உள்துறை அமைச்சகம்

மாணவர் காவல் படைத் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்

காவல் துறைக்கும், சமுதாயத்திற்கும் இடையே இத்திட்டம் பாலமாக அமையும்

Posted On: 20 JUL 2018 3:51PM by PIB Chennai

மாணவர் காவல் படைத் திட்டம் நாளை (21.07.2018) நாடெங்கும் தொடங்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

காவல் துறைக்கும், சமுதாயத்திற்கும் இடையே இத்திட்டம் பாலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி பள்ளிகளிலும், பள்ளிக்கு வெளியேயும் வகுப்புகள் நடத்தி அதன் மூலம் நன்னெறிகள் புகட்டப்படும். இத்திட்டம் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய கவனம் செலுத்துகிறது. அதே சமயம் இந்த மாணவர்களின் பணிச்சுமையை எவ்வகையிலும் அதிகரிக்காதவாறு பார்த்துக் கொள்ளப்படும். இந்தப் பாடத் திட்டத்திற்கு எந்தவித பாடப் புத்தகமும் இல்லை. தேர்வுகளும் இருக்காது. மாதத்திற்கு ஒரு வகுப்பு நடத்தப்படும். இந்தத் திட்டத்தில் இரண்டு தலைப்புகள் எடுத்துக் கொள்ளப்படும்.

  1. குற்றத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு
  2. நன்னெறிகளும், அறநெறிகளும்

முதலாவது தலைப்பின் கீழ் கண்டவை போதிக்கப்படும்: சமுதாய காவல், சாலைப் பாதுகாப்பு, சமூக கேடுகளுக்கு எதிரான போர், மகளிர், குழந்தைகள் பாதுகாப்பு, ஊழலுக்கு எதிரான போர். பேரிடர் மேலாண்மை. 2-வது தலைப்பின் கீழ், நன்னெறிகள் மற்றும் அறநெறிகள், முதியோருக்கு மரியாதை, பரிவு மற்றும் இரக்கம், சகிப்புத்தன்மை, பொறுமை, மனப்பான்மை, குழு உணர்வு, ஒழுக்கம் ஆகியன போதிக்கப்படும்.

இந்தத் திட்டத்திற்கென காவல் ஆராய்ச்சி மேம்பாடு அமைப்பு கையேடு ஒன்றை தயாரித்துள்ளது. என்.சி.இ.ஆர்.டி. ஆதரவுடன் இந்த கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் கள செயல் விளக்கங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மகளிர் காவல் நிலையங்கள், குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள், போக்குவரத்துக் காவல் நிலையம், தீயணைப்பு நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் நேரடி அனுபவ கற்றல் முறை பயன்படுத்தப்படும்.

மாநில அளவில் இத்திட்டத்தை நெறிபடுத்த குழு ஒன்று அமைக்கப்படும். உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் அமையும் இக்குழுவில் கல்வித்துறை முதன்மை செயலாளர், காவல் துறை தலைமை இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். மாவட்ட நிலையிலும் இது போன்ற குழு ஒன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்படும். முதன்மை கல்வி அலுவலர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் இவற்றில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

திட்டத்தை செயல்படுத்த மாநிலங்களுக்கு ரூ.67 கோடி வழங்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் திட்டம் அரசுப் பள்ளிகளில் அமல்படுத்தப்படும்.

 



(Release ID: 1539470) Visitor Counter : 124


Read this release in: English , Hindi , Marathi , Bengali