றாண்டு காலமாக, நாகரீகம், வரலாறு, கலை, மொழி, உணவு, மற்றும் நம்மிடையேயான பிரிக்க முடியாத கலாச்சாரப் பிணைப்பைக் கொண்டவையாகத் திகழ்கின்றன.  இந்திய பெருங்கடல் பகுதிக்கும் பசிபிக் பெருங்கடல் பகுதிக்கும் இடையே ஒருபுறம் மாபெரும் இமயமலைத் தொடரும், மறுபுறம் வங்க்கடலும் அமைந்துள்ளன. வங்கக்கடலின் இந்தப்பகுதியில், நமது வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  எனவே, “முதலில் அண்டை நாடு” மற்றும் “கிழக்கை உற்றுநோக்குவோம்” என்ற இந்தியாவின் இரண்டு கொள்கைகளையும் இந்த வங்கக்டல் மண்டலத்தில் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதில்   வியப்பதற்கு ஒன்றுமில்லை.

மேன்மை தங்கிய தலைவர்களே,

      நம் நாடுகள் அனைத்தும் வளரும் நாடுகளாகும். நமது நாடுகளில் அமைதி, வளம், மற்றும் மகிழ்ச்சிக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  ஆனால், தற்போதைய ஒருங்கிணைந்த உலகில், எந்தவொரு நாடும் தனியாக சாதனை படைத்துவிட முடியாது. நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் இணைந்தே பணியாற்ற வேண்டும்.  வர்த்தகத் தொடர்பு, பொருளாதாரத் தொடர்பு, போக்குவரத்து தொடர்பு, டிஜிட்டல் தொடர்பு மற்றும் மக்களிடையேயான தொடர்பு போன்ற தொடர்புகள் மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளதால், நாம் அனைத்துப் பரிமாணங்களிலும் பணியாற்றலாம்.  பிம்ஸ்டெக் நாடுகளிடையே    கடலோர கப்பல் போக்குவரத்து மற்றும் வாகன ஒப்பந்தங்கள் தொடர்பாக வருங்காலத்தில் பல்வேறு கூட்டங்களை நாம் நடத்த வேண்டும்.  பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தொழில்முனைவோர் இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதற்கான மாநாட்டை நடத்த இந்தியா தயாராக உள்ளது.  நம் நாடுகளில் பெரும்பாலானவை வேளாண்மையை பிரதான தொழிலாக கொண்ட நாடுகள் என்பதால், நாம் பருவநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  அந்த வகையில் வேளாண் ஆராய்ச்சி, கல்வி, மற்றும் வளர்ச்சியில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக, நவீன வேளாண் சாகுபடி முறைகள் பற்றிய சர்வதேச மாநாட்டை நடத்தவும் இந்தியா தயாராக உள்ளது.

      டிஜிட்டல் தொடர்பைப் பொறுத்தவரை, இலங்கை, பங்களாதேஷ், பூடான் மற்றும் நேபாளத்தில் தேசிய அறிவுசார் கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா ஏற்கனவே உறுதிபூண்டுள்ளது.  இந்தத் திட்டத்தில் மியான்மர் மற்றும் தாய்லாந்தையும் சேர்த்து மேம்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.  புதுதில்லியில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள இந்தியா மொபைல் மாநாட்டில் பிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் பங்கேற்கும் என நம்புகிறேன்.  இந்த மாநாடு பிம்ஸ்டெக் அமைச்சர்கள் அளவிலான மாநாட்டையும் கொண்டதாக இருக்கும்.  பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுடனான தொடர்பை அதிகரிப்பதில் இந்தியாவின் வடகிழக்கு மண்டலம் முக்கியப் பங்கு வகிக்கும்.   இந்தியாவின் வடகிழக்கு மண்டலத்தை மேம்படுத்த, வடகிழக்கு மண்டலத்தில் அறிவியல் தொழில்நுட்ப தலையீடு என்ற புதிய முன்முயற்சியை தொடங்கியுள்ளோம்.  இந்தத் திட்டத்தை பிம்ஸ்டெக் நாடுகளுக்கும் விரிவுபடுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.  அதேபோன்று, ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பிம்ஸ்டெக் உறுப்புநாடுகளைச் சேர்ந்த பல்துறை வல்லுநர்களுக்கும், இந்தியாவின் வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம் மூலம் 24 கல்வி நிதியுதவிகளை வழங்கவும் தயாராக இருக்கிறோம்.    

