பிரதமர் அலுவலகம்

வாரணாசியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 14 JUL 2018 9:50PM by PIB Chennai

மேதகு உத்தரப் பிரதேச ஆளுநர் திருமிகு ராம்நாயக் அவர்களே, துடிப்பும், ஆற்றலும், உழைப்பும் கொண்டு ஜொலிக்கும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் திருமிகு யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அரசின் சக அமைச்சர்கள் திருமிகு மனோஜ் சின்ஹா, நாடாளுமன்ற சக உறுப்பினர்களே, கெழுதகை நண்பரும் உத்தரப் பிரதேச பாஜக தலைவருமான திருமிகு மஹேந்திரநாத் பாண்டே அவர்களே, ஜப்பானிய தூதரக உயர் அதிகாரி திரு ஹிரேகா அஸாரி அவர்களே, வாரணாசியின் சகோதர சகோதரிகளே!

 

எல்லாவற்றையும் விட முதலில் நான் நம் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்த நாட்டின் புதல்வியைப் பாராட்ட விரும்புகிறேன். அசாம் மாநிலம் நவ்காம் மாவட்டம் தீன்கம் என்ற ஊரைச் சேர்ந்த அந்த இளம் புதல்வி ஹிமாதாஸ் நிகழ்த்திய அற்புதமான நிகழ்ச்சியை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அவரைப் பலர் தொலைக்காட்சியிலும் பார்த்திருப்பீர்கள். இது குறித்து எனது சுட்டுரையில் (டுவிட்டர்) சிறப்புடன் குறிப்பிட்டுள்ளேன். உலக சாதனையாளர்களை எல்லாம் பின்தங்கச் செய்து ஒவ்வொரு விநாடியும் முன்னேறிக் கொண்டிருக்கும் நாட்டின் புதல்வியின் சாதனை இந்த அரங்கில் கூடியுள்ள வர்ணனையாளர்கள் குறிப்பிட்டது போல் ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படச் செய்திருக்கும்.

 

விரைவோட்ட வீராங்கனை ஹிமாதாஸ் அற்புதமாக நிகழ்த்தியதைப் பார்த்திருப்பீர்கள். (ஹிமாதாஸ் உலக தடகள சாம்பியன்சிப் 20 வயதுக்குட்பட்டோர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆவார்) நாட்டுக்குப் பெருமைகளை அவர் தேடித் தந்திருக்கிறார். அவர் வெற்றி பெற்றது அறிவிக்கப்பட்டபோது, தேசத்தின் மூவர்ணக் கொடியை ஏந்துவதற்காக அவர் கைகளை நீட்டியது, வெற்றியை நெஞ்சில் ஏந்திக் கொள்வதைப் போன்ற உணர்வைப் பெற்றிருந்தார். வெற்றி அறிவிக்கப்பட்ட பிறகு, தேசியக் கொடியை உற்சாகமாக அசைத்தபோது, அசாமின் பாரம்பரிய ஆடையைக் கழுத்தில் அணிந்திருக்கவும் அவர் தவறவில்லை. பதக்கம் அணிவிப்பதற்காக அழைக்கப்பட்டு, அதைப் பெறுவதற்காக மேடையில் அவர் நின்றிருந்தபோது, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, 18 வயதே ஆன அந்த தேசத்தின் புதல்வி ஹிமாதாஸின் கண்களில் நீர் உருண்டோடியது. அந்தக் கண்ணீர் பாரதத் தாய்க்கு அர்ப்பணிக்கப்பட்டது. இத்தகைய காட்சி 120 கோடி இந்தியர்களுக்கு உற்சாகமும் உத்வேகமும் அளிக்கிறது.

