பிரதமர் அலுவலகம்
02.04.2017 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நூற்றி ஐம்பதாவது கொண்டாட்டத்தின் நிறைவுவிழாவில் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
02 APR 2017 6:53PM by PIB Chennai
மேடையில் வீற்றிருக்கும் பிரமுகர்களே,
ஒருவகையில், இது நூற்றி ஐம்பதாவது கொண்டாட்டத்தின் நிறைவைக் குறிக்கிறது. ஆனால், கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்த இக்கொண்டாட்டத்தின் நிறைவு, புதிய இந்தியாவை அடைவதற்கான புதிய சக்தி, புதிய ஆதர்சம், புதிய தீர்மானம் ஆகியவற்றுக்கான ஆதாரமாக உள்ளதை நிருபித்துள்ளது. நீதித்துறையில், உலகில் இயங்கிவரும் அலகாபாத் நீதிமன்றம் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். நீதித்துறையில், இந்தியாவின் புனிதத்தலம் அலகாபாத் என நான் நம்புகிறேன். இத்தகைய புனிதத் தலத்தில் நான் பங்கேற்று, உங்கள் உரையைக் கேட்கவும் எனது சிந்தனையை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி நான் பெருமையும் மகிழ்ச்சியுமடைகிறேன்.
தலைமை நீதிபதி அவர்கள் தமது இதயம் திறந்து உரையாற்றியதை நான் கேட்டேன். அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள வலியை நான் உணரமுடிவவதுடன், அதற்குத் தீர்வு காண ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவசியத்தை நான் உணர்ந்துள்ளேன். இந்திய நீதிபதிகளின் தீர்மானத்தை நிறைவேற்ற இந்தத் தலைமை உதவும் என நான் நம்புகிறேன். இந்த அரசு உங்களுடன் இருந்து, உங்களது பொறுப்புகளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என நான் உறுதியளிக்கிறேன். அலகாபாத் நீதிமன்றம் 100 வருடத்தை நிறைவு செய்தபோது, இந்தியாவின் அப்போதைய ஜனாதிபதி டாக்டர்.இராதாகிருஷ்ணன் அவர்கள் இங்குப் பங்கேற்று, சில சிந்தனைகளை வெளிப்படுத்தினார். 50 ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்த்தப்பட்ட அந்த உரையிலிருந்து நான் ஒரு பத்தியை வாசித்து, அச்சிந்தனைகளை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார் “சட்டம் என்பது தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகும் ஒன்று. சட்டம், மக்களின் இயல்பிற்கு ஏற்றவாறும், பாரம்பரிய மாண்புகளை ஏற்றுக்கொள்ளும் வகையிலும் இருப்பதுடன், நவீன மாற்றங்கள் மற்றும் சவால்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டத்தைச் சீராய்வு செய்யும்போது மேற்சொன்ன அனைத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். நாம் எவ்வகையான வாழ்க்கையைக் கடைபிடிக்கப் போகிறோம்? சட்டம் என்றால் என்ன? சட்டத்தின் இறுதி நோக்கம் என்ன? அனைத்து மக்களின் நல்வாழ்வு என்பது பணக்கார மக்களின் நல்வாழ்வு மட்டுமல்ல; நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களின் நல்வாழ்வுமாகும். இதுவே சட்டத்தின் இலக்காகும். நாம் அதனை அடைய தொடர்ந்து பாடுபடவேண்டும்.”
இதே பூமியிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பாக டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்நாட்டின் நீதிபதிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கான மிக முக்கியமாக விடுத்துள்ள செய்தி இன்றும் பொருத்தமானதாகவும், மதிப்பு மிக்கதாகவும் இருக்கிறது என நான் நினைக்கிறேன்.
ஒரு முடிவு சரியானது அல்லது தவறானது என்பதில் எவ்வாறு உறுதியாக இருக்க வேண்டும் எனக் காந்தியடிகள் கூறுவார். அதற்கான அடிப்படைகள் என்ன? ஆகவே, அரசு ஒரு முடிவை எப்போது எடுக்கும்போது, குழப்பமாக இருந்தால், நாட்டில் உள்ள கடைகோடி நபர் மற்றும் அவர் மீது அது ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறித்து சிந்திக்க வேண்டும். அதன் தாக்கம் நேர்மறையாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் அம்முடிவை நோக்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
இந்தச் சிந்தனையை எவ்வாறு நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக உருவாக்க முடியும்? மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நமது வாழ்க்கையின் நோக்கத்தை எவ்வாறு உருவாக்க முடியும்?
