குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

நகரங்கள் பொருளாதார வளர்ச்சியின் உந்துவிசை. நகரங்களில் வாழும் மக்களுக்கு போதுமான வீட்டுவசதி செய்து தருவது அவசியம் : குடியரசுத் துணைத்தலைவர்

Posted On: 17 MAY 2018 1:54PM by PIB Chennai

நகரங்கள் பொருளாதார வளர்ச்சியின் உந்துவிசை: நகரங்களில் வாழும் அனைத்து தரப்பு  மக்களுக்கும் போதுமான வீட்டுவசதி மற்றும் இதர அத்தியாவசிய வசதிகளை செய்து தருவது அவசியம் என்று குடியரசுத் துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு கூறியிருக்கிறார். புதுதில்லியில் இன்று (17.05.2018) நவ்ரோஜி நகரில் உலக வர்த்தக மையத்திற்கும், நேதாஜி நகர் பொதுப்பிரிவு குடியிருப்பு மறுமேம்பாட்டு திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டி அவர் பேசினார். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு.ஹர்தீப்சிங் பூரி மற்றும் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தாம் வீட்டு வசதி மற்றும் நகரப்புற விவகாரங்கள் அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட இந்தத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதில் மிகுந்த பெருமையும், மன நிறைவும் அடைவதாக குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.

அனைத்து குடிமக்களுக்கும் வீட்டுவசதி செய்து தருவதுடன் பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு அவர்களது தேவைக்கு ஏற்ப நல்ல அடிப்படை வசதிகளை உருவாக்குவது அவசியம் என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, ஆதாரங்களைப் பேணி மேம்பாட்டை நிலைத்தத் தன்மை கொண்டதாக அமைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பசுமைக் கட்டடங்களை கட்டவேண்டியது அவசியம் என்றும், குறைவாக உள்ள வளங்களையும், இடங்களையும் அதிகபட்சம் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், எரிசக்தித் திறன் கொண்ட நவீன போக்குவரத்துத் தீர்வுகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் குடியரசுத் துணைத்தலைவர் கூறினார். பசுமைக் கட்டடங்கள் மற்றும் திறன்மிக்க சக்தி பயன்பாடு கொண்ட கட்டடங்கள் என்ற கருத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார். இதுபற்றிய விழிப்புணர்வை குடிமக்களிடையே உருவாக்க வேண்டும் என்றும் திரு. வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார்.

குடியரசுத் துணைத் தலைவரின் முழுமையான உரைக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

                                ----



(Release ID: 1532675) Visitor Counter : 163


Read this release in: English , Marathi