பிரதமர் அலுவலகம்

இணையவழி தொடர்பான உலகளாவிய மாநாட்டில் பிரதமரின் உரை

Posted On: 23 NOV 2017 11:35AM by PIB Chennai

இலங்கை பிரதமர் மாண்புமிகு திரு. ரணில் விக்கிரமசிங்கே அவர்களே, இந்தியா மற்றும் வெளிநாடுகளின் அமைச்சர்களே, ஐ.டி.யு.வின் பொதுச் செயலாளர் அவர்களே, 120க்கும் மேற்பட்ட நாடுகளின் மாணவ பிரதிநிதிகளே, பிரமுகர்களே, சகோதரசகோதரிகளே,
 

சைபர் துறைக்கான உலகளாவிய மாநாட்டில் பங்கேற்க புதுதில்லி வந்துள்ள உங்களை வரவேற்கிறேன். இணையதளம் மூலம் உலகம் முழுவதிலுமிருந்தும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பவர்களையும் நான் வரவேற்கிறேன்.
 

நண்பர்களே,
 

கடந்த சில தசாப்தங்களில் சைபர் துறை எவ்வாறு உலகை  மாற்றி இருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். கடந்த எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பெரிய பெரிய மெயின்ஃபிரேம் கணினி அமைப்புகள் குறித்து இங்குக் கூடியுள்ளவர்களில் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அதன் பிறகு ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தொண்ணூறுகளில் மின்னஞ்சல் மற்றும் தனிக் கணினிகள் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களும், கைபேசிகளும் தகவல் சேமிப்பிலும் மக்கள் தொடர்பிலும் முக்கிய சாதனங்களாக உருவெடுத்துள்ளன. இணையதளம் மற்றும் செயற்கை நுண்ணுறவு போன்ற சொற்றொடர்கள் தற்போது பொதுப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இவை மாற்றங்கள் தொடர்வதையும் அவை வேகம் பெற்றிருப்பதையும் காட்டுகின்றன.
 

டிஜிட்டல் துறையில் ஏற்பட்டுள்ள இந்த விரைவான வளர்ச்சி இந்தியாவிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் திறமை உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெயர்பெற்றுள்ளன.
 

இன்றைய தினம் பெரும் சாதனைகளைப் புரியக் கூடியதாக டிஜிட்டெல் தொழில்நுட்பம் உருவெடுத்துள்ளது. சிறந்த சேவை விநியோகம் மற்றும் நிர்வாகத்திற்கு அது வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது. கல்வி முதல் சுகாதாரம் வரையிலான துறைகளில் அது அணுகுதலை மேம்படுத்தியுள்ளது. வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கவும் அது உதவி புரிகிறது. இந்த ஒவ்வொரு வழியின் மூலமாகவும் சமுதாயத்தின் குறைந்த முன்னுரிமை பெற்ற பிரிவினருக்கும் அதிகப் பங்கேற்பை அது அளித்து வருகிறது. பெரிய அளவில் இந்தியா போன்ற வளரும் நாடுகளை வளர்ந்த நாடுகளுக்குச் சமமாகப் போட்டியிட வைத்து சமமான உலகம் உருவாக அது பங்காற்றியுள்ளது.
 

நண்பர்களே,

 

தொழில்நுட்பம் தடைகளை உடைத்தெறிகிறது. ‘வசுதைவ குடும்பகம்’ – உலகமே ஒரு குடும்பம் என்ற இந்தியத் தத்துவத்தை அது மதிக்கிறது என நாங்கள் நம்புகிறோம். நமது பண்டைய, அனைவரையும் உள்ளடக்கிய பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. தொழில்நுட்பத்தின் மூலம் இதற்கு நம்மால் அர்த்தம் கொடுக்க முடிகிறது என்பதுடன் ஜனநாயக மதிப்புகளுக்கும் அர்த்தம் கொடுக்கிறது.
 

இந்தியாவில் நாங்கள் தொழில்நுட்பத்தின் மனித முகத்திற்கு முதன்மை கொடுக்கிறோம் என்பதுடன் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் அதனை நாங்கள் பான்படுத்துகிறோம். டிஜிட்டல் அணுகுமுறை மூலம் அதிகாரமளித்தல் என்னும் இந்திய அரசின் நோக்கத்தில் குறிப்பாக நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். டிஜிட்டல் இந்தியா என்பது தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றத்திற்கான உலகின் மிகப்பெரிய திட்டமாகும் என்பதுடன் இதன் மூலம் நமது குடிமக்கள் டிஜிட்டல் சேவைகளை அணுகவும் வழிவகுக்கிறது. நமது குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்க நாம் மொபைல் சக்தி அல்லது எம்-பவரைப் பயன் படுத்துகிறோம்.
 