மேன்மை தங்கிய தலைவர்களே,

      நமது நட்புறவில் புத்த மதமும், சிந்தனையும், பிணைப்பை ஏற்படுத்துவதாக உள்ளன.  2020 ஆகஸ்டில் இந்தியா சர்வதேச புத்த மத மாநாட்டை நடத்தவுள்ளது.  இந்த மாநாட்டில் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் அனைத்தும் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும் என நான் அழைக்கிறேன்.  நமது இளைய தலைமுறையினர் இடையேயான தொடர்புடைகளை ஊக்குவிக்க, பிம்ஸ்டெக் இளைஞர் மாநாடு மற்றும் பிம்ஸ்டெக் இசைவிழாவையும் இந்தியாவில் நடத்த விரும்புகிறோம்.  பிம்ஸ்டெக் இளையோர் நீர் விளையாட்டையும் நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.  பிம்ஸ்டெக் நாடுகளைச் சேர்ந்த இளம் மாணவர்களுக்காக நாலந்தா பல்கலைக்கழகத்தில் 30 கல்வி நிதியுதவிகளும், ஜிப்மர் நிறுவனத்தில் நவீன மருத்துவம் பற்றிய   ஆராய்ச்சிக்கான 12 ஆராய்ச்சி நிதியுதவிகளும் வழங்கப்படும்.  இது தவிர, சுற்றுலா, சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வேளாண்மை, வர்த்தகம் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் கீழ், இந்தியாவில், இந்திய தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் பற்றியும், 100 குறுகிய கால பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.  நாலந்தா பல்கலைக்கழகத்தில் கலை, கலாச்சாரம், கடலோர சட்டங்கள் மற்றும்  இதர அம்சங்கள் பற்றிய ஆராய்ச்சிக்கான வங்கக்கடல் கல்வி மையம்  ஒன்றும் ஏற்படுத்தப்படும்.  இந்த மையத்தில் ஒருவர் மற்ற நாட்டின் மொழிகளுக்கு இடையிலான இணைப்பு பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.  உறுப்பு நாடுகளில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடங்கள்  மற்றும் நினைவுச் சின்னங்களை புதுப்பிக்க ஒத்துழைப்பதன் மூலம், அனைத்து உறுப்பு நாடுகளிலும் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னங்கள் சார்ந்த சுற்றுலா மூலம் பயனடையலாம்.      

மேன்மை தங்கிய தலைவர்களே,

      மண்டல ஒருங்கிணைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றில் நாம் மேற்கொண்டு வரும் கூட்டு முயற்சிகள் வெற்றி பெற, நமது மண்டலம் அமைதி மற்றும் பாதுகாப்பான சூழல் மிகுந்ததாக இருப்பது அவசியம்.  நம் அமைப்பில் உள்ள நாடுகள் இமயமலை மற்றும் வங்கக் கடலால் இணைக்கப்பட்டுள்ளதால், அடிக்கடி இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகின்றன.  சில நேரங்களில் வெள்ளப் பெருக்காகவும், சில நேரங்களில் புயல் அல்லது நிலநடுக்கமும் ஏற்படுகிறது.  அந்த வகையில் ஒருவருக்கொருவர் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதும், ஒத்துழைப்பதோடு மட்டுமின்றி, பேரிடர் நிவாரண பணிகளிலும் ஒருங்கிணைந்து  செயல்படுவது மிகவும் அவசியம்.  நமது மண்டலத்தின் புவியியல் அமைப்பு சர்வதேச கடலோர வர்த்தக பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது.  அத்துடன், நீலப் பொருளாதாரமும், நமது பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த்தாக  உள்ளது. இதுதவிர, பிம்ஸ்டெக் பன்னாட்டு ராணுவ களப் பயிற்சி ஒத்திகை மற்றும் ராணுவ தளபதிகளின் அடுத்த மாநாடு, அடுத்த மாதம்  இந்தியாவில் நடைபெறவுள்ளது. மேலும், பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த முப்படைகளின் மனித நேய உதவி, மற்றும் பேரிடர் மேலாண்மை ஒத்திகையும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. 2-வது வருடாந்திர பிம்ஸ்டெக் பேரிடர் மேலாண்மை ஒத்திகையையும் இந்தியாவில் நடத்த தயாராக இருக்கிறோம்.  பேரிடர் மேலாண்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டை அளிப்பதிலும், ஒத்துழைப்பை வழங்க இந்தியா தயாராக உள்ளது.  நீலப் பொருளாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பிம்ஸ்டெக் நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கும் ஹேக்கத்தான் போட்டிக்கும் இந்தியா ஏற்பாடு செய்ய உள்ளது.  இந்த முயற்சிகள் நீலப் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பு மற்றும் பிற வாய்ப்புகளில் கவனம் செலுத்துவதாக அமையும்.   

