தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

பொறுப்பான முறையில் சாமானிய மக்களுக்கு அதிகாரமளிப்பதாக ஊடகங்கள் இருக்க வேண்டும் : திரு.ரவி சங்கர் பிரசாத்

Posted On: 10 MAY 2018 2:41PM by PIB Chennai

ஊடக சுதந்திரம் என்பது அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகவும், அரசமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவும்  இருக்கிறது என்பதே மத்திய அரசின் நிலை என்றும், இதனை நீதித்துறை தொடர்ச்சியான தீர்ப்புகளால் வலியுறுத்தியுள்ளது என்றும் மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று (10.05.2018) 15-ஆவது ஆசிய ஊடக உச்சி மாநாட்டில் உரையாற்றிய திரு.பிரசாத் தகவல் தெரிவிக்கவும், விநியோகம் செய்யவும், விமர்சனம் செய்யவும், அறிவுரை கூறவும், ஆலோசனை வழங்கவும் ஊடகத்திற்கு முழு உரிமை உள்ளது என்றார். அரசியல் சட்டத்தின்கீழ் ஊடக உரிமைகள் கூட சில நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றன.

தகவல்கள் தவறாக பயன்படுத்துவதுபற்றி குறிப்பிட்ட அமைச்சர், தகவல் திருட்டு மையமாக நாட்டை மாற்றுவதற்கு இந்தியா அனுமதிக்காது என்றும் தகவல் வர்த்தகத்தை ரகசிய முறைகள் மூலம் தேர்தல் நடைமுறைகளில் செல்வாக்கு செலுத்த பயன்படுத்தக் கூடாது என்றும் கூறினார். தகவல் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து இணையதள நிறுவனங்களும் பொறுப்புணர்வின் நுணுக்கங்களை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் திரு பிரசாத் கூறினார். தகவல் ரகசியத்தைச் சுற்றி அண்மையில் எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் விஷயத்தில் அரசு மிகவும் உறுதியான நிலையை மேற்கொண்டுள்ளது என்று அவர் கூறினார். பொறுப்புத்தன்மை என்பது ஜனநாயகத்திற்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் ஒருங்கிணைந்தது என்றும் அரசு, நீதித்துறை, சட்டம் இயற்றும் அமைப்புகள், ஊடகம் ஆகியவை இந்த கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்றும்  திரு.பிரசாத் மேலும் தெரிவித்தார். தகவல் பகுப்பாய்வின் மிகப்பெரிய மையமாக இந்தியா மாறி வருவது பற்றி குறிப்பிட்ட அவர், தகவல் திரட்டுதல், தகவல் பயன்பாடு, தகவல் கண்டறிதல், ஆதாரமற்ற தகவல், தகவல் ரகசியம் ஆகியவற்றில் முறைப்படியான ஒருங்கிணைப்பு தேவைப்படுவதாகக் கூறினார். இந்த விஷயங்கள் பற்றி ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்தின் ஓய்வுப்பெற்ற நீதிபதி ஒருவரை தலைவராகக் கொண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் தகவல் பாதுகாப்புச் சட்டம் ஒன்றை அரசு இயற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

நெறிமுறை இதழியல் விஷயத்தை சார்ந்து பேசிய சட்ட அமைச்சர் இது நேர்மையாகவும், உண்மையாகவும் முறைப்படியான பார்வைகளையும், எதிர்பார்வைகளையும் முன்வைப்பதாகவும், செய்திகளை நுகர்வோர்க்கு நாகரீகமாகவும், சுதந்திர உணர்வோடும், அதிகாரமளிப்பவையாகவும் இருக்க வேண்டும் என்றார். உணர்ச்சிமயம், செய்திகளுக்கு பணம் கொடுத்தல், பொய்யான செய்திகள், மிக அதிகமாக சங்கடப்படுத்தும் நடைமுறைகள் போன்றவற்றின் பிடியில் இன்று ஊடகங்கள் இருக்கின்றனவா என்று வியப்பும் தெரிவித்தார். இது விவாதத்திற்குரிய விஷயம் என்றும் அவர் கூறினார்.

ஊடகங்களின் சுயக்கட்டுப்பாடு கொள்கைக்கு ஆதரவு தெரிவித்த திரு.பிரசாத், உள்ளடக்கம், இடைநிலைத் தன்மையுடையதாக இருப்பது ஆபத்தானதோ, அவதூறானதோ இல்லை என்றும் அது நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிரானதாகவோ, காப்புரிமைகளை ஆக்கிரமிப்பதாகவோ இருக்கக்கூடாது என்பதை தகவல் தொழில்நுட்பச் சட்டம் உறுதியாகக் கூறுகிறது என்றார். தனிநபர் தகவலின் புனிதம் பற்றி குறிப்பிட்ட அமைச்சர், தனிநபர் தகவலை ரகசியமாக பராமரிப்பது அடிப்படை உரிமைகளின் பகுதி என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார். ஆனால், தனிநபர் தகவல் ரகசியம் என்பதை ஊழலுக்கும், பயங்கரவாதத்திற்கும் கேடயமாக மாற்ற முடியாது என்றும் அவர்  குறிப்பிட்டார். பயங்கரவாதம், வெறுப்புணர்வு பிரச்சாரம், வகுப்புவாத மயம், தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துதல் போன்ற பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்த அமைச்சர் இதற்கு உலக அளவில் பொதுக்கருத்து உருவாக்கப்பட்டு முறைப்படி அமலாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.

சமூக ஊடக சவால்களைச் சார்ந்து பேசிய திரு. பிரசாத், ஊடக சுதந்திரத்திற்கு அரசு உறுதி தருகிறது. ஆனால், உண்மையிலிருந்து அபாயமானதைப் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமும் உள்ளது என்றார். இந்த அமைச்சரவையில் இருக்கும் பலரும், சுதந்திரம் நசுக்கப்பட்ட அவசர நிலையை எதிர்த்துப் போராடியவர்கள் என்றார். சாமானிய மனிதர்களுக்கு அதிகாரம் அளித்திருப்பதால் சமூக ஊடகத்தை அரசு மதிக்கிறது. ஆனால், சில நேரஙகளில் இதில் பயன்படுத்தப்படும் மொழி கவலை அளிக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

இணையதளம் என்பது நவீன ஏகாதிபத்தியத்தின் கருவியாக இருக்க முடியாது என்றும் திரு பிரசாத் கூறினார். மனித மூளையின் ஆகச்சிறந்த உருவாக்கம் இணையதளம் என்று குறிப்பிட்ட அவர், இது ஒரு சிலரின் ஏகபோகமாக இருந்து விடக்கூடாது என்றார். இணையதளம் என்பது உலகளாவியது என்றால் அதில் உள்ளுர் சிந்தனைகள் மற்றும் கலாச்சாரத்தின் இணைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களை www.pib.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.

 

                           ----



(Release ID: 1531827) Visitor Counter : 380