பிரதமர் அலுவலகம்

ஸ்ரீநகரில் கிஷண்கங்கா நீர்மின் திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 19 MAY 2018 6:26PM by PIB Chennai

ஜம்மு & கஷ்மீர் ஆளுநர் ஸ்ரீமான்  என்.என். வோரா அவர்களே, முதலமைச்சர்  திருமதி. மெஹ்பூபா முப்தி அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு. நிதின் கட்கரி அவர்களே, டாக்டர். ஜிதேந்திர சிங் அவர்களே, திரு. ஆர்.கே. சிங் அவர்களே, ஜம்மு & கஷ்மீர் மாநில துணை முதலமைச்சர் திரு. கவீந்திர குப்தா அவர்களே, மின்துறை அமைச்சர் திரு. சுனில்குமார் ஷர்மா அவர்களே, சட்டப்பேரவை துணைத் தலைவர் திரு. நசீர் அகமது கான் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினரும், நாட்டின் மூத்த தலைவருமான  மதிப்பிற்குரிய டாக்டர். ஃபரூக் அப்துல்லா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. முசாஃபர் உசேன் பேக் அவர்களே மற்றும் இங்கு குழுமியுள்ள விருந்தினர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே.

   ஜம்மு கஷ்மீருக்கு வந்து மீண்டும் உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நீங்கள் காட்டும் அன்பும், பாசமும், என்னை இங்கு மீண்டும் மீண்டும் வரவழைக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில், ஒரு ஆண்டுகூட நான், இங்கு வராமல் இருந்ததில்லை. ஸ்ரீநகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு பிறகு, வந்த தீபாவளியைகூட நான் ஸ்ரீநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன்தான் கொண்டாடினேன். மேலும், எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிப்பாய்களுடனும் தீபாவளி கொண்டாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்றுகூட, புனித ரம்ஜான் மாதத்தில் உங்களோடுதான் இருக்கிறேன். இந்த மாதம், நபிகள் நாயகத்தையும், அவரது போதனைகளையும், நினைவுகூறும் மாதமாகும். நபிகள் நாயகம், அவரது வாழ்க்கையில் பின்பற்றிய சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவையே இந்த நாட்டையும், உலகையும் உண்மையாக முன்னெடுத்துச் செல்லும்.

  ரம்ஜான் மாதத்தில் பெரிய கனவு ஒன்று நிறைவேற்றப்பட்ட மனநிறைவுடன் நாம் இங்கு குழுமியிருப்பதும் மகிழ்ச்சிக்குரியதாகும். இன்று, கிஷண்கங்கா நீர்மின் திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நல்வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. பல்வேறு தடைகளைத் தாண்டி, நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஜம்மு & கஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிப் பாதையில் புதிய பரிமாணமாக இணையவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். இந்தத் திட்டம், இந்த மாநிலத்திற்கு மின்சாரத்தை இலவசமாக அளிப்பதோடு மட்டுமின்றி கட்டணமில்லா மின்சாரத்தையும் வழங்கவுள்ளது. தற்போது ஜம்மு & கஷ்மீர் மாநிலத்தின் மின் தேவையில் பெரும் பகுதி, நாட்டின்  பிற பகுதிகளிலிருந்து பெறப்படுகிறது. 330 மெகாவாட் திறன்கொண்ட இந்த மின் திட்டத்தை தொடங்கி இருப்பதன் மூலம், மாநிலத்தின் மின்சாரப் பற்றாக்குறை  பெருமளவிற்கு ஈடுசெய்யப்படும்.

 சகோதர, சகோதரிகளே,

    இந்த திட்டம் நமது பொறியியல் திறமைக்கு மிகச்சிறந்த உதாரணமாகும். இந்தத் திட்டத்தை நிறைவேற்றி முடிக்க ஏராளமா‘ன மக்கள் கடினமாக உழைத்துள்ளனர். மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைப் பாதை மூலம், கிஷண்கங்கா ஆற்றுத் தண்ணீர்,  பந்திபோராவில் உள்ள போனார்நல்லா பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த திட்டத்தில் பணியாற்றிய  ஒவ்வொரு தொழிலாளியும், ஒவ்வொரு பொறியாளரும், ஒவ்வொரு பணியாளரும், மிகுந்த போற்றுதலுக்குரியவர்கள் ஆவர். உங்களது மன உறுதி காரணமாகத்தான், எங்களால் இந்த திட்டத்தை நிறைவேற்றி முடிக்க முடிந்துள்ளது.

