ஜவுளித்துறை அமைச்சகம்

நெசவாளர் நலனுக்கான திட்டங்கள்

Posted On: 02 AUG 2018 1:16PM by PIB Chennai

நாடுமுழுவதும் உள்ள நெசவாளர்கள் நலனுக்காகவும், கைத்தறித் துறையின் மேம்பாட்டுக்காகவும் மத்திய ஜவுளி அமைச்சகம் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.  கைத்தறி நெசவாளர்களுக்கான விரிவான நலத்திட்டம், தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம், நெசவு நூல் விநியோகத் திட்டம், நாட்டில் உள்ள மிகப்பெரிய எட்டு கைத்தறி கூட்டுத் தொழில் கூடங்களுக்கு விரிவான கைத்தறி மேம்பாட்டுத்திட்டம் ஆகியவை இவற்றில் அடங்கும். 

இந்த திட்டங்களின் கீழ் கச்சாப்பொருட்கள் பெறுவதற்கும், தறிகள் மற்றும் உதிரிபாகங்கள் வாங்குவதற்கும் வடிவமைப்பு செய்வதற்கும், பல வகையான உற்பத்திக்கும், அடிப்படை வசதி மேம்பாட்டிற்கும், திறன் மேம்பாட்டிற்கும், கைத்தறிப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், குறைந்த வட்டியிலான கடன் பெறுவதற்கும் நிதியுதவி செய்யப்படுகிறது. 

தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக நெசவாளர்களுக்கான முத்ரா திட்டத்தின்கீழ், கைத்தறி நெசவாளர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.  இதன்படி, ஒவ்வொரு கைத்தறி நெசவாளர்களுக்கும், மூன்று ஆண்டு கடன் உத்தரவாதத்துடன் ஆறு சதவீத வட்டிவீதத்தில் ரூ.10,000 வரை கடன் வழங்கப்படுகிறது. 

இளம்தலைமுறையினரை கைத்தறித் தொழிலில் ஈர்ப்பதற்காக தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், திறன் மேம்பாட்டுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.  நவீன முறையில் கைத்தறித் துணிகளை அறிமுகம் செய்து மேம்படுத்துவதற்காக 2016-17 கல்வியாண்டில் இருந்து இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கு புதுதில்லியில் உள்ள தேசிய ஆடைகள் வடிவமைப்புத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

மத்திய ஜவுளித் துறை அமைச்சர் திரு. அஜய் தாம்தா இன்று (02.08.2018) மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில், இதனைத் தெரிவித்தார்.

*****


(Release ID: 1541332)
Read this release in: English , Marathi