பிரதமர் அலுவலகம்

கிராமப்புற மின்சார வசதி மற்றும் சவுபாக்யா திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்

Posted On: 19 JUL 2018 7:33PM by PIB Chennai

மின்சாரம் முதல் முறையாக சென்றடைந்த நாட்டின் 18 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த அனைத்து நண்பர்களையும் சந்திப்பதற்கு இன்று (19.07.2018)     எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இங்கு வாழ்ந்த மக்கள் பல நூற்றாண்டுகளாக இருளில் இருந்தனர், தங்கள் கிராமத்திற்கு மின்சாரம் வருமா என்று ஏங்கியிருந்தனர். இன்று உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் முகத்தில் உள்ள சிரிப்பு, மின்சாரம் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைத்தது என்பது குறித்த விவாதம் இவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பிறந்தது முதல் மின்சாரத்தை பார்த்து வந்தவர்கள் இருட்டான இரவுகளை பார்த்தறியாதவர்கள் ஆகியோருக்கு இருளை அகற்றினால் எப்படி இருக்கும் என்பதை அறிய மாட்டார்கள். வீட்டில் அல்லது கிராமத்தில் மின்சாரம் இல்லாத இரவு எப்படி இருக்கும் என்று அவர்களுக்கு தெரியாது. இருளில் தங்கள் வாழ்க்கையை ஒருபோதும் கழித்திருக்காதவர்கள் இதனைப் புரிந்துக் கொள்ளவே முடியாது. உபநிஷத் கூறுகிறது “தமசோ மா ஜோதிர்கமய”. அதாவது இருள் அகலட்டும், அனைத்து இடத்திலும் ஒளி நிரம்பட்டும்.

     இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வந்த மக்களை இன்று சந்திப்பது எனது அதிர்ஷ்டம். பல ஆண்டுகள் காத்திருந்து இந்த கிராமங்களில் வாழ்க்கை ஒளிமயமாகி உள்ளது. நமக்கு நாளொன்றுக்கு 24 மணி நேரம் உள்ளது, ஒவ்வொருவரும் இந்த நேரத்தை தனது வளர்ச்சிக்காக, தனது குடும்பத்தின் வளர்ச்சிக்காக, சமுதாயம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக மிகச் சிறப்பான முறையில் பயன்படுத்த விரும்புகிறார்கள். ஆனால் இந்த 24 மணி நேரத்தில் 10 முதல் 12 மணி நேரம் வீணடிக்கப்பட்டால் நீங்கள் என்ன செய்ய முடியும்? எஞ்சியுள்ள 12 அல்லது 14 மணி நேரத்தில் அதே அளவு வேலையை செய்ய முடியுமா? உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும், மோடி அவர்கள் என்ன மாதிரி கேள்விகளையெல்லாம் கேட்கிறார் என்று. ஒருவருக்கு 12 முதல் 14 மணி நேரம் மட்டுமே கிடைக்கிறது என்பது எவ்வாறு சாத்தியமாகும்? எனதருமை மக்களே, பல 10 ஆண்டுகளாக இத்தகைய வாழ்க்கையை பல்லாயிரக்கணக்கான தொலைத் தூர கிராமங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான குடும்பங்கள் மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய மின்சார வசதி இல்லாத கிராமங்கள் சுதந்திரத்திற்கு பிறகும் பல ஆண்டுகளாக இந்த இன்னல்களை தொடர்ந்து அனுபவித்து வந்தனர். இவர்களது வாழ்க்கை சூரிய உதயத்திற்கும், சூரிய மறைவிற்கும் இடையில் மட்டுமே இருந்தது. சூரிய வெளிச்சம் தான் அவர்கள் எவ்வளவு மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்பதை நிர்ணயித்தது. அது குழந்தைகளின் படிப்பாக இருக்கலாம், சமையல் வேலையாக இருக்கலாம், உணவுப் பரிமாறும் வேலையாக இருக்கலாம். அல்லது வேறு எந்த வீட்டு வேலையாகவும் இருக்கலாம். நாடு சுதந்திரமடைந்த பிறகு எத்தனை 10 ஆண்டுகள் கடந்து விட்டன? எனினும் நாங்கள் ஆட்சியமைத்த போது நாட்டில் மின்சாரமே இல்லாத18 ஆயிரம் கிராமங்கள் இருந்தன என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இவ்வாறு இருளில் மூழ்கிய ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க முந்தைய அரசுகளுக்கு சமாளிக்க இயலாத பிரச்சனைகள் இருந்தனவா என்று கூட ஆச்சரியப்பட்டு இருப்பீர்கள். முந்தைய அரசுகள் மின்சார வசதி அளிப்பது குறித்து நிறைய உறுதிமொழிகளை அளித்தார்கள். ஆனால் எதனையும் நிறைவேற்றவில்லை. இவ்வகையில் எதுவும் செய்யப்படவில்லை. 2005-ல், அதாவது 13 ஆண்டுகளுக்கு முன்னாள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது மன்மோகன்சிங் அவர்கள் பிரதமராக இருந்தார். 2009 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் தாம் மின்சார வசதி அளிக்கப் போவதாக அவர் உறுதி அளித்தார். இது மட்டுமல்ல, அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவரும் 2009-க்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். எனினும் இந்த உறுதிமொழிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. இத்தகைய உறுதிமொழிகளை எவரும் அவ்வளவாக கருத்தில் கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் எங்கள் உறுதிமொழிகளை மிக முக்கியமானதாக கருதுகிறோம். அதேசமயம் எங்களது பணிகளின் குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை சரி செய்து மேலும் சிறப்பாக செய்ய முயற்சி எடுக்கிறோம். இதுவே ஜனநாயகத்தின் வலு என நான் நம்புகிறேன். அதாவது மென்மேலும் சிறப்பாக செய்ய முயற்சி செய்ய வேண்டும். செய்தவற்றை வெளியே காட்டி அதில் ஏதும் குறைபாடு உள்ளதா என கண்டறிய வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்தால் சிறப்பான முடிவுகள் கட்டாயம் ஏற்படும்.

