பிரதமர் அலுவலகம்

இந்தியத் தொல்லியல் துறை தலைமையகம்: புது தில்லியில் திறந்து வைத்தார் பிரதமர்

Posted On: 12 JUL 2018 1:03PM by PIB Chennai

புது தில்லி மோடி திலக் மார்கில் புதிதாகக் கட்டப்பட்ட இந்தியத் தொல்லியல் துறையின் தலைமையகமான தரோஹர் பவன் அலுவலகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியத் தொல்லியல் துறை கடந்த 150 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க பணியை ஆற்றி வந்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.

நமது வரலாறு குறித்தும், வளமான தொன்மையான பாரம்பரியம் குறித்தும் நாம் பெருமைப்பட வேண்டியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று உறுதிபடக் கூறினார்.

நம் மக்கள் தங்களது ஊர், நகரம், மண்டலம் குறித்த வரலாற்றையும் தொன்மையையும் அறிந்திருக்க வேண்டும். உள்ளூர் தொல்லியல் மூலம் கிடைக்க வேண்டிய பாடங்கள் நமது பள்ளிக்கூடப் பாடத்திட்டங்களில் இடம்பெறச் செய்யலாம்என்று கேட்டுக் கொண்டார். நன்கு பயிற்சி பெற்ற சுற்றுலா வழிகாட்டிகள் தங்களது ஊர்ப் பகுதிகளின் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

நமது தொல்லியல் ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாகப் பாடுபட்டு  மிகுந்த சிரமங்களுக்கு இடையில் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு தொல்லியல் பொருட்களும் அதற்கென தனி வரலாற்றைக் கொண்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

 

சில ஆண்டுகளுக்கு முன் தானும்  பிரான்ஸ் அதிபரும் சண்டீகருக்குப் பயணம் செய்து, அங்கே இரு நாட்டு வல்லுநர்களையும் கொண்ட குழு மேற்கொண்ட அகழ்வாய்வுப் பணிகளை நேரடியாகக் கண்டறிந்ததை நினைவுகூர்ந்தார்.

 

இந்தியா தனது பாரம்பரியத்தைப்  பெருமையுடனும் நம்பிக்கையுடனும் வெளிப்படுத்திப் போற்ற வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

 

இந்தியத் தொல்லியல் துறைத் தலைமையகக் கட்டடத்தில் மின்சக்தியைச் சேமிக்கும் விளக்குகள், மழைநீர் சேகரிப்புத் திட்டம் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒன்றரை லட்சம் புத்தகங்கள், இதழ்களைக் கொண்ட மத்திய தொல்லியல் நூலகமும் இடம்பெற்றுள்ளது.

 

****



(Release ID: 1538456) Visitor Counter : 248