மேன்மை தங்கிய தலைவர்களே,

      நமது அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளில் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத கட்டமைப்பு மற்றும் போதைப் பொருள் கடத்தல் தொடர்புடைய பன்னாட்டு குற்றப் பிரச்சினைகளை  சந்திக்காத நாடுகள் எதுவும் இல்லை.  எனவே, பிம்ஸ்டெக் அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, போதைப் பொருள் கடத்தல் தொடர்பான பிரச்சினைகள் பற்றி விவாதிப்பதற்கான மாநாடு ஒன்றையும் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.  இந்தப் பிரச்சினைகள், எந்தவொரு நாட்டின் சட்டம் ஒழுங்குடன் தொடர்புடையவை அல்ல.  எனவே நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இதனை எதிர்கொள்ள வேண்டும்.  இதற்குத் தேவையான நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளையும் வகுக்க வேண்டியது அவசியம்.  அந்த வகையில் நமது சட்ட வல்லுநர்களிடையே, குறிப்பாக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரஸ்பரம் ஒத்துழைப்பது மிகவும் பயனளிப்பதாக அமையும்.  பிம்ஸ்டெக் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென தனி அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது கருத்தாகும்.     மேன்மை தங்கிய தலைவர்களே,

      கடந்த 20 ஆண்டுகளில் பிம்ஸ்டெக் அமைப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு பணியாற்றியுள்ளது.  எனினும், நம் முன்பாக இன்னும்  ஏராளமான பணிகள் காத்திருக்கிறது.  நமது பொருளாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்த மேலும் பல வாய்ப்புகள் உள்ளது.  இதனால்தான், நம்நாட்டு மக்கள் நம்மிடமிருந்து பெரியளவில் எதிர்பார்க்கின்றனர்.   நம்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு, நம்பிக்கை மற்றும் விளைவுகளுக்காக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த 4-வது மாநாடு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.   மாநாட்டு பிரகடனத்திலேயே பல்வேறு முக்கிய முடிவுகள் இடம்பெற்றுள்ளன.  இது பிஸ்ம்டெக்  அமைப்பிற்கும், அதன் பணிகளுக்கும் ஊக்கமளிப்பதாக அமையும்.

      இந்த மாநாட்டின் வெற்றி குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைவதுடன், பிம்ஸ்டெக் அமைப்பின் பணிகளுக்கு வலுசேர்ப்பதாகவும் அமையும்.  இதற்காக, இம்மாநாட்டை நடத்தும் நாடான நேபாள அரசின் பிரதமர் திரு. ஷர்மா ஒளியையும், அனைது உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் நான் பாராட்டுகிறேன்.  எதிர்காலத்தில், உங்களோடு தோளோடு தோள் நின்று பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நன்றி,

      நன்றிகள் பல.    

*****



(Release ID: 1545550) Visitor Counter : 370


Read this release in: English , Bengali