பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
புவி அறிவியல் அமைச்சகத்தின் “கடல் சேவைகள், தொழில்நுட்பம், ஆழ்ந்து கவனித்தல், வளங்களின் மாதிரி மற்றும் அறிவியல் எனப்படும் (ஓ-ஸ்மார்ட்)” திட்டத்திற்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
29 AUG 2018 1:07PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு “கடல் சேவைகள், தொழில்நுட்பம், ஆழ்ந்து கவனித்தல், வளங்களின் மாதிரி மற்றும் அறிவியல் எனப்படும் (ஓ-ஸ்மார்ட்)” திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டம் 2017-18ஆம் ஆண்டு முதல் 2019-20ஆம் ஆண்டு வரை 1623 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும். கடல் மேம்பாடு சார்ந்த 16 துணை திட்டங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டத்தின் மூலம் கடல் சேவைகள், தொழில்நுட்பம், வளங்கள், கவனித்தல் மற்றும் அறிவியல் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஓ-ஸ்மார்ட் திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் சேவைகள் கடலோர மற்றும் கடல் தொழில் சார்ந்த மக்களுக்கு பொருளாதார பயன்களை அளிக்கும். மீன்பிடித் தொழில், கடற்கரையோர தொழில், கடலோர மாநிலங்கள், பாதுகாப்புத் துறை, கப்பல்துறை மற்றும் துறைமுகங்கள் உள்ளிட்ட கடல்சார்ந்த தொழில்களுக்கு இது பயனளிக்கும். தற்போது மீன்வளம் தொடர்பான தகவல்களை சுமார் 5 லட்சம் மீனவர்கள் தங்களது கைபேசி வழியாக பெற்றுக் கொண்டு வருகின்றனர். கடலில் மீன் இருக்கும் இடங்கள் மற்றும் உள்ளூர் வானிலை போன்ற தகவல்கள் மீனவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. மீன்வளம் பற்றிய தகவல் மீனவர்களுக்கு அவர்களது கைபேசியிலேயே அளிக்கப்பட்டு விடுவதால், மீனைத் தேடி கடலில் அலையாமல், மீனவர்கள் மீன்பிடிக்க வழி ஏற்படுவதுடன், எரிபொருளும் விரயமாவது தடுக்கப்படுகிறது.
ஓ-ஸ்மார்ட் திட்டத்தை செயல்படுத்துவது, கடல்களை பாதுகாப்பது, கடல் வளங்களை நீடித்திருக்கச் செய்வது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் நீடித்த மேம்பாட்டு இலக்கு 14-ல் தெரிவிக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உதவுகிறது. ஓ-ஸ்மார்ட் திட்டம் கடல்சார் பொருளாதார அம்சங்களை செயல்படுத்துவதற்கு தேவையான அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களையும் வழங்குகிறது.
ஓ-ஸ்மார்ட் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன முன்கூட்டியே எச்சரிக்கும் கருவி கடல்சார் இயற்கை பேரழிவுகளான சுனாமி மற்றும் புயல் சீற்றங்களை திறமையான வகையில் சமாளிக்க உதவுகிறது.
இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள், இந்தியாவைச் சுற்றியுள்ள கடல்களில் உள்ள மீன் உள்ளிட்ட உயிர் வளங்கள் மற்றும் கனிமங்களை எடுப்பதற்கு உதவுகிறது.
****
(வெளியீட்டு அடையாள எண்: 1544370)
வருகையாளர் எண்ணிக்கை : 364