பிரதமர் அலுவலகம்

கன்னியாகுமரி விவகானந்தர் கேந்திராவில் ராமாயணத் தரிசனம் கண்காட்சி தொடக்கவிழாவில், காணொளி முறையில் பிரதமர் ஆற்றிய உரை.

Posted On: 13 JAN 2017 11:16AM by PIB Chennai

மதிப்பிற்குரிய திரு. மொராரி பாபு அவர்களே,

விவேகானந்தர் கேந்திராவின் தலைவர் திரு.பி. பரமேஷ்வரன் அவர்களே,

என்னுடைய அமைச்சரவை சகா திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களே,

விவேகானந்தர் ஆசிரமத்தின் சுவாமிஜி சைதன்யானந்த் அவர்களே, பாலகிருஷ்ணா அவர்களே,

பானுதாஸ் அவர்களே,

விவேகானந்தர் கேந்திராவின் துணைத் தலைவர் நிவேதிதா அவர்களே,

மற்றும் என் நெருங்கிய நண்பர்களே!

நான் உங்களுடன் பங்கேற்று இருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சியில் நம்மை இணைத்த தொழில்நுட்பத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும், எந்த வகையில் பார்க்கலாம். நான் இங்கு விருந்தினராக இல்லாமல், உங்களில் ஒருவராக இருக்கிறேன்.

ஜனவரி 12 ஆம் தேதி, சாதாரண நாள் அல்ல. இந்தியாவைப் பற்றிய செய்தியை, ஒட்டுமொத்த உலகமக்களுக்கு எடுத்துச் செல்லும்  காரணமாக இருந்த பெருமைவாய்ந்த சிந்தனையாளர், வழிகாட்டி மற்றும் கடினமான உழைப்பாளியாகிய ஒருவர், இந்தியாவிற்கு ஆசிர்வாதமாகத் தந்த நாளாக வரலாற்றில் இந்த நாள் பொறிக்கப்பட்டுள்ளது.

மதிப்பிற்குரிய சுவாமி விவேகானந்தருக்கு என்னுடைய மரியாதையைச் செலுத்துகிறேன். மிகப்பெரிய மகானான அவரின், சக்திவாய்ந்த சிந்தனைகள், தொடர்ந்து பலருடைய மனங்களை ஒழுங்குப்படுத்தியுள்ளது.

இன்று விவேகானந்தாபுரத்தில் ராமாயண தரிசனம் மற்றும் பாரத் மாதா கோயில் ஆகியவை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 27 அடி உயர அனுமன் சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது. உங்களால் அனுப்பப்பட்ட இதுபற்றிய காணொலியை நான்  பார்த்தேன். இந்தக் காணொலியைப் பார்த்த பின்னர், இந்தச்  சிலையானது தெய்வீகத்தன்மை மற்றும் மகத்துவத்தைக் கொண்டுள்ளது என்று நான் கூறினேன்,

விவேகானந்தர் கேந்திராவின் நிறுவனரான மறைந்த ஏக்நாத் ரானடேயின் உருவப்படமும் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சிக்காக உங்கள் அனைவருக்கும் என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.

