இடுகை இடப்பட்ட நாள்:
12 APR 2018 3:57PM by PIB Chennai
திருமதி. மேனகா காந்தி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் தெரிவித்த யோசனையின்பேரிலான தனித்துவ நடவடிக்கை
குழந்தைகள் உதவித் தொலைபேசி (1098) 24 மணிநேரக் குழந்தைகளுக்கான சேவை மற்றும் பாக்ஸோ மின்னணுப் பெட்டி ஆகியன குறித்த தகவல்களை 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடப்புத்தகங்களின் முகப்புஅட்டையின் பின்பக்கத்தில் தேசியக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி சபை (என்சிஈஆர்டி) வெளியிட்டுள்ளது. குழந்தைகள் தங்களுக்குச் சாத்தியமான, பாதுகாப்பு/புகார்களைப் பற்றி, அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்வதற்காக மகளிர்-குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டபடி, மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், என்சிஈஆர்டியும் இந்தத் தகவலை இவ்வாறு வெளியிடுவதற்கு ஒப்புக்கொண்டன. சென்ற ஆண்டு, திருமதி மேனகா சஞ்சய் காந்தி தொலைபேசி மூலம் திரு. ஜவ்டேகரைத் தொடர்பு கொண்டு, பாக்ஸோ மின்னணுப் பெட்டி, குழந்தைகள் உதவித் தொலைபேசி சேவை 1098 ஆகியவற்றை என்சிஈஆர்டி வெளியீடுகள் மூலம் பிரபலப்படுத்துவது, கல்வித் திரைப்படங்கள் மூலம் பள்ளிகளில் குழந்தைகள் பாலியல் ரீதியில் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது பற்றிய திரைப்படங்களைத் திரையிடுவது, பள்ளிப் பணியாளர்கள் நியமனத்தில் கடுமையான நெறிமுறைகளைப் பின்பற்றுவது ஆகியவை குறித்து பரிந்துரை செய்தார்.
இந்தப் பாடப்புத்தகங்கள் மூலம் இந்தத் தகவல்கள் 15 லட்சம் பள்ளிகளில் பயிலும் சுமார் 26 கோடி பள்ளிக் குழந்தைகளுக்குச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் மேற்குறித்த பிரச்சினைகள் பற்றிய அத்தியாயத்தைச் சேர்க்கலாம் என்றும், என்சிஈஆர்டி-க்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் 12-ஆம் வகுப்புவரை தொடருவதால், இளம் உள்ளங்களில் போதுமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தைகள் உதவித் தொலைபேசி சேவை 1098 என்பது, தேசிய அளவிலான 24 மணிநேர இலவச அவசரக் குழந்தைகளுக்கான தொலைபேசிச் சேவையாகும். நாடெங்கும் 412 இடங்களில் தற்போது இந்தத் தொலைபேசிச் சேவை செயல்பாட்டில் உள்ளது. 2016 ஏப்ரல் முதல் 2017 மார்ச் வரையிலான காலத்தில் இந்த அவசரத் தொலைபேசிச் சேவை மூலம் 1.45 கோடி அழைப்புகள் பெறப்பட்டன. 2017 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் 78 லட்சத்திற்கும் கூடுதலான அழைப்புகள் பெறப்பட்டன. இந்தத் தொலைபேசிச் சேவை இக்கட்டில் உள்ள குழந்தைகளுக்குத் தொலைநிலை ஆலோசனை மூலமாகவோ நேரடி மீட்பு மூலமாகவோ உதவி வழங்குகிறது.
பாக்ஸோ மின்னணுப் பெட்டி என்பது ஆன்லைன் மூலமான புகார் மேலாண்மை அமைப்பு ஆகும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து எளிதாகவும், நேரடியாகவும் புகார் செய்வதற்கும், சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக 2012 பாக்ஸோ சட்டத்தின்படி, உடனடி நடவடிக்கை எடுக்கவும் இது உதவுகிறது. புதுதில்லியில் 26.08.2016 அன்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. மேனகா காந்தி, பாக்ஸோ மின்னணுப் பெட்டித் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். பாக்ஸோ மின்னணுப் பெட்டி பயன்படுத்துவதற்கான வலைதள முகவரி: : http://www.ncpcr.gov.in/user_complaints.php
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
---------