சுதந்திரத்திற்கு முன்பாக, குறிப்பாக அலகாபாத்தில், ஒட்டுமொத்த இந்தியாவில் பொதுவாக, நீதித்துறை சேர்ந்த வழக்கறிஞர்கள் அல்லது மக்கள் சுதந்திர இயக்கத்திற்கு உந்துதலை அளித்தனர். அவர்கள் கோடிக்கணக்கான மக்கள் ஆங்கிலஅரசை எதிர்த்து அச்சமின்றிப் போராட உணர்வூட்டிவந்தனர். பிற்காலத்தில் அரசியல்வாதிகளாக மாறிய அத்தலைமுறையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள், சட்டத்தைப் பின்புலமாகப் பெற்றிருந்தனர். சுதந்திர இயக்கத்திற்கும், சுதந்திரத்திற்குப் பின்பாக அரசமைப்பிற்கும் அவர்கள் தலைமைதாங்கினர். நாடு விடுதலை பெற வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாகவும் இருந்தது. அக்கனவு இல்லாவிட்டால், சுதந்திரம் அடைவது சாத்தியமாகிஇருக்காது. ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் சுதந்திரத்திற்கான ஆசையைத் தூண்டியது காந்தியடிகளின் சிறப்புகளில் ஒன்றாகும். துப்புரவுப் பணியாளர், தனது பணி சுதந்திரம் அடைவதற்கானது எனச் சிந்தித்தார். கல்வித் துறையில் ஈடுபட்ட ஒருவரும், அத்தகைய சிந்தனையே கொண்டிருந்தார். அதுபோன்றே, கதர் அணிந்த ஒருவர், அது தனது நாட்டிற்காக என அவர் சிந்தித்தார். ஒவ்வோர் இந்தியரிடமும் அவர்களது திறனுக்கேற்ப இத்தகைய உணர்வை அவர் ஊட்டினார். சுதந்திரப் போராட்டத்தை வலுப்படுத்திய அலாகாபாத்தில் இன்று நான் இருக்கிறேன்.
நாம் சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளோம். 2022-ஆம் ஆண்டில் நாம் சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளோம். நாட்டிற்கு அலகாபாத் உணர்வூட்ட முடியுமா? சுதந்திரப் போராட்டத்தின்போது நாட்டுமக்களின் உணர்வாக இருந்த ஆர்வம், மறுப்பு, கடுமையான உழைப்பு, மீண்டும் இந்த 5 ஆண்டுகளில் 125 கோடி மக்களிடம் தூண்டப்பட்டு, 75 -வது சுதந்திரத் தினத்தைக் கொண்டாட உள்ள 2022-ம் ஆண்டிற்குள் இந்தியாவைப் புதிய உச்சத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற பார்வையை நிறைவேற்ற இயலுமா? 2022-ம் ஆண்டிற்காக ஒவ்வொரு தனிநபரும் தீர்மானமும், வரைபடமும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இதைச் செய்தால், எந்தக் குடிமகனும் அதன் விளைவைப் பற்றிச் சந்தேகம் கொள்ள வேண்டாம் என நான் நம்புகிறேன்.
125 கோடி மக்கள், நமது நிறுவனங்கள், நமது அரசு மற்றும் சமூகத்தில் பெருமளவிலான வலிமை உள்ளது. இன்று, நாம் 150 ஆண்டு நிறைவைக் கொண்டாடும்போது, நாம் எத்துறையில் இருப்பினும், டாக்டர் இராதாகிருஷ்ணன் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் நல்வாழ்விற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும். நமது தலைமைநீதிபதி கொண்டுள்ள கனவான அந்தத் தீயை நீங்கள் அனைவரும் கொண்டிருப்பீர்கள் என நான் நம்புகிறேன். அந்தத் தீ, நாட்டில் மாற்றம் கொண்டுவருவதற்கான சக்தியாக விளங்கும். நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கொண்டிருந்த கனவைச் சுதந்திரம் பெற்ற 75 ஆம் ஆண்டிற்கு அவற்றை நிறைவேற்றிட நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும் என இத்தளத்திலிருந்து நாட்டுமக்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். 125 கோடி இந்தியர்களின் கனவு மற்றும் 125 கோடி இந்தியர்கள் எடுத்துவைக்கும் ஓர் அடி, நாட்டை 125 கோடி அடிகள் முன்னோக்கி எடுத்துவைத்துச் செல்லும் என நான் நம்புகிறேன். அவர்களது சக்தி அத்தகையது. இத்திசையில் நாம் முயற்சிகளைச் செலுத்தி அதனை மேலும் வலுப்பெறச் செய்ய வேண்டும். சகாப்தம் மாறியுள்ளது.