தனிநபர் ஒருவரின் தனித்தன்மையான உயிரி அடையாளமாகத் திகழும் ஆதார் பற்றி உங்களில் பலர் ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள் என நான் உறுதியாகக் கருதுகிறேன். நீண்ட வரிசைகளில் இருந்தும் சிக்கலான நடைமுறைகளில் இருந்தும் மக்களை விடுவிக்க இந்த அடையாளத்தை நாம் பயன்படுத்தி உள்ளோம். முதலாவதாக, ஜன்தன் வங்கிக் கணக்குகள் மூலம் நிதி உள்ளடக்கம், இரண்டாவதாக, ஆதார் மேடை, மற்றும் மூன்றாவதாக, கைபேசி ஆகிய அம்சங்களும் நாங்கள் ஊழலைப் பெருமளவு குறைக்க உதவியுள்ளது. இதனை நாங்கள் ஜே.ஏ.எம் அல்லது மும்முனை ஜாம் என்று அழைக்கிறோம். மானியங்களின் இலக்குகளைச் சிறப்பான முறையில் அடையாளப்படுத்துவதன் மூலம் இந்த மும்முனை ஜாம் 10 பில்லியன் டாலர் அளவுக்குக் கசிவுகளை இதுவரை தடுத்துள்ளது.

எளிதாக வாழ்வதை டிஜிட்டல் தொழில்நுட்பம் எவ்வாறு பெரிய அளவில் சாத்தியாமாக்குகிறது என்பதற்கான சில உதாரணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இன்றைய தினம், மண் பரிசோதனை முடிவுகள், நிபுணர்கள் அறிவுரை மற்றும் தங்கள் விளைப்பொருளுக்கான சிறந்த விலை போன்ற பல்வேறு சேவைகளை விவசாயி ஒருவர் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் பெறமுடியும். எனவே டிஜிட்டல் தொழில்நுட்பமானது அதிக விவசாய வருவாய்க்கும் பங்களிக்கிறது.
 

சிறு தொழில்முனைவோர் அரசின் மின்னணுச் சந்தையில் பதிவுச் செய்துகொண்டு அரசுக்குச் சரக்குகளை விநியோகிப்பதற்கான சிறந்த விலைப்புள்ளிகளை அளிக்கலாம். தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும்போது, அவர் அரசின் கொள்முதல் செலவையும் குறைப்பதில் பங்களிக்கிறார். இதனால் பொதுமக்களின் பணத்திற்குக் கூடுதல் திறன் மற்றும் அதிக மதிப்பு கிட்டுகிறது.
 

உயிர் வாழ்வதற்கான சான்றை அளிக்க ஓய்வூதியதாரர்கள் இனி வங்கிஅதிகாரி முன் சென்று நிற்கவேண்டியதில்லை. இன்றைய தினம் ஓய்வூதியதாரர் ஆதார் உயிரி மேடையைப் பயன்படுத்திக் குறைந்த உடலுழைப்பில் தான் உயிருடன் இருப்பதற்கான சான்றை அளிக்கலாம்.
 

தகவல் தொழில்நுட்பப் பணித்திறனில் பெண்கள் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. பெண்கள் தலைமையிலான பல்வேறு புதிய நிறுவனங்கள் உருவாக டிஜிட்டல் தொழில்நுட்பம் வசதி செய்துள்ளது. இந்த வகையில் பாலின அதிகாரமளித்தலுக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை பங்களித்துள்ளது.
 

ரொக்கமில்லப் பரிவர்த்தனைகளை இந்திய மக்கள் அதிக அளவில் பின்பற்றிவருகின்றனர். இதற்காக நாங்கள் பணப்பரிவர்த்தனைகளுக்கான  பீம் செயலியை உருவாக்கியுள்ளோம். குறைந்த ரொக்கம் மற்றும் ஊழலுக்கு எதிரான சமுதாயத்தை நோக்கி நகர இந்தச் செயலி உதவுகிறது.
 