     இதே விஷயத்தைத்தான் முன்னதாக ஆகஸ்ட் 15-ந் தேதி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து நான் கூறினேன். நாம் ஒரு இலக்கை நிர்ணயிக்கிறோம், அடுத்த 1000 நாட்களில் நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் வழங்குவோம் என்று. இந்த இலக்கை நோக்கி அரசு பணிச் செய்ய தொடங்கியது, கால தாமதமின்றி தொடங்கியது. இதில் எங்களுக்கு பாரபட்சம் ஏதுமில்லை. வடக்கிலிருந்து தெற்கு வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை நாங்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கும் பணியில் அர்ப்பணிப்புடன் பாடுபட்டோம். தீன்தயாள் உபாத்தியாயா கிராம ஜோதி திட்டத்தின் கீழ் மின்சாரம் இல்லாத இடங்களுக்கு மின்சாரம் வழங்க உழைத்தோம். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கென தனியாக மின்சார அமைப்பை ஏற்படுத்தினோம். இது கிராமங்களுக்கு, குடியிருப்புக்களுக்கு மின்சாரம் வழங்கி விநியோக அமைப்பை வலுப்படுத்துவதற்கும் கூடுதலாக எடுக்கப்பட்ட நடவடிக்கை. நாட்டின் அனைத்து கிராமங்களும், அனைத்து குடியிருப்புகளும் இந்த அமைப்புடன் இணைக்கப்படுவதை உறுதி செய்தோம். கிராமங்கள் சிறிதாக இருந்தாலும், பெரிதாக இருந்தாலும் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தும் இதில் இணைக்கப்பட வேண்டும். இந்த நிலையில் உஜாலா திட்டம் தொடர்ந்து விரிவாகி கொண்டே வருகிறது.