2014 தேர்தல்களுக்கான நான் பிரச்சாரம் மேற்கொண்டபோது, நாட்டில் உள்ள பலருக்கு என்னைத் தெரிந்திருக்கவில்லை. எனக்கென எந்தவித அடையாளமும் இல்லை. சிறிய நிகழ்ச்சி ஒன்றில் என்னைப் பேட்டி கண்டனர். நான் கூறினேன்: “நான் எவ்வளவு புதிய சட்டங்களை நிறைவேற்றுவேன் எனத் தெரியாது; நான் பிரதமரானால், ஒவ்வொரு நாளும் ஒரு சட்டத்தை அகற்றுவேன். சாதாரண மனிதன் மீது அரசுகள் சுமத்திய இந்தச் சட்டங்களின் சுமையை நான் குறைக்க விரும்புகிறேன்.” தலைமைநீதிபதி அவர்கள் கூட இது எவ்வாறு நிறைவேறும் என வியப்படைந்தார். சுமையைக் குறைப்பதற்கு அரசும் சிந்திக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் கூட முடிவடையாத நிலையில், இன்று, நாளொன்றுக்கு ஒரு சட்டத்திற்கு மேலாக, ஏறக்குறைய 1200 சட்டங்களை அகற்றியுள்ளோம் என்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். மேலும் எளிமையான அமைப்பு மற்றும் குறைவான சட்டச்சுமை ஆகியவை நீதித்துறையை மேலும் திறமையானதாக்கும். இதனை அடைய, இன்றைய சகாப்தத்தில், தொழில்நுட்பத்தின் பங்கு தவிர்க்க இயலாதது. தற்போது ஆவணங்கள் ஏதும் தேவையில்லை, ஒரு நொடிப் பொழுதிற்குள் தாமாகவே கோப்பு நகரத் துவங்கும் எனத் தலைமை நீதிபதி அவர்கள் கூறினார். டிஜிட்டல் இந்தியா முயற்சியின் கீழ், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பப் பயன்பாட்டின் மூலம் நீதித்துறையை அரசு வலுவாக்கியுள்ளது. பணி எளிமையாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வழக்கிற்கும், நீதிபதிகள் புத்தகங்களைக் கூர்ந்து பார்க்க வேண்டிய காலம் ஒன்று இருந்தது.
இன்றைய வழக்கறிஞர்கள் மிக கடுமையாகப் பணியாற்ற தேவையில்லை. அவர்கள் ‘குகூள் குருவைக் கேட்கிறார்கள், உடனே, இவ்வழக்கு 1989-ம் ஆண்டிற்கானது, இதுதான் விவகாரம், இவர்தான் நீதிபதி போன்று குகூள் குரு பதிலளிக்கிறது. தொழில்நுட்பம் அனைத்தையும் எளிமையாக்கிவிட்டது. ஒட்டுமொத்த வழக்கறிஞர்கள் சமூகமும், நவீனத் தகவல்அமைப்பின் மூலம் விவாதங்களின் தரத்தை உயர்த்தும் அளவு வலுப்பெற்றுள்ளனர். வாக்குவாதங்களுக்கு உதவியாகத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது கூர்மையாகவும், தரமாகவும், தேதிகளுக்கல்லாது, பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கொண்டுவரும். நீதிபதிகளின் முன்பு விவாதங்கள் கூர்மையாக இருக்கும்பட்சத்தில், நீதிபதிகளுக்கு உண்மையைக் கண்டறிய அதிக நேரம் தேவைப்படாது என நான் நம்புகிறேன். இது நீதித்துறையின் செயலாக்கத்தை விரைவாக்கும். ஒவ்வொரு நிலையிலும் எவ்வாறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்? இன்று, நீதிமன்றத்திற்கு நேராகச் சென்று தேதிகள் அறிய வேண்டியுள்ளது. குறுஞ்செய்தி மூலம் தேதிகளை அளிக்கும் நடைமுறை எப்போதிலிருந்து துவங்கும்?
