குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கணினி, தகவல் தொடர்பு, ரோபோவியல் ஆகியவற்றின் ஆற்றலை பயன்படுத்த வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர்

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் கணிதப் பாடம் கற்பித்தல் தரத்தை வலுப்படுத்த வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர்
பேராசிரியர் மஹலனோபிஸ் முக்கியமான தீர்க்க தரிசி : குடியரசுத் துணைத் தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 29 JUN 2018 12:40PM by PIB Chennai

தேச நிர்மாணத்தில் ஒவ்வொரு குடிமகனும் தீவிரப் பங்காற்ற வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கைய நாயுடு கூறியிருக்கிறார்.  மக்கள் அரசுத் திட்டங்களின் பயன்களைப் பெறும் வெறும் பயனாளிகள் அல்ல, மாற்றத்திற்கான தீவிர முகவர்கள் என்று அவர் கூறினார். கொல்கத்தாவில் இன்று (29.06.18) பேராசிரியர் மஹலனோபிஸ் 125-வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவர் பேசினார்.  மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் திரு.டி.வி. சதானந்த கவுடா, மேற்குவங்காளத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு. பிரத்யா பாசு மற்றும் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பேராசிரியர் மஹலனோபிஸ் இந்தியத் துணைக் கண்டத்தில் புள்ளியியல் அம்சத்தை அறிமுகம் செய்தவர் என்றும், பெரிய தீர்க்கதரிசி என்றும் குடியரசுத் துணைத் தலைவர் புகழாரம் சூட்டினார்.  புள்ளியியல் துறையில் அவரது செயல்முறை ஆராய்ச்சிகள், நெடுநோக்கு, முக்கியக் கவனம் ஆகியன நமது நாட்டில் நடைமுறையில் உள்ள நவீன அதிகாரப்பூர்வ புள்ளியியல் நடைமுறையின் அடித்தளமாக அமைந்துள்ளன என்று அவர் கூறினார்.

நமது மக்கள் தொகையில், 65 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 35 வயதுக்கும் குறைந்த வயதுடையவர்கள். இந்த மனித ஆற்றல் திறனை உண்மையான சொத்தாக மாற்ற வேண்டியது மிகவும் முக்கியமானது என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். இந்த மனித ஆற்றல் திறனை நாம் பயன்படுத்தத் தவறினால், இந்த ஆற்றலை மனித முதலீடாக மாற்றத் தவறினால், அது சந்தர்ப்பத்தை தவற விட்டதற்கு சமமாகும் என்று அவர் கூறினார். அதன் விளைவாக, நாடு ஏழ்மை, சமத்துவமின்மை, சமுதாயக் கொந்தளிப்புகள், நிலையான வளர்ச்சியின்மை உள்ளிட்ட பல்வேறு சமூக பொருளாதார விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

நமது இளமைமிக்க மக்களுக்கு திறன்கள், அறிவு, மனப்பான்மை ஆகியவற்றை புகட்டி, 21ஆம் நூற்றாண்டின் அறிவுசார் பொருளாதாரத்திற்கு உரிய தேவையை நிறைவு செய்ய வேண்டும். அப்போதுதான் மக்கள் தொகை காரணமான லாப ஈவினை பெறமுடியும் என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.

நல்ல ஆளுகைக்கு புள்ளியியல் தான் உண்மையான முதுகெலும்பு என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். திட்டமிடல் நடைமுறைக்கு அது மிகவும் அத்தியாவசியமானது என்றும், கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகளுக்கு இன்றியமையாதது என்றும் அவர் கூறினார். வாழக்கைத் தரத்தை மேம்படுத்த நமக்கு தரவுகள் அவசியம் என்ற நிலையில், அறிவார்ந்த தெரிவுகளை மேற்கொள்ள புள்ளியியல் அவசியம் என்றார் அவர். பகுப்பாய்வு மற்றும் கூட்டாய்வு செய்வதற்கு கருவிகளையும், புள்ளியியல் வழங்குகிறது என்று அவர் கூறினார்.

பாஸ்கராச்சாரியா, ஆரியபட்டா, ஸ்ரீநிவாச ராமானுஜம் போன்ற பல்வேறு கணித மேதைகள் இந்தியாவின் பாரம்பரியத்தை உருவாக்க உதவினார்கள் என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.  இந்த மிகச் சிறப்பான பாரம்பரியத்தை தொடர்வது அவசியம்; பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் கணிதப் பாடம் கற்பித்தல் தரம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் திரு. வெங்கைய நாயுடு கூறினார்.

 குடியரசுத் துணைத் தலைவரின் முழுமையான உரைக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

------


(வெளியீட்டு அடையாள எண்: 1537209) வருகையாளர் எண்ணிக்கை : 175
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi