நிதி அமைச்சகம்
ஒவ்வொரு மாநிலத்தின் நிதித் தேவையும் தனித்தனியாக அவற்றின் சிறப்பு அம்சங்களுக்கு ஏற்ப மதிப்பீடு செய்யப்படும்: என். கே. சிங்
Posted On:
19 APR 2018 3:22PM by PIB Chennai
தமிழக துணை முதலமைச்சர் திரு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழு இன்று 15-வது நிதி ஆணையத்தைச் சந்தித்தது. குழுவினர் ஆணையத்திடம் மனு ஒன்றைச் சமர்ப்பித்தனர்: ஆணையத்தின் நிபந்தனைகள் குறித்த தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
வளர்ச்சி குறைந்த மாநிலங்களுக்கு நிதியளிப்பதின் தேவையையும், சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் வளர்ந்துவரும் விருப்பங்களையும் சமன் செய்ய வேண்டும்: திரு. பன்னீர்செல்வம்
மக்களவைத் துணைத் தலைவர் திரு. எம். தம்பிதுரை உள்ளிட்ட அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய 40 உறுப்பினர்கள் கொண்ட இந்தக் குழுவினர் மாநில மக்களின் மேம்பாட்டுக்காக மேற்கொண்ட முயற்சிகள், திரட்டிய ஆதாரங்கள் ஆகியவற்றைச் சுமார் 35 நிமிடங்கள் நடந்த இந்தக் கூட்டத்தின்போது எடுத்துரைத்தனர். வளர்ச்சி குறைந்த மாநிலங்களுக்கு நிதியளிப்பதின் தேவையையும், சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் வளர்ந்துவரும் விருப்பங்களையும் சமன் செய்ய வேண்டும் என்றும், சிறப்பாகச் செயல்படும் மாநில மக்களின் விருப்பங்களை நிறைவு செய்ய வேண்டும் என்றும் குழுவினர் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டனர்.
இந்தியாவின் வளத்துக்குப் பெரும் பங்களித்துள்ள தமிழ்நாடு போன்ற முற்போக்கு மாநிலம் குறித்து ஆணையம் மிக கவனமாகப் பரிசீலனை செய்யும்: என்.கே.சிங்.
குழுவினரை வரவேற்ற ஆணையத்தின் தலைவர் திரு.என்.கே.சிங் அவர்களுக்குப் பாராட்டும் தெரிவித்தார். ஒவ்வொரு மாநிலத்தின் நிதித் தேவையும் தனித்தனியாக அவற்றின் சிறப்பு அம்சங்களுக்கு ஏற்ப மதிப்பீடு செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார். இந்தியாவின் வளத்துக்குப் பெரும் பங்களித்துள்ள தமிழ்நாடு போன்ற முற்போக்கு மாநிலம் குறித்து ஆணையம் மிக கவனமாகப் பரிசீலனை செய்யும் என்றும் அவர் கூறினார். நிதி ஆணையம் தமிழ்நாட்டில் பயணம் மேற்கொள்ளும் தேதி செப்டம்பர் மாத இறுதியில் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-------
(Release ID: 1529623)