பிரதமர் அலுவலகம்

புதுதில்லியில் ஸ்பிக் மேக்கே அமைப்பின் 5 வது சர்வதேச்ச் சிறப்பு மாநாட்டில் காணொளி மூலம் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 05 JUN 2017 6:10PM by PIB Chennai

திரிபுரா மாநில ஆளுநர் திரு. தத்தகதா ராய் அவர்களே, ஹரியானா மாநில ஆளுநர் பேராசிரியர் கேப்டன் சிங் சோலங்கி அவர்களே, எனது அமைச்சரவை சகா திரு. சுரேஷ் பிரபு அவர்களே, ஸ்பிக் மகாய் அமைப்பின் ஆலோசனைக் குழுத் தலைவர் டாக்டர் கரண் சிங் அவர்களே, தலைவர் திரு. அருண் சகாய் அவர்களே, இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள இதர பிரமுகர்களே, எனது இளம் நண்பர்களே,

ஸ்பிக் மகாய் அமைப்பு உருவாக்கப்பட்ட 40 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி இப்போது நடைபெறும் 5 ஆவது சர்வதேச்ச் சிறப்பு மாநாட்டின் தருணத்தில் உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பரிய இசை, கலை, இலக்கியம், நாட்டுப்புறக் கலைகள் போன்றவற்றின் மூலம் இந்தியாவின் பாரம்பரியப் பெருமையை வளர்த்தெடுக்கும் மிக முக்கியமான பங்கை இந்த அமைப்பு செய்து வந்துள்ளது. இந்த அமைப்பின் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் இத்துறைகளில் ஊக்கம் பெற்றனர் என்பதோடு, நமது நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியம் குறித்தும் அறிந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்காகப் பேராசிரியர் கிரண் சேத்ஜியை நான் மனதாரப் பாராட்டுகிறேன். கடந்த 40 ஆண்டுகளாக இந்தக் கலாச்சார இயக்கத்தை மிகச் சிறப்பான முறையில் பேராசிரியர் கிரண் சேத்ஜி தலைமை தாங்கி நடத்திவருகிறார். அவரது பல ஆண்டுகளுக்கான விடாமுயற்சியின் விளைவாக இந்தியாவின் இசையும், கலாச்சாரமும் இளைஞர்களிடையே உயிரோட்டமாக இருந்துவருகிறது. அவர் அத்தகைய வகையில் தொடர்ந்து தேடலில் ஈடுபட்டு வந்தவர்.

நண்பர்களே, உண்மையான தேடலில் ஈடுபடுவோர் எந்தவிதமான விழைவும் இல்லாதவர்களாக, அனைத்திற்கும் மேலாகச் சாதாரண விருப்பங்களையெல்லாம் கடந்தவர்களாகவே இருந்துவந்துள்ளனர். ஒரு சம்பவம் பற்றிப் படித்தது இப்போது என் நினைவிற்கு வருகிறது. நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஒரு முறை தான் சந்தித்த இசைக் கலைஞரிடம் அரசிடமிருந்து எத்தகைய உதவியை எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த இசைக்கலைஞர் ஒரு குறிப்பிட்ட ராகத்தைக் குறிப்பிட்டு, பெரும்பாலான இசைக்கலைஞர்கள் அந்த ராகத்தை முறையாகப் பாடுவதே இல்லை; அதைக் கடித்துக் குதறிவிடுகிறார்கள். இவ்வாறு செய்வதை நிறுத்துவதற்கு அரசாங்கத்தினால் ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டார். இந்தப் பதிலைக் கேட்டதும், டாக்டர் ராஜேந்திர பிரசாத் புன்சிரிப்புடன் தலையைக் குனிந்துகொண்டாராம்.

இசைத்துறையைப் பொறுத்தவரையில் நிர்வாகம் அல்ல; அதன் ஒழுங்குதான் அதை ஆட்சி செய்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் மிகுந்த கட்டுப்பாட்டுடன், ஒருமித்த சிந்தனையுடன் நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் உள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று அந்தக் கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள மாணவர்களை இத்திட்டத்தோடு உங்கள் கழகம் இணைத்திருக்கிறது. அவர்களோடு இணைந்து செயல்படுவதற்காக மிகக் குறைந்த கட்டணத்தில் கலைஞர்களை ஏற்பாடு செய்திருக்கிறது. இதற்கான நிதிஆதாரங்களை திரட்டிவந்துள்ளது. உண்மையிலேயே இத்தகைய முயற்சி மிகவும் தனித்துவம் மிக்கது என்பதோடு பாராட்டத்தக்கதும் ஆகும்.

தனது ஆதரவாளர்களின் மூலம் இந்த அமைப்பு ஒரு குடும்பத்தையே உருவாக்கியுள்ளது. இந்தக் குடும்பம் நாட்டின் எல்லைகளையெல்லாம் கடந்து உலகம் முழுவதிலும் இந்திய கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதில் முக்கியமான பங்கினை வகித்துள்ளது.

