பிரதமர் அலுவலகம்

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 10 MAR 2018 5:38PM by PIB Chennai

மதிப்பிற்குரிய சுமித்ராஜி, எனது அமைச்சரவை சகா திரு. ஆனந்த்குமார், மக்களவைத் துணைத் தலைவர் திரு. தம்பிதுரை, மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்றங்களின் உறுப்பினர்கள், முத்த அரசியல் தலைவர்கள் அனைத்துக் கட்சியினருக்கு வணக்கம்..

 

முதற்கண் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த திருமதி சுமித்ராஜிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் எல்லோரும் நமது பெற்றோர்களையும் அழைத்துக் கொண்டு ஏதோ புனிதப் பயணம் மேற்கொள்வதைப் போன்ற உணர்வு எனக்குத் தோன்றுகிறது. புனிதப் பயணம் மேற்கொண்ட பிறகு, சில தீர்மானங்களை நாம் மேற்கொள்வதுண்டு.

 

இன்று நீங்கள் இங்கே கூடியிருப்பது ஏதோ ஒரு நிகழ்ச்சிக்காக மட்டுமல்ல. நாம் எங்கே அமர்ந்திருக்கிறோம் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்த அவையில் நான் முதல் முறையாக 2014ம் ஆண்டு மே மாதம் நுழைந்தேன். அதற்கு முன் இந்த நாடாளுமன்ற மத்திய மண்டபத்திற்கு நான் வந்ததே இல்லை. முதலமைச்சர்களுக்கு இங்கே அனுமதி உண்டு. அதற்குத் தடையில்லை. ஆனால், எனக்கு இங்கே வர சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. 2014ம் ஆண்டு தேர்தலில் பொதுமக்கள் எங்களது கட்சியைத் தேர்ந்தெடுத்த பிறகு, நாடாளுமன்ற ஆளும் கட்சி தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த மத்திய மண்டபத்துக்கு வந்தேன்.

 

இந்த மத்திய மண்டபத்தில்தான் பல ஆண்டுகளுக்கு முன் அரசியல் நிர்ணய சபையின் ஆரம்பக் கூட்டம் நடைபெற்றது. பண்டித நேரு, பாபா சாஹிப் அம்பேத்கர், சர்தார் வல்லப பாய் படேல், ராஜகோபாலாசாரியார், டாக்டர் ராஜேந்திர பிரசாத், கே.எம். முன்ஷி ஆகிய பெரியவர்கள் அமர்ந்து பணியாற்றி இடத்தில் நீங்கள் எல்லோரும் அமர்ந்திருக்கிறீர்கள்.

 

அத்தகைய மாமனிதர்கள் நம் நாட்டுக்கே உத்வேகம் அளித்த பெருந்தகைகள் ஆவர். அவர்கள்தான் இங்கே அந்தக் காலத்தில் அமர்வார்கள். விவாதிப்பார்கள். கலந்து பேசுவார்கள். அதை நினைவுகூர்வதே ஓர் அழகான உணர்வாகும்.

 

நமது அரசியல் சாசனத்தை வடிவமைத்தோர், குறிப்பாக பாபா சாஹிப் அம்பேத்கர் நமது அரசியல் சாசனம் ஒரு சமூக ஆவணம் என்று வருணித்தார். அது உண்மை. நமது அரசமைப்புச் சட்டம் உலகிலேயே சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. அதற்குக் காரணம் நம் நாடு வெவ்வேறு இன, மதப் பிரிவுகளைக் கொண்டதாலோ பல உரிமைகளை உடையதாலோ, பலவகையான பணி நிலைமைகளைக் கொண்டிருப்பதாலோ அல்ல. சமூக அவலங்களின் பிடியிலிருந்து விடுபட்டதால் நம் நாடு பெற்ற சுதந்திரத்தின் இன்பத் தேன் நாடு முழுவதும் பரவியிருப்பதால்தான் நமது அரசியல் சட்டத்துக்கு உலக அளவில் உயர்ந்த இடம் கிடைத்துள்ளது. அதுதான் சமூக நீதியாகும்.

 

சமூக நீதி பற்றி எப்போதெல்லாம் பேசுகிறோமோ அப்போது சமூகத்தின் நிலை குறித்து அறியவேண்டும். ஒரு வீட்டில் மின்சாரம் இருந்து, அடுத்த வீட்டில் மின்சாரம் இல்லையென்றால், அந்த வீட்டுக்கும் நாம் மின்சாரம் வழங்க வேண்டியது சமூக நீதி இல்லையா? என்று சொல்லுங்கள். அதைப் போல் ஒரு கிராமத்தில் மின்சாரம் இருந்து அடுத்த கிராமத்தில் இல்லாவிட்டால், அங்கேயும் மின்சார விநியோகம் செய்ய வேண்டியது சமூக நீதியா இல்லையா? ஒரு மாவட்டம் வளர்ச்சி பெற்று மற்றொரு மாவட்டம் வளர்ச்சி அடையாவிட்டால், அந்த மாவட்டமும் வளர்ச்சி பெற்ற மாவட்டத்தைப் போல் முன்னேறுவதை நாம் உறுதி செய்ய வேண்டுமா?