 

அசாம் மாநிலம் சிறிய கிராமத்தில் நெல் விளைவிக்கும் விவசாயியின் மகளான அவர்18 மாதங்களுக்கு முன்பு வரையில் மாவட்ட அளவில்தான் விளையாடி வந்தார். மாநில அளவில் கூட அவர் போட்டியில் பங்கேற்றதில்லை. ஆனால் 18 மாதங்களில் நம் நாட்டுக்கே பெருமை தேடித் தந்திருக்கிறார். ஹிமாதாஸைப் பாராட்டுகிறேன். அவளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கைதட்டலின் மூலம் நீங்களும் ஹிமாதாஸுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நமது மகளைப் பாராட்டுவோம். அசாமிலிருந்து வந்த இந்தப் புதல்வி நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளாள். மிகுந்த பாராட்டுகள்.

சகோதர, சகோதரிகளே,

மழைக்காலம், சிவபெருமானுக்கு உகந்த மாதம் தொடங்குகிறது. சில நாட்களில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இங்கே வருவார். உலகம் முழுவதுமிருந்து பக்தர்கள் காசிக்கு வந்து வழிபடுவர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வருகின்றன.

சகோதர, சகோதரிகளே,

திருவிழாவுக்கு மும்முரமாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எல்லாவற்றையும் விட முன்பு நடந்த விபத்துகளும் அதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் குறித்த வேதனையும் மனத்துக்கு வலி தருகிறது. வாரணாசியில் நேர்ந்த விபத்தில் பலர் உயிரிழந்தனர். பாதிப்புக்கு ஆளான அனைவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன். பிறரது வேதனையைப் பகிர்ந்து கொள்வது, கூட்டுறவு உணர்வு, ஒத்துழைப்பு, கழிவிரக்கம் ஆகியவை காசியின் அடையாளம். சிவபெருமானைப் போல, கங்கைத் தாயைப் போல பிறரது வேதனையைத் தணிக்கும் பண்பு வாரணாசியின் தனித்தன்மையாகும். வாரணசி மக்கள் இந்த விழுமியங்களை உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நெஞ்சில் வைத்திருப்பர்.

நண்பர்களே,

வாரணாசியின் பாரம்பரியத்தில் கடந்த சில நூறாண்டுகளாக இத்தகைய பண்போடு ஊறியிருக்கிறது. கடந்த நான்காண்டுகளாக இந்தப் புராண அடையாளத்துக்குப் புதிய அங்கீகாரம் கிடைப்பதற்கு சீராக வழக்கமான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி 21ம் நூற்றாண்டுக்குத் தேவையான வகையில் காசி மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதிய இந்தியாவுக்காக புதிய வாரணாசி கட்டமைக்கப்பட்டு வருகிறது. நவீனக் கட்டமைப்பையும் பண்டைய ஆத்மாவையும் கொண்டு விளங்குகிறது. வாரணாசியின் இந்தப் புதிய மாறிவரும் இந்தப் புதிய முகம் எல்லா திசையிலிருந்தும் பிரகாசமாகத் தோற்றமளிக்கும்.

காசி நகரின் சாலைகள், தெருக்களின் சந்திப்புகள், பாதைகள், ற்றங்கரைகள், குளங்கள் ஆகியவற்றை யாராவது ஒருவர் இன்று பார்த்தால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துவிடுவர். தலைக்குமேலே தொங்கும் மின்கம்பிகள் இப்போது இல்லை. சாலைகளில் ஒளி விளக்குகள் உள்ளன. நெஞ்சைக் கவரும் வண்ண விளக்குடன் கூடிய நீரூற்றுகளையும் காணலாம்.

நண்பர்களே,

 

