குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

“அமலாக்கம்” மற்றும் ”புதுமைப் படைப்பு” ஆகியவற்றுக்கு நமது கவனம் மாறியுள்ளது: குடியரசுத் துணைத் தலைவர்

Posted On: 20 APR 2018 1:49PM by PIB Chennai

  சட்டமியற்றும்  நோக்கத்தைத் திட்டமிடக்கூடிய  பொருளடக்கமாக மாற்றுவது, நல்லாட்சி  (“சுராஜ்யா”) என்பது அன்றாட நிர்வாகத்தில் எவ்வாறு தோன்றுகிறது எனச் சாதாரண குடிமக்களுக்கு விளக்கிக் காட்டுவது என மிகப் பெரிய வாய்ப்புகள் இன்றைய நிலையில், சிவில் பணியாளர்களுக்குக் கிடைத்துள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம்.வெங்கய்யா நாயுடு கூறியிருக்கிறார். புதுதில்லியில் இன்று (20.04.2018) 12-வது சிவில் சேவைகள் தினக் கொண்டாட்டங்களின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் அவர் தொடக்க உரையாற்றினார்.  இந்த நிகழ்ச்சியில் மத்திய வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர் நலம், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள்,அணுசக்தி, விண்வெளி துறை இணைஅமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    தூய்மையான, திறம்மிக்க, மக்களுக்கு இணக்கமான, முன்னுணர்ந்து செயல்படும் நிர்வாகத் தலைமைப் பண்பு ஆகியன இன்றைய நிலையில் மிகவும் அவசியமானது என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். ‘சுயராஜ்யம்’ இந்திய மக்களுக்கு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால் நல்லாட்சி என்று பொருள்படும் ‘சுராஜ்யம்’ தவிர்க்க  முடியாதது என்றார் அவர். நமது நிர்வாக அமைப்பு மற்றும் நடைமுறைகளின் திறன் மற்றும் திறமைகளை நேர்மையுடன் அணுகி ஆராய வேண்டியது அவசியமாகிறது என்று அவர் கூறினார்.

   தற்போது நமது கவனம் ”அமலாக்கம்” மற்றும் ”புதுமைப்படைப்பு” ஆகியவற்றின் மீது திரும்பியுள்ளது. ”எப்போதும் போல்” என்ற நடைமுறை போதுமானது அல்ல.  நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்திய பெருநாட்டை  அனைவரும் பெருமைப்படும் நாடாக மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

    சிவில் பணியாளர்கள் தங்களது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு தங்களை மாற்றத்தின் வினைஊக்கிகளாகவும், மாற்றத்தை ஏற்படுத்த வசதி செய்துதருபவர்களாகவும் முன்னேறத் துடிக்கும் இந்தியாவின் உணர்வூட்டும் தலைவர்களாகவும் கருத வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் கேட்டுக்கொண்டார்.  சாதி, இன உணர்வுகள் , ஊழல், சமச்சீரின்மை, பாகுபாடு, வன்முறை உள்ளிட்ட அனைத்துக் கேடுகளையும் போராடிக் களையும் கூட்டுப் பொறுப்பை நமது நிர்வாகம், சட்டமியற்றும் அமைப்பு, நீதித்துறை மற்றும் ஊடகங்கள் ஏற்க வேண்டும் என்று அவர் கூறினார். ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை நிலவரங்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது, ஒருதலைபட்சமான கருத்தை நீக்கி சமத்துவமான நடைமுறையின்  மூலம் இவற்றை மாற்ற வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். 

குடியரசுத் துணைத் தலைவரின் முழுமையான உரைக்கு www.pib.nic.in  என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

------



(Release ID: 1529748) Visitor Counter : 198


Read this release in: Hindi , English