மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு முதன்முறையாக வாய்ப்பளிக்கப்படுகிறது
இந்தத் திட்டத்தின் கீழ் முதல் சுற்றில் 160 நிறுவனங்கள், 15ஆயிரம் இடங்களை வழங்குகின்றன
Posted On:
18 APR 2018 8:58PM by PIB Chennai
உலகம்முழுவதும் உள்ள மாணவர்கள் இந்தியாவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் புரட்சிகரமான முயற்சியாக, வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ், மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை இணை அமைச்சர் டாக்டர் சத்தியபால் சிங் ஆகியோர் கூட்டாக புதுதில்லி இந்தியா ஹேபிட்டட் மையத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ”இந்தியாவில் படியுங்கள்” என்னும் இணையதளத்தை தொடங்கிவைத்தனர். இந்த நிகழ்ச்சியில் இ-சனாடு மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய அகாடமிக் டெபாசிட்ரி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த இணையதளத்தையும் திருமதி. சுஷ்மா சுவராஜ் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமதி. சுவராஜ், ஞானத்தைத் தேடும் தாகம் எப்போதும் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் அடிப்படையான அம்சங்களாகும் என்று கூறினார். நமது வரலாறு முழுவதும் மனிதச் சிந்தனை, சித்தாந்தம் மற்றும் மேம்பாட்டுக்கு இந்தியா அறிவியல்பூர்வமான பங்களிப்பை அளித்துள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் காணொளிக் காட்சி மூலம் பங்கேற்ற மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவ்டேகர், ”இந்தியாவில் படியுங்கள்” முன்முயற்சி, இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்த கல்விநிறுவனங்களின் வாயில்களை வெளிநாட்டு மாணவர்களுக்குத் திறந்துவிடும் என்று கூறினார். தொடக்கத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த 30 நாடுகளின் மாணவர்களுக்கு இடமளிப்பதற்குக் கவனம்செலுத்தப்படும் என்றும், எதிர்காலத்தில் ஒருநாள் அமெரிக்காவைச் சேர்ந்த குடும்பங்கள் தங்களது குழந்தைகளை இந்தியாவுக்கு இளநிலை பட்டப்படிப்புகளில் சேர அனுப்பிவைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் சத்தியபால் சிங், தக்சஷீலா, நாளந்தா போன்ற உயரிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்களுடன் வசுதய்வக் குடும்பகம் என்ற கோட்பாட்டில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறினார். இ-சனாத் மற்றும் என்.ஏ.டி ஒருங்கிணைப்பின் மூலம் இந்தியாவின் கல்விமுறை தற்போது மேலும் வெளிப்படைத்தன்மையுடன் மாறிஉள்ளது என்றும் அவர் கூறினார்.
www.studyinindia.gov.in என்ற ஒருங்கிணைந்த இணையதளத்தை உருவாக்கியிருப்பதன் மூலம் இந்தியாவில் கல்வித்திட்டத்திற்கு ஒரே இடத்தில் தீர்வு காணும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
(Release ID: 1529662)
Visitor Counter : 517