இந்த உதாரணங்கள் நிர்வாகத்தை மேம்படுத்துவதில் தொழில்நுட்பத்தின் ஆற்றலைக் காட்டுகின்றன.
 

நண்பர்களே,
 

ஜன் பஹிதாரி அல்லது பங்கேற்பு நிர்வாகத்துக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்க நாம் டிஜிட்டல் துறையைப் பயன்படுத்திவருகிறோம். கடந்த 2014 மே மாதம் நாங்கள் பதவிக்கு வந்த போது, மக்கள் குறிப்பாக இளைஞர்கள்-தங்கள் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவும் நாட்டுக்குப் பணியாற்றவும் தங்கள் ஆழ்ந்த விருப்பத்தை வெளிப்படுத்தினார்கள். இந்தியாவைப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல, லட்சக்கணக்கான இந்தியர்களிடம் மாற்றத்திற்கான சிந்தனைகள் உள்ளன என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தோம்.

எனவே நாங்கள் MyGov என்ற மக்கள் ஈடுபடும் விதத்திலான இணைய தளத்தை அறிமுகம் செய்தோம். இந்த மேடையானது முக்கிய விவகாரங்களில் குடிமக்கள் தங்கள் கருத்துக்களையும் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்வதை சாத்தியமாக்கியுள்ளது. முக்கியக் கொள்கைகள் குறித்து ஆயிரக்கணக்கான பயனுள்ள யோசனைகள் எங்களுக்குக் கிடைத்தன. MyGovயில் நடத்தப்பட்ட பல போட்டிகள் மற்றும் மக்களிடம் இருந்து கருத்துக்களைப் பெறுவதன் பயனாகவே இன்று பல்வேறு அரசு முயற்சிகளுக்கான இலச்சினைகள் மற்றும் குறியீட்டு வடிவங்கள் கிடைத்துள்ளன. உண்மையில் பிரதமர் அலுவலகத்திற்கான அதிகாரபூர்வ செயலி கூட MyGov நடத்திய போட்டி ஒன்றில் இளைஞர்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு யோசனைகள் விளைவாகவே கிடைத்தது. தொழில்நுட்பம் எவ்வாறு ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது என்பதற்கு MyGov ஒரு சிறந்த உதாரணமாகும்.
 

நான் இன்னொரு உதாரணம் கூறுகிறேன். பதவி ஏற்றபோது முக்கிய அரசுத் திட்டங்கள் மற்றும் முயற்சிகள் அரசின் செயல்பாடுகளில் தேவையற்ற குறுக்கீடுகள் முடிவுகள் எடுப்பதில் கவனக்குவிப்புக்குறைவு காரணமாக பாதிக்கப்படுகின்றன என்பதை நான் உணர்ந்தேன். எனவே, பிரகதி அல்லது முன்னுணர்ந்து செயல்படுத்துவதற்கான தீவிர நிர்வாகம் என்ற சைபர் சார்ந்த மேடை ஒன்றை நாங்கள் உருவாக்கினோம். பிரகதி என்ற இந்தி வார்த்தையின் பொருள் முன்னேற்றம் என்பது ஆகும்.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்று மத்திய மற்றும் மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளைப் பிரகதி அமர்வில் நான் சந்திக்கிறேன். தொழில்நுட்பம் தடைகளை உடைத்தெறிகிறது. எங்களது சம்பந்தப்பட்ட அலுவலகத்திலேயே அமர்ந்துகொண்டு இணைய உலகத்தின் உதவியுடன் முக்கிய அரசு நிர்வாக விவகாரங்கள் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கிறோம். இந்தப் பிரகதி அமர்வுகள் காரணமாக தேசிய நலனுக்காக ஒருமித்த கருத்து அடிப்படையில் முடிவுகள் எடுப்பது விரைவுபடுத்தப்பட்டுள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிவப்பு நாடா முறை காரணமாக தடைப்பட்டிருந்த கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான உள்கட்டமைப்புப் பணிகளை மீண்டும் பிரகதி செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தது.,

 

நரேந்திர மோடி கைபேசிச் செயலியின் மூலமாக நானாகவே சிலவற்றை முயற்சித்துப் பார்த்தேன். இந்தச் செயலி மக்களுடனான எனது தொடர்பை ஆழப்படுத்தியது. இந்தச் செயலி மூலம் மிக பயனுள்ள யோசனைகள் எனக்குக் கிடைத்தன. 

