பிரதமர் அலுவலகம்

மன் கீ பாத் (மனதின் குரல்) என்ற பெயரில் பிரதமர் ஆற்றிவரும் உரையின் 44ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 27.5.18

Posted On: 27 MAY 2018 11:37AM by PIB Chennai

வணக்கம். மனதின் குரல் வாயிலாக மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்திய கப்பற்படையின் 6 பெண் கமாண்டர்கள் கொண்ட ஒரு குழு பல மாதங்களாக கடல்பயணம் மேற்கொண்டது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். நாவிகா சாகர் பரிக்கிரமா என்ற பெயர் கொண்ட இந்தக் குழு பற்றித் தான் நான் சில விஷயங்களைப் பேச விரும்புகிறேன். பாரதத்தின் 6 பெண்கள் கொண்ட இந்தக் குழு, 250 நாட்களுக்கும் மேலாக ஐ.என்.எஸ்.வி. தாரியிணியில் கடலில் பயணித்து, உலகப்பயணம் மேற்கொண்டு, இம்மாதம் 21ஆம் தேதியன்று தான் நாடு திரும்பியிருக்கிறார்கள், நாடுமுழுவதும் அவர்களைக் கோலாகலமாக வரவேற்றிருக்கிறது. அவர்கள் பல்வேறு பெருங்கடல்கள், பல கடல்கள் ஆகியவற்றில் பயணித்து சுமார் 22,000 கடல்மைல் தூரத்தைக் கடந்திருக்கிறார்கள். உலகிலேயே இப்படிப்பட்ட பயணம் முதன்முறையாக நடந்திருக்கிறது. கடந்த புதன்கிழமையன்று, இந்தப் பெண் ரத்தினங்களைச் சந்தித்து, அவர்களின் அனுபவங்களைப் பற்றிக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் மீண்டும் ஒருமுறை இவர்கள் நிகழ்த்தியிருக்கும் சாகசம், கடற்படையின் பெருமை, நாட்டின் மகத்துவம் ஆகியவற்றை மேலோங்கச் செய்யும் வகையிலான இவர்களின் சிறப்பான செயல்பாடு, குறிப்பாக பாரதத்தின் பெண்கள் உலகில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தமைக்கு, மீண்டும் ஒருமுறை அவர்களுக்கு என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாகச உணர்வை யார்தான் அறிய மாட்டார்கள். நாம் மனித சமுதாயத்தின் வளர்ச்சிப் பயணத்தைப் பார்த்தோமேயானால், ஏதோ ஒரு சாகசத்தின் மையத்திலிருந்து தான் வளர்ச்சி பிறப்பெடுத்திருக்கிறது. வளர்ச்சி என்பது சாகசத்தின் கர்ப்பத்தில் உதித்த சிசு. ஏதாவது ஒன்றை சாதித்துக் காட்ட வேண்டும், வாடிக்கையான செயல்பாடுகளிலிருந்து சற்று விலகி சாதிக்கும் எண்ணம், அசாதாரணமான ஒன்றை செய்துகாட்டும் நோக்கம், என்னாலும் சாதிக்க முடியும் என்ற இந்த உணர்வு சற்று குறைவாக காணப்படலாம், ஆனால் பல யுகங்களாக, பலகோடி மக்களுக்கு இது தான் உத்வேகம் அளித்து வந்திருக்கிறது. எவரஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்கள் பற்றிய பல புதிய புதிய விஷயங்களை கடந்த நாட்களில் நாம் கேள்விப்பட்டு வருகிறோம்; பல நூற்றாண்டுகளாகவே எவரஸ்ட் சிகரம் மனித சமுதாயத்துக்கு ஒரு சவாலாகவே விளங்கி வந்திருக்கிறது, தீரம்நிறைந்தவர்கள் இந்த சவாலை எதிர்கொண்டும் வந்திருக்கிறார்கள்.

மே மாதம் 16ஆம் தேதி மகாராஷ்டிரத்தின் சந்திரப்பூரில் இருக்கும் ஒரு ஆசிரமப் பள்ளியைச் சேர்ந்த 5 பழங்குடியின மாணவர்களான மனீஷா துருவே, பிரமேஷ் ஆலே, உமாகாந்த் மட்வி, கவிதாஸ் காத்மோடே, விகாஸ் சோயாம் ஆகியோர் அடங்கிய ஒரு குழு, உலகின் மிக உயர்ந்த சிகரத்தின் மீது ஏறியிருக்கிறார்கள். ஆசிரமப் பள்ளியின் இந்த மாணவர்கள் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்கள் பயிற்சியைத் தொடங்கினார்கள். வார்தா, ஐதராபாத், டார்ஜீலிங், லே, லடாக் ஆகிய இடங்களில் இவர்கள் பயிற்சி மேற்கொண்டார்கள். ஷவுர்யா இயக்கத்தின் பயிற்சித் திட்டத்தின்படி, இந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்; பெயருக்கேற்ற வகையில், எவரஸ்ட் சிகரத்தில் இவர்கள் தேசத்தின் பெருமையை நிலைநாட்டினார்கள். சந்திரப்பூர் பள்ளியைச் சேர்ந்தவர்களுக்கும், எனது இந்த இளம் நண்பர்களுக்கும், இதயம்கனிந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளபடியே பாரதத்தைச் சேர்ந்த 16 வயதுப் பெண்ணான ஷிவாங்கி பாடக், நேபாளத்திலிருந்து எவரஸ்ட் சிகரத்தை எட்டிய மிகக் குறைந்த வயதுகொண்ட பாரதப் பெண். ஷிவாங்கிக்கு பலபல பாராட்டுகள்.

