பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

மூலிகைத் தாவரங்கள், நறுமணப் பொருள் தாவரங்களின் மேம்பாட்டுக்கு ஒப்பந்தம் கையெழுத்து

Posted On: 09 AUG 2018 1:18PM by PIB Chennai

பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மூலிகைச் செடிகள், நறுமணப் பொருள் தாவரங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தை மேம்பாட்டு இணையம் (TRIFED) தேசிய மூலிகைச் செடிகள் மேம்பாட்டு வாரியம் (NMPB) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (ஆகஸ்ட் 9) கையெழுத்தானது.

பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தை மேம்பாட்டு இணையம் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழும், தேசிய மூலிகைச் செடிகள் மேம்பாட்டு வாரியம் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழும் இயங்கி வருகின்றன.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பேசிய மத்திய பழங்குடியினர் நல அமைச்சர் திரு. ஜோயல் ஓராம், “வனப் பகுதிகளில் மூலிகைச் செடிகளைப் பயிரிடும் பழங்குடியினர் அவற்றின் உண்மையான மதிப்பை அறியவில்லை. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அதற்கு உதவும். அவர்கள் ஆதாயமும் பெறுவர்” என்றார்.

ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் பேசுகையில், “இது பழங்குடியினரிடையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும். அத்துடன் அவர்களது திறன் மேம்பாட்டுக்கும் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் வழி வகுக்கும்” என்றார்.

பழங்குடியினர் நலத் துறை இணையமைச்சர் திரு. சுதர்சன் பகத் பேசுகையில், “பழங்குடியினர் அனைவரும் விவசாயத்தைச் சார்ந்து வாழ்வதால், விவசாயிகளின் வருவாயைப் பெருக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தை எட்டுவதற்குத் துணை புரியும்” என்றார்.

இந்த ஒப்பந்தம் பழங்குடியினர் பகுதியில் மூலிகைத் தாவரங்களை அடையாளம் காணவும். வேளாண் நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு ஏற்படவும் உதவும். வனதன விகாஸ் கேந்திர சுய உதவிக் குழுக்கள் மூலமாக தாவரங்களை வளர்க்கவும் ஆய்வு மற்றும் சோதனை மையம் அமைப்பதற்கும் துணை புரியும்.

**************



(Release ID: 1542230) Visitor Counter : 236


Read this release in: English , Marathi , Bengali