சகோதரர்களே, சகோதரிகளே, இப்போது நீங்கள் இருக்கும் இடம் ஒரு சாதாரண இடம் அல்ல. இது நாட்டில் உள்ள புனித ஸ்தலங்களில் ஒன்றைப் போன்றது. அனுமனிடம் ஜம்வந்த், அவருடைய பிறப்பின் நோக்கம் பற்றிக் கூறுகையில், ராமபிரானுக்குப் பணி செய்து கிடப்பதுதான் என்று தெரிவித்தார். ஒருவேளை அனுமன் தன்னுடைய பிறப்பின் நோக்கத்தை அறிந்திருந்தால், அவர் இந்த இடத்தை மட்டுமே அடைந்திருப்பார். இந்த இடத்தில், அன்னை பார்வதி, கன்னியாகுமரி ஆகியோரின் வாழ்க்கையின் நோக்கம் நிறைவேறியது. இந்த இடத்தில்தான் சமூகச் சீர்திருத்தவாதியான துறவி திருவள்ளுவரும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அறிவு எனும் அமிர்தத்தையும் பெற்றார். இந்த இடத்தில்தான் சுவாமி விவேகானந்தர் தன்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தை அடைந்துள்ளார். அவர் தன்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தையும், தன்னுடைய வாழ்க்கையின் நோக்கம் பற்றிய வழிமுறைகளையும், இங்கு வந்து தியானம் செய்த பின்னர்தான் பெற்றார். இங்குதான் ஏக்நாத் ரானடே தன்னுடைய வாழ்க்கையில் புதிய திருப்புமுனையைப் பெற்றார். தம் வாழ்க்கைப் பாதையில் புதிய திருப்பத்தையும் அவர் பெற்றார். புதிய இவக்கை ஏற்படுத்திக் கொண்டார்.. ஒரு வாழ்க்கை, ஒரு செயல்திட்டம் என்பதன் கீழ் தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அவர் தியாகம் செய்தார். இந்தப் பக்திமிக்க, புனித பூமியை ஆயிரம் முறை நான் தலைவணங்குகிறேன்.

ஏக்நாத் ரானடேயின் நூறாவது பிறந்தநாளை நாம் கொண்டாடும் அதேவேளையில், இது இளைஞர்கள் எழுச்சி பெற வேண்டிய நேரம் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். நம்முடைய இந்தியா இளமையானது. இது தெய்வீகமானதாகவும், புகழ்பெற்றதாகவும் மாற வேண்டும். இன்று, இந்தியாவின் தெய்வீகத்தன்மையையும், வறுமையையும் உலகம் உற்றுநோக்குகிறது. அது மட்டுமின்றி இந்தியாவின் ஒடுக்கப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, சுரண்டலுக்கு ஆளான மற்றும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் கூட்டம் நாட்டிற்கு பெருமையை எதிர்பார்ப்பதையும் பார்க்கிறது. இதனால் உலகத்திற்கான தெய்வீகத்தன்மையையும், நாட்டின் மகத்துவத்தையும், இந்த இரு இணைக்கும் வகையில் நாம் தேசக் கட்டுமானத்தை வடிவமைக்கும் திசையில் நடைபோட வேண்டும்.

சகோதரர்களே, சகோதரிகளே, இன்று உலகத்தின் மிக இளமையான நாடாக இந்தியா உள்ளது. இது மிக இளமையான நாடு. இங்கு 35 வயதுக்கு கீழான 80 கோடி மக்கள் உள்ளனர். இன்று சுவாமி விவேகானந்தர் நம்மிடையே இல்லை. அவர் மனித உருவில் இல்லை என்றாலும், அவருடைய எண்ணங்கள் மிக சக்திவாய்ந்தவை, மிக உத்வேகம் கொண்டவை. அவை இளைஞர்களைத் தூண்டியெழுப்பி, நாட்டை வடிவமைக்கும் பாதையில் செலுத்தக்கூடியவை.

இளைஞர்களைத் தூண்டியெழுப்பும் சக்தியை வலிமைப்படுத்தவே, ஏக்நாத் ரானடே, விவேகானந்தர் கேந்திரா மற்றும் விவேகானந்தர் நினைவுப்பாறையை நிறுவினார். விவேகானந்தர் மீதான பாசத்தினால் மட்டும் எந்த மாற்றமும் வந்துவிடாது என்று ஏக்நாத் ரானடே கூறுவார். சுவாமி விவேகானந்தரின் கனவை நனவாக்குவதில் தொடர்ந்து தங்கள் பங்களிப்பை அளிப்பதுதான் மிக முக்கியமானது என்று அவர் நினைத்தார்.