 

இத்தகைய கடமைகளை நிறைவேற்றுவதற்கு தூண்டுகோலாக இருப்பதுதான் சமூக நீதி. நாடு ஒருவேளை எதிர்பார்த்த உயரத்தை எட்ட இயலாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஒரு மாநிலத்தில் ஐந்து மாவட்டங்கள் முன்னேற்றம் அடைந்தால், மற்ற மாவட்டங்களும் அதைப் போலவே முன்னேற்றம் பெறுவது சாத்தியமானதுதான். ஒரு மாநிலத்தில் சில மாவட்டங்கள் நன்றாகச் செயல்பட்டால், மாநிலம் முழுவதுமே செயல்பட முடியும் என்றுதான் அர்த்தம்.

 

நம் நாட்டு மக்களின் இயல்பு என்ன? பள்ளிப் படிப்பின்போது, புவியியலில் நாம் வலுவாக இல்லாவிட்டால், கணிதப் பாடத்தில் இன்னும் அதிகமான மதிப்பெண் பெறுவதற்குப் பாடுபடுவோம். அப்போதுதான், எல்லா மதிப்பெண்ணையும் சேர்த்து ஒட்டுமொத்த தேர்வில் முதலிடம் பெற வாய்ப்பு ஏற்படும். இந்த மனோபாவம்தான் நம்மிடம் அதிகரித்து வருகிறது. மாநிலங்களின் நிலையிலும் இந்திய அரசின் நிலையிலும் இதே போன்று இருந்தால் என்ன செய்வோம்? அதிகமாக உற்பத்தி செய்வோர் மேலும் மேலும் உற்பத்தியை அதிகரிக்கிறார்கள். இதன் விளைவாக, நல்ல பலன்களைத் தருவோரே தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைந்ததும் நாம் மகிழ்ச்சி அடைந்துவிடுகிறோம். ஆனால், பின்தங்கியவர்கள் தொடர்ந்து பின்னால்தான் இருக்கிறார்கள். எனவே, நமது வளர்ச்சிக்கான உத்தியில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

 

கூட்டு சேர்ந்து செயல்படுவதன் மூலம் போட்டித் தன்மைக்கான சூழல் மாநிலங்களில் உருவாக்கப்படுவது நல்லது. இதை நான் ஏற்கிறேன்.

 

இங்கே மாநிலங்களையும் நாட்டையும் சார்ந்த பிரச்சினைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து பேசுவது கூட்டாட்சிக்கான நடைமுறையில் உள்ள உதாரணங்கள் ஆகும். இதன் மூலம் கூட்டாட்சி ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது.

 

மாநிலங்களுக்கு இடையில் ப்பீடுகள் தேவைதான். இந்தக் கூட்டாட்சி அமைப்பில் பின்தங்கிய மாவட்டங்கள் மீதான விமர்சனம் சரிதான். அதே சமயம் போட்டித் தன்மைக்கான சூழலும் முன்னேற்றத்துக்கான சூழலும் உருவாக்கப்பட்டால், இப்படிச் செயல்படுவது நிச்சயம் சரிதான்.

 

ஆனால், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டுமானால், இதே மாதிரி செயல்படுவது  பலன் தராது”

 

இவ்வாறு பிரதமர் பேசினார்.

 

தூய்மை இயக்கத்தைப் பொறுத்தவரை தூய்மை தர வரிசைகளுக்காக நகரங்கள், பெருநகரங்கள் அகியவற்றினிடையே போட்டி உருவாக்கப்பட்டது. பெருநகரம் ஏதேனும் விடுபட்டால் கிராமங்களில் உள்ள மக்கள் இவ்வாறு பின் தங்கியமைக்கான காரணங்களுக்கு எதிராக குரல் எழுப்புகிறார்கள். இயக்கம் மற்றும் போட்டி தொடங்கிவிட்டது.

இந்தத் தலைப்புபற்றி யோசித்தால் நாடு நல்ல வளர்ச்சியை கண்டிருந்தபோதும் ஏன் அது மேலும் வளரவில்லை என ஆச்சரியப்பட்டிருப்பீர்கள். நிலவரங்கள் ஏன் மாறவில்லை? எனவே நாட்டின் மாவட்டங்களை பகுத்து தொகுப்பதற்கான திட்டம்பற்றி ஆலோசிப்போம். அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் அடிப்படையில் சில அளவுகளையும் பணிகளையும் நிர்ணயித்தோம். சில புள்ளி விவரங்கள் 2011 – ம் ஆண்டு நிபந்தனைகள் சார்ந்தவை. அதற்குப் பிறகு கணக்கெடுப்பு ஆய்வு ஏதும் நடைபெறவில்லை. எனினும் கிடைக்கும் விவரங்களிலிருந்து 48 அளவுகளை கண்டறிந்து சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு கவனம் செலுத்த வேண்டும். அனுபவத்தின் அடிப்படையில் 5 அல்லது 10 அளவுகளில் பின்தங்கியுள்ள மாவட்டங்கள் இதர அளவுகளிலும் பின்தங்கி இருப்பதை கண்டு பிடித்தோம்.