  இன்று, இந்த மேடையிலேயே ஸ்ரீநகரில் அமைக்கப்படவுள்ள  சுற்றுச் சாலைக்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பும் எனக்கு கிடைத்துள்ளது. 42 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படவுள்ள இந்த சாலைக்காக 500 கோடி ரூபாய்க்குமேல் செலவிடப்படவுள்ளது. இந்தச் சுற்றுச்சாலை ஸ்ரீநகர் மாநகரின் உட்பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண பெரிதும் உதவிகரமாக அமைவதுடன், உங்களது வாழ்க்கையையும் எளிதாக்கும்.

  ஜம்மு & கஷ்மீர் மாநில மக்களின் வாழ்க்கையில், மாற்றத்தை ஏற்படுத்த, மாநிலத்தில் உள்ள கஷ்மீர், ஜம்மு & லடாக் ஆகிய மூன்று மண்டலங்களிலும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். இதை மனதில் கொண்டு, ரூ.80,000 கோடி மதிப்பிலான தொகுப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மிகவும் குறுகிய காலத்தில் ரூ.63,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, சுமார் ரூ.20,000 கோடி அளவிலான தொகை ஏற்கெனவே செலவிடப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். இந்த நிதியின் மூலம், ஜம்மு & கஷ்மீரில் ஐஐடி மற்றும் ஐஐஎம் கட்டுமானப் பணிகளும் ஆரம்ப சுகாதார மையங்களை மாவட்ட மருத்துவமனைகளாக நவீனப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  புதிய தேசிய நெடுஞ்சாலை, அனைத்து பருவங்களிலும் பயணிக்கக்கூடிய சாலை, புதிய குகைப் பாதைகள், மின்சார பகிர்மானம் மற்றும் வினியோகப் பாதைகள், நதிகள் மற்றும் ஏரிகள் பராமரிப்பு, விவசாயிகளுக்கான நலத் திட்டங்கள், குளிர்பதன சேமிப்பு வசதிகள், சேமிப்பு கிடங்குகள் மற்றும் இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய பல்வேறு முன் முயற்சிகளும், இதுபோன்ற வேறு புதிய முன் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்துப் பணிகளும் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு, மக்களின் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, 21ஆம் நூற்றாண்டை ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்குரியதாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நண்பர்களே,

  நான் மலைப் பகுதிகளுக்குச் செல்லும்போதெல்லாம், ஒரு பழமொழியை நினைவுகூறுவது வழக்கம். மலைப்பகுதியின் இளைஞர்களும், தண்ணீரும் அந்த பகுதிக்கு ஒருபோதும் பயன்பட்டதில்லை என்று முன்பு கூறுவது வழக்கம். நவீன தொழில்நுட்பம்  பரவாத காலத்தில் இந்த பழமொழி கூறப்பட்டதுடன், மனிதர்கள், இயற்கையை எதிர்கொள்ளும் சக்திவாய்ந்தவர்கள் அல்ல என்றும் கூறப்பட்டது. ஆனால், தற்போது காலம் மாறிவிட்டது. உங்களை போன்ற மக்களின் உதவியுடன், இதுபோன்ற பழமொழியை மாற்றியமைக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் தண்ணீரும், இளைஞர்களும், இந்த நிலத்திற்கு பயனளிக்கப் போகின்றனர்.

  ஜம்மு & கஷ்மீரில் ஓடும் பல்வேறு ஆறுகள் மூலம் நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. நாட்டின் ஒரு பகுதியான இங்கு, மாநிலத்தின் தேவைக்கு மட்டுமின்றி, ஒட்டு மொத்த நாட்டிற்கும் அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் வாய்ப்புள்ளது. இதை மனதில் கொண்டு கடந்த 4 ஆண்டுகளில் நாங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கிஷ்த்துவார் பகுதியில் ரூ.8,000 கோடி மதிப்பீட்டில் ஒரு நீர்மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

  ஜம்மு & கஷ்மீரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, நவீன மின்தொகுப்பு மற்றும் நவின மீட்டர்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  தெருவிளக்குகளும், நவீன மயமாக்கப்பட்டுள்ளன. ஜம்மு & கஷ்மீர் மாநிலத்தின் மின்சார வினியோக முறையை மேம்படுத்த ஏதுவாக, மாநிலத்தில் உள்ள கிராமங்கள் முதல் நகரங்கள் வரை, மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ.4,000 கோடிக்குமேல் செலவிடப்பட்டுள்ளது.

