பாதுகாப்பு அமைச்சகம்
ககன்சக்தி 2018 பயிற்சி நிறைவு
Posted On:
24 APR 2018 7:28PM by PIB Chennai
இந்திய விமானப்படை தனது அகில இந்திய அளவிலான ககன் சக்தி 2018 என்ற போர்ப் பயிற்சியை 2018 ஏப்ரல் 8-ந் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடத்தியது. குறுகிய நேரத்தில் தீவிரப் போர் நிலைமையில் உண்மை நேர ஒருங்கிணைப்பு, படைகளை நிறுத்தி வைத்தல், விமானப்படைப் தாக்குதல் சக்தியைப் பயன்படுத்துதல் ஆகியன இந்தப் பயிற்சியின் நோக்கங்களாகும். ககன்சக்தி 2018 பயிற்சியின்போது இந்திய விமானப்படை தனது போர் தொடுக்கும் திறனையும், போர்ச் செயல்பாடு கொள்கையையும் மதிப்பீடு செய்வதற்காக ஒட்டுமொத்தப் போர் எந்திர அமைப்புமுறையை பயன்படுத்தியது. நமது போர் திட்டச் செயல்பாட்டுத் தரத்தை பரிசோதிப்பதில் முக்கியக் கவனம் செலுத்துவதும் இந்தப் பயிற்சியிலிருந்து அர்த்தமுள்ள பாடங்களைக் கற்றுக்கொள்வதும் இதில் முக்கியக் கவனம் பெற்றன. இந்தப் போர்ப் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. அதன் மூலம் அனைத்து படைப் பிரிவுகளும் தங்களது தயார்நிலையையும், திறன்களையும் சோதித்துப் பார்க்கப் போதுமான வாய்ப்புகள் கிடைத்தன.
இந்தப் பயிற்சியானது அனைத்து வகையான போர் இயக்கங்களையும், அனைத்து வகையான விமானப் போர் நுணுக்கங்களையும் உள்ளடக்கி நடத்தப்பட்டது.
கூட்டுச் செயல்பாட்டுக்காக இந்திய விமானப் படையின் கூட்டுத் தலைமை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, இந்திய ராணுவம் மற்றும் கப்பல் படையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டது. இதற்கென இந்திய விமானப் படையின் முன்னணித் தலைமையிடம், ராணுவ தலைமையிடங்கள், போர் தந்திர விமானப்படை மையங்கள், கடல்சார் விமானப்படைச் செயல்பாட்டுமையங்கள், விமானப்படையின் கடல்சார் மூலக்கூறுகள் ஆகியவற்றுடன் இணைந்து அமைக்கப்பட்டுச் செயல்பட்டது.
இந்தப் பயிற்சியின் போது 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர் விமான இயக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றில் 9 ஆயிரம் விமான இயக்கங்கள் போர் விமானங்கள் சார்ந்தவை.
இவ்வளவு பெரிய பயிற்சி நடவடிக்கையின் வேகத்தைப் பராமரிக்கும் வகையில் 24 மணி நேரமும் முழுமையான இந்திய விமானப் படை பயிற்சி அந்தஸ்து உயர்த்தப்பட்டுச் செயல்பட்டது. 1,400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 14,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சி அமைப்புகளிலிருந்து அழைத்துவரப்பட்டு இந்தப் போர் பயிற்சிக்கென நிறுத்திவைக்கப்பட்டதால் தற்போதுள்ள வள ஆதாரங்கள் விரிவுப்படுத்தப்பட்ட நிலை இருந்தது.
ககன்சக்தி 2018 போர்ப் பயிற்சி இந்திய விமானப்படைக்குத் தனது சொந்தப் போர் நடைமுறையைப் பயிற்சி செய்ய வாய்ப்பளித்ததுடன் உண்மையான போர்நிலவரத்தில் செயல்படுவது குறித்தும் அதற்கு பயிற்சிவாய்ப்பை அளித்தது. இந்தப் பயிற்சியின் மூலம் இந்திய விமானப்படை தனது புதிய தளங்களின் போர்ச் செயல்பாட்டுத் திறனைச் சோதித்துப்பார்க்க முடிந்தது. மேலும் தற்போதுள்ள தரமான போர்ச் செயல்பாட்டு நடைமுறையை மேலும் சிறப்பாக்கவும் உதவியது. ராணுவம் மற்றும் கப்பல் படையுடன் இணைந்த செயல்பாட்டின் காரணமாக, இந்தப் பயிற்சி மேலும் சிறப்பான போர் நடைமுறை ஒருங்கிணைப்பை முப்படையினரிடையே ஏற்படுத்தி போர் ஆற்றலை அதிகரிக்க உதவியது.
(Release ID: 1530122)