     எந்த கிராமமும், எந்த குடியிருப்பும், அது எவ்வளவு சிறிய மக்கள் தொகையை கொண்டதாக இருந்தாலும் மின்சார வசதி கொடுக்கப்படுவது விடுபடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். இந்த இலக்கை மனதில் கொண்டு பாடுபட்டோம். இந்த மின்சார அமைப்புடன் இணைப்பு ஏற்படுத்த இயலாத கிராமங்கள், குடியிருப்புக்களுக்கு கட்டமைப்பு சாராத மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்தோம். 2018 ஏப்ரல் 28-ந் தேதி இந்தியாவின் மேம்பாட்டுப் பயணத்தில் வரலாற்று சிறப்புமிக்க தினமாக நினைவுக் கூறப்படும். அன்றுதான் மணிப்பூர் மாநிலத்தி்ன் லீசாங் கிராமம் மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட கடைசி கிராமமானது. அந்த சமயம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெருமிதம் கொள்ளும் நேரமாகும். கடைசியாக மின்சார வசதியை பெற்ற லீசாங் கிராம மக்களுடன் இன்று உரையாடி இந்த நிகழ்ச்சியை தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. முதலில் அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை நாம் கேட்போம். இந்த கிராமம் மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்தில் உள்ளது.

     கேட்டீர்களா! அந்த கிராம மக்களின் பல்வேறு அனுபவங்களை இப்போது கேட்டோம். மின்சாரம் கிடைத்தவுடன் அவர்களது வாழ்க்கை எவ்வளவு எளிதாக போய் விட்டது என்று அவர்கள் கூறியதை கேட்டோம். தற்போது மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள 18 ஆயிரம் கிராமங்களில் மிகப் பல, மிகத் தொலைத் தூர பகுதிகளில் உள்ளவை. பனி சூழ்ந்த பகுதிகளில், குன்று பகுதிகளில், அடர்த்தியான வனம் சூழ்ந்த பகுதிகளில், நக்சல் போன்ற தீவிரவாதம் பாதித்த பதற்றமுடைய பகுதிகளில் அவை அமைந்துள்ளன. இத்தகைய கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவது மிகப் பெரிய சவால் மிகுந்த பணி. இந்த கிராமங்களுக்கு எவ்விதமான சாலை இணைப்புகளும் இல்லை.  இந்த கிராமங்களை சென்றடைவது எளிதானதல்ல. இத்தகைய கிராமங்கள் மிகப் பல. மின்சாரம் வழங்குவதற்கான கருவிகள் இந்த இடங்களுக்கு செல்வது குதிரைகள் மீதும், கோவேரி கழுதைகள் மீதும், படகுகள் மூலமும், தோளில் சுமந்தும்தான் கொண்டு செல்லப்பட்டன. இன்னும் பல கிராமங்களில், ஜம்மு-காஷ்மீரில் 35 கிராமங்கள், அருணாச்சல பிரதேசத்தில் 16 கிராமங்கள் ஆகியவற்றுக்கு கருவிகள் ஹெலிகாப்டர் மூலம் அனுப்பப்பட்டன. இவற்றையெல்லாம் நான் அரசின் சாதனை என்று சொல்ல மாட்டேன். இது தனிநபர் எவரது சாதனையும் அல்ல. இந்தப் பணி சம்பந்தப்பட்ட அந்த கிராமங்களையே அதுசாரும். கீழ் நிலையில் உள்ள அரசு ஊழியர்கள் இன்னல்களை கடந்து இரவும், பகலும் உழைத்து இதனை சாதித்துள்ளனர். பெருமை எல்லாம் அவர்களையே சாரும். இவர்கள் மின் கம்பங்களை தோளில் சுமந்து சென்றனர். இது அவர்களது சொந்த வேலையாக இருந்தது. மின் பணியாளர், தொழில் நுட்பாளர், தொழிலாளி போன்ற கீழ் நிலை அரசு ஊழியர்களே இதை சாதித்தனர்.  இவர்கள் மேற்கொண்ட கடுமையான முயற்சிகளின் பலனாகத்தான் இன்று நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் எங்களால் மின்சாரம் வழங்க முடிந்தது. நாடு முழுவதற்கும் சார்பாக இந்த ஊழியர்களுக்கும், மக்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

     மும்பை நகரை பற்றி நாம் பேசும் போது உயர்ந்த அடுக்குமாடி கட்டிடங்கள் நம் நினைவுக்கு வருகின்றன. அதன் சாலைகளும், கட்டிடங்களும் வெளிச்சத்தில் மிளிர்கின்றன. எலிபென்டா தீவு மும்பையில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது. இதுவொரு முக்கியமான சுற்றுலா ஸ்தலமாகும். எலிபென்டா குகைகள் யுனஸ்கோவின் உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டவை. தினமும் பெரும் எண்ணிக்கையிலான இந்திய மற்றும் வெளிநாட்டு பயணிகள் அங்கு செல்கிறார்கள். மும்பைக்கு எவ்வளவு அருகில் இருந்தும், மிக முக்கியமான சுற்றுலா மையமாக இருந்தும் எலிபென்டா தீவின் கிராமங்களுக்கு சுதந்திரமடைந்து பல ஆண்டுகளாகியும் மின்சார வசதி இல்லை என்பது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இந்த குறைபாடு குறித்து எந்த செய்தித்தாளிலும் படிக்க இயலவில்லை. அல்லது இந்தப் பகுதியில் இருந்த நிலைப் பற்றிய முக்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. எனவே எவரும் இதுபற்றி கவலைப்படவில்லை.  ஆனால் இப்போது அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். நாங்கள் அப்பகுதியில் மின்சாரம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மக்கள் எங்களிடம் வந்து மின்சார விளக்கு முன்னணி பகுதியில் மட்டுமே உள்ளது. இடது பக்கம், வலதுபக்கம், பின்பக்கம் எங்கேயும் இல்லை என்றெல்லாம் கூறினார்கள். சிறிய கட்டமைப்பு வேலை செய்கிறது, அல்லது பெரிய கட்டமைப்பு வேலை செய்கிறது என்றெல்லாம் சொன்னார்கள். இப்போது அவையெல்லாம் செயல்படுகின்றன. இவையெல்லாம் முன்னதாக ஏற்பட்டதா? சுற்றுலா இடங்களில் உள்ள மக்கள், எலிபண்டா தீவு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 70 ஆண்டுகளாக இருளில் வாழ்க்கை நடத்தினார்கள் என எவரும் நம்ப முடியுமா? இவர்களுக்கு மின்சார வசதி கடலடி கேபிள்கள் அமைத்து வழங்கப்பட்டுள்ளது. .இன்று இந்த கிராமங்களில் இருள் மறைந்து விட்டது. நோக்கம் நல்லதாக இருந்தால், நோக்கம் தூய்மையானதாக இருந்தால், கொள்கைகள் தெளிவாக இருந்தால் மிக மிக கடினமான இலக்குகளையும் அடைய முடியும்.

     இப்போது வேறு பகுதிகளுக்கு செல்வோம். முதலில் நாம் ஜார்க்கண்ட் செல்வோம்.

     பாருங்கள், சகோதரர்களே, சகோதரிகளே

     நாட்டின் கிழக்கு மண்டல மேம்பாட்டுக்கு முந்தைய அரசுகள் எவ்வித சிறப்பு கவனமும் செலுத்தவில்லை. இந்த மண்டலம், மேம்பாடுகளும், பல்வேறு வசதிகளும் இல்லாமலேயே இருந்தது. இதனை நன்கு புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் இதை கவனிக்க வேண்டும். நாட்டில் மின்சார வசதி இல்லாமல் இருந்த மொத்தம் 18,000 கிராமங்களில் 14,582 அல்லது கிட்டத்தட்ட 15,000 கிராமங்கள் கிழக்கு மண்டலத்தில் உள்ளன. இவற்றில் 5,790 கிராமங்கள், சுமார் 6,000 கிராமங்கள் வடகிழக்கிலும், பூர்வாஞ்சல் பகுதியிலும் உள்ளன. கவனியுங்கள், தொலைக்காட்சியில் நீங்கள் இதை பார்க்கிறீர்கள். இந்த வரைப்படத்தைப் பாருங்கள். இதில் சிவப்பு வண்ணத்தில் இருக்கும் பகுதிகள் இருளில் மூழ்கியிருந்த பகுதிகள். ஆனால் இந்த பகுதிகளில் மக்கள் தொகை நெருக்கம் அதிகம் இல்லை. இப்பகுதிகளில் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை மிக குறைவு. எனவே முந்தைய அரசுகள் இந்தப் பகுதிகளில் எவ்வித ஆர்வமும் காட்டவில்லை. முந்தைய அரசுகள் இந்தப் பகுதிக்கு, குறைந்த மக்கள் தொகை கொண்ட இந்த கிராமங்களுக்கு மின்சார வசதி செய்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. அது அவர்களது அரசியல் ஆர்வங்களுக்கு உகந்ததாக இல்லை. நமது நாட்டின் கிழக்குப் பகுதியில் மக்களின் வாழ்க்கையில் நிறைந்த சமச்சீரான வளர்ச்சி இருந்தால்தான் இந்தியாவின் மேம்பாட்டுப் பயணம் மேலும் விரைவடையும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

