பிரதமர் அலுவலகம்

ஜகார்த்தாவில் இந்தியர்களிடையில் பிரதமர் உரை

Posted On: 30 MAY 2018 4:53PM by PIB Chennai

இந்தோனேசியாவில் பயணம் செய்யும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைநகர் ஜகார்த்தாவில் இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இன்று உரையாற்றினார்.

இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான உறவுகள் குறித்துப் பேசிய பிரதமர் கடந்த ஜனவரியில் புது தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆசியான் அமைப்பில் உள்ள 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றதை அன்புடன் நினைவுகூர்ந்தார்.

புதுதில்லியில் 1950ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் இந்தோனேசிய அதிபர் பங்கேற்றதையும் குறிப்பிட்டார்.

“இந்தோனேசியாவில் குடியேறியுள்ள இந்தியர்கள் இந்தோனேசியாவின் பெருமைக்குரிய குடிமக்களாக இருக்கிறார்கள். அதே சமயம் இந்தியாவின் வேருடன் தொடர்புகொண்டிருக்கிறார்கள்” என்று பிரதமர் கூறினார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா இணையற்ற மாற்றத்தைக் கண்டுள்ளது. அந்நிய நேரடி முதலீடு விஷயத்தில் இந்தியப் பொருளாதாரம் திறந்த மனத்தோடு இருக்கிறது. எளிதாகத் தொழில் தொடங்கலாம். இந்தியப் பொருளாதாரத்தின் போட்டித் தன்மை வலுவாக இருக்கிறது.

இந்தியாவும் இந்தோனேசியாவும் தங்களது ஜனநாயக நெறிகள், பன்முகத் தன்மை குறித்துப் பெருமைப் படலாம். உதாரணத்திற்கு, பாலி ஜாத்ரா போன்ற பயண நிகழ்வுகள், மொழி, உணவு ஆகியவற்றில் ஒற்றுமை, கலாசாரத் தொடர்புகள் ஆகியவை குறிப்பிடத் தக்கவை” என்று பிரதமர் கூறினார்.

தானும் இந்தோனேசிய அதிபர் விடோடோவும் அங்கு நடைபெற்ற காத்தாடித் திருவிழாவில் பங்கேற்றதை நினைவுகூர்ந்த பிரதமர் திரு. மோடி, அந்த விழாவில் இராமாயணம், மகாபாரதம் ஆகியவை தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டினார்.

இந்தியாவின் வளர்ச்சிகள் குறித்துப் பேசிய பிரதமர், மத்திய அரசு மேம்பாடு சார்ந்த, ஊழலற்ற நடைமுறையை உருவாக்கி வருகிறது என்றார்.

“தொழில் தொடங்க எளிதான சூழல் என்பதிலிருந்து தற்போது எளிதாக வாழ்தல் என்ற நிலையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளோம். எங்களது நடைமுறை வெளிப்படைத் தன்மையும் நுட்பமும் கொண்டது” என்று கூறிய பிரதமர், பல்வேறு கட்டுமான அபிவிருத்திகளில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை விவரித்தார். அத்துடன் தொழில் தொடங்குக இந்தியா திட்டத்துக்கான துடிப்பான சூழல், சர்வதேச சூரிய சக்தி கூட்டு ஆகியவை குறித்தும் பிரதமர் பேசினார்.

பல தேவைகளுக்கு உதவுவதில் இந்தியாவும் இந்தோனேசியாவும் உணர்வோடு செயல்படுகின்றன என உறுதிபடக் கூறினார்.

“இந்தியா யாருடைய பாஸ்போர்ட்டின் வண்ணத்தையும் பார்க்காமல் மனித நேயத்தின் அடிப்படையில் எல்லோருக்கும் உதவுவதற்குத் தயாராக இருக்கிறது. இந்தியாவிற்கும், இந்தோனேசியாவுக்கும் பெயரில் ஒற்றுமை அமைந்திருப்பதைப் போல, பண்பாடு, பாரம்பரியம், ஜனநாயக விழுமியங்கள் ஆகியவற்றிலும் ஒற்றுமை இருக்கிறது” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நேரடியாகவே காண்பதற்காக இந்தோனேசியாவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களை தாய்நாட்டுக்கு வருமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.


 

 

 

***


(Release ID: 1533904)