ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

பிரதமரின் பாரதீய ஜன் ஔஷாதி பரியோஜனா திட்டத்தின் கீழ், உயிரி முறையில் மட்கும் தன்மை வாய்ந்த சானிடரி நாப்கின் வழங்கும் ஜன் ஔஷாதி சுவிதா திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது

Posted On: 04 JUN 2018 7:17PM by PIB Chennai

பிரதமரின் பாரதீய ஜன் ஔஷாதி பரியோஜனா திட்டத்தின் கீழ், உயிரி முறையில் மட்கும் தன்மை வாய்ந்த சானிடரிநாப்கின் வழங்கும் “ஜன் ஔஷாதி சுவிதா” திட்டத்தை மத்திய ரசாயன உரங்கள், சாலை போக்குவரத்து மற்றும்  நெடுஞ்சாலைத் துறை, கப்பல் துறை இணையமைச்சர் திரு. மன்சுக் எல். மான்டவியா புதுதில்லியில் இன்று (04.06.18) தொடங்கி வைத்தார். மத்திய ரசாயனம் & உரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு.அனந்த் குமார், 2018 மார்ச் 8 அன்று (உலக மகளிர் தினம்) உறுதி அளித்தபடி, இந்த நாப்கின்கள், நாடு முழுவதும் உள்ள 33 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 3,600-க்கும் மேற்பட்ட ஜன் ஔஷாதி கேந்திரா எனப்படும் மலிவு விலை மருந்தகங்களில், குறைந்த விலையில் கிடைக்கிறது.

நிகழ்ச்சியில் பேசிய திரு. மான்டவியா, உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைத்துப் பெண்களுக்கும் சிறப்புப் பரிசாக இந்த நாப்கின் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது என்றார். பிரத்யேகமாக தயாரிக்கப்படும் இவை குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதுடன், சுகாதாரமான முறையில், எளிதில் பயன்படுத்தி விட்டு, அப்புறப்படுத்தக் கூடியவையாக இருக்கும் என்றார். பல்வேறு கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நாப்கின்கள் ஆக்சிஜன் பட்ட உடனேயே, மட்கிப் போகும் தன்மையுடையவையாகும்.

நாட்டில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு தூய்மையான, சுகாதாரமான மற்றும் வசதியான நாப்கின் கிடைப்பதை உறுதி செய்வதோடு, குறைந்த கட்டணத்தில்  அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவைகள் கிடைக்க செய்ய வேண்டுமென்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கனவை நனவாக்கப் பயன்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குறைந்த விலையில் இந்த வசதி கிடைக்கச் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அமைச்சர் திரு. மான்டவியா, தற்போது வெளிச்சந்தையில் கிடைக்கும் ஒரு நாப்கின் விலை 8 ருபாயாக உள்ள நிலையில், தற்போது தொடங்கப்பட்டுள்ள சுவிதா திட்டத்தின் கீழ், ஒரு நாப்கின் ரூ.2.50-க்கு கிடைக்கும் என்றார். நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு குறைந்த விலையில், அவர்களது அடிப்படையில் சுகாதார தேவைகள் கிடைக்கச் செய்ய இவ்வளவு காலம் ஆகியிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்தியாவில் உள்ள நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், தங்களது மாத விலக்கு காலத்தில், வெளிச் சந்தையில் கிடைக்கும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த நாப்கின்களை வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலையில், சுகாதாரமற்ற முறைகளை பின்பற்றி வருவதை தவிர்த்து, அவர்களுக்கு சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் திரு. மான்டவியா தெரிவித்தார். இது போன்ற சுகாதாரமற்ற முறைகளை பின்பற்றுவதால், பூஞ்சை தொற்று ஏற்பட்டு, பிறப்புறுப்பு தொற்று, சிறுநீர் பாதை தொற்று மற்றும் கர்ப்பப் பை வாய் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதுடன், பெண்கள் மகப்பேறு இன்மைக்கு ஆளாகும் நிலையும் உள்ளதாக அவர் கூறினார்.

2015-16 தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி, 15 முதல் 24 வயது வரையிலான 58 சதவீத பெண்கள், ஆரோக்கியமற்ற முறையில் தயாரிக்கப்படும் நாப்கின்களை பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது என்றார். மேலும் நகர்ப்புறங்களில் வசிக்கும் 78 சதவீத பெண்கள் தங்களது மாத விலக்கு காலத்தில் ஆரோக்கியமான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி வருவதாகவும், கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களில் 48 சதவீதம் பேர் மட்டுமே, தூய்மையான நாப்கின்களை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மருந்தியல் துறை இணைச் செயலாளர் திரு. நவ்தீப் ரின்வா, மத்திய அரசின் பொதுத்துறை மருந்தியல் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு.சச்சின் சிங் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

 



(Release ID: 1534435) Visitor Counter : 219


Read this release in: English , Gujarati , Malayalam