நண்பர்களே,

  கிராமங்களுக்கும், வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதும் மட்டும் நமது நோக்கமல்ல, ஏற்கெனவே மின்இணைப்பு வழங்கப்பட்ட வீடுகளின் மின்கட்டணச் சுமையை குறைக்கவும், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உஜாலா திட்டத்தின்கீழ், ஜம்மு & கஷ்மீரில் 78 லட்சத்திற்கும் மேற்பட்ட எல்.இ.டி பல்புகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இம்மாநில மக்களின் மின்கட்டண செலவில் ஆண்டுக்கு ரூ.400 கோடிக்கும்மேல், சேமிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு வழங்குவதில் அரசு முனைப்புடன் உள்ளது. இதுவரை மின்இணைப்பு இல்லாத வீடுகளுக்கு,  சவ்பாக்யா திட்டத்தின்கீழ், மின்இணைப்பு வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நண்பர்களே,

  ஜம்மு & கஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய துறை ஒன்று உள்ளது என்றால், அது சுற்றுலாத்துறையாகதான் இருக்கமுடியும். குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாக சுற்றுலா இருப்பதை நாம், பல ஆண்டுகளாக உணர்ந்திருப்பதுடன், ஜம்மு &  கஷ்மீரின் எதிர்கால வளர்ச்சியையும் இத்துறையே தீர்மானிக்கும். எனினும், இந்த துறை நீண்ட காலத்திற்கு பழங்கால முறைகளையே பின்பற்ற முடியாது. தற்காலச் சுற்றுலா பயணிகள்  அதிக வசதிகளை விரும்புகின்றனர். அவர்கள், ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல நீண்ட நேரம் காத்திருப்பதை விரும்பாததுடன்,  குறுகிய பாதைகளில் சிக்கித் தவிப்பதையும் விரும்புவதில்லை. தடையற்ற மின்சாரம், தூய்மை மற்றும் நல்ல காற்று  போன்றவற்றையே விரும்புகின்றனர்.

  சுற்றுலாவுக்குத் தேவையான நவீன சுற்றுச்சூழல் போன்றவற்றை மனதிற்கொண்டே எங்களது அரசு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இதுபோன்ற திட்டங்கள்  காரணமாக ஜம்மு & கஷ்மீருக்கு மேலும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அது மிட்டுமின்றி, ஜம்மு & கஷ்மீர் மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகளை அளிப்பதுடன், அதேவிகிதத்தில், உங்களது வருமானமும் அதிகரிக்கும்.

நண்பர்களே,

  உலகில் உள்ள  பல்வேறு பகுதிகளில், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும், சுற்றுலாத்துறை சார்ந்த பொருளாதாரமாகவே உள்ளது. இந்தியாவில் ஜம்மு &  கஷ்மீருக்கு மட்டும் அந்த வலிமை உள்ளது. அத்துடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதிலும், இம்மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. சுற்றுலாத்துறையை மட்டும், குறிப்பிடுவதென்றால், 12 வளர்ச்சி அமைப்புகளை மேம்படுத்தும் பணிகளும், 3 சுற்றுலா வழித்தடங்கள் மற்றும் 50 சுற்றுலாக் கிராமங்களில் ரூ.2,000 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், நான் முன்பே கூறியதுபோல, சுற்றுலாத்துறையை மட்டும் வலுப்படுத்துவதோடு அல்லாமல், சுற்றுலாவுக்கான ஒட்டுமொத்த சூழலையும் மேம்படுத்துவது மிகவும் அவசியம்.