அஜீத் பஜாஜ் அவர்களும் அவரது மகளான தியாவும், எவரஸ்ட் சிகரம் தொட்ட பாரதநாட்டின் முதல் தந்தை-மகள் இணையாவார்கள். ஏதோ இளைஞர்கள் தான் எவரஸ்ட் சிகரத்தின் மீது ஏறுகிறார்கள் என்பது அல்ல. மே மாதம் 19ஆம் தேதியன்று 50 வயதுக்கும் அதிகமான சங்கீதா பெஹல் அவர்கள் எவரஸ்ட் சிகரத்தின் மீது ஏறினார். எவரஸ்ட் சிகரத்தின் மீது ஏறுபவர்களில் சிலர், தங்களிடம் திறனும் இருக்கிறது, உணர்திறனும் இருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறார்கள். கடந்த நாட்களில் ஸ்வச்ச கங்கா அபியான், தூய்மையான கங்கை இயக்கத்தின்படி, எல்லையோரக் காவல்படையினரின் குழு ஒன்று எவரஸ்ட் சிகரத்தின் மீது ஏறியது, ஆனால் அவர்கள் கீழே இறங்கி வரும்போது, ஏகப்பட்ட குப்பைக்கூளங்களையும் கையோடு கொண்டு வந்தார்கள். இது பாராட்டுதலுக்குரிய விஷயம் தான் அதே வேளையில், தூய்மையின் பொருட்டு, சுற்றுச்சூழலின் பொருட்டு அவர்களுக்கு இருக்கும் முனைப்பை இந்தச்செயல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பல ஆண்டுகளாக மக்கள் எவரஸ்ட் சிகரம் மீது ஏறி வந்திருக்கிறார்கள், இவர்களில் பலர் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். நான் இந்த சாகசம் நிறைந்த அனைத்து வீரர்களுக்கும், குறிப்பாக பெண்மணிகளுக்கு என் இதயம்நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மனம்நிறைந்த நாட்டுமக்களே, குறிப்பாக எனதருமை இளைய சமுதாய நண்பர்களே! இரண்டு மாதங்கள் முன்பாக நான் ஃபிட் இந்தியா (Fit India) பற்றிப் பேசியிருந்த போது, அதற்கு இந்த அளவுக்கு பதிலிறுப்புகள் வரும் என்று நான் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களும் இதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நான் ஃபிட் இந்தியா பற்றிப் பேசும் வேளையில், நாம் எந்த அளவுக்கு விளையாட்டுகளில் ஈடுபடுகிறோமோ, அந்த அளவுக்கு தேசமும் விளையாட்டுகளில் ஈடுபடும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். சமூக ஊடகங்களில் மக்கள் ஃபிட்னஸ் சேலஞ்ஜ் (fitness challenge), அதாவது உடலுறுதி சவால் தொடர்பான காணொளிகளைப் பகிர்ந்து வருகிறார்கள், ஒருவரை ஒருவர் டேக் செய்து சவால் விட்டுக் கொள்கிறார்கள். ஃபிட் இந்தியா (Fit India) என்ற இந்த இயக்கத்தோடு இன்று அனைவரும் இணைந்து வருகிறார்கள். அவர்கள் திரைப்படத் துறையினராகட்டும், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் ஆகட்டும், தேசத்தின் சாமான்ய மக்களாகட்டும், இராணுவ வீரர்களாகட்டும், பள்ளி ஆசிரியர்கள் ஆகட்டும் – நாலாபுறத்திலும் நாம் உடலுறுதியோடு இருந்தால், இந்தியாவும் உறுதியோடு இருக்கும் என்பது எங்கும் எதிரொலிக்கிறது. பாரத கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி அவர்கள் எனக்கு சவால் விடுத்திருப்பது எனக்கு மகிழச்சியை அளிக்கிறது, நானும் அவரது சவாலை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இதுபோல சவால் விடுத்துக் கொள்வது நம்மை நாமே உடலுறுதியோடு வைத்துக் கொள்ள உதவுவதோடு, மற்றவர்களையும் உடலுறுதியை ஏற்படுத்துக் கொள்ள ஊக்கப்படுத்துகிறது என்று நான் கருதுகிறேன்.

