ரெயில்வே அமைச்சகம்

பயணிகள் குறைதீர்ப்பை துரிதப்படுத்தவும், முறைப்படுத்தவும் “ ரயில் மதத்” செயலியை திரு பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.

Posted On: 11 JUN 2018 3:20PM by PIB Chennai

  மாண்புமிகு  பிரதமரின் டிஜிட்டல் முன்முயற்சிகளின் வழியில் இந்திய ரயில்வே முதல் முறையாக புகார் நிர்வாக முறையை, முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கியுள்ளது. ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை  அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று (11.06.2018)  “ரயில் மதத்” என்ற புதிய செயலியைத் தொடங்கி வைத்தார். இந்த செயலி பயணிகள்  குறைதீர்ப்பை  துரிதப்படுத்தி  முறைப்படுத்துவதாகும்.  ஆர்.பி.கிராம்ஸ் (ரயில்வே பயணி குறைதீர்த்தல் மற்றும் நிர்வாகமுறை) வடக்கு ரயில்வேயால் (தில்லி கோட்டம்) வடிவமைக்கப்பட்டது. இது செல்பேசி  / இணையம் மூலம் பயணிகளால் செல்பேசி செயலியின்  வழியாக புகார்களை பதிவு செய்யும் “ரயில் மதத்” உள்ளிட்ட  பல நவீன அம்சங்களை உள்ளடக்கியதாகும். பதிவு செய்யும், புகாரைத் தொடர்ந்து உடனடியாக குறுஞ்செய்தி மூலம் பதிவு எண் ஒன்றை பயணி பெறுவார்.  புகார்களுக்கான குறைதீர்ப்பு நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை அவ்வப்போது பயணிக்கு  தொடர்ந்து தெரிவிக்கப்படும்.  புகார்  தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறுஞ்செய்தி மூலம், ரயில்வே துறையால் அனுப்பப்படும்.  ஆர்.பி.கிராம்ஸ் பலவகையான முறைகளிலிருந்து (தற்போது 14 இணையதளத்துடன்  இணையாத  / இணைந்த பயன்முறை உள்ளது) பெறப்பட்ட  புகார்கள் அனைத்தையும்   ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து முழுமையாக பகுப்பாய்வு செய்து பலவகையான நிர்வாக அறிக்கைகளை  உருவாக்கும். இதன் மூலம்,  பயணிகள் குறைதீர்ப்பு நிலையை  உயர்நிலை நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்க முடியும். அதே போல் தூய்மை, உணவு வழங்குதல்,  பிறவசதிகள் களஅலகுகளிலும் / ரயில்களிலும் / ரயில் நிலையங்களிலும் செயல்படும் விதம் குறித்து மதிப்பீடு செய்யவும் இயலும். குறைதீர்க்கும் செயல்களை மேற்கொள்வதில் பலவீனமான / குறைபாடுடைய மற்றும் மந்த நிலையிலான ரயில்கள் / ரயில்நிலையங்களை இது அடையாளம்  காணும்.

ரயில் மதத் செயலியின் முக்கிய அம்சங்கள்:

  1.     ரயில் மதத் (பயணத்தின் போது தேவைப்படும் உதவிக்கான செல்பேசி செயலி) பயணியிடமிருந்து குறைந்தபட்ச உள்ளீடுகளுடன் (புகைப்படத்தைக்கூட பதிவேற்றலாம்). புகாரை  பதிவு செய்யும். உடனடியாக தனித்துவ பதிவு எண் கிடைக்கும். உடனடி நடவடிக்கைக்காக  பொருத்தமான கள அலுவலர்களுக்கு  இணையம் வழியாக புகாரை அனுப்பிவைக்கும். புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையும் பயணிக்கு குறுஞ்செய்தி (எஸ் எம் எஸ்) மூலம் அனுப்பிவைக்கப்படும். இவ்வாறு  டிஜிட்டல்மயம் மூலமாக புகார்கள் மீதான குறைதீர்ப்பு நடவடிக்கைகள் முழுவதும் விரைந்து கண்காணிக்கப்படுகிறது.
  2.      ரயில் மதத் பல்வேறு உதவிக்கான (எடுத்துக்காட்டாக பாதுகாப்பு, குழந்தைகளுக்கான உதவி, போன்றவை) தொலைபேசி எண்களையும் கொண்டிருக்கும். எளிதான முறையில் உடனடி உதவிக்கு இந்த எண்களில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
  3.   இணையதளத்துடன்  இணையாத  / இணைந்த பயன்முறை  உள்ளிட்ட அனைத்து  முறைகளிலும் புகார்களை பதிவு செய்து ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்படுகிறது. எனவே இறுதியான நிர்வாக அறிக்கைகள் மூலம் பலவீனமான / குறைபாடுடைய பகுதிகள் முழுமையாக தெரியவரும். இதைக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் சரிசெய்யும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த முடியும்.
  4.    தெரிவுசெய்யப்பட்ட ரயில் / ரயில் நிலையத்தில் தூய்மை மற்றும் பிற வசதிகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதன் மீதான போக்குகளை அறிந்து  பகுப்பாய்வு செய்ய முடியும்.  இதன் மூலம் மிகவும் துல்லியமாகவும் , பயன்தரும் வகையிலும் நிர்வாக முடிவு எடுக்க இயலும்.
  5.   படிநிலை அடிப்படையில் கருவிகள் / அறிக்கைகள் மூலம் கோட்ட / மண்டல / ரயில்வே வாரிய நிலையில் உள்ள  நிர்வாகத்திற்கு தகவல் கிடைக்கும். இது சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ஒவ்வொரு வாரமும் தாமாகவே மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.


(Release ID: 1535093) Visitor Counter : 198