     எமது அரசு ஏற்பட்ட போது இந்த அணுகுமுறையை கடைப்பிடித்து முன்னேறினோம். வடகிழக்குப் பகுதியை முக்கிய நீரோட்ட மேம்பாட்டுடன் இணைக்கும் நோக்கத்தில் முயற்சிகளை மேற்கொண்டோம். இதனை அடைவதில் முக்கிய பணியாக வடகிழக்கு மண்டல கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவது மிக முக்கியமான பணி என கருதி செயல்பட்டோம். இன்று இந்த வடகிழக்கு கிராமங்களுக்கு மின்சாரம் சென்றடைந்திருப்பதுடன் நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் அது சென்றடைந்துள்ளது என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கிராமப் பகுதிகளில் இருள் அறவே அகற்றப்பட்டு விட்டது. மின்சார வசதி பெற்ற இடங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் எல்லாம் ஏற்படும் என்பதில் உங்களை விட நன்கு உணர்ந்தவர்கள் எவரும் இல்லை.

     நாடெங்கிலும் உள்ள மக்களிடமிருந்து எனக்கு கடிதங்கள் வரும். மக்கள் தங்கள் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துக் கொள்கிறார்கள். இந்த கடிதங்கள் படிப்பதன் மூலம் நான் நிறைய கற்றுக் கொள்கிறேன்.

     கிராமப் பகுதிகளில் உள்ள சாதாரண மக்களின் வாழ்க்கையில் அவர்களது கிராமம் மின்சார வசதி பெற்றவுடன் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் தெரிந்துக் கொண்டீர்கள். கிராம மக்களின் வாழ்க்கையை இப்போது இருள் கட்டுப்படுத்துதல் இல்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை அவர்களே கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். அங்குள்ள மக்களின் வாழ்க்கையும், பணிகளும் சூரிய அஸ்தமனத்துடன் முடிந்து விடாமல் தொடர்ந்து நடக்கிறது. சூரியன் மறைந்த பிறகும் அந்தப் பகுதி குழந்தைகள் மின் விளக்கு வெளிச்சத்தில் பாடம் படிக்கிறார்கள். முன்பு வீட்டுப் பெண்கள் செய்துக் கொண்டிருந்தபடி இரவு உணவை மதியமே சமைக்க அவசியமில்லை. முன்னதாக உணவு சமைத்தவுடன் வெளிச்சம் இருக்கும் போதே சாப்பிட்டு விட வேண்டும். இந்த நடைமுறை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மக்கள் இது போன்ற கவலைகளிலிருந்து விடுபட்டுள்ளனர். கிராமச் சந்தைகள் இரவில் நெடுநேரம் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் மொபைல் தொலைபேசியை ரீசார்ஜ் செய்வதற்கு நீண்ட தூரம் நடந்து போக வேண்டிய அவசியமில்லை.  ஒரு கிராமத்தைச் சேர்ந்த நபர் மின்னேற்றம் செய்வதற்காக தனது மொபைல் தொலைபேசியை இரவு நேரத்தில் மின்சார வசதி உள்ள கிராமத்திற்கு சென்று கொடுத்து விட்டு பின்னர் அதனை வாங்குவதற்காக காலையில் செல்லும் போது அந்த தொலைபேசியை தவறாக பயன்படுத்தி எவரேனும் குற்றமிழைத்திருந்தால் அந்தக் குற்றத்திற்கு தொலைபேசியின் உரிமையாளர் பொறுப்பாகி சிறையில் கூட அடைக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எத்தகைய கஷ்டமெல்லாம் ஏற்படுகிறது பாருங்கள்! ஜம்மு-காஷ்மீர் மக்களும் நம்மிடையே உள்ளனர், அவர்கள் சொல்வதை கேட்போம். ஏனென்றால் இவர்களின் குன்று பகுதிகளில் மிகவும் கஷ்டப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் மின்சாரம் வழங்குவதற்கான கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. எனவே ஜம்மு-காஷ்மீர் சகோதர, சகோதரிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்.