விவேகானந்தரைப் போன்று, இளைஞர்கள் வளர்ச்சிக்கான லட்சியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஏக்நாத் ரானடே தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். தேசத்தைக் கட்டமைப்பதில், சுவாமி விவேகானந்தரால் பின்பற்றப்பட்ட அதே மதிப்பீடுகள் மற்றும் நெறிகளை இளைஞர்களிடம் புகுத்த வேண்டும் என்று அவர் நினைத்தார். ஏக்நாத் ஜியுடன் பல ஆண்டுகள் ஒன்றிணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பை  எனக்குக் கிடைத்த அரிய கருதுகிறேன். அவருடன் இருந்த நேரத்தில் என் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தது இங்கேதான்.

ராமாயணத்தில் உள்ள நமது கலாச்சாரம் மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றைப் புகைப்படமாக கொண்ட ஒரு கண்காட்சியை அமைப்பது என்று ஏக்நாத் ரானடேயின் நூறாவது பிறந்தநாளில், முடிவு செய்யப்பட்டது. இன்று ராமாயணத் தரிசனம் கண்காட்சி நம் கண்முன் மிகவும் பொலிவுடன் நிற்கிறது. விவேகானந்தர்  நினைவுப்பாறையைக் காண வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள், இந்த ராமாயணத் தரிசனக் கண்காட்சியால் கவரப்படுவார்கள் என்பதுடன் அதனால் ஈர்க்கப்படுவார்கள் என்றும் நான் நம்புகிறேன். ராமபிரான் நாட்டின் ஒவ்வொரு புள்ளியிலும் உள்ளார். அவர் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கிறார். அதனால் நாம் ராமபிரானை நினைக்கும்போது, அவர் உதாரணப் புத்திரராகனாகவும், உதாரணச் சகோதரனாகவும், உதாரணப் புருஷராகவும், உதாரண நண்பராகவும், உதாரண ஆட்சியாளராகவும் இருக்கிறார். அயோத்தி ஒரு மிகச்சிறந்த நகரம். ராமராஜ்யம் (ராமபிரானின் ஆட்சியில் இருந்த பகுதி) சிறந்த நிர்வாகத்திற்கான முன்னுதாரணமாகவும் திகழ்ந்துள்ளது. அதனால்தான் ராமபிரான் மற்றும் அவரது அரசாட்சிப்பகுதியைப் பற்றி, நாட்டின் பெருமைவாய்ந்த ஆத்மாக்கள் அவ்வப்போது ராமாயணமாகத் தங்கள் வழியில் விளக்கிவந்துள்ளனர். இந்த வெளிப்பாடு ராமாயணத் தரிசனத்திலும் பிரதிபலிக்கும்.

பெருமைக்குரிய கவிஞர் கம்பர், கோசல ராஜ்யம் மற்றும் அரசாட்சி குறித்து கம்ப ராமாயணத்தில் விளக்கிஉள்ளார். தமிழில் அவர் கூறியுள்ளதை, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்புகிறேன்.

“வறியவர்கள் யாரும் இல்லை என்பதால், அந்த நாட்டில் கொடையாளர்களும் இல்லை எனலாம்.

எதிர்ப்பதைத் தைரியம் என்று யாரும் கருதவில்லை

பொய்யர்கள் இல்லை என்பதால் உண்மை என்ற வார்த்தை தேவைப்படவில்லை

எல்லோரும் கற்றவர்கள் என்பதால், கற்றவர் இவர் எனக் குறிப்பிட்டுச்சொல்ல யாருமில்லை

அந்த நகரில் கற்பதை யாருமே நிறுத்தவில்லை.

யாருமே அறியாமையில் உழலவில்லை மற்றும் முழுமையாகக் கற்றவர்கள் யாருமில்லை.

எல்லோரும் எல்லாச் செல்வமும் பெற்றிருந்தனர்.

யாருமே ஏழைகள் இல்லை. யாருமே செல்வந்தர் இல்லை”.

இப்படித்தான் ராம ராஜ்யம் (ராமபிரானின் ராஜ்யம்) இருந்தது என்று கம்பன் விளக்குகிறார். இந்தச் சிறப்புக்காகத்தான் மகாத்மா காந்தியும் ராம ராஜ்யத்தை மேற்கோள் காட்டுவார். இது நிச்சயமான ஒரு வழிமுறை. இதில் நபர்கள் முக்கியமில்லை என்றாலும், கொள்கைகள் மிக முக்கியமானது.