சில சமயங்களில் 10 மாவட்டங்கள் முன்னோக்கி வளரும் நிலையில் 5 மாவட்டங்கள் பின் தங்கி இருந்தன. இந்த பின்தங்கிய மாவட்டங்கள் வளரும் மாவட்டங்களை பின்நோக்கி இழுக்கத் தொடங்கின. எனவே அனைத்து மாவட்டங்களும் மேம்பாட்டை நோக்கி முன்னேற வேண்டியது இன்றியமையாதது ஆகிறது. குறிப்பிட்ட அளவுகளில் கவனம் செலுத்த வேண்டிய மாவட்டங்களை அடையாளம் காணுவது அவசியமாகிறது. இத்தகைய பின்னணிப் பணிகள் ஓராண்டகாலமாக நடைபெற்று வருகின்றன. விவாதங்களும் கூட்டங்களும் நடைபெற்றன. பல்வேறு நிலைகளில் அடையாளம் காணப்பட்டது. பின்னர் அடையாளம் காணப்பட்ட 115 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியாளர்கள் இங்கு வரவழைக்கப்பட்டனர். இவற்றின் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக 2 நாள் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அரசியல் பற்றிப் பேசினால் நாங்கள் எந்த வகையிலும் உங்களில் மாறுபட்டவர்கள் அல்ல. நாம் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள். மக்களின் இயல்புகள் என்ன? சரி, பட்ஜெட் பற்றிச் சொல்லுங்கள்: நிதி எங்கே சென்றது? கவனமாகப் பார்த்தீர்கள் என்றால் ஒரு மாவட்டம் கிடைக்கும் அதே ஆதாரங்களைக் கொண்டு முன்னேறுகின்றன என்பதை உணரலாம். அதே சமயம் இதே மாதிரி ஆதாரங்களைக் கொண்ட இதர மாவட்டங்கள் பின்தங்கி இருப்பதையும் காணலாம். எனவே ஆதாரங்கள் கிடைப்பது என்பது பிரச்சினை இல்லை எனத் தெளிவாகிறது: ஒரு வேளை ஆளுகை பிரச்சினையாக இருக்கலாம், தலைமைப் பண்பு பிரச்சினையாக இருக்கலாம, ஒருங்கிணைப்பு பிரச்சினையாக இருக்கலாம், திறம்பட்ட அமலாக்கம் பிரச்சினையாக இருக்கலாம். இந்நிலையில் இவற்றை எவ்வாறு மாற்றப் போகிறோம்? அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் இந்தப் பிரச்சினைகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் விவாதித்தனர்.

ஒரு விஷயம் என்னுடைய கவனத்துக்கு வந்தது: நான் எவரையும் குறை சொல்லுமாறு சொல்லவில்லை, ஆனால் சில விஷயங்கள் குறித்து மனந்திறந்து பேசினர். அது தவறாகாது. மாவட்ட ஆட்சித் தலைவர்களின் சராசரி வயது 27, 28, 30 ஆண்டுகளாக இருப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அவர்கள் இளவயது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். 3 அல்லது 4 ஆண்டுகளில் அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் இந்த 115 மாவட்டங்களைப் பொறுத்தவரை நான் சந்தித்த 80 சதவீதம் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் 40 வயதைத் தாண்டியவர்கள். ஒருசிலரின் வயது 45 ஆகவும் இருந்தது

இப்போது சொல்லுங்கள் 40 லிருந்து 45க்குள் வயதுள்ள அதிகாரி ஒருவர் மாவட்ட நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்றால் என்ன நடக்கும்? இவர்களது குழந்தைகள் பெரியவர்களாகியிருப்பார்கள், இந்தக் குழந்தைகளின் பள்ளி/ கல்லூரி சேர்க்கை குறித்து அவர்கள் கவலை அடைந்திருப்பார்கள். அவர்கள் பெரிய நகரத்துக்கு பணிமாற்றம் கிடைத்து நல்ல பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பது குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இரண்டாவதாக இத்தகைய மாவட்டங்களில் மாநில பணி இடங்களிலிருந்து பதவி உயர்வு பெற்றவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இப்போது அவர்கள் மாவட்டம் பின்தங்கிய நிலையில் இருப்பது குறித்து தொடர்ந்து கவலைப்படுகிறார்கள். பிரச்சினை அங்கிருந்துதான் தொடங்குகிறது. இந்த மாவட்டங்களில் இளவயதுடைய புதிதாக பணியில் சேர்ந்த அதிகாரிகளை நியமித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் நிலைமையில் மாற்றம் ஏற்படும்.

