பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

2018-19 சர்க்கரை பருவத்தில் சர்க்கரை ஆலைகள் நியாயமான, லாபகரமான விலையை நிர்ணயிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 18 JUL 2018 5:46PM by PIB Chennai

2018-19 சர்க்கரை பருவத்தில் கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.275 என்ற நியாயமான, லாபகரமான விலை நிர்ணயம் செய்வதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 10 சதவீத அடிப்படை உற்பத்தியில் உள்ள கரும்புக்கு இந்த விலை பொருந்தும். 10 சதவீதத்திற்கும் கூடுதலாக ஒவ்வொரு 0.1 சதவீத உயர்வுக்கும் குவிண்டாலுக்கு ரூ.2.75 உயர்த்தி வழங்கவும் இந்த முடிவு வகை செய்கிறது.  கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில் கரும்பு உற்பத்திச் செலவினம் இந்த கரும்பு பருவத்தில் குவிண்டாலுக்கு ரூ.155 என எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

     இந்த நிர்ணயிக்கப்பட்ட விலை உற்பத்திச் செலவினத்தை விட 74.42 சதவீதம் கூடுதலாகும். இதனையடுத்து விவசாயிகளுக்கு தங்கள் உற்பத்திச் செலவினத்தை விட 50 சதவீதம் கூடுதல் விலை கிடைக்க வகை செய்யப்படும் என்ற அரசின் உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது. 2018-19 கரும்பு பருவ கரும்பு உற்பத்தி எதிர்பார்ப்பு அளவின் அடிப்படையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை ரூ.83,000 கோடிக்கும் கூடுதலாக இருக்கும். விவசாயிகளுக்கு நலம் பயக்கும் நடவடிக்கைகள் மூலம் அரசு கரும்பு விவசாயிகள் தங்களுக்கு உரிய தொகையை உரிய காலத்தில் கிடைப்பதை உறுதி செய்துள்ளது.

     கரும்பிலிருந்து சர்க்கரை கிடைக்கும் அளவு 9.5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் போது கரும்பு விலையில் குறைவு ஏதும் இருக்கக் கூடாது என்றும் அரசு முடிவெடுத்துள்ளது.  விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. இத்தகைய விவசாயிகள் குவிண்டாலுக்கு ரூ.261.25 பெறுவார்கள்.

     அமைச்சரவை நிர்ணயித்த இந்த விலை சர்க்கரை ஆலைகள் 2018-19 சர்க்கரை பருவத்தில் (2018 அக்டோபர் 1 முதல்) கரும்பு விவசாயிகளிடமிருந்து பெறும் கரும்புக்கு வழங்க வேண்டிய விலையாகும்.

     சர்க்கரை துறை 5 கோடிக்கும் அதிகமான கரும்பு விவசாயிகளின் வாழ்க்கை மீது தாக்கம் ஏற்படுத்தக் கூடிய முக்கியமான துறையாகும். மேலும் சர்க்கரை தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 5 லட்சம் பணியாளர்கள் மற்றும் இது சார்ந்த துணை தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கையிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய துறையாகும்.

 



(Release ID: 1539477) Visitor Counter : 271


Read this release in: Marathi , Bengali , English