ராம்சாரித் மனாசில், கோஸ்வாமி துளசிதாஸ், ராம் ராஜ்யம் பற்றி விரிவாக விளக்கிக் கூறியுள்ளார். ராம ராஜ்யம் என்றால், அங்கு எவரும் ஏழையாக இருக்க மாட்டார்கள், எவரும் வருத்தத்துடன் இருக்க மாட்டார்கள், யாரையும் யாரும் வெறுக்க மாட்டார்கள். அங்கு ஒவ்வொருவரும் நல்ல உடல்நலத்துடனும், கற்றறிந்தவர்களாகவும் இருப்பார்கள். இ்யற்கைக்கும் மனிதனுக்கும் இடையே சமநிலை இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

दैहिक दैविक भौतिक तापा, राम राज नहिं काहुहि व्यापा।

सब नर करहिं परस्पर प्रीती, चलहिं स्वधर्म निरत श्रुति नीति।

अल्पमृत्यु नहिं कवनिउ पीरा, सब सुंदर सब बिरुज सरीरा।

नहिं दरिद्र कोउ दुखी दीना, नहिं कोउ अबुध लच्छन हीना।

ராவணனை வீழ்த்தியதால் மட்டும் ராமர் சிறந்தவராகக் கருதப்படவில்லை. விளிம்புநிலை மக்களையும், எந்த மதிப்பீடும் இல்லாத மக்களையும் தன்னுடன் சேர்த்துகொண்டதன் மூலம்தான், அவரது உண்மையான ஆத்மாவானது மேலெழுந்து நிற்கிறது. அவர்களிடம் சுயமரியாதையை அவர் புதுப்பித்தார். வெற்றி உணர்வை அவர்களிடம் உட்புகுத்தினார். தன் வாழ்க்கையில், பரம்பரைப் பதவியை ராமபிரான் சாதாரணமாக ஏற்றுக்கொண்டு விடவில்லை. ஒவ்வொரு பத்தியிலும் நாம் பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும். அவர் அயோத்தியை விட்டு வெளியே வந்தபோது, நகரஎல்லையைத் தாண்டும் முன்பாகவே, முழு உலகமும், அவரது ஒட்டுமொத்த மனிதாபிமானத்தையும், தன் வாழ்க்கை மூலம் அவர் முன்னுதாரணமாக இருந்ததையும் அறிந்து கொள்கிறது. அவைதான் ஒருவரின் வாழ்வைச் செம்மைப்படுத்தும் மிகச்சிறந்த உதாரணங்கள் மற்றும் மதிப்பீடுகள் ஆகும்.

அதனால்தான் எல்லா முன்னேற்றத்துக்கும் வலிமையான சமுதாயம் தேவை என்று, நல்ல அரசாட்சி அவசியம் என்பதையும் தெரிந்துகொள்ள விவேகானந்தர்புரத்தில் இருக்கும் இந்த ராமாயணக் கண்காட்சி, இங்கு மிக பொருத்தமானதாக இருக்கும் என்றும் நான் நினைக்கிறேன்.

ராமனை நினைக்கும்போது, மனிதனின் வளர்ச்சி,  நிர்வாகத்தின் வளர்ச்சி ஆகியவை இயற்கையாகவே பிரதிபலிக்கும்.

சகோதரர்களே, சகோதரிகளே, ஆன்மிகச் சக்தியை எழுப்பி, நாட்டின் செயலாக்கச் சக்தியை ஆக்கப்பூர்வப் பணிகளுக்குப் பயன்படுத்தப் வேண்டும் என்று ஏக்நாத் அவர்கள் விரும்பினார்கள்.  அனுமன் சிலையை விவேகானந்தர் கேந்திராவில் நிறுவியுள்ளதன் மூலம், அவரது உத்வேகத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.