நான் முதலமைச்சர்களுடன் பேசி வருகிறேன். இது அவர்களுக்கான முக்கியச் சவால் என்றும் அவர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியம் என்றும் கூறிவருகிறேன். அதிகாரிகள் தங்களுக்குள்ளே பேசிக் கொள்கிறார்கள் – நீங்கள் அங்கே அனுப்பப்பட்டிருக்கிறீர்கள் என்றால் அத்துடன் நீங்கள் தொலைந்தீர்கள் என்றுதான் அர்த்தம்! என்ன செய்வது? அரசியல் தொடர்பு இல்லை. என்ன நடந்தது? நீங்கள் ஏன் அங்கு அனுப்பப்பட்டீர்கள்? இவைதான அவர்கள் மனத்தில் எழும் உளவியல் கேள்விகள்.
 

இப்போது சொல்லுங்கள், ஒரு மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெறுகிறது, ஆனால் அருகிலுள்ள பகுதியில் அது நன்கு நடைபெறவில்லை. என்ன குறைபாடு? ஆதாரங்களில் குறைவு உள்ளது என்பதை நான் நம்பத் தயாராயில்லை. நமக்குத் தேவைப்படுவது இயல்பூக்கம், சிறப்பான திட்டம் மற்றும் மக்கள் பங்கேற்பு. தடுப்பு ஊசி போடப்படவில்லை என்றால் நோய்கள் நுழைவதற்கு கதவைத் திறந்துவிடுகிறோம் என்று பொருள்: இந்த நோய்கள் பின்னர் அனைத்தையும் பாதிக்கத் தொடங்கிவிடுகின்றன.

பள்ளி இடைநிற்றல் – பள்ளிகள் இல்லையா, ஆசிரியர்கள் இல்லையா, கட்டிடங்கள் இல்லையா. எல்லாமே இருக்கின்றன. பட்ஜெட் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. எனினும் பள்ளி இடைநிற்றல் தொடர்ந்து காணப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் இந்த விஷயம் ஆதாரங்கள் சம்மந்தப்பட்டதே அல்ல.

இரண்டாவதாக அதிகாரிகளும் உள்ளூர் தலைமையும் பணிகளை மக்கள் இயக்க அடிப்படையில் பொது மக்கள் பங்கேற்புடன் மேற்கொண்டால் வெற்றி உடனடியாக ஏற்படுகிறது என்பதை நீங்கள் பாரத்த்திருப்பீர்கள். மக்கள், பஞ்சாயத்து தலைவர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், நகர மன்றத் தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்துகள், வட்டப் பஞ்சாயத்துகள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக சமூகப் பொது வாழ்க்கையில் ஈடுபட வாய்ப்புகள் பெற்றவர்கள் ஆகியோர் முன்னேறத் துடிக்கும் மாவட்டங்களில் ஒரே இலக்கை நோக்கி ஒரே திசையில் பணிகளைச் செய்ய முன்வர வேண்டும். மேலும் அதிக மக்களை இணைத்துக் கொண்டு நமது முழுத்திறன் மற்றும் வலுவுடன் பணிகளை மேற்கொள்ளுவோம். அப்போது மாற்றங்களை கட்டாயம் காணத் தொடங்குவீர்கள்.

சில சமயங்களில் நெருங்கிய ஈடுபாடு காரணமாகவும் மாற்றங்கள் ஏற்படும்: நல்ல ஆரோக்கியமான, உடல் தகுதிவாய்ந்த, சரியான முறையில் உணவு உண்டு நல்ல குடும்ப வாழ்க்கையில் இருப்பவர் ஒருவர் ஒரு நாள் தனது எடைக் குறைவதைக் கவனிக்கிறார். தொடக்கத்தில் அதில் கவனம் செலுத்தாத அவர் தனது உணவுக் கட்டுப்பாடு, சிறந்த உடல்திறன், அதிக ஆரோக்கியம் காரணமாக எடைக்குறைவு என நினைக்கிறார். எனினும் அவரது எடை குறைந்து கொண்டே போகிறது, அப்போதுதான் என்ன நடக்கிறது என்று அவர் சிந்திக்கத் தொடங்குகிறார். வலிமைக் குறைவாக காணப்பட்டாலும் வாழ்க்கையை ஆனந்தமாக பிரச்சினைகள் பற்றி அறியாமல் வாழ்ந்து வருகிறார். ஆனால் அனுபவம் மிக்க மருத்துவர் ஒருவர் அவரைப் பரிசோதித்தபின் தமக்கு நீரிழிவு நோய் கண்டிருப்பதை அறிய வருகிறார். நீரிழிவு  நோயைக் கட்டுப்படுத்த மருந்துகளைச் சாப்பிடத் தொடங்குகிறார். நீரிழிவு முற்றிலும் குணமடையவில்லை என்றாலும் இதர உடல்நலக் குறியீடுகள் மேம்பாடு அடைகின்றன.

நமது மாவட்டங்களும் இதே போன்ற நிலையில் இருப்பதாக நான் நம்புகிறேன். இந்த மாவட்டங்கள் நலிவடையும் பிரச்சினையின் காரணத்தை நாம் அறிந்து கொண்டால், அதனைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்தால், அவற்றில் மாற்றங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்தால், எந்த மாவட்டமும் பின்தங்கி இருக்காது என்பதைக் காண்பீர்கள்.