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே! மனதின் குரலில் பலமுறை விளையாட்டுகள் தொடர்பாக, விளையாட்டு வீரர்கள் தொடர்பாக, ஏதாவது ஒன்றை நான் பகிர்ந்து வருவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள், கடந்தமுறை காமன்வெல்த் போட்டிகளில் நமது வீரர்கள், தங்கள் மனதின் குரல்களை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நம்மிடத்தில் தெரிவித்தார்கள் -

வணக்கம் சார், நான் நொய்டாவிலிருந்து சவி யாதவ் பேசுகிறேன், நான் உங்கள் மனதின் குரல் நிகழ்ச்சியைத் தவறாமல் கேட்டுவரும் ஒரு நேயர். இன்று நான் உங்களிடத்தில் என் மனதின் குரலை வெளிப்படுத்த விரும்புகிறேன். இப்போது கோடைக்கால விடுமுறை தொடங்கி விட்டது, ஒரு தாய் என்ற முறையில், குழந்தைகள் அதிக நேரத்தை இணைய விளையாட்டுகள் விளையாடுவதில் கழிக்கிறார்கள் என்பதை நான் பார்த்து வருகிறேன். எங்கள் சிறிய வயதுக்காலத்தில் நாங்கள் பெரும்பாலும் திறந்தவெளியில் விளையாடக்கூடிய பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடினோம்; எடுத்துக்காட்டாக 7 ஸ்டோன்ஸ் (7stones) – இதில் 7 கற்களை ஒன்றன்மீது ஒன்றாக வைத்து, அதை பந்தால் அடித்து வீழ்த்துவோம். இதே போன்று கோ-கோ (kho-kho) விளையாட்டு இருந்தது. இப்போதெல்லாம் இவை போன்ற விளையாட்டுகளை யாரும் விளையாடுவதே இல்லை. தயவுசெய்து நீங்கள் இன்றைய தலைமுறையினருக்கு பாரம்பரிய விளையாட்டுகளைப் பற்றிக் கூறுங்களேன், இதன் வாயிலாக இவற்றின் மீது அவர்களுக்கு ஆர்வம் ஏற்படும் என்று நம்புகிறேன், நன்றி.

சவி யாதவ் அவர்களே, உங்கள் தொலைபேசி அழைப்பிற்கு மிக்க நன்றி. தெருக்களில் விளையாடப்பட்ட விளையாட்டுகள் ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையின் அங்கமாக விளங்கின, இவை இன்று அருகிக் கொண்டே வருகின்றன என்பது உண்மை தான். குறிப்பாக இந்த விளையாட்டுக்கள் கோடைக்கால விடுமுறைகளின் சிறப்பான அங்கமாக விளங்கின என்றே சொல்லலாம். பட்டப்பகல் வேளையில், இரவில் உணவு உண்ட பிறகு, எந்த ஒரு கவலையோ, எதைப் பற்றிய சிந்தையோ கொள்ளாமல், மணிக்கணக்காக பிள்ளைகள் விளையாடுவார்கள்; இவற்றில் சில விளையாட்டுகளில் ஒட்டுமொத்த குடும்பமுமே பங்கெடுத்து விளையாடக்கூடியவையாக இருந்தன. கிட்டிப் புள், பம்பரம், கோலி, ஐஸ்பாய், திருடன் போலீஸ், கண்ணாமூச்சி, கோ-கோ என பல விளையாட்டுகள் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை, கட்ச்சிலிருந்து காமரூபம் வரை இந்த விளையாட்டுகள் சிறுவயதின் இணைபிரியா அங்கமாக விளங்கின. ஆம், வெவ்வேறு இடங்களில் அவை வேறுவேறு பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக 7 ஸ்டான்ஸ் (7 stones), என்று ஒருபகுதியில் அழைக்கப்படும் இந்த விளையாட்டு லஹவுரி, பிட்டூ, சாதோலியா, டிகோரி, சதோதியா என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. நான்கு சுவர்களுக்குள்ளே விளையாடுவது, திறந்தவெளியில் விளையாடுவது என பாரம்பரியமான விளையாட்டுகளில் இருவகையானவை இருக்கின்றன. நமது தேசத்தின் பன்முகத்தன்மையின் பின்புலத்தில் இழைந்தோடும் ஒற்றுமையை நாம் இந்த விளையாட்டுகளில் காணலாம். ஒரே விளையாட்டு பல்வேறு இடங்களில், பல்வேறு பெயர்களில் அறியப்பட்டு வருகிறது. நான் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவன், அங்கே சோமல்-இஸ்தோ என்று அழைக்கப்படும் ஒரு விளையாட்டைப் பற்றி நான் அறிவேன். புளியங்கொட்டை அல்லது தாயத்தைக் கொண்டு 8 X 8 சதுரமான பலகையில் இது விளையாடப்படுகிறது. இது கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் விளையாடப்பட்டு வந்தது. கர்நாடகத்தில் இதை சவுக்காபாரா என்றும், மத்திய பிரதேசத்தில் அத்தூ என்றும் அழைப்பார்கள். இதையே கேரளத்தில் பகீடாகாளீ என்றும், மகாராஷ்ட்ரத்தில் சம்ப்பல் என்றும், தமிழ்நாட்டில் தாயம் என்றும், ராஜஸ்தானத்தில் சங்காபோ என்றும் பலபலப் பெயர்களால் அழைப்பார்கள். ஒவ்வொரு மாநில மொழியிலும் எனக்குப் பேசத் தெரியாது என்றாலும், விளையாடிய பிறகு தான் தெரிய வந்தது, அட, இதை நாமும் விளையாடியிருக்கிறோமே என்று உணர முடிந்தது. கிட்டிப் புள், கில்லி தாண்டு ஆடாதவர்கள் நம்மில் யாரேனும் இருக்கிறார்களா? தேசத்தின் பல்வேறு பாகங்களில் இது பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஆந்திரத்தில் இதைக் கோட்டிபில்லா அல்லது கர்ராபில்லா என்றும், ஒடிஷாவில் இதை குலீபாடீ என்றும், மகாராஷ்டிரத்தில் இதை வித்திடாலூ என்றும் அழைக்கிறார்கள். சில விளையாட்டுகளுக்கென ஒரு பருவம் இருக்கிறது. காற்றாடி விட என ஒரு பருவம் உண்டு. அனைவரும் காற்றாடி விடும் போது, அனைவரும் விளையாடும் போது, நம்மிடம் இருக்கும் தனிச்சிறப்புவாய்ந்த குணங்களை நாம் தங்குதடையில்லாமல் வெளிப்படுத்த முடிகிறது. பல குழந்தைகள் கூச்ச சுபாவமுள்ளவர்களாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம், ஆனால் விளையாடும் வேளையில் மிகுந்த சுறுசுறுப்புடையவர்களாக மாறி விடுவார்கள். சுயமாகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள், மிக ஆழமானவர்களாகத் தோற்றமளிக்கிறார்கள், அவர்களுக்குள்ளே ஒளிந்திருக்கும் குழந்தைத்தனம் வெளிப்படுகிறது. உடல்திறன்களை வளர்க்கும் அதே வேளையில், நமது தர்க்கரீதியான சிந்தனை, மன ஒருமைப்பாடு, விழிப்போடு இருத்தல், உற்சாகம் ஆகியவற்றையும் பெருக்கும்வகையில், பாரம்பரியமான விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. விளையாட்டு, வெறும் விளையாட்டு அல்ல, அது வாழ்க்கையின் விழுமியங்களைக் கற்றுக் கொடுக்கிறது. இலக்கை நிர்ணயம் செய்து கொள்வது, மனோதிடத்தை எவ்வாறு அடைவது, குழு உணர்வை எப்படி உருவாக்குவது, எப்படி பரஸ்பர உதவும் தன்மையை ஏற்படுத்துவது போன்றன. வணிக மேலாண்மையோடு தொடர்புடைய பயிற்சி நிகழ்ச்சிகளில், ஒட்டுமொத்த ஆளுமை மேம்பாட்டுக்கும், பரஸ்பர திறன்களின் மேம்பாட்டுக்கும், இப்போதெல்லாம் நமது பாரம்பரிய விளையாட்டுகளைப் பயன்படுத்தி வருவதை என்னால் பார்க்க முடிகிறது. முழுமையான மேம்பாட்டுக்கு நமது பாரம்பரிய விளையாட்டுகள் உதவிகரமாக இருக்கின்றன, மேலும் இந்தவகையான விளையாட்டுகளை விளையாட வயது ஒரு தடையல்ல. குழந்தைகள் முதல் பெரியவர் வரை, அனைவரும் சேர்ந்து விளையாடும் போது, தலைமுறை இடைவெளி என்கிறோமே, அது மாயமாய் மறைந்து விடுகிறது. கூடவே நாம் நமது கலாச்சாரம், பாரம்பரியங்களை அறிந்து கொள்ள முடிகிறது. பல விளையாட்டுகள் சமூகம், சுற்றுச்சூழல் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வை அளிக்கின்றன. சில வேளைகளில் நமது விளையாட்டுகள் வழக்கொழிந்து விடுமோ என்ற கவலையும் ஆட்கொள்கிறது; இதனால் நாம் விளையாட்டுகளை மட்டும் இழக்க மாட்டோம், நமது குழந்தைப் பருவத்தையும் சேர்த்தே தொலைக்க நேர்ந்து விடும். பிறகு நாம் இந்தக் கவிதையைத் தான் கேட்டுக் கொண்டிருக்கும் படி ஆகும் -