அனுமன் என்றால், தன்னலமற்ற சேவையாளர் என்று அர்த்தம். அவர், அர்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவையில் ஈடுபாடு ஆகிய மிகச்சிறந்த கொள்கைகளின் உருவமாக உள்ளார். தமது இலக்கை அடையும் வகையிலும் அவர் ஓய்வதில்லை. அவர் கடலின் மீது பறந்துசென்றபோது, இடையில் மைனக் மலை அவருக்கு ஓய்வுதர முன்வந்தும் தமது இலக்கை அடையாமல் ஓயவில்லை என்றார். இலக்கை அடையும் வரை அவர் ஓய்வெடுக்கவும் இல்லை. அனுமனின் அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற சேவை குறித்து, பாரதரத்னா சி. ராஜகோபலச்சாரி எழுதியிருக்கிறார்.  சீதா தேவியை பார்த்துவிட்டு அனுமன் திரும்பிவந்து, ராமபிரானிடம் அவரது நலத்தை விளக்குகிறார். பின்னர் ராமர் கூறுகையில், ‘‘அனுமன் செய்து முடித்த செயல், உலகில் வேறு எவராலும் செய்ய முடியாதவை. கடலைக் கடந்து செல்வதையும், ராவணன் மற்றும் அவரது பலமான படையினால் பாதுகாக்கப்படும் இலங்கையில் நுழைவதையும், தனது மன்னனால் விதிக்கப்பட்ட கட்டளையை முழுமையாக நிறைவேற்றியதுடன், அதற்கு மேலாகவும் செய்து முடிப்பதையும் யாராலும் நினைத்து கூடப் பார்க்க முடியாது’’ என்றார்.

ராமர் கூறுகையில், ‘‘அனுமனால் எதை முடிக்க முடியும் என்று யாரும் நினைத்து விட முடியாது. அனுமன் கடந்த கடலில் உள்ள பிரச்னைகள் யாராலும் நினைத்துபார்க்க முடியாதவை’’ என்கிறார்.

சகோதரர்களே, சகோதரிகளே, அதனால்தான் நாம் “சப்கா சாத், சப்கா விகாஸ்” வழிகாட்டிக் கொள்கையின் வழியாக நடைபோடுகிறோம்.

ஜன்தன் திட்டத்தை எடுத்துக்கொண்டால், விளிம்புநிலை மக்களை, வங்கி மூலம் அது இணைக்கிறது. ஏழைகளின் மேம்பாட்டுக்கான ஒரு முறையை நோக்கி நாம் இன்று முன்னேறி வருகிறோம். ஒரு இன்சூரன்ஸ் திட்டமும் இருக்கிறது. இதன் மூலம் விவசாயிகள் பலன் பெற முடியும். விவசாயிகளுக்குக் குறைந்த ப்ரீமியத்தின் அடிப்படையில் பயிர்  காப்பீடுத் திட்டம் அளிக்கப்படுகிறது. மேலும், நாங்கள் மகள்களைப் பாதுகாக்கவும், அவர்களைப் படிக்க வைக்கவும் பேடி பச்சாவ், பேடி பதாவ் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம். கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில், தேசிய அளவில் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஐந்து கோடி குடும்பங்களில், தாய்மார்கள் உணவு சமைக்க, விறகு அடுப்புகளைத்தான் பயன்படுத்துகின்றனர். இதனால் ஒரு நாளில் அவர்கள், 400 சிகரெட் புகைப்பதற்கு ஈடான புகையைச் சுவாசிக்கின்றனர். அவர்களுக்கு நல்ல உடல்நலத்தை அளிக்கவும், இதுபோன்ற தாய்மார்களின் முதன்மைக் கவனத்திற்காகவும், 5 கோடி குடும்பங்களுக்குச் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாம் ஒன்றரை கோடி பேருக்கு இணைப்புகளை வழங்கிவிட்டோம்.

ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, பின்தங்கியவர்களுக்கு நாங்கள் அளிக்கும் இந்தச் சேவையை, ‘மக்களுக்குச் செய்யும் சேவை, மகேசனுக்குச் செய்யும் சேவைக்குச் சமமானது’ என்ற அடிப்படையில் மேற்கொண்டுவருகிறோம். நாட்டில் உள்ள தலித் இளைஞர்கள், ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’, ஆகியவற்றின் மூலம் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். ‘முத்ரா திட்டம்’இவை, நியாயமான வட்டியில், சிறிய அளவிலான வர்த்தகக் கடன்கள் அளிப்பதற்காகத் தொடங்கப்பட்டது. ஏழை மக்களை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும். இதன் மூலம் அவர்களும் வறுமையில் இருந்து முன்னேறி வருவார்கள். வறுமையில் இருந்து விடுதலை கிடைக்கும்போது, அவர்கள் புதிய வளர்ச்சியை நோக்கி நடைபோட ஆரம்பிப்பார்கள்.

ராமாயணத்தில், அரசாட்சி தொடர்பாக ராமபிரான் மற்றும் பரதன் இடையே ஒரு கருத்துப் பரிமாற்றம் நடக்கிறது. அப்போது, ராமபிரான் பரதனிடம் கூறுகிறார்:

 

कच्चिद् अर्थम् विनिश्चित्य लघु मूलम् महा उदयम् |

क्षिप्रम् आरभसे कर्तुम् दीर्घयसि राघव ||

இதன் அர்த்தம்: ராமன் பரதனிடம், “சில திட்டங்களை அமல்படுத்தும்போது, அவை குறைந்த அளவில் செலவு செய்யும் தன்மை கொண்டு பெரும்பாலான மக்களைச் சென்றடைவதாக இருக்க வேண்டும்” என்கிறார். மேலும் பரதனிடம், “திட்டங்களை செயல்படுத்துவதில் எந்தத் தாமதமும் கூடாது” என்கிறார்.

आयः ते विपुलः कच्चित् कच्चिद् अल्पतरो व्ययः |

अपात्रेषु ते कच्चित् कोशो गग्च्छति राघव ||

“செலவைவிட வருமானம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது” என்றும் பரதனுக்கு ராமபிரான் அறிவுறுத்துகிறார். “தகுதியற்றவர்களுக்கு அரசின் பலன்கள் சென்று சேரக்கூடாது” என்றும் கூறுகிறார்.

தகுதியற்றவர்களிடம் இருந்து வரிப்பணத்தைச் சேமிப்பதும், அரசின் ஒரு நடவடிக்கை ஆகும். நேரடி மானியத் திட்டத்துக்கு, வங்கி கணக்குடன் ஆதார் எண்கள் இணைப்பதையும், போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்படுவதையும், போலி சமையல் எரிவாயு இணைப்புகள் நீக்கப்படுவதையும், போலி ஆசிரியர்கள் நீக்கப்படுவதையும், மற்றவர்களின் உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தும் தகுதியற்றவர்கள் நீக்கப்படுவதையும் நீங்கள் பார்த்திருக்க முடியும். அரசு எடுத்த இவ்வனைத்து நடவடிக்கைகளும், அந்த நோக்கத்தின் அடிப்படையில்தான்.

சகோதரர்களே, சகோதரிகளே, பாரத மாதா கோயிலுக்கு பஞ்ச உலோகங்களால் ஆன பாரத அன்னையின் சிலை உருவாக்கப்பட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பாரத அன்னையின் சின்னமாகத் திகழும் இதைப் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பது மிகவும் புனிதமானது. இப்பணியில் ஈடுபட்ட அனைவரையும் நான் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன். அவர்கள் இந்தப் புதுமையானப் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.

