பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

வேளாண்மை ஒருங்கிணைந்த பசுமைப் புரட்சி தொடர் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 02 MAY 2018 3:21PM by PIB Chennai

பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய பொருளாதார விவகாரத் துறைக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டம் இன்று (மே 2, 2018) நடைபெற்றது. வேளாண்மையின் பல்வேறு திட்டங்களை ஒரு குடைக்கீழ் கொண்டு வரும் வகையில் திட்டமிடப்படும் “பசுமைப் புரட்சி – கிரிஷோணத்தி யோஜனா” என்ற திட்டத்திற்கு அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம் 2017-18ம் ஆண்டு முதல் 2019-2020ம் ஆண்டு வரையிலான 12ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தையும் கடந்து செயல்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதற்கான மத்திய நிதி ஒதுக்கீட்டுப் பங்கு ரூ. 33,269.976 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 11 திட்டங்களும் இயக்கங்களும் இடம்பெற்றுள்ளன. இது வேளாண்மை மற்றும் அது தொடர்பான பல்வேறு திட்டங்களை ஒட்டுமொத்தமாகவும் அறிவியல் அடிப்படையிலும் செயல்படுத்துவதற்கானது ஆகும். மேலும், விவசாய உற்பத்திப் பொருட்களை அதிகரித்து, அதன் பலனாக விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்த ஒட்டுமொத்த திட்டங்களைச் செயல்படுத்த 2017-18, 2018-19 மற்றும் 2019-2020 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 33,269.976 கோடி செலவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

 

ஒட்டுமொத்த திட்டங்களின் கீழ் இடம்பெறும் வெவ்வேறு திட்டங்களாவன:

  1. ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கம் (MIDH)
  2. தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் (NFSM),
  3. நீடித்த வேளாண்மைக்கான தேசிய இயக்கம் (NMSA)
  4. வேளாண் விரிவாக்கத்துக்கான துணை இயக்கம் (SMAE)
  5. விதைகள், தாவரப் பொருட்கள் குறித்த துணை இயக்கம் (SMSP)
  6. வேளாண் இயந்திரமயமாக்கல் குறித்த துணை இயக்கம் (SMAM)
  7. தாவரப் பாதுகாப்பு மற்றும் தடுப்புக் காப்புத் திட்டம் குறித்த துணை இயக்கம் (SMPPQ)
  8. வேளாண் புள்ளிவிவரம், பொருளியல் விவரம் குறித்த ஒருங்கிணைந்த திட்டம் (ISACES)
  9. வேளாண் ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த திட்டம் (ISAC)
  10. வேளாண் சந்தைமயமாக்கல் ஒருங்கிணைந்த திட்டம் (ISAM)
  11. தேசிய மின்-ஆளுகைத் திட்டம் (NeGP-A)

 

 

 

**********


(Release ID: 1531231) Visitor Counter : 232
Read this release in: English , Marathi , Bengali