यह दौलत भी ले लो

यह शौहरत भी ले लो

भले छीन लो मुझसे मेरी जवानी

मगर मुझको लौटा दो बचपन का सावन

वो कागज की कश्ती, वो बारिश का पानी

என் செல்வத்தையும் எடுத்துக் கொள்

என் பெரும்புகழையும் எடுத்துக் கொள்

என்னிடமிருந்து என் இளமையையும் பறித்துக் கொள்

ஆனால் என் சிறுவயது மழையை மட்டும் கொடுத்துவிடு அந்தக் காகிதக் கப்பல்கள், அந்த மழைக்கால நீர்த்துளிகள்.

நாம் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டு மட்டுமே இருக்கும் நிலை ஏற்படலாம்; ஆகையால் நமது பாரம்பரியமான விளையாட்டுகளை நாம் எந்தக்காலத்திலும் இழக்கக்கூடாது, இன்று பள்ளிகளில், குடியிருப்புப் பகுதிகளில், இளையோர் வட்டங்களில் எல்லாம் இவற்றுக்கு ஊக்கம் கொடுப்பது மிகத் தேவையானதாக இருக்கிறது. கூட்டத்தினராகச் சேர்ந்து நாம் பாரம்பரிய விளையாட்டுகளின் மிகப்பெரிய சேகரிப்பை உருவாக்கலாம். இந்த விளையாட்டுகள் பற்றிய காணொளிகளை உருவாக்கலாம், இவற்றில் விளையாட்டுகளின் விதிகள், விளையாடும் முறைகள் போன்றவற்றை வெளிப்படுத்தலாம். அனிமேஷன் படங்களை உருவாக்கலாம், தெருக்களிலும் சந்துகளிலும் விளையாடப்படும், நமது புதியதலைமுறையினருக்கு விநோதமாகத் தோன்றும் இந்த விளையாட்டுகளை அவர்களும் பார்ப்பார்கள், விளையாடுவார்கள், வளர்ச்சியடைவார்கள்.