நண்பர்களே, விவேகானந்தர் நினைவுப்பாறைக்கு அருகில் நிறுவப்பட்டுள்ள துறவி திருவள்ளுவர் சிலைக்கும் நான் தலைவணங்குகிறேன். திருவள்ளுவரின் போதனைகள் மிகச் சரியானவை. அவை இன்றைக்கும்கூடப் பொருத்தமாக உள்ளன. இளைஞர்களுக்கான அவரது செய்தி, ‘‘மணலை ஆழமாக தோண்டும்போதுதான் உங்களால் நீரூற்றுகளை அடைய முடியும். அதேபோல் நீங்கள் அதிகமாகக் கற்கும்போதுதான் சுதந்திரமான ஞானஓட்டத்தை அடைய முடியும்’’ என்பதுதான்.

இதன் அர்த்தம்: பாலைவனத்தில் நீங்கள் ஆழமாக தோண்டும்போது, ஒரு நாள் நிச்சயமாக உங்களால் தண்ணீரைக் கண்டறிய முடியும். அதேபோல் நீங்கள் மேலும்மேலும் கற்கும்போது, ஒரு நாள் மெய்யறிவை அடைய முடியும்.

இளைஞர்களின் நாளான இன்று, நம்முடைய நாட்டின் இளைஞர்களுக்கு நான் விடுக்கும் கோரிக்கை, கற்பதை நிறுத்த வேண்டாம் என்பதுதான். உங்களுக்குள் இருக்கும் மாணவனை எப்போதும் சாகடித்துவிடாதீர்கள். நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகக் கற்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாக உங்களது ஆன்ம சக்தி, திறன் ஆகியவற்றைப் பெருக்கிக்கொள்ளலாம். இதன் மூலம் உங்களையும் நாட்டையும் நீங்கள் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

ஆன்ம சக்தி என்றால் என்ன என்று புரிந்துகொள்வதில் சில பேர் தோல்வி அடைந்துவிடுகின்றனர். சிலர் இதை மதம் என்னும் பட்டகைக் கண்ணாடியின் வழியாகப் பார்க்கின்றனர். ஆனால், ஆன்ம சக்தி என்பது, மதங்களை எல்லாம் கடந்தது. இது, மனிதப் பண்புகள் மற்றும் தெய்வீகச் சக்தியுடன் நேரடி தொடர்பு கொண்டது. நமது மண்ணின் பெருமைக்குரிய மைந்தரா குடியரசு முன்னாள் தலைவர்  டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம், தம்மைப் பொருத்தவரை ஆன்மிகம் என்பது, கடவுள் மற்றும் தெய்வீகத்துடன் நாம்  தொடர்பு கொள்வதற்கான ஒரு பாதை ஆகும் என்றும், தெய்வீக வாழ்க்கை நம்மைச் சமன்படுத்திவைப்பதுடன், வாழ்க்கையின் மதிப்புகள், நேர்மையின் நற்குணங்கள், அண்டை அயலாரை நேசிக்கும் தன்மை உள்ளிட்ட பல்வேறு முக்கியச் சிறப்புகளை நமக்கு அளித்து, நம்முடைய பணியிடத்தை நேர்மறையான சூழலைக் கொண்ட இடமாக மாற்றிவிடும்’’ என்பார்.

இந்த இலக்கில் விவேகானந்தர் கேந்திரா பல தசாப்தங்களாகச் செயல்படுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று, விவேகானந்தர் கேந்திரா 200க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. மேலும், நாட்டின் 800க்கும் மேற்பட்ட இடங்களில், தன்னுடைய திட்டங்களைச் செயல்படுத்துகிறது. அது சுகாதாரம், கல்வி, கிராமப்புற இந்தியா கலாச்சாரம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் தன்னுடைய பங்கினை ஆற்றிவருகிறது.

பாட்னாவில் இருந்து போர்ட்பிளேயர் வரையிலும், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கர்பி அங்லாங் முதல் காஷ்மீரின் அனந்த்நாக் வரையிலும், ராமேஸ்வரம் முதல் ராஜ்கோட் வரையிலும் விவேகானந்தர் கேந்திரா உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் விவேகானந்தர் கேந்திரா மேற்கொண்டுள்ள பணிகளுக்காக, குறிப்பாக அதற்கு, நன்றி சொல்ல விரும்புகிறேன். அருணாச்சலப் பிரதேசத்தில், ஏழு உண்டுஉறைவிடப் பள்ளிகள், ஏக்நாத் ஜியின்  வாழ்நாளில் தொடங்கப்பட்டன. தற்போது விவேகானந்தர் கேந்திரா, வடகிழக்கு மாநிலங்களில் 50 இடங்களில் சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது.