  சுற்றுச்சூழலுக்கு இணைப்பு வசதிகளை ஏற்படுத்துவது முக்கியமானதாகும். அதனால்தான், ஜம்மு & கஷ்மீரில் இணைப்பு வசதிகளை ஏற்படுத்த பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதியில் பாதி அளவிற்கு, சாலை வசதிகளுக்குதான் பயன்படுத்தப்படுகிறது. ஜம்மு & கஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

  நான் இங்கு வருவதற்கு முன்பாக, நாட்டின் நீண்டதூர குகைப் பாதையான ஜோஷிலா கணவாயை திறந்து வைத்தேன். இந்த குகை பாதை ஜம்மு & கஷ்மீரின் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும். இணைப்பு வசதிகள் மேம்பட்டால், கல்வி நிலையங்களுக்கு செல்வது, உறவினர்களை காணவோ அல்லது சிகிச்சைக்காகவோ, வியாபாரத்திற்காகவே, பொருட்களை  வாங்கவோ, விற்கவோ செல்வதில் ஏற்படும்  பல்வேறு வசதிக் குறைபாடுகளிலிருந்து விடுபட முடியும் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். இப்பகுதி விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் ஆப்பிள் மற்றும் காய்கறிகளை பிற இடங்களுக்க அனுப்புவதில் ஏற்படும் கால தாமதத்தால், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை பெருமளவிற்கு நம்மால் குறைக்கமுடியும்.

   ஸ்ரீநகரில் அமைக்கப்படவுள்ள சுற்றுச்சாலையாக இருந்தாலும் சரி, அல்லது ஸ்ரீநகர் – சோபியான் – காஸிகுண்ட் தேசிய நெடுஞ்சாலை அல்லது செங்காணி – சுத்மகாதேவ்-கோஹா சாலையாக இருந்தாலும் சரி, இந்த திட்டங்கள் நிறைவடையும்போது, உங்களது நேரம் குறைவதுடன், உங்களது ஆதாரங்களுக்கு ஏற்படும் இழப்பும் குறையும். பனிப்பொழிவு காலங்களில் செல்ல முடியாத பகுதிகளும், இணைக்கப்படுவதுடன், இப்பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் சேவையும் வழங்கப்படுகிறது. ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவை நவீன நகரங்களாக மேம்படுத்தும் பணியிலும் அரசு ஈடுபட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

  இந்த நகரங்களில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வசதிகளை மேம்படுத்த ரூ.550 கோடிக்குமேல், செலவிடப்படவுள்ளது. நவீன வசதிகள், நவீன சாலை வசதிகள் கிடைக்கும்போது, அவை உங்களது வாழ்க்கையை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி ஜம்மு&கஷ்மீரின் எழிலுக்கும் மதிப்பை அதிகரிக்கும்.

சகோதர, சகோதரிகளே,

     கிராமங்களையும் நகரங்களையும் பொலிவுறு இடங்களாக மாற்ற வேண்டும் என்று எண்ணும்போது, தூய்மையே அதில் மிகவும் முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. இந்த இயக்கத்தை ஜம்மு-காஷ்மீர் மக்கள் தங்களால் இயன்றவரை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

     அண்மையில் சமூக ஊடகத்தில், காஷ்மீர் சிறுமி ஒருவரின் வீடியோ காட்சியைப் பார்த்தேன். “ஜன்னத்” என்னும் ஐந்து வயது சிறுமி தால் ஏரியை தூய்மைப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபடும் காட்சி அதில் இடம்பெற்றிருந்தது. இதுபோன்ற புனிதமான, நேர்மையான வகையில், தூய்மை இயக்கத்தில் உறுப்பினர்கள் செயல்பட்டால் நான் மேலும் மகிழ்ச்சி அடைவேன். நண்பர்களே, மக்கள் பல்வேறு மட்டங்களில், இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சகோதர, சகோதரிகளே,

     மாநிலத்தில் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட அழிவானது உங்களது வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே தகர்த்து மாற்றி விட்டது குறித்து நான் அறிவேன். பல்வேறு இடங்களில் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஈடுகட்ட நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இந்த நோக்கத்திற்காக மாநில அரசுக்கு தொடர்ந்து உதவி வருகிறோம்.