115 மாவட்டங்களில் 30 முதல் 35 மாவட்டங்கள் இடதுசாரித் தீவிரவாதம் பாதிக்கப்பட்டவை. இந்த மாவட்டங்களுக்குத் தனிக்கவனம் தருமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தை நான் குறிப்பாகக் கேட்டுக் கொண்டுள்ளேன். இந்தப் பிரச்சினைகளை நாம் எவ்வாறு தீர்க்கமுடியும்? எனினும் எஞ்சியுள்ள 80 முதல் 90 மாவட்டங்களின் பிரச்சினைகளை எளிதாகக் கையாளலாம். இந்த மாவட்டங்களுக்கு இப்போது எப்படித் திட்டமிடுவது?  மாவட்டத்திற்கு உள்ளேயே ஒருசில வட்டங்களில் தடுப்பூசி வழங்குவதில் சிறப்பான செயல்பாடு இருக்கும், மற்றொரு வட்டத்தில் பள்ளி இடைநிற்றல் குறைந்து முன்னேற்றம் காணப்படும். ஒவ்வொரு இடத்திலும் எதாவது ஒரு விஷயம் சிறப்பாக இருக்கும். நாம் செய்ய வேண்டியது எல்லாம் பாதிப்பு ஏற்படுத்தும் விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதே ஆகும் : ஒரு கிராமத்தில் 3 விஷயங்களில் சிறப்பு நிலையும் 2 – ல் நலிவு நிலையும் இருந்தால் நலிவு நிலை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் பாடுபட வேண்டும்.

இந்தப்பணி அவ்வளவு கடினமானது ஒன்றும் இல்லை. உங்களுக்கு நித்தி ஆயோக் சார்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட உள்ளது. 2 நாட்களுக்கு முன் அனைத்து அமைச்சர்களுடன் நான் இந்த விளக்கக் காட்சியை பார்த்தேன். அரசின் விளக்கக் காட்சிகளை கடந்த 20 ஆண்டுகளாக நான் பார்த்து வருகிறேன். ஆனால் இந்த விளக்க காட்சி மிகத் தெளிவாகவும், மிகச் சிறியதாகவும் சாதாரண மனிதன் கூட அறிந்து கொள்ளும் வகையிலும் உள்ளது. திரு. அபிதாப் காந்த் இந்த மிகச் சிறப்பான விளக்க காட்சியை வழங்கியுள்ளார்.  இதுதான் இந்த நித்தி ஆயோக்கின் விளக்க காட்சி. இதனால் நாம் பெரிதும் கவரப்பட்டேன். இந்த விளக்க காட்சியை உங்களுக்கும் காட்ட இருக்கிறார்கள்.

மாநில சராசரி, தேசிய சராசரி, மாநிலத்தின் மிகச்சிறப்பாக செயல்படும் மாவட்டம் ஆகியவற்றைவிட குறிப்பிட்ட மாவட்டம் எந்த அளவுக்குப் பின்தங்கியுள்ள என்பதை உணர்ந்துகொள்ள ஒரு வழி உள்ளது. இதற்கான 4 அளவுகள் அளவிடுவதற்கு பயன்படுகின்றன. நாட்டின் 200 மாவட்டங்கள் வளர்ச்சி அடைய முடியுமானால் உங்கள் மாவட்டமும் முன்னேற முடியும் என்பதை நீங்கள் உணருவீர்கள். நாட்டின் ஆயிரக்கணக்கான வட்டங்கள் முன்னேற முடியுமானால் உங்கள் வட்டமும் கூட முன்னேற முடியும். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இங்கே உள்ளனர். நாட்டில் கடு மைய அரசியல், இயக்க அரசியல், அறிக்கை அரசியல், முரண்பாட்டு அரசியல் என பல்வேறு அரசியல்கள் நிலவிய காலம் ஒன்று இருந்தது. தற்போது காலம் மாறிவிட்டது: நீங்கள் அதிகாரத்திலிருந்தாலும் அல்லது எதிர்கட்சியாக இருந்தாலும் தங்களது நல வாழ்க்கையில் உங்கள் பணிகள் என்ன என்பதில்தான் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

