உள்துறை அமைச்சகம்

வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு மத்திய அரசு உதவி

Posted On: 23 AUG 2018 7:06PM by PIB Chennai

கேரளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மத்திய அரசு அவசர உதவியையும், நிவாரணப் பொருட்களையும் உரிய காலத்தில்  எவ்விதப் பாகுபாடும் இன்றி அந்த மாநிலத்திற்கு அளித்தது.  வெள்ள நிலைமையை பிரதமர் திரு. நரேந்திர மோடி தினசரி அடிப்படையில் கண்காணித்தார். 2018 ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் பிரதமர் கேரளாவில் பயணம் மேற்கொண்டார். அவரது உத்தரவுபடி அமைச்சரவை செயலாளர் தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மைக்குழு 2018 ஆகஸ்ட் 16 முதல் 21 வரை முறையாக கூடி  மீட்பு நிவாரணப் பணிகளை கண்காணித்து ஒருங்கிணைத்தது. பாதுகாப்பு சேவைகள், தேசிய பேரிடர் அதிரடிப்படையினர், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் மற்றும் சிவில் அமைச்சகங்களின் செயலாளர்கள், இந்தக் கூட்டங்களில் பங்கேற்றனர். கேரள மாநிலத் தலைமை செயலாளர் இந்தக் கூட்ட விவாதங்களில் காணொலி மூலம் பங்கேற்றார்.

  இந்தக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி மத்திய அரசு  பெரிய அளவிலான மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. இந்த மிகப்பெரிய மீட்பு நடவடிக்கைகளில் 40 ஹெலிகாப்டர்கள், 31 விமானங்கள், 182 மீட்புக் குழுக்கள், பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 18 மருத்துவக்குழுக்கள், தேசிய பேரிடர் அதிரடிப்படையின் 58 குழுக்கள், மத்திய ஆயுத காவல் படையின் 7 கம்பெனிகள் ஈடுபட்டன. மேலும், 500 படகுகள் தேவையான மீட்புக் கருவிகளுடன் பணியில் ஈடுபட்டிருந்தன. இந்த பெரிய முயற்சிகளால் வெள்ளம் சூழந்த பகுதிகளில் இருந்து 60,000-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.   பாதுகாப்புத்துறை விமானங்களும், ஹெலிகாப்டர்களும், 1084 முறை  பறந்து மொத்தம் 1168 மணி நேரம் பணியாற்றி 1286டன்  பொருட்களை ஏற்றிச் சென்றனர், 3,332 மீ்ட்புப் பணியாளர்களையும் இவை கொண்டு சென்றன.  மேலும், பல கடற்படை மற்றும் கடலோரக்காவல்படை, கப்பல்கள் கேரளாவுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தேடுதல், மீட்புப் பணிகள் மற்றும் தேவையான பொருட்களை திரட்டிக் கொண்டுசெல்வதில் மட்டும் மத்திய அரசுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவு பிடித்தது.

   கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவை பொறுத்தவரை அம்மாநில அரசு 2018 ஜூலை 21-ம் தேதி இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது. உடனடியாக அமைச்சகங்களுக்கு இடையிலான மத்தியக்குழு அமைக்கப்பட்டு  அந்தக் குழுவினர் 2018-ல் ஆகஸ்ட் 7 முதல் 12 வரை மாநிலத்தில் பயணம் மேற்கொண்டு சேதமதிப்பீடுகளை  கணித்தனர். மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு.கிரண் ரிஜிஜு 2018 ஜூலை 21-ம் தேதி  கேரளா சென்று பார்த்தார். அதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் ஆகஸ்ட் 12-ம் தேதி கேரளாவில் பயணம் மேற்கொண்டார். அம்மாநிலத்தில் இரண்டாம் முறையும் வெள்ளம் ஏற்பட்டதால் புதியபுதிய வெள்ளம், நிலச்சரிவு காரணமான  சேதங்கள் குறித்த கூடுதல் அறிக்கை ஒன்றை மீட்புப் பணிகளுக்கு பின்னர் சமர்ப்பிக்கப் போவதாக மாநில அரசு தெரிவித்தது.

    கூடுதல் அறிக்கையை மாநில அரசு சமர்ப்பிக்க காலதாமதம் ஆகும் என்பதை கருத்தில் கொண்டு மாநிலத்திற்கு மீட்பு நிவாரண செலவினத்தை மேற்கொள்ள உதவும் வகையில் மத்திய அரசு ரூ.600 கோடியை, அமைச்சகங்களுக்கு இடையிலான மத்தியக்குழு, உயர்நிலைக்குழு ஆகியவற்றின் முடிவுக்கு முன்னதாக, முன்பணமாக வழங்கியது.  மாநில பேரிடர் நிவாரண நிதியத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ள ரூ.562.45 கோடிக்கும் கூடுதலாக இந்தத் தொகை வழங்கப்பட்டது.  இத்தகைய நிதி ஆதரவுக்கும் கூடுதலாக மத்திய அரசு பெரிய அளவிலான அவசர கால உணவு, தண்ணீர், மருந்துகள், இதர அத்தியவாசியப் பொருட்கள் ஆகியவற்றை மாநில அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க வழங்கியுள்ளது. (இந்தப் பொருட்களை வழங்கியதில் கேரளாவின் அவசர நிலையையும் தேவையையும் கருத்தில் கொண்டு  இயல்பான விதிகளும், நடைமுறைகளும் கவனத்தில் கொள்ளப்படவில்லை). மேலும், பிரதமரின் பயணத்திற்கு பிறகு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் பல சிறப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகை வழங்கியது, பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைத்தது, மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை வாய்ப்பு  உறுதி அளிப்புத்திட்டதின் கீழ் கூடுதலாக 5.5 கோடி மனித நாட்கள் அனுமதிக்கப்பட்டது.   தேசிய நெடுஞ்சாலைகளை பழுது பார்த்தல், மின்சார விநியோகத்தை மீட்டல், போன்ற பணிகளில் தேசிய முகமைகளான  தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய அனல் மின்சக்திக் கழகம், பெட்ரோலியம் மற்றும் வாயுக் கழகம் ஆகியன மாநிலத்திற்கு  உதவும் நடவடிக்கைகள் இந்த சிறப்பு நடவடிக்கைகளில் சில.

     மத்திய அரசு வழங்கிய ரூ.600 கோடி முன்பண உதவி மட்டுமே என்பது தெளிவாக்கப்படுகிறது. விதிமுறைகளின்படி சேத மதிப்பீடுகளுக்கு பிறகு தேசிய பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து கூடுதல் நிதி வழங்கப்படும்.

----



(Release ID: 1543833) Visitor Counter : 150


Read this release in: Malayalam , English , Bengali