கடந்த நான்கு ஆண்டுகளாக ஆயிரம் கோடி ரூபாய் வாரணாசியின் வளர்ச்சிக்காக முதலீடு செய்யப்பட்டுள்ளன. இது தொடரும். 2014ம் ஆண்டு முதல் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காசியின் வளர்ச்சிக்கு முந்தைய அரசு எதையும் செய்யவில்லை. வளர்ச்சிக்கு ஏதும் செய்யாவிட்டாலும் போகட்டும். நிறைய இடையூறுகள் செய்யப்பட்டன. உத்தரப் பிரதேசத்தில் மக்கள் பெரும் பலத்துடன் பாஜக ஆட்சியை அமைத்தது முதல் காசியின் வளர்ச்சியும் உத்தரப் பிரதேசத்தின் மேம்பாடும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில், நான் பல ஆயிரம் கோடிக்கான திட்டங்களைத் தற்போது தொடங்கிவைத்தும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறேன். இந்த மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் சாலைகள், போக்குவரத்து, குடிநீர் சப்ளை, கழிவுநீர் அகற்றல், சமையல் வாயு வழங்கல், சுத்தம் சுகாதாரம் மேம்பாடு, நகரை அழகுபடுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியவையாகும். மேலும், வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் பெஞ்ச் (circuit bench of Income Tax tribunal), மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் மையம் (CGHS) ஆகியவை அமைக்கப்படுவதன் மூலம் நகர மக்கள் பயன்பெறுவர்.

சகோதர, சகோதரிகளே,

வாரணாசியில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டாலும் அதன் பலன்கள் அருகிலுள்ள கிராமத்தினருக்கும் போய்ச் சேர வகை செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல் தொடர்பான திட்டங்கள் மக்களுக்காக நிறைவேற்றப்பட்டுள்ளன. உங்கள் அனைவரையும் குறிப்பாக இங்கே கூடியுள்ள விவசாய சகோதர சகோதரிகளைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். காய்கறிகளுக்கான சரக்கு இடம் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடிக்கல் நாட்டிய பெருமையைப் பெற்றேன். அதை இன்று மக்களுக்கு அர்ப்பணிப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர்களே,

 

இந்தச் சரக்கு மையம் விவசாயிகளுக்குப் பெரும் வரப் பிரசாதமாகத் திகழும். உருளைக் கிழங்குகள், பீன்ஸ், தக்காளி போன்ற காய்கறிகளைச் சேமித்து வைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காய்கறிகள் அழுகி வீணாகுமே, நஷ்டம் ஏற்படுமே என்ற கவலை உங்களுக்கு இனி இல்லை. ரயில்நிலையமும் அருகில் உள்ளது. இதர நகரங்களுக்கும் எளிதில் எடுத்து விற்பனை செய்யலாம்.

சகோதர, சகோதரிகளே,

விரைவான போக்குவரத்தின் மூலம் மாற்றத்தை எட்டும் பாதையில் இந்த அரசு நடைபோடுகிறது. இதே தொலைநோக்குப் பார்வையுடன் ஆஸம்கர் பகுதியில் அதிவிரைவுச் சாலைக்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

 

நண்பர்களே,

காசி நகர் முக்திக்கு வழிவகுக்கும் தலமாக எப்போதும் கருதப்படுகிறது. அமைதியைத் தேடி இங்கே வரும் மக்களின் எண்ணிக்கைக்கு எப்போதும் குறைவில்லை. அதே சமயம் மருத்துவ அறிவியல் மூலம் உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கும் மையமாகத் திகழ்கிறது. உங்களைப் போன்ற பொதுமக்களின் நல்லாதரவுடன் இது சுகாதார மையமாக உருவாகிவருகிறது. கல்விக்குச் சிறந்த நிறுவனமான பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் இப்போது மருத்துவத் துறைக்கும் பெயர் பெற்று வருகிறது. அண்மையில் எய்ம்ஸ் நிறுவனத்துடன் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் உலகத் தரம் வாய்ந்த சுகாதார மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இப்போது தொடங்கிவிட்டது. அதன்  பலன்கள் விரைவில் தெரியவரும். வாரணாசிக்கு வரும் மக்களுக்கும் வாரணாசி மக்களுக்கும் இடையில் தொடர்பு ஏற்படுவது மிகவும் முக்கியம். எனவே, சாலைப் போக்குவரத்தோ, ரயில் போக்குவரத்தோ காசியில் விரைவில் ஏற்படுத்தப்படுகிறது. இதன்படி இங்குள்ள ரயில்நிலையம் புதுப் பொலிவுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. வாரணாசியிலிருந்து அலகாபாத், சபரா ஆகிய நகரங்களுக்கு இடையிலான தண்டவாளங்கள் இரட்டைப் பாதையாக வெகு வேகமாக மாற்றப்பட்டு வருகிறது. வாரணாசியிலிருந்து பலியா வரையிலான ரயில் பாதையும் மின்மயமாக மாற்றப்பட்டுவிட்டது. ரயில் போக்குவரத்தினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தேன். பலியா, காஜிப்பூர் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ரயில் மூலம் வந்து, வேலை முடிந்து மாலையில் திரும்பிச் செல்லலாம். நீண்ட தூரம் செல்லும் ரயில்களின் நெரிசலை இது குறைக்கும்.