உங்கள் சண்டைகள், உங்கள் பேரணிகள், உங்கள் சிறைப் பயணங்கள் போன்றவை உங்கள் அரசியல் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றது 20 ஆண்டுகளுக்கு முந்தைய கதை. இன்றைய நிலையில் சூழ்நிலைகள் மாறிவிட்டன. சிலப் பிரதிநிதிகள் மீண்டும் மீண்டும் தேந்தெடுக்கப்படுவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். இதற்கான காரணத்தை ஆராய்ந்தால் இந்த வெற்றி அரசியல் போராட்டங்கள் காரணமானது அல்ல என்பதை உணருவீர்கள். அரசியல் மற்றும் அதிகாரத்துக்கான போராட்டம் தொடர்பே இல்லாத பொதுமக்களின் நலம் சார்ந்த சில அம்சங்கள்தான் இதற்கு காரணம் என்றும் உணருவீர்கள். ஒரு பிரச்சினை தொடர்பாக புதியவற்றை ஒவ்வொரு முறையும் அந்த நபர் செய்கிறார்: ஒரு வேளை அந்த நபர் மருத்துவ மனைகளுக்கு முறையாகச் சென்று வருதல் அல்லது மக்களைச் சந்தித்து வருதல் போன்றவற்றை மேற்கொள்பவராக இருக்கலாம். இத்தகைய செயல்கள் அரசியலில் அவர் பற்றிய நல்ல அபிப்ராயத்தை கொண்டுவர உதவுகின்றன.

தீவிர அரசியலை முற்றிலும் விட்டுவிடுமாறு நான் உங்களிடம் கேட்கவில்லை, ஆனால் சமுதாயம் அதனைக் கைவிடுமாறு கட்டாயப்படுத்துகிறது. சமுதாயத்தின் விழிப்புணர்வு அதனைக் கைவிடுமாறு நம்மைக் கட்டாயப்படுத்துகிறது. சமுதாயம்  அவர்களுக்காக அனைத்து நேரங்களிலும் இருக்க வேண்டும் என விரும்புகிறது. தங்கள் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவர எவர் உடன் இருக்கிறார்கள் என அவர்கள் கவலைப்படுகிறார்கள். இதற்கு மிகுந்த தாக்கம் உண்டு. நமது பகுதிகளில் 100 சதவீத முயற்சிகளைப் பெண் குழந்தை கல்விக்காக செலவிட நாம் முடிவு செய்ய வேண்டும். என்னுடைய சொந்த முயற்சியில் ஒரு மாற்றத்தையாவது நான் கொண்டுவருவேன் என நாம் முடிவ செய்ய வேண்டும். அப்போது அமைப்புகள் தாமாகவே மாறத் தொடங்கும்.

இந்திரதனுஷ் திட்டத்தின் கீழ் தடுப்பூசி மருந்து தருவதற்கென நான் களத்தில் இறங்கி, தொண்டர்களையும், மக்களையும் சேர்த்துக் கொண்டு தடுப்பூசிப் பணியை நிறைவு செய்வேன் என சிலர் முடிவு செய்யலாம். முன்பெல்லாம் தடுப்பூசி என்பது 30 சதவீதம், 40 சதவீதம் அல்லது 50 சதவீதம் பேருக்கு கொடுக்கப்படுவது வழக்கம் : அதனால் அரசு இதற்காக செலவிடவில்லை என்று அர்த்தமாகாது. அரசு தமது பட்ஜெட் ஒதுக்கீட்டை கட்டாயம் செலவிட்டுத்தான் வருகிறது. திரு. குலாம் நபி சுகாதார அமைச்சராக இருந்தபோதும் இது நடைபெற்றது. ஆனால் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாதபோது அவை நிறுத்தி வைக்கப்பட்டன.

“இந்திர தனுஷ்” திட்டத்தின் கீழ் சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டதை அடுத்து குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு ஊசி செலுத்துவது தற்போது 70 முதல் 75 சதவீதம் என உயர்ந்துள்ளது. இதை 90 சதவீதமாக உயர்த்த இயலும். 90 சதவீதமாக உயர்த்தப்பட்டால், 100 சதவீதத்தை எட்டுவது கடினமல்ல. குழந்தைகளும், கருவுற்ற பெண்களும் இது போல் தடுப்பூசி போட்டுக் கொண்டுவிட்டால், நோய்களைத் தானாகத் தவிர்த்துவிடலாம்.

 

இத்தகைய திட்டங்களை ஓர் இயக்கமாகச் செயல்படுத்தினால், புதிதாக நிதி ஒதுக்கீடு தேவையில்லை. இருக்கும் ஆட்களும், நிதியும் போதும், இலக்கை அடைந்துவிடலாம். இத்திட்டத்தை ஆர்வமுள்ள மாவட்டங்களில் செயல்படுத்தலாம். “பின்தங்கியிருத்தல்” (backward) என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இல்லையென்றால், மனோபாவம் எதிர்மறையாகவே அமைந்துவிடும்.