எண்ணற்ற மாணவர்கள், ஐஐடி மாணவர்கள், டாக்டர்கள், துறை நிபுணர்கள் உள்ளிட்டோர் விவேகானந்தர் கேந்திராவில் தன்னார்வத்  தொண்டர்களாகப் பணியாற்றுகின்றனர். இதற்காக அவர்களுக்கு எந்தச் சம்பளமும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், அவர்கள் இப்பணிகளைக் கடமைஉணர்வுடன் செய்கின்றனர். எந்தத் தன்னலமும் இல்லாமல் சமூகத்துக்குப் பணியாற்றும் இந்தத் தன்னார்வலர்கள், நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் ஒரு சக்தியாக இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டே, சமூகத்துக்குச் சேவை செய்யும் அவர்கள், மிகச்சிறந்த உதாரணமாக இருப்பவர்கள். அவர்கள் நடைபோடும் பாதை, இந்நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது.

இன்று தேசத்தின் கட்டுமானத்தில், விவேகானந்தர் கேந்திராவுடன் இணைந்திருப்பவர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். இதே முறையில் வருங்காலத்தில் அவர்கள் பல்வேறு விவேகானந்தர்களை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

தேசத்தை கட்டமைப்பதில், முன்ணுர்ந்து இயங்கித் தங்களுடைய கடமையை நிறைவேற்றும் ஒவ்வொருவரும் விவேகானந்தரைப் போன்றவர்கள். இதேபோல், ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் ஆகியோரின் மேம்பாட்டுக்காகப் பாடுபடும் ஒவ்வொருவரும் விவேகானந்தர்கள்தான்.. சமுதாயச் சேவையில் தன்னுடைய சக்தி, தன்னுடைய கருத்துக்கள் அல்லது புதுமையை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் விவேகானந்தர்களைப் போன்றவர்களே.

நீங்கள் அனைவரும் ஈடுபட்டுள்ள இந்த இயக்கமானது, மனிதத் தன்மை, சமுதாயம் மற்றும் தேசத்திற்கான ஒரு தவத்தைப் போன்றது. இதே உணர்வுடன், நாட்டிற்குத் தொடர்ந்து நீங்கள் சேவை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். விவேகானந்தரின் பிறந்தநாளான, இளைஞர்கள் நாளில் மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன். பாபுவுக்கு ஜெய் ஸ்ரீராம் கூறிக்கொள்கிறேன். பரமேஷ்வரன் ஜி உள்ளிட்டோருக்குச் சிரம்தாழ்த்தி வணங்கி என் பேச்சை முடிக்க விரும்புகிறேன். என்னுடைய வீடு போன்றது, கன்னியாக்குமரி. அங்கு வர எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் இங்கும்அங்கும் ஓடிக்கொண்டிருக்கிறேன். இந்தப் பரப்புக்கு இடையிலும், இங்கு வருவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் நிச்சயமாக மதிப்பிற்குரிய என்னுடைய இந்தப் பூமிக்கு வருவேன். அப்போது உங்களுடன் நிறைய நேரத்தைச் செலவிடுவேன். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேரில் அங்கு வர முடியவில்லையே என்று வருத்தப்படுகிறேன். இங்கு டெல்லியில் கடும் குளிராக உள்ளது. அங்கு வெப்பமாக உள்ளது. இந்த இரண்டுக்கும் நடுவில், நாம் புதிய சக்தி, புதிய உத்வேகத்துடன் முன்னேறுவோம். இந்த உணர்வுடன், இப்புனிதமான நிகழ்ச்சியில் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  அனைவருக்கும் நன்றி.



(Release ID: 1529918) Visitor Counter : 458


Read this release in: English , Assamese