நீர்வளத் துறை அமைச்சகம்
நாட்டில் 91 முக்கிய நீர்த் தேக்கங்களில் நீர் இருப்பு நிலைமை 2 சதவீதம் குறைந்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
13 APR 2018 10:56AM by PIB Chennai
நாட்டில் 91 பெரிய நீர் தேக்கங்களில் நீர் இருப்பு நிலைமை 2018 ஏப்ரல் 12 –ம் தேதி முடிவடைந்த வாரத்தில் 40.857 பில்லியன் கன மீட்டர் (பி.சி.எம்.) ஆக இருந்தது. இது இந்த நீர்த் தேக்கங்களின் மொத்த தண்ணீர் இருப்புத் திறனில் 25 சதவீதம் ஆகும். 2018 ஏப்ரல் 5 –ம் தேதி முடிவடைந்த வாரத்தில் நீர் இருப்புச் சதவீதம் 27 ஆக இருந்தது. 2018 ஏப்ரல் 12 –ம் தேதி முடிவடைந்த வாரத்தில் இந்த நீர்த் தேக்கங்களில் நீர் இருப்பு நிலைமை சென்ற ஆண்டு இதே காலத்தில் இருந்த இருப்புடன் ஒப்பிடுகையில் 84 சதவீதம் ஆகும்; கடந்த 10 ஆண்டுகளில் சராசரி நீர் இருப்பு நிலையுடன் ஒப்பிடுகையில் இது 90 சதவீதமாகும்.
இந்த 91 நீர்த் தேக்கங்களின் மொத்த நீர்ச் சேமிப்புத் திறன் 161.993 பி.சி.எம். ஆகும். இது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள மொத்த நீர் கொள்ளவுத் திறனான 257.812 பி.சி.எம். –வுடன் ஒப்பிடுகையில் 63 சதவீதமாகும். இந்த 91 நீர்த் தேக்கங்களில் 37 –ல் மொத்தம் 60 மெகா வாட்டிற்கும் கூடுதலான உற்பத்தித் திறன் கொண்ட நீர்மின்சக்தித் திறன்கள் இணைந்துள்ளன.
தெற்கு மண்டலத்தைப் பொறுத்தவரை மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பில் 31 நீர்த் தேக்கங்கள் அமைந்துள்ளன. இவற்றின் மொத்த தண்ணீர்ச் சேமிப்புத் திறன் 51.59 பி.சி.எம். ஆகும். இந்த நீர்த் தேக்கங்களில் தற்போது 8.41 பி.சி.எம். தண்ணீர் இருப்பதாகவும் இது மொத்தத் தண்ணீர் சேமிப்புத் திறனில் 16 சதவீதம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் இருப்பு சென்ற ஆண்டு இதே காலத்தில் 12 சதவீதம் ஆகும். இந்த நீர்த் தேக்கங்களில் இதே காலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சராசரி நீர் இருப்பு 22 சதவீதமாகும். இவ்வாறு சென்ற ஆண்டு இதே காலத்தில் இருந்த தண்ணீர் இருப்புநிலையை விட இந்த ஆண்டு கூடுதலாகவே உள்ளது எனினும் 10 ஆண்டு சராசரியுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும்.
சென்ற ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் தண்ணீர் இருப்பு நிலைமை தமிழ்நாடு, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், திரிபுரா, மகாராஷ்டிரா, உத்திராகான்ட், ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானா (இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான இரண்டு திட்டங்கள்), ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவற்றில் சிறப்பாகவே உள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் சமஅளவு நீர் இருப்பு ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் காணப்படுகிறது. பஞ்சாப், ஜார்கன்ட், ஒடிசா, குஜராத், உத்திரப்பிரதேஷ், சத்திஷ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சென்ற ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் நீர் இருப்பு நிலைமை குறைவாகவே உள்ளது.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
(வெளியீட்டு அடையாள எண்: 1528974)
வருகையாளர் எண்ணிக்கை : 199