 

நண்பர்களே,

மற்றொரு முக்கியமான விஷயத்தில் பி.டி.பி-பி.ஜே.பி. கூட்டணி அரசும், மத்திய அரசும், கூட்டாக பாடுபட்டு வருகின்றன. அது இடம்பெயர்ந்த மக்களைப் பற்றியதாகும். எல்லையில் நிலவிய மோசமான சூழல் காரணமாக இங்கு வந்தவர்களுக்கும், உள்ளுர் பிரச்சினைகளால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியவர்களுக்கும், பல்வேறு இடங்களில் மறுகுடியமர்த்தல் வசதிகளைச் செய்து கொடுக்க சுமார் ரூ.3,500 கோடி செலவிடப்பட்டு வருகிறது.

நண்பர்களே,

     ஜம்மு-காஷ்மீர் மாநில இளைஞர்கள், பிற மாநில இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றனர். குடிமைப் பணிகள் பட்டியலில் இந்த மாநில இளைஞர்களின் செயல்களை நான் பார்த்தபோதும், அவர்களை நேரில் சந்தித்தபோதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். பந்திப்போராவைச் சேர்ந்த பெண் ஒருவர் குத்துச்சண்டையில் வென்று  நாட்டுக்கு பெருமை சேர்த்தது எனது நினைவுக்கு வருகிறது. அவரை நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது. தாஜாமுல்  போன்றவர்களின் திறமைகள் வீணாவதை நாடு ஒருபோதும் அனுமதிக்காது. மாநிலத்தைச் சேர்ந்தவர்களின்  விளையாட்டு திறமைகளைச் செழுமைப்படுத்த மாநில அரசுடன் சேர்ந்து, மத்திய அரசு, செயலாற்றி வருவதற்கு இதுதான் காரணம். மாநிலத்தில் விளையாட்டு சார்ந்த உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்ற எழுச்சி உணர்வுடன் ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.

சகோதர, சகோதரிகளே,

     ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கல்வியும், வேலை வாய்ப்புக்களும் வழங்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசின் ஒத்துழைப்புடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஹிமாயத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமரின் சிறப்பு உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலனடைந்து உள்ளனர். நாட்டின் உயரிய, தரம் வாய்ந்த கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், உயர்கல்வியை முடிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் படிப்பை பாதியில் கைவிட்ட சுமார் ஆறாயிரம் மாணவர்களுக்கு வேலைகள் வழங்கப்பட்டு உள்ளன.

     மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு புதிய  வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மாநில மக்கள் மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அவர்கள் உதவ முடியும். ஜம்மு-காஷ்மீர் காவல்துறையை வலுப்படுத்த இந்திய ஆயுதக் காவல்படையின் ஐந்து பட்டாலியன்கள் அனுப்பப்பட்டு உள்ளன. பாதுகாப்புத்துறையில் பணிவழங்கும் நடைமுறைகள் கடைசி கட்டத்தில் உள்ளதாகவும், சுமார் ஐந்தாயிரம் இளைஞர்கள் இந்தத் துறையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது.

சகோதர, சகோதரிகளே,

     நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு எங்களது அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. நமது பாதுகாப்பு படையினர் தங்கள் கடமையை நிறைவேற்ற உறுதிப்பாட்டுடன் உள்ளனர். மிகக் கடினமான சூழ்நிலையில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும், மக்களும், துணை ராணுவப்படையினரும், ராணுவ வீரர்களும் மிகச்சிறந்தப் பணியைச் செய்து வருகின்றனர். இதற்கான பெருமை உங்களது ஒத்துழைப்பையும், ஒருங்கிணைந்தச் செயல்பாட்டையுமே சாரும். வெள்ளமாக இருந்தாலும், புயலாக இருந்தாலும், தீ விபத்து போன்ற  இடர்களாக இருந்தாலும், அவற்றில் சிக்கிக் கொண்டு திணறிய ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்புப் படையினர் செய்துள்ள உதவிகள் மகத்தானவையாகும். ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காகப் பாதுகாப்புப் படையினர் சந்தித்தச் சோதனைகள் நாட்டு மக்களின் மனதில், அழியாத வண்ணம் இடம்பிடித்துள்ளன.

