பிரதமர் அலுவலகம்

ஆளுநர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரை

Posted On: 05 JUN 2018 3:05PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில்  பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

   மாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு விவாதங்கள் மற்றும் அனுபவங்கள்  பகிர்ந்து கொள்ளப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

ஒத்துழைப்புகள், கலாச்சாரப் பரிமாற்றங்கள் மற்றும் பல்வேறு மாநில மக்களிடையேயான நேரடித் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான,  “ஒன்றுபட்ட இந்தியா, ஒப்பற்ற இந்தியா” முன்முயற்சியை வலுப்படுத்த ஆளுநர்கள் முன்வரவேண்டும் எனப் பிரதமர் கேட்டுக் கொண்டார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிடையே நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்த புதிய வழிமுறைகளை காணவேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில்,  கல்வி சார்ந்த அனைத்து அம்ச     ங்களிலும்,  உயர் சிறப்பு நிலையை  ஊக்குவிக்குமாறு பல்கலைக்கழகங்களை ஆளுநர்கள் கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர்  வலியுறுத்தினார். இந்திய பல்கலைக்கழகங்கள் உலகில் சிறந்த பல்கலைக்கழகங்களாக உருவாக போட்டி போடவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இந்த மாற்றத்திற்கு தூண்டுகோலாக ஆளுநர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.   இதற்காக, இந்திய மேலாண்மைக் கழகங்கள் மற்றும் முன்னணி நிலையில் உள்ள பத்து அரசு மற்றும் பத்து தனியார்  பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி முறையை  மேம்படுத்த  மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

    சமானிய மனிதனின் “வாழ்க்கையை எளிதாக்குதல்”  முயற்சிகளை  ஊக்குவிக்க அரசு பாடுபட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார். இந்த லட்சியத்தை அடைய, பொது வாழ்க்கையில் தங்களுக்குள்ள  நீண்ட நெடிய அனுபவங்கள் மூலம், ஆளுநர்கள் அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை  ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

    மத்திய அரசின் முன்னோடி சுகாதாரக் காப்பீட்டுத்திட்டமான ஆயுஷ்மான் பாரத் பற்றியும், பிரதமர் எடுத்துரைத்தார்.

    2022-ம் ஆண்டில் கொண்டாடப்பட உள்ள 75வது சுதந்திர தினவிழா,  2019-ல் கொண்டாடப்பட உள்ள மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா, போன்றவை வளர்ச்சிக்கான குறிக்கோள் மற்றும் இலக்குகளை அடைவதற்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துபவையாக அமையும் என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.  வரவிருக்கும் கும்பமேளா,  தேசிய அளவிலான பல்வேறு நோக்கங்களை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய சந்தர்ப்பமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

-----



(Release ID: 1534399) Visitor Counter : 126