மக்களை மையப்படுத்திய நூற்றுக்கும் மேலான சேவைகளை அளிக்கக்கூடிய உமாங் செயலியை நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ளோம். பின்னணியில் இந்த சேவைகள் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளால் அளிக்கப்படும். இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை இந்தத் துறைகளின் செயல்பாடுகளில் மேலும் ஒரு தானியங்கி அடுக்கை ஏற்படுத்தித் தரும்.
 

நண்பர்களே,
 

எங்களது அனுபவம் மற்றும் வெற்றிக்கதைகளை உலகச் சமுதாயத்துடன் பகிர்ந்துகொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மறுபுறம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் அளவிடத்தக்க மாதிரிகள் மற்றும் புதுமையான தீர்வுகளைக் காண்பதில் இந்தியா தீவிரமாக உள்ளது. இணையத் துறை மாற்றுத் திறனாளிகளுக்குப் பயன் அளிப்பதாக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். சமீபத்தில் முப்பத்து ஆறு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற ஹாக்கத்தான் எனப்படும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சகங்கள் தெரிவித்த சில நாட்பட்டப் பிரச்சனைகளுக்குக் கல்லூரி மாணவர்கள் தீர்வுகளை அளித்தனர். உலகளாவிய அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளில் இருந்து பாடம் பயில நாங்கள் காத்திருக்கிறோம். நாம் அனைவரும் சேர்ந்து வளர்ந்தால்தான் வளர்ச்சி ஏற்படும் என நாங்கள் நம்புகிறோம்.
 

புதுமைகளுக்கான ஒரு முக்கிய பகுதியாக இணையவெளி திகழ்கிறது. அன்றாடப் பொதுப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை அளிக்கவும் மக்களின் வாழ்வுகளை மேம்படுத்தவும் இன்று நமது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந்தியாவின் ஸ்டார்ட் அப் தொகுப்பின் வாய்ப்புக்களை உலகளாவிய முதலீட்டாளர் சமூகம் அங்கீகரிக்கும் என நான் நம்புகிறேன். இந்தத் துறையில் நீங்கள் முதலீடு செய்யவும் இந்திய ஸ்டார்ட் அப் வரலாற்றில் ஒரு பகுதியாக இருக்கவும் உங்களை நான் அழைக்கிறேன்.
 

நண்பர்களே,
 

இணையதளம் என்பது இயல்பிலேயே அனைவரையும் உள்ளடக்கியது என்பதுடன் எவரையும் வேறுபடுத்துவதும் கிடையாது. அது சம அணுகுதல் மற்றும் சம வாய்ப்புகளை அளிக்கிறது. இன்றைய சொற்பொழிவுகள் ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்ட்டாகிராம் பயனர்களால் வடிவமைக்கப்படுகிறது. சமூக ஊடக மேடைகள் அனைவருக்கும் இணையவெளியைப் பங்கேற்கத்தக்கதாக ஆக்குகிறது. அரங்குகளில் இருந்து நிபுணர்கள் அளிக்கும் செய்திகளை விடக் கூடுதலாக சமூக ஊடகங்கள் உயர்த்திக்காட்டும் அனுபவங்கள் உள்ளன. இந்த மாற்றம் இணைய உலகம் அளித்த நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தின் கலவையாகும். இணையதளம் இளைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை, திறன் மற்றும் திறமையை – வலைப்பதிவுகள், பாடலாக, கலைப்பணியாக அல்லது நாடகமாக என எதுவாக இருந்தாலும் அவற்றைக் காண்பிப்பதற்கு ஏற்ற மேடையாக ஆக்கியுள்ளது. இதில் வானமே எல்லையாக உள்ளது.
 

நண்பர்களே,
 

இந்த மாநாட்டின் நோக்கம்: ‘நீடித்த வளர்ச்சிக்கான, பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய இணையவெளி’ இது  மனிதகுலத்திற்கு இந்த முக்கியமான சொத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அளிக்கிறது.  இணையப் பாதுகாப்பு விவகாரத்தை உலகச் சமுதாயம் நம்பிக்கையுடன் அணுக வேண்டியது அவசியம். இணையவெளித் தொழில்நுட்பங்கள் நமது மக்களுக்கு எதையும் சத்தியமாக்குவதாக இருக்க வேண்டும்.