என் உளம்நிறைந்த நாட்டுமக்களே, வருகின்ற ஜூன் 5ஆம் தேதி, பாரதம் அதிகாரப்பூர்வமாக உலக சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இது பாரதத்திற்கு ஒரு மகத்துவம்வாய்ந்த சாதனை; பருவநிலைமாற்றத்தைக் குறைக்கும் திசையில், வளர்ந்துவரும் பாரதத்தின் பங்களிப்பிற்கு உலகில் அங்கீகாரம் கிடைத்துவருகிறது என்பதற்கு இதுவே சான்று. இந்தமுறை பீட் பிளாஸ்டிக் பொல்யூஷன் (BEAT PLASTIC POLLUTION) என்பதே கருப்பொருளாக இருக்கிறது. உங்கள் அனைவரிடமும் நான் விடுக்கும் விண்ணப்பம் என்னவென்றால், இந்தக் கருப்பொருளையொட்டி, இதன் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு, நாமனைவரும் பாலித்தீன், குறைந்த தரமுள்ள பிளாஸ்டிக் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் முடிவை மேற்கொள்வோம், பிளாஸ்டிக் மாசு இயற்கை மீதும், வன உயிரினங்கள் மீதும், நமது உடல் நலத்தின் மீதும் ஏற்படுத்தும் எதிர்மறை தாக்கத்தைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோம்.

உலக சுற்றுச்சூழல் தினத்தின் இணையதளமான wed-india2018இல் நுழையுங்கள், அதிலே ஏராளமான ஆலோசனைகள் மிக சுவாரசியமான வகையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன – காணுங்கள், தெரிந்து கொள்ளுங்கள், அவற்றை உங்கள் தினசரி வாழ்க்கையில் ஏற்றுநடக்க முயலுங்கள். கடும் வெப்பம் நிலவும் போது, வெள்ளம் ஏற்படும் போது, மழை நிற்காமல் பெய்யும் போது, தாங்கமுடியாத குளிர் அடிக்கும் போது, அனைவரும் வல்லுநர்களாக மாறி விடுகிறார்கள், உலக வெப்பமயமாதல், சூழல்மாற்றம் போன்றவை பற்றியெல்லாம் பேசுவார்கள்; ஆனால் பேசுவதால் ஆகப்போவது ஏதாவது உண்டா? இயற்கையைப் புரிந்துணர்வோடு அணுக வேண்டும், இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பது நமது இயல்பாக மாற வேண்டும், நமது பழக்கவழக்கங்களில் ஊறிப்போக வேண்டும். கடந்த சில வாரங்களாகவே தேசத்தின் பல பகுதிகளில் புழுதிப்புயலும், தீவிரமான காற்று வீசியதையும், கூடவே கடும்மழை பெய்ததையும் நாம் பார்த்தோம், இது இயல்பான பருவநிகழ்வல்ல. இவற்றால் உயிரிழப்பு கூட ஏற்பட்டிருக்கிறது. இவையனைத்துமே முக்கியமாக வானிலைப் போக்கின் மாற்றத்தின் விளைவுதான்; நமது கலாச்சாரம், நமது பாரம்பரியம் ஆகியன இயற்கையோடு நம்மைப் போரிடக் கற்றுக் கொடுக்கவில்லை. நாம் இயற்கையோடு இசைவாக வாழ வேண்டும், இயற்கையோடு இணைந்து இருக்க வேண்டும். காந்தியடிகள் தனது வாழ்க்கை முழுவதும், தனது ஒவ்வொரு அடியிலும் இந்த விஷயத்தை முன்னிறுத்தி வந்தார். இன்று பாரதம், சூழல்நீதி (climate justice) பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது. பாரதம் சி.ஓ.பி.21 ( Cop21), பாரீஸ் உடன்படிக்கை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றியது. சர்வதேச சூரியசக்திக் கூட்டமைப்பு வாயிலாக, உலகம் முழுவதையும் ஒன்றிணைக்கிறோம் என்றால், இதன் அடிநாதமாக விளங்குவது காந்தியடிகள் கண்ட கனவை மெய்ப்பிக்க வேண்டும் என்ற உணர்வு தான். இந்த சுற்றுச்சூழல் தினத்தன்று நாமனைவரும் எப்படி நமது பூமியை தூய்மையாகவும், பசுமையானதாகவும் வைத்திருக்க முடியும், எந்த வகையில் இந்த திசையில் நாம் முன்னேற முடியும், நூதனமாக என்ன செய்ய முடியும் என்ற நோக்கில் நமது சிந்தனைக் குதிரைகளைத் தட்டி விடுவோம். மழைக்காலம் வரவிருக்கிறது, இந்தமுறை நாம் மரம்நடுதலை நமது இலக்காகக் கொண்டு செயல்படுவோம்; மரம் நடுவதோடு மட்டுமே நிறுத்திக் கொள்ளாமல், அது வளர்ந்து பெரியதாகும் வரை அதைப் பராமரிக்கும் வழிவகைக்கு ஏற்பாடு செய்வோம்.