 

நண்பர்களே,

 

காசிக்கு வரும் பக்தர்களுக்கு உரிய வசதிகளைச் செய்து தருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகம் முழுவதுமிருந்தும் சிவபெருமானின் பக்தர்கள் எந்தவித இடையூறுகளுக்கும் ஆளாகாமல் இருப்பதற்காகப் பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகின்றன. பாஞ்ச் – கோடி சாலை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. அத்துடன் கலாசார, ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்களையும் இணைக்கும் வகையில்  கூடுதலாக 24 சாலைகள் சீரமைக்கப்படுகின்றன. அல்லது மீண்டும் போடப்படுகின்றன. இவை மக்களுக்காக சிறிது நேரத்துக்கு முன் அ்ர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

சகோதர, சகோதரிகளே,

உலக சுற்றுலா வரைபடத்தில் காசி முக்கியமான இடத்தைப் பெறுகிறது. இன்று, ருத்ராக்ஷ் எனப்படும் சர்வதேச மையத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஜப்பான் பிரதமர் எனது நெருங்கிய நண்பர் திருமிகு ஷின்ஜோ ஆபே இரண்டாண்டுகளுக்கு முன் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது காசிக்கு வந்திருந்தார். அப்போது அவர் இந்த மையத்தை நமக்கு வழங்கியுள்ளார். ஷின்ஜோவுக்கு உங்கள் சார்பில் காசி மக்கள்சார்பிலும் இந்திய நாட்டவர் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

முதலமைச்சர் யோகி காசியில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் சுற்றுலா மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுத்து வருவது மகிழ்ச்சி அடைகிறேன். பாரம்பரியம் மிக்க இடத்தைத் தூய்மைப்படுத்தி, அழகுபடுத்தும் பணி விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உத்தரப் பிரேதச மக்கள், நீங்கள் எல்லோரும் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் விதம் தூய்மை இந்தியா இயக்கம் குறிப்பிடத் தக்க பாராட்டுக்கு உரியதாகிறது. சுத்தம், சுகாதாரம், அழகு, ஆரோக்கியம் மிக்க இந்தியாவை உருவாக்குவதில் உங்களது பங்களிப்பு பாராட்டுக்குரியது.

 

