நீர்வளத் துறை அமைச்சகம்
2019 மார்ச் வாக்கில் கங்கையில் 70 முதல் 80 சதவீதம் தூய்மையாகிவிடும் என்று நாங்கள் நம்புகிறோம் : நிதின் கட்கரி
Posted On:
10 MAY 2018 4:01PM by PIB Chennai
“2019 மார்ச் வாக்கில் கங்கையில் 70 முதல் 80 விழுக்காடு தூய்மையாகிவிடும் என்று நாங்கள் நம்புகிறோம். கங்கை தூய்மைப்படுத்தல் திட்டத்தின்கீழ் குறிப்பிடும்படியாக எதுவும் நடக்கவில்லை என்பது பொதுக்கருத்தாக உள்ளது. ஆனால், அது சரியல்ல. அதிக அளவில் மாசு ஏற்படுத்தும் 251 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மாசுபடுத்தும் தொழில்நிறுவனங்கள் என அறிவிக்கப்பட்டு அதனை ஏற்காத நிறுவனங்களுக்கு மூடுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன” புதுதில்லியில் இன்று (10.05.2018) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி இதனைத் தெரிவித்தார்.
938 தொழில் நிறுவனங்களில் மாசுகள் பற்றிய நிகழ்நேர கண்காணிப்பு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார். கங்கையில் மாசு ஏற்படச் காரணமான 211 பிரதான கால்வாய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தக் கால்வாய்களின் தண்ணீரை நன்னீராக்க 20 கழிவுநீர் சுத்திகரிப்பு சாதனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சர் செல்வி. உமாபாரதி, கங்கை நதிக்கரையில் உள்ள 4470 கிராமங்களில் பெரும்பாலானவை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக இப்போது மாறி உள்ளன என்றும் இதனை மேலும் அதிகரிக்கும் உத்தி குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றும் கூறினார். திட - திரவக் கழிவு மேலாண்மை, மரம் நடுதல், பிளாஸ்டிக் பயன்படுத்தாத கிராமங்களையும், நகரங்களையும் உருவாக்குதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள கிராமங்களில் முழுமையான மேம்பாட்டுத்திட்டம் கிராமங்களின் பங்கேற்புடன் தீவிரமாக செயல்படுத்த தமது அமைச்சகம் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார். இயற்கை வேளாண்மை, குடிநீர் பாதுகாப்புத் திட்டம், திட மற்றும் திரவக் கழிவுகளை முறையாக அகற்றுதல், குளங்கள் சீரமைப்பு போன்றவை கங்கை கிராமங்களில் வலியுறுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
முந்தைய, திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்படுகின்ற திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்தைக் கொண்ட 'நமது கங்கை' எனும் ஒருங்கிணைந்த கங்கை பாதுகாப்பு இயக்கம் ரூ.20,000 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. ஐந்தாண்டுக் காலத்தில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் 2020 டிசம்பரில் நிறைவடையும்.
மேலும் விவரங்களை www.pib.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.
----
(Release ID: 1531838)