என் உள்ளம்நிறைந்த நாட்டுமக்களே, குறிப்பாக என் இளைய நண்பர்களே! இப்போதெல்லாம் நீங்கள் ஜூன் மாதம் 21ஆம் தேதியை நன்றாகவே நினைவு வைத்திருக்கிறீர்கள், நீங்கள் மட்டுமல்ல, நாம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஜூன் 21ஆம் தேதியை நினைவில் இருத்திக் கொள்கிறது. உலகம் முழுவதிலும் ஜூன் மாதம் 21ஆம் தேதி சர்வதேச யோகக்கலை தினமாகக் கொண்டாடப்படுகிறது, இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக ஆகி விட்டது, பல மாதங்கள் முன்பிருந்தே மக்கள் தயாரிப்பு முஸ்தீபுகளில் ஈடுபடத் தொடங்கி விடுகிறார்கள். இப்போது ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று வரவிருக்கும் சர்வதேச யோகக்கலை தினத்தைக் கொண்டாட ஏற்பாடுகள் உலகெங்கிலும் பலமாக நடைபெற்று வருகின்றன என்ற செய்திகளைக் கேள்விப்பட முடிகிறது. ஒற்றுமைக்காக யோகக்கலை, நல்லிணக்கம் நிறைந்த சமூகம் தான் இது அளிக்கும் செய்தி, இதைக் கடந்த சில ஆண்டுகளாக உலகம் மீண்டும் மீண்டும் அனுபவித்திருக்கிறது. சம்ஸ்கிருதத்தின் மகத்தான கவி பர்த்ருஹரி, பல நூற்றாண்டுகள் முன்பு எழுதப்பட்ட அவரது சதகத்ரயத்தில்,

धैर्यं यस्य पिता क्षमा च जननी शान्तिश्चिरं गेहिनी

सत्यं सूनुरयं दया च भगिनी भ्राता मनः संयमः।

शय्या भूमितलं दिशोSपि वसनं ज्ञानामृतं भोजनं

एते यस्य कुटिम्बिनः वद सखे कस्माद् भयं योगिनः।।

தைர்யம் யஸ்ய பிதா க்ஷமா ச ஜன்னீ சாந்திஸ்சிரம் கேஹினீ ஸத்யம் சூனுரயம் தயா ச பகினீ ப்ராதா மன: சம்யம: ஷய்யா பூமிதலம் திசோபி வஸனம் ஞானாம்ருதம் போஜனம் ஏதே யஸ்ய குடும்பின: வத ஸகே கஸ்மாத் பயம் யோகின:

பல நூற்றாண்டுகள் முன்னரே கூறப்பட்டிருக்கும் இந்தக் கூற்றின் பொருள் – முறையாக யோகம் பயில்வதன் பலனாக சில நல்ல குணங்கள் நெருங்கிய உறவுகளைப் போலவும், நண்பர்களைப் போலவும் மாறி விடுகின்றன. யோகம் பயில்வதன் மூலம் மனோதைரியம் பிறக்கிறது, இது எப்போதும் தந்தையைப் போல நம்மைக் காக்கிறது. பொறுத்தல் உணர்வு பிறக்கிறது, இது குழந்தைகளிடத்தில் அவற்றின் தாயிற்கு இருப்பதைப் போல இருக்கிறது, மன அமைதி நமது நீடித்த நண்பனாக மாறுகிறது. தொடர்ந்து யோகம் பயில்வதன் மூலம் வாய்மை நமது குழந்தைகளாகவும், தயை நமது சகோதரியாகவும், மனக்கட்டுப்பாடு நமது சகோதரனாகவும், பூமியே நமது படுக்கையாகவும், ஞானம் நமது பசியைப் போக்குவதாகவும் ஆகின்றன என்கிறார் பர்த்ருஹரி. இத்தனை குணங்களும் ஒருவனுடைய தோழர்களானால், அந்த யோகியானவர் அனைத்துவகையான அச்சங்கள் மீதும் வெற்றிவாகை சூடுகிறார். யோக பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள், ஆரோக்கியமான, சந்தோஷமான, நல்லிணக்கம் நிறைந்ததொரு தேசத்தை நிர்மாணிப்போம் வாருங்கள் என்று மீண்டும் ஒருமுறை நான் அனைத்து நாட்டுமக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