வெளிப்படையான மற்றும் அணுகத்தக்க இணையதளத்திற்கான விருப்பம் எப்போதும் பாதிப்பை அளிக்கக்கூடியதாகவே உள்ளது. இணையப் பக்கங்களை முடக்குவது மற்றும் இணையதள உருவழிப்பு போன்று பாதிப்பை ஏற்படுத்துவது இயல்பாக உள்ளது. இணையவெளித் தாக்குதல்கள் கணிசமான அச்சுறுத்தல், குறிப்பாக ஜனநாயக உலகில் நிலவுவதை இவை காட்டுகின்றன. சமுதாயத்தில்  ஒடுக்கப்பட்ட பிரிவினர் இணையக் குற்றவாளிகளின் தீய நோக்கங்களுக்கு இரையாகிவிடக் கூடாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு எச்சரிக்கை ஒரு வாழ்க்கைமுறையாக இருக்க வேண்டும்.
 

இணையவெளித் தாக்குதல்களை எதிர்கொள்ள திறன் கொண்ட நிபுணர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் முக்கியக் கவனக்குவிப்பு செலுத்தப்பட வேண்டும். இணையவெளி தாக்குதல்களுக்கு எதிராக இணையவெளி வீரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ‘ஹாக்கிங்’ எனப்படுவது தவறாக இருந்தாலும் அது ஆச்சரியத்தை அளிக்கும் சொல்லாக உருவெடுத்துள்ளது. இணையவெளிப் பாதுகாப்பு என்பது இளைஞர்களிடையே  மாற்றத்தைத் தருகின்ற சரியானதொரு இணையவெளி பணி விருப்பமாக மாறிவருவதை நாம் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

டிஜிட்டல் தொழில்நுட்பவெளி பயங்கரவாதிகளின் விளையாட்டு மைதானமாக மாறிவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது நாடுகளின் முக்கிய பொறுப்பு ஆகும். எப்போதும் மாறிவரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பாதுகாப்பு முகவாண்மைகள் இடையே தகவல்கள் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு அவசியமாகும்.
 

நிச்சயமாக, நாம் அந்தரங்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்கு இடையே சமநிலையுடன் ஒரு புறமும் தேசியப் பாதுகாப்புடன் மறுபுறமும் நடக்கலாம். உலகளாவிய மற்றும் வெளிப்படையான முறைகளுக்கு இடையிலான வேறுபாடுகளை ஒரு புறம் கடக்கும் அதே நேரத்தில் மறுபுறம் தேசத்திற்கான குறிப்பிட்ட சட்டத் தேவைகளையும் பூர்த்தி செய்யலாம்.

 

நண்பர்களே,


நாம் இன்னும் அறிந்திருக்காத நமது எதிர்காலத்திலும் வளர்ந்துவரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் தாக்கத்தை ஏற்படுத்தலாம். வெளிப்படைத்தன்மை, அந்தரங்ம், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கியக் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தேவை இருக்கலாம். டிஜிட்டல் தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கு அதிகாரமளிக்கும் சேவை அளிக்கிறது. அது அதே திசையில் தொடர்வதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
 

பெரும் எண்ணிக்கையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டிருப்பது, இந்த மேடைக்கு உலகம் அளித்துள்ள உலகளாவிய ஒப்புதலுக்கான சான்றாகும். தேசஅரசுகள், தொழில்துறையினர், கல்வியாளர்கள், குடிமைச் சமூகத்தினர் என அனைவரும் முறையான இணைந்த கட்டமைப்புக்காக வேலை செய்வது அவசியம். இது வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தும் பாதுகாப்பான இணையவெளியைச் சாத்தியமாக்கும்.

நண்பர்களே,


எண்ணிக்கை அடிப்படையில் இந்த மாநாடு ஒரு மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும், இதற்கான பின்புலம் பணிகள் மற்றும் சரக்குகளை கையாளுதல் ஆகிய அனைத்தும் டிஜிட்டலில் செய்யப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து இங்கு வந்துள்ள பிரதிநிதிகள் சுமுகமான மற்றும் தடையற்ற அனுபவத்தைப் பெறுவார்கள் என நான் நம்புகிறேன்.
 

இதில் பயன்தரும், ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் எனவும் நான் நம்புகிறேன். மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவரையும் வரவேற்று, இந்த மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
 

நன்றி.

***



(Release ID: 1529957) Visitor Counter : 389


Read this release in: English , Gujarati , Kannada