     பாருங்கள், இன்று நம்முடன் இணைந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையில் மின்சாரம் கிடைத்தவுடன் எவ்வளவு பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை நன்கு அறிவார்கள். இன்று நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்துடன் நாங்கள் திருப்தியடைந்து விடுவதில்லை. ஆகையால்தான் எமது அரசு நாட்டின் ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சார வசதி அளிக்க உறுதி ஏற்றுள்ளது. பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா வலியுறுத்தியபடி மேம்பாடு கடைசி மனிதன் வரை சென்றடைய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த நோக்கத்துடன்தான் சவுபாக்யா என சுருக்கமாக அழைக்கப்படும் பிரதமரின் சகஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா அமல்படுத்தப்பட்டது. அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு என்ற திட்டம் நகரங்களிலும், கிராமங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 4 கோடி வீட்டு மின்சார இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கை அடைய மக்கள் இயக்க மாதிரியில் செயல்படுத்தி வருகிறோம். இதுவரை இத்திட்டத்தின் கீழ் 90 லட்சம் வீடுகள் மின் இணைப்புக்களை பெற்றுள்ளன. ஏழைக் குடும்பத்தினருக்கு மின் இணைப்பு முற்றிலும் இலவசம். சற்று வசதியுள்ள குடும்பங்களுக்கு ரூ.500 கட்டணமாக விதிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை மாதாந்திர மின்சார கட்டணத்துடன் சேர்த்து 10 தவணைகளில் செலுத்தும் வசதியும் உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் இலக்கை அடைய நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. எவ்வளவு குறைந்த காலத்தில் முடியுமோ அவ்வளவு விரைவாக வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க கிராமங்களில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த முகாம்களில் அனைத்து நிபந்தனைகளும் ஒரே இடத்தில் நிறைவு செய்யப்பட்டு மின்சார இணைப்பு வழங்கப்படுகிறது.

     இவற்றுடன் கூட தொலைத் தூர பகுதிகளில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் மின் இணைப்பு வழங்க மிக கடினமாக உள்ள பகுதிகளுக்கும் சூரிய சக்தி மி்ன்சார வசதியும் சூரிய சக்தி அடிப்படையில் இயங்கும் அமைப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. மின்சாரம் மக்களுக்கு ஒளியை மட்டும் வழங்குவதுடன் அவர்களிடையே நம்பிக்கையையும் உருவாக்குகிறது என நான் நம்புகிறேன். மின் சக்தி என்பது ஒரு வகையில் ஏழ்மையை எதிர்த்து போராடும் சக்தி வாய்ந்த கருவியாகி விட்டது. கிராமங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் இருளை அகற்றுவதுடன் கிராம மக்களின் முன்னேற்றப் பாதைக்கும் ஒளி விளக்காக அமைகிறது. இதற்கு ஆதாரம் உங்களது அனுபவம்தான். இந்த அனுபவத்தைத்தான் நீங்கள் எங்களுடன் பகிர்ந்துக் கொண்டிருக்கிறீர்கள். நாடு முழுமையும் நீங்கள் சொன்னவற்றை கேட்டுள்ளது. இன்னும் அநேக கிராமங்கள் உள்ளன. ஆனால் நேரம்தான் போதுமான அளவு இல்லை. நாடாளுமன்ற அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் நான் அங்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. எனினும் சில கிராமங்களுக்கு நான் வாழ்த்துச் சொல்லியாக வேண்டும். வஸ்தார், அலிராஜ்பூர், சேஹூர், நவ்பாடா, சீதாபூர் ஆகிய அனைத்து கிராமங்களுக்கும் எனது வந்தனங்கள். சில சமயம் நீங்கள் இதனை டிவியில் பார்த்திருக்கலாம். அல்லது செய்தித்தாள்களில் வாசித்திருக்கலாம். நமது எதிரிகளின் பேச்சுக்களை கேட்டிருக்கலாம். நமது எதிரிகளை புகழ்ந்துரைக்கும் பொய்யர்களின் பேச்சுக்களையும் கேட்டிருக்கலாம். இன்னும் இத்தனை வீடுகளில் மின்சாரம் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறெல்லாம் அவர்கள் கூறுவது நம்மைப் பற்றிய அல்லது நமது அரசைப் பற்றிய விமர்சனமாக இல்லாமல் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். கடந்த 70 ஆண்டுகளாக அரசை நடத்திக் கொண்டிருந்தவர்கள் பற்றிய விமர்சனங்களாக அவை இருக்கட்டும். இது நமது குறைக்காணல் அல்ல. மிகப் பல பணிகளை விட்டுச் சென்றுள்ள மக்களின் குறைகாணல் ஆகும். நாம் செய்ததெல்லாம் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை முடித்து வைப்பதே ஆகும்.