என் பாசமிகு நாட்டுமக்களே! இன்று மே மாதம் 27ஆம் தேதி. பாரதத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவுநாள். நான் பண்டித்ஜிக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மே மாதம் மேலும் ஒருவரோடு தொடர்புடையது, அவர் தான் வீர சாவர்க்கர். 1857ஆம் ஆண்டு, இதே மே மாதத்தின் போது தான் நம் நாட்டினர் ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தங்களின் பலத்தை வெளிப்படுத்தினார்கள். தேசத்தின் பல பாகங்களில் நமது வீரர்களும் விவசாயிகளும், அநீதிக்கு எதிராக அணி திரண்டு, தங்கள் தீரத்தை வெளிப்படுத்தினார்கள். இதில் துக்கமளிக்கும் விஷயம் என்னவென்றால், நீண்ட காலமாக, 1857ஆம் ஆண்டு நடந்தவற்றை கலகம் என்றோ, சிப்பாய்க் கலகம் என்றோ கூறிக் கொண்டிருந்தார்கள். உண்மையில் அந்த நிகழ்வைக் குறைத்து மட்டும் மதிப்பிடவில்லை, நமது சுயமரியாதையையும் சுயகௌரவத்தையும் அவமானப்படுத்த செய்யப்பட்ட முயற்சி தான் இது. 1857ஆம் ஆண்டு நடந்தது, வெறும் கலகமல்ல, அது முதல் சுதந்திரப் போர் என்று அச்சமேதும் இன்றி எழுதியவர் வீர சாவர்க்கார். சாவர்க்காருடன் இணைந்து பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் லண்டனில் உள்ள India Houseஇல், இதன் 50ஆம் ஆண்டு நிறைவை கோலாகலமாகக் கொண்டாடினார்கள். எந்த மாதத்தில் நமது முதல் சுதந்திரப் போர் துவங்கியதோ, அதே மாதத்தில் தான் வீர சாவர்க்காரும் பிறந்தார் என்பதும்கூட ஒரு அற்புதமான தற்செயல் நிகழ்வு. சாவர்க்கார் அவர்களிடம் ஆளுமைச் சிறப்புகள் நிறைந்திருந்தன; ஆயுதங்கள்-சாஸ்திரங்கள் இரண்டையும் பூண்பவர், கையாள்வதில் நிபுணர். பொதுவாக அவரது வீரத்திற்காகவும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அவரது போராட்டத்திற்காகவும் வீர சாவர்க்காரை நாம் நன்கறிவோம்; ஆனால் இவையனைத்தையும் தவிர, அவர் சொல்வேகம் நிறைந்த அற்புதமான கவிஞர், சமூக சீர்திருத்தவாதி, எப்போதும் நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றுக்கு வலுகூட்டி வந்திருக்கிறார். சாவர்க்கார் அவர்களைப் பற்றி நமக்குப் பிரியமான மதிப்பிற்குரிய அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்கள் கூறுவது என் நினைவிற்கு வருகிறது. சாவர்க்கார் என்றால் கூர்மை, சாவர்க்கார் என்றால் தியாகம், சாவர்க்கார் என்றால் தவம், சாவர்க்கார் என்றால் கொள்கை, சாவர்க்கார் என்றால் சீரிய சிந்தனை, சாவர்க்கார் என்றால் முதிர்ச்சி, சாவர்க்கார் என்றால் அம்பு, சாவர்க்கார் என்றால் வாள் என்பார். அடல் அவர்கள் எத்தனை நேர்த்தியாக, அருமையாக சாவர்க்காரை வர்ணித்திருக்கிறார் பாருங்கள்!! சாவர்க்கார், கவிதை, புரட்சி இரண்டையும் கைக்கொண்டு பயணித்தார். புரிந்துணர்வு உள்ள கவிஞர் என்பதோடுகூட, அவர் தைரியம் நிறைந்த புரட்சியாளராகவும் திகழ்ந்தார்.

