பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

மாநிலங்களுக்கு நல்வாழ்வுத் திட்டங்களுக்கு பயன்படுத்த வசதியாக மானிய விலைப் பருப்பு வகைகளின் ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 09 AUG 2018 5:03PM by PIB Chennai

விலை ஆதரவு திட்டங்களின்கீழ் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள பயறு வகைகளை பல்வேறு நலத்திட்டங்களுக்காக பயன்படுத்துவதற்கு ஏற்ப அவற்றை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கீடு செய்ய, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

 

தாக்கம்

பொதுவிநியோகத்திட்டம், மதிய உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களில் பருப்பு வகைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பயன்படுத்த இந்தத் திட்டம் உதவும். மேலும், எதிர்வரும் காரீஃப் பருவத்தில் கொள்முதல் செய்யப்படும் உணவுப்பொருட்களை இருப்பு வைக்க உணவுக் கிடங்குகள் கிடைக்க இதன் மூலம் வகை ஏற்படும்.

விவரங்கள்

ஒப்புதல் வழங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 34.88 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு, கொண்டைக் கடலை, மசூர் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து ஆகியவற்றை மொத்த விலைச் சந்தையில் விற்கப்படும் விலையில் கிலோவுக்கு ரூ.15 என்ற தள்ளுபடியில், முதலில் வருபவர்களுக்கு முதலில் வழங்குதல் என்ற    அடிப்படையில் வழங்கப்படும்.   மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் இந்த பருப்பு வகைகளை மதிய உணவுத்திட்டம், பொது விநியோகத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 12 மாத கால கட்டத்தில்  ஒரு முறை   இருப்பு இருக்கும் வரை, இந்த பருப்பு வகைகள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு ரூ.5,237 கோடியை செலவிடும்.

 

பின்னணி

கடந்த இரண்டாண்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டில் அதிக அளவு பருப்பு வகை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2017 காரீஃப், 2018 ரபி பருவங்களில், மத்திய அரசு விலை ஆதரவு திட்டத்தின்கீழ் சாதனை அளவாக பருப்பு வகைகளை கொள்முதல் செய்துள்ளது. விலை ஆதரவு திட்டத்தின்கீழ் 45.43 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டன. வரும் காரீஃப் பருவத்தில் பருப்பு வகை உற்பத்தி நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி உயர்வும், குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பும், விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கூடுதல் கொள்முதலை மேற்கொள்ள வேண்டிய  அவசியம் ஏற்படும். 

                                     *****



(Release ID: 1542417) Visitor Counter : 217


Read this release in: English , Marathi