குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 25 APR 2018 1:33PM by PIB Chennai

சுற்றுச்சூழல் பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையாநாயுடு கூறியிருக்கிறார். உத்தராகன்ட் மாநிலம் டேராடூனில் இன்று (25.04.2018) இந்திராகாந்தி தேசிய வனவியல் கல்விக்கழகத்தின் பட்டமளிப்பு  விழா 2018 -ல் அவர் உரையாற்றினார். உத்தராகன்ட் ஆளுநர் டாக்டர் கிருஷ்ணகாந்த் பால், முதலமைச்சர் திரு. திரிவேந்திர சிங் ராவத், மற்றும் மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

வன நிர்வாகத்தின் அடிப்படைக் கோட்பாடு என்பது இயற்கை வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீடித்த பயன்பாடு ஆகியவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை நாம் கொண்டிருப்பது அவசியம் என்றும் சிறந்த எதிர்காலத்திற்கான இயற்கை என்பதுடன் நாம் வாழ வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். மரக்கன்றுகளை நடுவதும் மரங்களைப் பாதுகாப்பதும் ஒவ்வொருவரின் புனிதக் கடமையாக இருக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

வனப்பகுதியை அதிகரிக்க மாநிலங்களுக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். இதில் மாநில அரசுகள் நன்றாகச் செயல்படும் வகையில் நித்தி ஆயோகும் மத்திய அரசும் ஊக்கப்படுத்த வேண்டுமென்றும் வனங்கள், நதிகள், ஆகியவற்றுடன் இயற்கை அன்னைக்கும் மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மரம் நடுதலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நமது நாட்டு மக்களின் மனங்களில் மனிதர்களுக்கும் வனத்திற்கும் இடையே வலுவான உறவு இருப்பதைச் சமயங்களும் சமூகக் கலாச்சாரங்களும் ஆழமாகப் பதிவு செய்துள்ளன என்று குறிப்பிட்டக் குடியரசுத்துணைத்தலைவர் அண்மைக் காலங்களில் அதிகரித்துவரும் இயற்கை வளங்களின் தேவையும் இயற்கை அன்னையைப் பற்றிய புரிதலில் உள்ள குறைபாடும் அதற்கு இடையூறு விளைவித்துள்ளன என்றார். தெய்வீகத்தின் புனித அடையாளங்களாக மரங்களைக் கருதும் பாரம்பரியம் மிக்கது இந்தியக் கலாச்சாரம் என்று அவர் கூறினார். “ஃபிக்கஸ் ரிலிஜியோசா” என்று தாவரவியலில் அழைக்கப்படும் அரசமரம் போன்ற மரங்களை வெட்டுவது பாவம் எனக் கருதப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பழங்குடியினர் அல்லது உள்ளூர் சமூகங்களுக்கு மரங்களின் பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் குறித்து வழிக்காட்டுதலும் யோசனையும் வழங்குதல் அவசியம் என்று குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார். தேசநலனையும் மக்கள் நல்வாழ்வையும், குறிப்பாகத் தங்களின் வாழ்க்கைக்கு வனங்களைச் சார்ந்திருக்கும் பழங்குடியினக் குழுக்களின் நல்வாழ்வையும், சமரசம் செய்துகொள்ளாமல் வனஅலுவலர்கள் மேம்பாட்டை விரும்புகின்றவர்களாகவும் வளர்ச்சியைத் தருபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார். பாதுகாப்பு நோக்கங்களுக்காக வனங்களிலிருந்து மக்களை வெளியேற்றும் நிர்வாக உத்திகளிலிருந்து மாறி, கூட்டு வன நிர்வாகம் என்ற வடிவத்தில் மக்களின் ஒத்துழைப்புடன் வனங்களை நிர்வகிக்கும் பாதைக்கு இந்தியா வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தைக் காணவும்.

******


(வெளியீட்டு அடையாள எண்: 1530277) வருகையாளர் எண்ணிக்கை : 311
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , हिन्दी