     மின்சாரம் இல்லா விட்டால், 4 கோடி வீடுகளில் மின் இணைப்பு இல்லையென்றால், முன்னதாக மின்சாரம் இருந்ததாகவும் தற்போது மின்சார சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் மோடி அரசு ஏற்பட்ட பிறகு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் மோடி அனைத்து மின்சார கம்பங்களையும், ஒயர்களையும் எடுத்துச் சென்று விட்டார் என்றும் பொருள் ஆகாது. முன்னதாக ஏதுமில்லை. அவற்றையெல்லாம் நிறுவுவதற்கு நாங்கள் முயற்சி எடுத்துள்ளோம். எனவே தான் எம்மை எதிர்க்கும் அந்த மக்கள் ஆர்வத்துடன் எங்களை திட்டி வருகிறார்கள். இங்கே மின்சாரம் இல்லை, அந்த வீட்டில் மின்சாரம் இல்லை, மின் கம்பம் நடப்படவில்லை என்றெல்லாம் குறை கூறுகிறார்கள். ஆனால் முன்னதாக எவரும் எதையும் நிறுவவில்லை. நாங்கள் தான் அதனை நிறுவ முயற்சி எடுத்துள்ளோம். உங்களது ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து கிடைத்தால் உங்களுக்காக கடுமையாக உழைத்த அந்த அனைத்து கீழ்நிலை பணியாளர்களையும் நாங்கள் பாராட்ட முடியும். நீங்கள் மோடியை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டலாம்.  ஆனால் கிராமங்களுக்கு தங்கள் கடின உழைப்பு மூலம் ஒளியை கொண்டு வந்த இந்த கீழ் நிலை பணியாளர்களுக்கு நாம் உரிய மரியாதை செலுத்த வேண்டும். நாம் அவர்களை பாராட்ட வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஊக்கம் பெறுவார்கள். நாட்டில் எந்தவித பிரச்சனை இருந்தாலும் அவை அனைத்தையும், குடும்ப நிலையில்,சமுதாய நிலையில் நாம் அவற்றை தீர்த்து வைக்க முடியும். இந்தப் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக கலைந்து வெளியே எறிய முடியும். இறுதியாக நம் அனைவருக்கும் உள்ள பணி இதுதான். நம்முன் உள்ள பிரச்சனைகளை எண்ணிக் கணக்கிடுவது நமது வேலை அல்ல. இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வழிவகைகளை காண்பதே நமது வேலை.

     இந்த முயற்சியில் நமக்கு போதுமான வலுவை கடவுள் தருவார் என்பதில் நான் உறுதியுடன் உள்ளேன். நமது நோக்கம் தெளிவாக உள்ளது. உங்கள் அனைவருக்குமாக பேரன்பு எமது உள்ளத்தில் உள்ளது. நாங்கள் எவ்வளவு செய்தாலும் அதை இது போதும் என்று நினைக்க மாட்டோம். நாங்கள் உங்களுக்காக பணியாற்றுவோம். இறுதியாக உங்களுக்கு ஒரு வீடியோ படத்தை காட்ட விரும்புகிறேன். இந்த வீடியோ படத்தை நீங்கள் அனைவரும் பாருங்கள். அதனையடுத்து நான் எனது உரையை நிறைவு செய்வேன்.



(Release ID: 1540487) Visitor Counter : 1580


Read this release in: English , Marathi