சகோதர, சகோதரிகளே,

     இன்று புதிய இந்தியாவை உருவாக்கும் பணிக்காக நாட்டின் 125 கோடி மக்களும் உறுதி எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த புதிய இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மிக அதிகமாக பிரகாசிக்கும் நட்சத்திரமாக ஒளிரமுடியும். ஜம்மு-காஷ்மீரில் நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்கள், சிறந்த மருத்துவ மனைகள், சிறந்த சாலைகள், அதிநவீன விமான நிலையம் ஆகியவற்றை மறுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. அதே போல, மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், சிறந்த மருத்துவர்களாகவோ, சிறந்த பொறியாளர்களாகவோ, பேராசிரியர்களாகவோ அல்லது அதிகாரிகளாகவோ ஆவதையும் மறுக்க காரணம் இல்லை.

நண்பர்களே,

ஜம்மு-காஷமீரின் வளர்ச்சியையும் மக்களின் மகிழ்ச்சியையும் விரும்பாத அநேக சக்திகள் உள்ளன. அந்த அந்நியச் சக்திகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க நாம் முன்னேறிச் செல்வது அவசியமாகும்.

     அந்நியர்களின் பிரச்சாரத்தில் மயங்கி, தங்களது புண்ணிய பூமியைச் சேர்ந்தவர்களேயே தாக்கும் இளைஞர்களை தேசிய நீரோட்டத்திற்கு திரும்ப அழைத்துச் செல்லும் பணியை மத்தியில் இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும், மெஹபூபா முஃப்தி தலைமையில் இயங்கும் பி.டி.பி- பி.ஜே.பி. கூட்டணி அரசும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

நண்பர்களே,

     அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் எந்த மாற்றும் இருக்க முடியாது. வழி தவறிச் சென்ற இளைஞர்கள் தேசிய நீரோட்டத்திற்கு திரும்ப வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன்.  தேசியம் நீரோட்டம் என்பது அவர்களது குடும்பமும், பெற்றோரும்தான். ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியில் தீவிரப் பங்காற்றுவதே இந்தத் தேசிய நீரோட்டமாகும். ஜம்மு-காஷ்மீரின் பெருமையை உயர்த்தும் பொறுப்பு இந்த இளம் தலைமுறையினருக்கு உள்ளது. இதற்கு ஏராளமான வழிகளும், வளங்களும், திறமைகளும் உள்ளன. நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், ஜம்மு-காஷ்மீர் பின்தங்கியிருப்பதற்கு எந்தக் காரணமும் இருப்பதாக சொல்ல முடியாது. வழி தவறிச் சென்ற இளைஞர்கள், எடுக்கும் ஒவ்வொரு கல்லும், ஆயுதமும், தங்களது சொந்த மாநிலமான ஜம்மு-காஷ்மீரை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறது.

     இந்த நிலையற்றச் சூழலில் இருந்து மாநிலம் விடுபட்டு வெளியேற வேண்டும். தங்களது எதிர்காலத்தையும், வருங்கால சந்ததியினரின் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்கள் இந்திய மேம்பாடு என்னும் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் இந்திய அன்னையின் குழந்தைகளாக வாழ்ந்து வருகிறோம். சகோதரர்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த உலகின் எந்த சக்தியாலும் இயலாது. பல தசாப்தங்களாக இதற்காக முயற்சி மேற்கொண்டவர்கள் தற்போது பிளவுக்கு இலக்காகி நிற்கிறார்கள்.

சகோதர, சகோதரிகளே,

     கடந்த ஆண்டு தீபாவளியை கியூரசில் வீரர்களுடன் நான் கொண்டாடியதையும், இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையையொட்டி இருந்ததையும் நான் மீண்டும் தெரிவிக்க விரும்புகிறேன். காஷ்மீரின் இந்த உணர்வுதான், இந்த மண்ணுக்கும் உலகிற்கும் கிடைத்த கொடையாகும். இங்கு அனைவரும் வரவேற்கப்படுகின்றனர், மதிக்கப்படுகின்றனர். இந்தப் பூமியின் இத்தகையப் பாரம்பரியம் உலகின் எந்தப் பகுதியிலும் காண முடியாததாகும். பல்வேறு இனம் மற்றும் பிரிவினரின் பாரம்பரியங்களால் இந்த மண் செறிவூட்டப்பட்டுள்ளது. காஷ்மீர் பாரம்பரியத்தை அடல் பிஹாரி வாஜ்பாய் பின்பற்றினார், மோடியும் அவ்வாறே செய்கிறார். செங்கோட்டையின் கொத்தலத்தில் இருந்தவாறு, இதனை நான் தெரிவித்தேன்.