இன்று, ஓர் அலுவலர் ஏதோ ஒரு நகரத்தில் பணியாற்றுகிறார். ஒரு வழக்கில் அவரது இருப்பு தேவைப்படுகிறது; ஆனால் அவர் மாற்றப்படுகிறார். விசாரணையில் கலந்துகொள்ள அவர் எதற்காக விடுப்பு எடுத்து, தனது ஊரிலிருந்து பழைய ஊருக்குச் செல்ல வேண்டும்? காணொளி வசதியை நாம் அளிக்கக் கூடாதா? அவர்களிடம் சிறிது நேரத்திலேயே விசாரணை மேற்கொள்ளலாம். இதன் மூலம், ஆளுகைக்காக அரசமைப்பிற்காக அவர்களது நேரத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம். கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லுதல், பாதுகாப்பிற்காக அதிகச் செலவினம் போன்ற நடைமுறைகளை ஒவ்வொருவரும் அறிந்துள்ளனர்.
தற்போது யோகி அவர்கள் பதவிக்கு வந்துள்ளார். இது தடுக்கப்படலாம். நாம் சிறைச்சாலைகளை நீதிமன்றத்துடன் காணொளியால் இணைப்பதன் மூலம், செலவினம் மற்றும் நேரத்தை நாம் குறைக்கலாம். இந்த ஒட்டுமொத்த நடைமுறையிலும் நாம் எளிமையைக் கொண்டுவரலாம். நவீனத் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தின் முழு பயனையும் நமது நீதித் துறைக்கு கிடைக்கச் செய்வதற்கு இந்திய அரசு முயன்றுவருகிறது. அதற்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும். புதிதாகத் தொழில் தொடங்கும் இளைஞர்கள் நாட்டின் எதிர்கால நீதித்துறை அமைப்பில் புதிய நவீனங்களைக் கொண்டுவரவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தொழில்நுட்ப உதவியுடன் நமது நாட்டின் நீதித்துறையை அவர்கள் வலுப்படுத்த வேண்டும். தொழில்நுட்ப மற்றும் முயற்சிகளின் உதவியுடன், நாட்டின் நீதித் துறை விரைவாகச் செயல்படுத்தப்படும் என நான் நம்புகிறேன். நான்கு திசைகளிலும் நாம் முயற்சித்தால், நாம் ஒருவரையொருவர் சார்ந்து, விரும்பிய பலன்களை உறுதியாகப் பெற இயலும்.
மீண்டும் ஒரு முறை, திலீப் அவர்களுக்கும், அவரது ஒட்டுமொத்தக் குழுவினருக்கும், மாண்புமிகு நீதிபதிகள் மற்றும் எனது நண்பர்களுக்கும் இப்பயணத்தில் 150வது ஆண்டை நிறைவு செய்ததற்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். சுதந்திரம் பெற்று 75 ஆம் ஆண்டான 2002-ம் ஆண்டிற்கான கனவுகளை எதிர்நோக்கி நாம் முன்னோக்கி நடைபோடுவோம் என நான் நம்புவதுடன், நமது தீர்மானங்களை எவ்விதமும் தோல்வியடையாமல் நிறைவேற்றிடத் தொடர்ந்து உழைப்போம். நமது நாட்டைப் புதிய உச்சத்திற்குக் கொண்டுசெல்லும் வகையில், ஒவ்வொரு முயற்சியிலும் புதிய தலைமுறையினரின் கனவை நிறைவேற்றும் வகையில் நாம் தொடர்ந்து உழைப்போம். இந்த ஒற்றை எதிர்பார்ப்புடன், நான் உங்கள் அனைவருக்கும் நன்றியுடையவனாக இருப்பேன்.
நன்றி.
***
(Release ID: 1529904)
Visitor Counter : 327