 

உங்களுக்கெல்லாம் தெரியும், முன்பெல்லாம் ரயில் பெட்டிகளில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என மூன்று வகுப்புகள் இருக்கும். பிறகு, 20, 25 ஆண்டுக்கு முன்பு மூன்றாம் வகுப்பு ரத்து செய்யப்பட்டது. பெட்டிகளின் வகுப்புகளில் வித்தியாசம் இல்லை. நமது மனநிலை மாறிவிட்டது. முன்பு மூன்றாம் வகுப்பில் பயணம் செய்வோரைக் கீழாகப் பார்க்கும் போக்கு இருந்தது. இப்போது அந்த நிலை மாறிவிட்டது. பெட்டிகள் எல்லாமே ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. இந்த நிலையில் “பின்தங்கியிருத்தல்” என்ற சொல்லைப் பயன்படுத்தினால் அது எதிர்மறையான மனோபாவத்தை ஏற்படுத்தும். “நீங்கள் பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வா? அப்படியானால், நீங்களும் பின்தங்கியவர்தானே.. ?” என்பது போன்ற எண்ணத்தில்தான் எல்லாச் சிக்கலும் தொடங்குகிறது. பின்தங்கும் நிலைக்காக யாரும் பாடுபடத் தேவையில்லை. மாறாக, முன்னேற்றமடையும் நிலைக்காகத்தானே பாடுபடவேண்டும்! இத்தகைய மாவட்டங்கள் முன்னேற்றம் அடைந்தால், சமூக நீதியை அடைவதற்கான இலக்கு தானாகவே எட்டப்பட்டுவிடும்.

 

எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி அளிப்பது சமூக நீதியை அடைவதற்கான முதல் படியாகும். எல்லா வீடுகளுக்கும் மின்சாரம் கிடைப்பது சமூக நீதியை நெருங்குவதாகும். இந்த மாமன்றத்தில் பலதரப்பினர் இணைந்து அமர்ந்திருக்கிறோம். அதற்கு வழியமைத்தவர்கள் நமது முன்னோர்கள். நமது மகத்தான பெரியோர்கள் நம்மை இந்த மண்டபத்தில் இணைத்து, புதிய வடிவத்திலான சமூக நீதியை தந்திருக்கிறார்கள். இதிலே பூசல்கள் மிகக் குறைவு. இத்தகைய சமூக நீதி எண்ணத்தோடு நாம் அனைவரும் பாடுபட்டால் மிகப் பெரிய உயரங்களை எட்டிவிடலாம்.

 

எல்லாக் கட்சித் தலைவர்களும் இந்த மண்டபத்தில் கூடியிருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன். ஒரே பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அமர்ந்திருக்கிறார்கள். சில ஆர்வமுள்ள மாவட்டங்களை இரு மாதங்களுக்கு முன் மாற்றிக் காட்டிய சில அதிகாரிகளை அழைத்து அந்த மாவட்டங்களின் நிலை குறித்துக் கேட்டேன். அண்மையில் ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்துக்குச் சென்றிருந்தேன். அந்த மாநிலத்தில் ஆர்வமுள்ள ஐந்து மாவட்டங்கள் மற்றும் அரியானாவின் ஒரு மாவட்டத்தின் அதிகாரிகளை அழைத்தேன். அவரவர் மாவட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்துக் கேட்டேன். அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டி இணைந்து செயல்படவேண்டும் என்று கருதினேன். “இதை ஏன் முடிக்கவில்லை? அதை ஏன் முடிக்கவில்லை? என்ன காரணம்?” என்று நச்சரித்துக் கொண்டிருந்தால் அவர்கள் களைப்படைந்துவிடுவார்கள்.

 

அத்தகைய அணுகுமுறை அரசியலுக்குப் பொருந்தலாம். மாறாக, அப்படிச் செயல்படுவோருக்கு உதவிக் கரம் நீட்டவேண்டும். “கவலைப் படவேண்டாம். நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று ஆறுதலாகப் பேச வேண்டும். அப்போது, அவர்களுக்கு நம்பிக்கை வரும். அரசாங்கத்தில் உள்ள மக்களின் நம்பிக்கையை நாம் அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

 

பொதுமக்களின் ஈடுபாடு அதிகரிக்க வேண்டும். இத்தகைய பணிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஏன் திரட்டி ஈடுபடுத்தக் கூடாது? இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும். நமக்கு வளங்கள் இருந்தாலும் பலன்கள் கிடைக்கவில்லையே! இந்த இடைவெளியை நிரப்பியாக வேண்டும். நிச்சயம் அதைச் செய்வோம்! அப்படிச் செய்தால், ஆளுகையின் நடைமுறை தானாகவே மேம்படத் தொடங்கும். நல்ல பலன்கள் ஏற்படத் தொடங்கினால், அவர்களது நம்பிக்கையும் தானாகவே வலுப்பெறும். நாட்டில் 115 மாவட்டங்களில் சில மாவட்டங்கள் நம்மை திகைப்படையச் செய்யும். தொழில் வளம் அதிகரித்திருந்தாலும் “இந்த மாவட்டங்கள் எப்படி பின்தங்கிப் போயின?” என்ற கேள்வி தோன்றும்.

 

சர்க்கரை நோயாளியைப் போல் இந்த மாவட்டங்கள் ஒரே விஷயத்தில் மட்டும் முன்னேறி பிரபலமடைந்து விடுகின்றன. மற்ற அம்சங்களில் பின்தங்கிவிடுகின்றன. ஒரே ஓர் அம்சத்தில் வளர்ச்சி பெற்றதும், “அட! அற்புதம்!” என்று வியந்துவிடுகிறோம். ஆனால், அத்தகைய மாவட்டங்கள் மற்ற அம்சங்களில் பின்தங்கி விடுகின்றன.