என் நெஞ்சுக்கினிய சகோதர சகோதரிகளே! நான் டிவியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ராஜஸ்தானத்தின் சீகரின் குடிசை வீடுகளில் நமது ஏழைப் பெண்கள் வசிக்கிறார்கள். நமது இந்தப் பெண்கள் குப்பைகளை அகற்றி வந்தார்கள், யாசித்து வந்தார்கள். இன்று இவர்கள் தையல் திறனை மேம்படுத்திக் கொண்டு, ஏழைகளுக்கான உடைகளைத் தைத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கிருக்கும் பெண்கள், இன்று தங்கள் மற்றும் தங்களின் குடும்பத்தாரின் உடைகளைத் தவிர, சாதாரண மற்றும் உயர்ரகத் துணிகளைத் தைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் பயின்று வருகிறார்கள். நமது இந்தப் பெண்கள் சுயசார்புடையவர்களாகி விட்டார்கள். கௌரவமாகத் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், தத்தமது குடும்பத்தினருக்குப் பெரும்பலமாகத் திகழ்ந்து வருகிறார்கள். ஆசைகளும் எதிர்பார்ப்பும் நிறைந்த நமது இந்த பெண் திலகங்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற மனவுறுதி இருந்தால், அதற்காக நீங்கள் மனதில் தீர்மானித்துக் கொண்டால், அனைத்துத் தடங்கல்களையும் தாண்டி வெற்றியைப் பெறலாம்; இது சீக்கர் பற்றிய விஷயம் மட்டுமல்ல, இவை போன்ற நிகழ்வுகள் நம் தேசத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் காணக் கிடைக்கின்றன. உங்களைச் சுற்றிப் பார்வையைத் திருப்புங்கள், எப்படிப்பட்ட இடர்ப்பாடுகளையெல்லாம் மக்கள் எதிர்கொண்டு வெற்றி பெற்று வருகிறார்கள் என்பது உங்களுக்கே விளங்கும். நாம் ஏதாவது ஒரு தேநீர்க்கடைக்குச் சென்றால், அங்கே தேநீரைச் சுவைப்பதோடு, அங்கே இருப்பவர்களிடத்தில் பேச்சுக் கொடுத்து உரையாடலில் ஈடுபடவும் செய்வோம், இல்லையா. உரையாடல் அரசியல் தொடர்பானதாகவோ, சமூகம் பற்றியதாகவோ, திரைப்படங்கள் சம்பந்தப்பட்டதாகவோ, விளையாட்டு, விளையாட்டு வீரர்கள், தேசத்தின் பிரச்ச்ச்சினைகள் என எவை பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். பிரச்சினையும், பிரச்சினைக்கான தீர்வும் பற்றி உரையாடல் அமைந்திருக்கும்; பெரும்பாலும் இவை உரையாடலுடனேயே நின்று விடுகின்றன. ஆனால் சிலரோ, தங்கள் செயல்களில், தங்கள் கடும் உழைப்பு மற்றும் முனைப்பு வாயிலாக மாற்றத்தைக் கொண்டுவரும் திசையில் முன்னேறிச் செல்கிறார்கள், இதற்கு வடிவம் கொடுக்கிறார்கள். மற்றவர்களின் கனவுகளைத் தங்களுடையதாகவே கருதி, அவற்றை நிறைவேற்றத் தங்களையே அர்ப்பணிக்கும் சிலர் பற்றிய கதை தான், ஒடிஷாவின் கட்டக் நகரின் குடிசையில் வசிக்கும் டி. பிரகாஷ் ராவ் அவர்களுடையது. நேற்றுத்தான் டி. பிரகாஷ் ராவ் அவர்களைச் சந்திக்கும் பேறு கிடைத்தது. டி. பிரகாஷ் ராவ் அவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக நகரத்தில் தேநீர் விற்றுக் கொண்டிருந்தார். தேநீர் விற்பனை செய்யும் எளியதொரு மனிதர் இன்று, 70க்கும் மேற்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையில் கல்வி தீபத்தை ஏற்றி வருகிறார் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியத்தில் மூழ்கிப் போவீர்கள். அவர் குடிசைகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக ஆஷா ஆஷ்வாஸன் என்ற பெயர் கொண்ட ஒரு பள்ளியைத் தொடங்கினார். ஒரு ஏழை தேநீர் விற்பனையாளர் தனது 50 சதவீத வருமானத்தை இந்தப் பள்ளிக்கே செலவு செய்து வருகிறார். பள்ளிக்கு வரும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வி, ஆரோக்கியம், உணவு என அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறார். நான் டி. பிரகாஷ் ராவ் அவர்களின் அயராத உழைப்பு, அவரது முனைப்பு, ஏழைப் பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றி, புதிய திசையேற்படுத்திக் கொடுப்பதற்காக அவருக்கு பலபல பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் வாழ்வினில் இருக்கும் இருளை இவர் நீக்கியிருக்கிறார். தமஸோ மா ஜோதிர்கமய என்ற வேத வாக்கியத்தை யார்தான் அறிய மாட்டார்கள்; ஆனால் அதைச் செய்து காட்டிய ஒருவர் உண்டென்றால் அவர் டி. பிரகாஷ் ராவ் அவர்கள் தான். அவரது வாழ்க்கை நம் அனைவருக்கும், சமுதாயத்திற்கும், நாடு முழுமைக்கும் ஒரு கருத்தாக்கமாக இருக்கிறது. உங்களைச் சுற்றியும் இப்படிப்பட்ட உத்வேகம் அளிக்கும் சம்பவங்கள் இருக்கலாம். எண்ணில்லா நிகழ்ச்சிகள் நடைபெறலாம். நாமனைவரும் ஆக்கப்பூர்வமான உணர்வுகளை மனதில் தாங்கி முன்னேறிச் செல்வோம் வாருங்கள்!!

ஜூன் மாதத்தில் எந்த அளவுக்கு அதிக வெப்பம் நிலவுகிறது என்றால், மழை எப்போது வருமோ என்று ஏங்கத் தொடங்குகிறார்கள், இந்த எதிர்பார்ப்பை மனதில் தாங்கி வானத்தை நோக்கிப் பார்த்தவண்ணம் இருப்பார்கள். இன்னும் சில நாட்களில் பிறைச்சந்திரனின் வருகைக்காகவும் காத்திருப்பார்கள். சந்திரப்பிறை தெரிகிறது என்று சொன்னால், ஈகை பண்டிகையைக் கொண்டாடலாம் என்று பொருள். ரமலான் மாதத்தில் உபவாஸம் மேற்கொண்ட பின்னர், ஈகை பெருநாள், கொண்டாட்டத்தைக் குறிப்பதாக அமைந்திருக்கிறது. அனைவரும் ஈகை பெருநாளை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடுவீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த வேளையில் குழந்தைகளுக்குச் சிறப்பான வகையில் நல்ல ஈகை பெருநாள் பரிசு கிடைக்கும். இந்த ஈகை பண்டிகை, நமது சமுதாயத்தில் நல்லிணக்க உறவுகளுக்கு மேலும் உறுதிப்பாட்டை அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துகள்!

எனதருமை நாட்டுமக்களே! உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள். மீண்டும் ஒருமுறை அடுத்த மாதம் மனதின் குரலில் சந்திப்போம் நண்பர்களே. வணக்கம்!!
 

----



ரெசின்



(Release ID: 1533618) Visitor Counter : 493