நண்பர்களே,

நீங்கள் காசியின் மேன்மை, வரலாற்று விழுமியங்களைப் பராமரிக்க நீங்கள் எதைச் செய்தாலும் அது அளப்பரிய செயலாகும். அதே சமயம் நான்கு ஆண்டுகளுக்கு முன் காசி அச்சுறுத்தலுக்கு ஆளான நிலையையும் மறந்துவிடக் கூடாது. இந்த நகரின் எல்லா இடங்களிலும் குப்பை கூளங்கள் குவிந்திருந்தன. சிதலமடைந்த பூங்காக்கள், மோசமான சாலைகள், வழிந்தோடும் கழிவுநீர், கம்பங்களிலிருந்து அறுந்து தொங்கி ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பிகள், வெறுப்பு ஏற்படுத்திய போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை மறந்திருக்க மாட்டீர்கள். பாபாத்புரா விமான நிலையத்திலிருந்து நகருக்கு வருவதற்கான நம்பியிருந்த சாலையின் நிலையையும் மறந்திருக்க மாட்டீர்கள். விமான நிலையத்துக்குச் செல்வதற்குப் பதில் எல்லோரும் கன்ட் ரயில் நிலையத்திற்குச் சென்றனர். கங்கையின் நிலைமை என்ன அவளது கரைகள் நிலைமை எல்லோருக்கும் தெரியும். நகரின் மொத்த கழிவும், கிராமங்களின் குப்பையும் கங்கையில் விடப்பட்டன. முந்தைய அரசின் எந்த துறையும் கொஞ்சமும் கவலைப்படவில்லை. கங்கையின் பெயரால் எவ்வளவு பணம் வீணாக்கப்பட்டது. கங்கையில் நீர் வரத்துக்கு அச்சுறுத்தல் நேருவது ஒரு புறம் இருக்க, கங்கை நீரின் தூய்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் கங்கையைத் தூய்மையாக்கும் பணி எடுத்துக் கொள்ளப்பட்டது. கங்கையைத் தூய்மையாக்கும் பணி விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாரணாசியில் மட்டுமல்ல, கங்கோத்ரியிலிருந்து கங்கா சாகர் வரையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கங்கையைத் தூய்மையாக்குவது மட்டுமின்றி, நகரின் கழிவுநீர் ஆற்றில் கலக்காமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக இதுவரையில் மொத்தம் ரூ. 21,000 கோடி மதிப்பீட்டில் 200க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கழிவுநீர் அகற்றுவது குறித்த சில திட்டங்கள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன. சிலவற்றுக்கு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.

 

நண்பர்களே,

தற்போது அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிக்கும் பிரிவுகள் முறையாக இயக்கப்படும் என்று அரசு உறுதி கூறுகிறது. காரணம், முந்தைய அரசாங்கத்தில் கழிவுநீர் சுத்தகிரிப்புப் பிரிவு கட்டப்பட்டதுடன் நின்றுவிட்டது. போதிய திறனுக்கு ஏற்ப செயல்படவும் இல்லை. நீண்டகாலம் முறையாக  இயக்கப்படவும் இல்லை.    பணிக் கலாசாரம் அப்படி இல்லை. தற்போது எந்தக் கழிவுநீர் சுத்திகரிப்புப் பிரிவும் கட்டப்பட்டு, 15 ஆண்டுகள் செயல்பட வேண்டும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, கழிவுநீர் சுத்திகரிப்புப் பிரிவுகள் கட்டப்படுவதுடன் நில்லாமல், அவை தொடர்ந்து இயங்கவும் வேண்டும் என்பது முக்கியம். ஆகையால்  இப்பிரிவுகளைக் கட்டுவதற்கு நீண்ட நேரமும் மிகுந்து உழைப்பும் தேவைப்படுகின்றன. ஆனால், நிரந்தரக் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. அதன் பலன்களை வாரணாசி மக்கள் விரைவில் அறிந்துகொள்வர்.    

சகோதர சகோதரிகளே,

இன்றைக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் மூலம் வாரணாசியைப் பொலிவுறு நகராக மாற்றப் போகிறது. அனைத்தையும் ஒருங்கிணைத்து, கட்டுப்படுத்தும் வகையிலான மையம் ஒன்று வேகமாக உருவாகிவருகிறது. நாட்டின் நிர்வாகமும் வசதியும் இங்கிருந்தே இயக்கப்பட உள்ளது. இது போல் 10 திட்டங்களுக்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நண்பர்களே,

பொலிவுறு நகரம் என்பது நகரங்களின் கட்டமைப்பை மேம்படுத்துவதாக பிரசாரம் மேற்கொள்வது மட்டுமல்ல. நாட்டிற்குப் புதிய அடையாளத்தைப் பெற்றுத் தருவதற்கான இயக்கமாகும். இளைய பாரதம், புதிய இந்தியாவின்  அடையாளமாகும். அதைப் போல் “இந்தியாவில் தயாரி”, “டிஜிட்டல் இந்தியா” போன்றவை பொது மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி வருகின்றன. இது விஷயத்தில் நமது உத்தரப் பிரதேசம் முக்கியப் பங்கினை ஆற்றுகிறது. தொழில்கொள்கை, முதலீட்டுக்கு உகந்த சூழ்நிலை ஏற்படுத்தியது வெளிப்படையாகத் தெரிவதை அடுத்து, முதலமைச்சர் யோகியையும் அவரது குழுவினரையும் நான் பாராட்டுகிறேன். சில தினங்கள் முன்பு நொய்டாவில் சாம்சங் மொபைல் உற்பத்தி ஆலையை உலகில் அர்ப்பணிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். இது ஆயிரக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும். கடந்த நான்கு ஆண்டுகளில் மொபைல் போன் உற்பத்தி ஆலைகளின் எண்ணிக்கை இரண்டிலிருந்து 120 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 50 ஆலைகள் உத்தரப் பிரதேசத்தில் உள்ளன. இந்த ஆலைகள் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.