 

பலர் தங்களது மாவட்டங்களை யாரும் கவனிக்கவில்லை என்று ஏங்கும் நிகழ்வுகளும் இருக்கின்றன. அதற்குக் காரணம், பல முன்னேற்றம் அந்த மாவட்டங்கள் 2011ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பது தெரிந்தது. விவரம் சேகரிக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதுதான் அந்த நிலைக்குக் காரணம்.

 

அதே சமயம், “உங்களது மாநிலத்தின் சில மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களுக்குப் பதிலாக வேறு மாநிலங்களை மாற்றிக் கொள்ள நினைத்தால், அவ்வாறு மாற்றிக் கொள்ளலாம்” என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ஐந்தாறு மாநிலங்கள் தங்களது மாவட்டங்களில் சிலவற்றை மாற்றிக் கொண்டிருக்கின்றன.

 

நாம் அனைவரும் எந்தவித அரசியல் சாயமும் பூசாமல் மனத்தில் எந்த எண்ணமும் கொண்டிருக்காமல், ஓராண்டுக்கு இணைந்து செயல்படுவோம். நான் அதிகமான கால அவகாசம் கேட்கவில்லை. ஓராண்டு மட்டும் போதும்.

 

மனித மேம்பாட்டுக் குறியீட்டில் நாம் உலகில் 131வது இடத்தில் இருக்கிறோம். நாமெல்லோரும் இணைந்து கடுமையாக உழைத்தால், மாற்றங்களைப் பார்க்கலாம். நாட்டின் ஒட்டுமொத்த தோற்றமே மாறிவிடும்.

 

இன்றைக்கு உலகம் இந்தியாவிடமிருந்து ஏராளமாக எதிர்பார்க்கிறது. நம்பிக்கை வைத்திருக்கிறது. மனித மேம்பாட்டுக் குறியீட்டு விஷயத்தில் நம்மை நாமே மேம்படுத்திக் கொண்டு, 115 மாவட்டங்களையும் மேம்படுத்தினால் நாடு தானாகவே முன்னேறிவிடும். மேற்கொண்டு வேறு எதையும் கூடுதலாகச் செய்யத் தேவையில்லை.

 

பல்வேறு திட்டங்களின் பலன்களை நம்மால் பெற முடியும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MNREGA) போன்றவை வேலையில்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கானவை. அவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதுதான் குறிக்கோள். அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போதிய அளவு அமலாக்கப்படாத பகுதிகளில் வறுமை அதிகமாக இருப்பதும், இத்திட்டம் செயல்பட்ட இடங்கள் வளமையாக இருப்பதும் தெரியவந்தது. இது ஏன்?

 

வளமான மாநிலங்களில் நல்ல நிர்வாகம் கடைப்பிடிக்கப்பட்டு, அத்திட்டத்தின் பலன் உரியவர்களுக்குப் போய்ச்சேருகிறது. மாறாக, மோசமான நிர்வாகம் காரணமாக அந்த நிதி உரியவர்களுக்குப் போய்ச் சேராமல் இருக்கும் பகுதிகளில் வறுமை நிலவுகிறது. தொழிலாளிகளுக்கு உரிய ஊதியம் இல்லை.

 

உண்மையில், பொருளாதார வளம் மிக்க மாநிலங்களுக்குக் குறைவான நிதி போய்ச்சேர வேண்டும். வறுமை நிலையில் உள்ள மாநிலங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அதிக நிதியும் அளிக்கப்பட வேண்டும். பிரச்சினை நிதி ஆதாரங்களில் இல்லை. மோசமான நிர்வாகத்தில்தான் இருக்கிறது. சரியான ஒருங்கிணைப்பு இல்லாததும், குறிக்கோள் இல்லாமையும்தான் பிரச்சினைக்குக் காரணம். இவற்றையெல்லாம் கவனித்துச் சரிசெய்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்.

 

இந்த விவாதங்களின் மூலம் நாட்டின் 115 மாவட்டங்களின் தலைவிதியை மாற்றுவதற்காக வழியமைத்துக் கொடுத்ததால், திருமதி சுமித்ராஜிக்கு என் மனத்தின் ஆழத்திலிருந்து மீண்டும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் நிர்ணய சபை ஒரு காலத்தில் கூடி, நமது மகத்தான பெரிய தலைவர்கள் நாட்டைப் பற்றிய கனவுடன், நீண்ட விவாதத்தை மேற்கொண்ட இந்த மண்டபத்தில் மூளையைக் கசக்கிப் பிழிந்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம்.

 

தற்போது அதே மண்டபத்தில் நாம் அமர்ந்துகொண்டு புதிய திசை நோக்கி நகர்ந்து செல்கிறோம். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு பங்கேற்றதற்காக அனைவருக்கும் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

 

இவ்வாறு பிரதமர் பேசினார்.

 

 

 

 

 

 

------------------



(Release ID: 1532031) Visitor Counter : 626


Read this release in: English , Assamese