ரெயில்வே அமைச்சகம்
“மெனு ஆன் ரயில்ஸ்” என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சர் திரு. பியூஷ்கோயல் தொடங்கிவைத்தார்
Posted On:
11 JUN 2018 3:18PM by PIB Chennai
ரயில் பயணத்தின் போது வழங்கப்படும் உணவுப் பொருட்கள் பற்றி ரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட “மெனு ஆன் ரயில்ஸ்” என்ற புதிய செயலியை ரயில்வே மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கிவைத்தார். இந்த செல்போன் செயலியின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:
- இந்த செல்போன் செயலியில், ரயில்களில் வழங்கப்படும் அனைத்து வகையான உணவு விவரங்கள் இடம்பெற்றிருக்கும்
- மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்களில் நான்கு வகையான உணவு பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது: குளிர்பானங்கள், காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் ஒருங்கிணைந்த உணவு தொகுப்பு
- தேனீர், காபி, பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர், ஜனதா சாப்பாடு, சைவ சாப்பாடு, அசைவ சாப்பாடு, வெஜ் பிரியாணி மற்றும் நான்வெஜ் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளின் விலைகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் (உணவு வளாகங்கள் மற்றும் துரித உணவகங்கள் தவிர) வழங்கப்படும் உணவு வகைகளுக்கான விலையாகும்.
- ஒருங்கிணைந்த உணவு தொகுப்பின்கீழ், காலை சிற்றுண்டி, மதிய சிற்றுண்டி, மதிய உணவு, அசைவ உணவு, ஜெயின் உணவு, இனிப்பு வகைகள், சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு போன்ற 96 வகையான உணவு பொருட்கள் உள்ளன
- டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே உணவு வகைகளையும் முன்கூட்டியே பதிவு செய்யக்கூடிய ராஜ்தானி / சதாப்தி / துராந்தோ வகை ரயில்களில் வழங்கப்படும் உணவு விவரங்களையும் செல்போன் செயலியில் தெரிந்து கொள்ளலாம்
- சதாப்தி ரயில்களில் எக்ஸிக்யூட்டிவ் வகுப்பு மற்றும் சேர்கார் வகுப்புகளில் வழங்கப்படும் உணவு பொருட்களையும் (முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டவை), ராஜ்தானி மற்றும் துராந்தோ ரயில்களில் குளிர்சாதன முதல் வகுப்பு, குளிர்சாதன 2-ஆம் வகுப்பு மற்றும் குளிர்சாதன 3-ஆம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்வோருக்கான உணவு பொருட்களின் விவரத்தை தனித்தனியாக தெரிந்து கொள்ளலாம். துராந்தோ ரயில்களில், படுக்கை வசதியில் பயணம் செய்வோருக்கான உணவு விவரமும் இந்த செயலியில் தெரிவிக்கப்படும். இந்த ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்போது வழங்கக்கூடிய உணவு விவரங்களும் தெரிவிக்கப்படும்.
- கதிமான் மற்றும் தேஜஸ் ரயில்களில் வழங்கப்படும் (முன்பதிவு செய்யப்பட்ட) உணவு பொருட்களின் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்
- இந்த செல்போன் செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கிடைக்கும்
- பயணிகளின் பயன்பாட்டிற்காக வலைதள விவரங்களும் இடம்பெற்றிருக்கும்
- இந்த புதிய செயலி, உணவு பொருட்கள் மற்றும் விலை பற்றி ரயில் பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும். சதாப்தி / ராஜ்தானி / துராந்தோ / கதிமான் / தேஜஸ் ரயில் பயணிகள், தங்களுக்கான உணவு பொருட்களை முன்கூட்டியே பதிவு செய்திருந்தால், என்னென்ன உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது, அவற்றின் அளவு எவ்வளவு போன்ற விவரங்களும் இந்த செயலியில் தெரிவிக்கப்படும்.
- மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்களில் உணவு பொருட்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பதைத் தடுக்கவும் இந்த செயலி உதவும்.
***
(Release ID: 1535092)
Visitor Counter : 289