நண்பர்களே,

“இந்தியாவில் உற்பத்தி செய்” திட்டத்துடன் “டிஜிட்டல் இந்தியா” திட்டமும் வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது. டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் (TCS) வணிக செயல்முறை அலுவலகம் (BPO) இன்று இங்கு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  மத்திய அரசு வாரணாசியில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது.

சகோதர சகோதரிகளே,

வேலைவாய்ப்பு பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் கூட அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அது முத்ரா திட்டத்தின் கீழ் வங்கி உத்தரவாதம் இல்லாமல் சுயவேலைவாய்ப்புக்கான கடனுதவியோ, இலவச எரிவாயு சிலிண்டரோ, ஏழைத் தாய்மார்கள் மற்றும் ஏழைச் சகோதரிகளின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சுத்தமான எரிபொருள் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலான ஒரு பெரிய திட்டம் காசியில் செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்களுக்கான நகர எரிவாயு விநியோகத் திட்டம் அதில் ஓர் அங்கமாகும். இதற்காக அலகாபாதிலிருந்து வாரணாசி வரையில் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி வாரணாசியில் இதுவரை 8 ஆயிரம் வீடுகளுக்கு எரிவாயுக் குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.மேலும் 40 ஆயிரம் வீடுகளுக்குக் குழாய் மூலம் எரிவாயு வழங்குவதற்கான ஏற்பாடு தற்போது நடைபெற்று வருகிறது.

நண்பர்களே,

இது எரிபொருள் வழங்குவது சம்பந்தமான சாதாரண வசதி மட்டுமல்ல. நகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒட்டுமொத்த  இயக்கமாகவும் உள்ளது. பிஎன்ஜி எனப்படும் எரிவாயுவோ, சிஎன்ஜி என்ற வாயுவோ இந்தக் கட்டமைப்பின் மூலம் பயன்படுத்தும்போது, மாசினைக் கணிசமாகக் குறைக்கும். பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் இத்தகைய சிஎன்ஜி எனப்படும் எரிவாயுவில் இயக்கப்பட்டால், வாரணாசியில் வேலைவாய்ப்பை உருவாக்கும்.

நண்பர்களே,

ஜப்பான் பிரதமரை நானோ வேறு இந்திர்களோ சந்திக்கும்போதெல்லாம், காசியில் தான் கண்ட அனுபவத்தையும் காசி மக்கள் அவரை வரவேற்றதையும் விவரிப்பார். காசியை அவர் ஏப்போதும் புகழ்ந்து பேசுவார். ஒரு முறை பிரான்ஸ் அதிபர் என்னுடன் வந்தபோது, அவருக்கு மக்கள் அளித்த வரவேற்பையும் காட்டிய மரியாதையையும் ஒட்டுமொத்த பிரான்ஸ் நாடும் பேசுகிறது. இதுதான் காசியின் பாரம்ரியம். காசியின் பாசம் இதுதான். காசியின் புகழ் மணம் இதுதான். காசி மக்கள் காட்டும்  அன்பு மகத்தானது.

எனது அன்பு காசி சகோதர சகோதரிகளே,

நீங்கள் காசியின் அன்பையும் பாசத்தையும் விருந்தோம்பலையும் உலகுக்கே காட்டுவதற்கு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு அனைத்துவகையிலும் தயாராவீர்களா? அதை பிரம்மாண்டமாக வரவேற்பீர்களா? காசிக்குப் பெருமை தேடித் தருவீர்களா? ஒவ்வொரு விருந்தினரையும் மனமார வாழ்த்துவீர்களா? நீங்கள் நிச்சயமாகச் செய்வீர்களா? நிச்சயமாக! உறுதியாக!

வரும் ஜனவரி மாதம் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரையில் “பிரவாசி பாரதிய திவஸ்” நிகழ்ச்சி காசியில் நடத்தப்படுகிறது. பிரவாசி பாரதிய தினத்தில் உலகெங்கும் உள்ள இந்தியர்கள் வந்து கூட இருக்கிறார்கள். உலகில் எந்தப் பகுதியில் இருக்கிறார்களோ, அவர்கள் தொழில் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனரோ, அரசியல், சமூகப் பணிகளில் உள்ளனரோ, அரசுகளை நடத்துகிறார்களோ அனைவரும் காசியில் ஜனவரி 21ம் தேதி முதல் 23ம் தேதி வரையில் காசியில் கூடுகிறார்கள். அவர்களில் சிலரது ஐந்தாறு தலைமுறைக்கு முந்தைய மூதாதையர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பாமல் கூட இருந்திருக்கக் கூடும். அவர்களது புதல்வர்கள், வாரிசுகள் தங்களது தாய் மண்ணை முதல்முறையாகக் காண்பதற்காக இந்தியாவுக்கு வருகிறார்கள்.

தயவு செய்து, அத்தகைய நிகழ்வு காசிக்குப் பெருமை தேடித் தருகிறதா என்று கூறுங்கள். அந்த மக்களை நாம் வரவேற்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமா, வேண்டாமா? அந்த மக்களை வரவேற்க ஒவ்வொரு பகுதியும் நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டாமா, இல்லையா? காசி நகர் உலகின் முழுவதும் புகழப்படும் நிலையைப் பெற வேண்டுமா, வேண்டாமா? தயவு செய்து இதற்குத் தயாராகும் பணிகளை இப்போதே தொடங்குங்கள். உலகம் முழுவதுமிருந்து வரும் அனைத்து விருந்தினர்களும் ஜனவரி 21ம் தேதி முதல் 23ம் தேதி வரையில் இங்கே தங்கியிருக்கப் போகிறார்கள். அவர்கள் ஜனவரி 24ம் தேதி பிரயாக் ராஜுக்கு சென்று, கும்ப மேளாவில் பங்கேற்க இருக்கிறார்கள். அதன் பின் தில்லியை ஜனவரி 26ம் தேதி அடைவர்.

காசி மக்கள் சிறந்த விருந்தோம்பலை அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். காசியிலிருந்து வரும் நபரைப் போல நானும் ஜனவரி 21ம் தேதி முதல் உங்களுக்குத் தோளோடு தோள் கொடுப்பேன். உலகம் முழுதும் பரந்து வாழும் இந்திய மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகிறார்கள். இது மிக முக்கியமான நிகழ்வு. எனவே, நீங்கள் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.

எனது காசி நகர சகோதர சகோதரிகளே,

இன்று  உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு பெற்றுள்ளேன். உங்களுக்குப் பல திட்டங்களை அர்ப்பணிக்கவும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் நல்ல வாய்ப்பு பெற்றுள்ளேன். உங்களது மக்களவைத் தொகுதி பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருக்கும் நான் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வதற்குக் கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்தவரையில் உங்களுக்காகக் கடினமாக உழைப்பேன். இதைச் செய்தும் வருகிறேன். தொடர்ந்து செய்யவும் செய்வேன்.

மீண்டும் எனது மனமார்ந்த நன்றியையும் மரியாதையையும் காசி நகர மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“ஹர ஹர மகாதேவ” என்று  என்னுடன் இணைந்து உரத்த குரலில் கூறுங்கள்!

மிகுந்த நன்றி

 

 

******



(Release ID: 1541908) Visitor Counter : 325