     இப்போதைய பிரச்சினையைக் கடும் சொற்களாலோ, துப்பாக்கி குண்டுகளாலோ தீர்க்க முடியாது. காஷ்மீரின் ஒவ்வொரு குடிமக்களையும் அரவணைத்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும்.

     ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கான கொள்கையையும், நோக்கத்தையும், மத்திய, மாநில அரசுகள் கொண்டுள்ளன. முடிவுகளை எடுப்பதில் நங்கள் ஒருபோதும் பின்தங்கியதில்லை. மாணவர்கள் மீதான ஆயிரக்கணக்கான வழக்குகளைத் திரும்பப் பெற்றதாக இருந்தாலும், ரம்ஜான் மாதத்தில் சண்டை நிறுத்தம் அறிவித்ததாக இருந்தாலும், காஷ்மீர் மக்கள் அனைவரையும், இளைஞர்களையும் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

நண்பர்களே,

     இது வெறும் சண்டை நிறுத்தம் மட்டும் அல்ல, இஸ்லாத்தின் பெயரால் பயங்கரவாதத்தைப் பரப்புபவர்களை அம்பலப்படுத்தும் வழிமுறையுமாகும். ஒரு மாயையின் பிடியில் சிக்கவைக்க எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை ஜம்மு-காஷ்மீர் மக்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள் என நான் நம்புகிறேன். மாநிலத்தில் நீடித்த வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல மத்தியஸ்தர் ஒருவரை மத்திய அரசு நியமித்துள்ளது. மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களை அவர் சந்தித்து வருகிறார். மக்கள் அவரைச் சந்தித்து தங்களது பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வார்கள் என நான் எதிர்பார்க்கிறேன். ஒவ்வொருவரிடமும் பேச்சு நடத்தி, அமைதி நடவடிக்கையை வலுப்படுத்த அவர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

சகோதர, சகோதரிகளே,

     இதற்காக மத்திய அரசு எல்லாவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. காஷ்மீரின் பாரம்பரியத்தையும், ஜனநாயகக் கூட்டணியையும் பராமரிக்க, ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மக்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். இந்த மாநிலத்தின் பெற்றோர்கள், இளைஞர்கள், அறிவாளிகள், மதத்தலைவர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பொறுப்பு, மிகப்பெரிய பங்கு உள்ளது.

நம் அனைவரின் ஒட்டுமொத்த ஆற்றலையும், கவனத்தையும், ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும், விவகாரங்களுக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் வளர்ச்சி மட்டுமே ஒரே தீர்வாகும்.

புதிய இந்தியாவுடன், புதிய ஜம்மு-காஷ்மீரும் மலரும் என்று நான் நம்புகிறேன். ஜம்மு-காஷ்மீரின் அமைதியும் முன்னேற்றமும், இந்தியாவின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும். இந்த நம்பிக்கையின் காரணமாக நான் எனது உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது இதயத்தை திறந்து காட்டுகிறேன். பயங்கரவாதத்தை பின்பற்றும் அனைத்து நாடுகளும் தற்போது அதற்காக வருந்துவதை, உலக மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். ஒவ்வொருவரும் திரும்பிப் பார்க்கின்றனர். அதனால்தான், நமது மரபுகளைப் பின்பற்றி, அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டு சகோதரத்துவத்தைப் பேணி, சமதானமும், முன்னேற்றமும் நிலவும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என விரும்புகிறோம். மத்திய அரசு நீங்கள் விரும்பும் எதையும் விட்டுவிடாது. தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதற்கு உங்களது ஆதரவு தேவையாகும். நாம் தொடங்கிய பயணத்தின் இலக்குகளை எட்டுவதற்கு நம்மால் முடியும். மீண்டும் ஒருமுறை ஜம்மு-காஷ்மீர் மக்கள் அனைவரையும் பாசத்துடனும், நேசத்துடனும் அரவணைத்துச் செல்லும் வாய்ப்பு கிடைதத்தை எண்ணி மகிழ்கிறேன். இந்த அன்பும் அரவணைப்பும் எப்போதும் இருக்கும்.

நன்றி,

 

                                                                                                            ******



(Release ID: 1537923) Visitor Counter : 278