சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கேரளாவில் நிப்பா வைரஸ் பாதிப்புகள் குறித்து திரு.ஜே.பி.நட்டா ஆய்வு

Posted On: 22 MAY 2018 3:02PM by PIB Chennai

நிப்பா வைரஸ் காய்ச்சல் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்பி மக்கள் அச்சமடைய வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ஜே.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.

கேரளாவில் நிப்பா வைரஸ் காய்ச்சலால் ஏற்பட்டதாக கூறப்படும் பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.ஜே.பி.நட்டா உன்னிப்பாக கவனித்து வருகிறார். மத்திய சுகாதாரத்துறை செயலர் பிரீத்தி சுகன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கேரள மாநிலத்தில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சரின் உத்தரவுக்கிணங்க தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் பல்முனை மருத்துவக் குழு தற்போது கேரளாவில் முகாமிட்டு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

நிப்பா வைரஸ் காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்ட பேரம்ப்ரா என்னும் இடத்திற்கு மத்திய குழுவினர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பத்தினர் தண்ணீர் எடுக்கும் கிணற்றில் ஏராளமான வௌவால்கள் இருந்ததை அந்தக் குழுவினர் கண்டனர். அதில் சில வௌவால்கள் பிடிக்கப்பட்டு, நோய் பரவியதற்கு அவைதான் காரணமா? என்பதை கண்டறிய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த இடத்தில் 60 வெவ்வேறு தடயங்கள், மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில் வைரஸ் காய்ச்சல் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கோழிக்கோடு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


(Release ID: 1533060)
Read this release in: English , Hindi , Malayalam