இந்தச் சர்வதேச சிறப்பு மாநாடு நடைபெறும் இத்தருணத்தில் இந்த அமைப்பினைக் கடந்த 40 ஆண்டு காலமாக ஆதரித்துவரும் மகத்தான கலைஞர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நெடுங்காலமாக இந்தக் கலாச்சார இயக்கத்தினை ஆதரித்துவரும் தனிநபர்கள், அமைப்புகள் என அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இத்திட்டத்தில் பங்கேற்கும் நம் நாட்டையும் வெளிநாடுகளையும் சேர்ந்த மாணவர்கள் மிகுந்த நல்வாய்ப்பு பெற்றவர்களாவர். இதன் மூலம் அவர்கள் இந்தியாவின் மிகுந்த மரியாதைக்குரிய கலைஞர்களின் ஒரே ஒரு நிகழ்ச்சியல்ல; பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க முடியும். இந்த நிகழ்ச்சிகளின் மூலம் நமது நாட்டின் கலாச்சாரப் பன்முகத் தன்மை, அதன் சிறப்பியல்புகள், அழகு, ஒழுங்கமைப்பு, எளிமை, கருணை ஆகிய அனைத்தையும் உங்களால் உணர முடியும் என்றே நான் நம்புகிறேன். இவை அனைத்துமே நமது மகத்தான நாட்டின் அறிகுறிகளாக, நமது தாய்நாட்டின் சின்னங்களாக விளங்குபவை.

நண்பர்களே, நமது நாட்டின் மண்ணிலிருந்து கிளர்ந்தெழும் இசை, இங்கு உயிர்பெற்ற இசை நமக்கு மகிழ்ச்சியை மட்டுமே தருவதில்லை. அது நமது இதயத்தையும், நமது மனத்தையும் தொட்டுச்செல்கின்றது.  இந்திய இசையானது ஒருவரது சிந்தனைப்போக்கு, அவரது மனம், மனப்போக்கு ஆகியவற்றிலும் செல்வாக்கு செலுத்துவதாகவும் விளங்குகிறது.

அது எந்தப் பாணியில் அமைந்ததாக இருந்தாலும் சரி, பாரம்பரிய இசையை நாம் கேட்கும்போதெல்லாம் அதை நாம் உணர முடியாமல் கூட இருக்கலாம்; எனினும் நாம் அதைக் கவனமாகக் கேட்கும்போது, முழுமையானதோர் அமைதியை நம்மால் அனுபவிக்க முடியும். நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே இசை விளங்குகிறது.  உலகத்தைப் பொறுத்தவரை, இசை என்பது ஒரு கலை; பலருக்கும் வாழ்க்கை வசதிகளை வழங்கும் ஆதாரமாகவும் அது விளங்குகிறது. ஆனால் இந்திய இசையைப் பொறுத்தவரையில் அது வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு வழியாக, விடாமுயற்சியாகவே அமைகிறது.

மாட்சிமை, மாயாஜாலம், மறைபொருள் ஆகிய இந்த மூன்றும்தான் இந்திய இசையின் தன்மைகள் ஆகும். இமாலயத்தின் உயரம், கங்கைத் தாயின் ஆழம், அஜந்தா-எல்லோராவின் அழகு, பிரம்மபுத்ராவின் பரந்து விரிந்த தன்மை, கடலின் பலவிதமான அலைகள், இந்தியச் சமூகத்தின் உள்ளார்ந்த ஆன்மீக வாழ்க்கை இவை அனைத்தும் உள்ளடங்கியதாகவே இந்திய இசை அமைகிறது. எனவேதான் இசையின் வலிமையைத் தன்னளவில் உணர்ந்துகொள்ளவும், அதை விளக்கவும் தங்கள் வாழ்நாள் முழுவதையுமே ஒரு சிலர் செலவழிக்கின்றனர்.

இந்திய இசை, அது நாட்டுப்புற இசையாக இருந்தாலும் சரி, பாரம்பரிய இசையாக இருந்தாலும் சரி, அல்லது திரைப்பட இசையாக இருந்தாலும் சரி, எப்போதுமே நமது நாட்டையும், நமது சமூகத்தையும் ஒன்றிணைப்பதாகவே அமைகின்றன. மதம், சாதி ஆகியவை தொடர்பான சமூகரீதியான தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்ற செய்தியையே இசை நமக்கு வழங்குகிறது. வட இந்தியாவின் இந்துஸ்தானி இசை, தென் இந்தியாவின் கர்நாடக இசை, வங்காளத்தின் ரவீந்திர சங்கீதம், அசாமின் ஜோதி இசை, ஜம்மு-காஷ்மீரின் சுஃபி இசை ஆகியவையே நமது கங்கை-யமுனை நாகரீகத்தின் அடித்தளமாக அமைகின்றன.

இந்திய இசை – நாட்டியத்தைக் கற்றுக் கொள்ள வெளிநாட்டிலிருந்து ஒருவர் இந்தியாவிற்கு வந்தால், கால்களை மையமாகக் கொண்ட, கைகளை மையமாகக் கொண்ட, தலையை மையமாகக் கொண்ட, உடம்பின் பல்வேறு அசைவுகளை மையமாகக் கொண்ட எண்ணற்ற நாட்டியப் பாணிகள் இருப்பதைக் கண்டு பெரிதும் வியப்படைந்து போவார். இந்த நாட்டியப் பாணிகள் அனைத்துமே வரலாற்றின் பல்வேறு காலப்பகுதிகளில் உருவானவை ஆகும்.

நமது மற்றொரு சிறப்பம்சமாக விளங்குவது நமது நாட்டுப்புற இசை ஆகும். இது நமது பழங்குடி மக்களால் காலம்காலமாக வளர்த்தெடுக்கப்பட்டுவந்துள்ள ஒன்றாகும். அந்த நாட்களின் சமூக அமைப்பை உடைத்தெறிவதற்காகவே அவர்கள் தங்களுக்கேயுரிய பாணி, வழங்குமுறை, கதை சொல்லும் விதம் ஆகியவற்றை உருவாக்கிக் கொண்டனர். உள்ளூர் மக்களின் மொழியைப் பயன்படுத்தி நாட்டுப்புறப் பாடகர்களும் நாட்டியக் கலைஞர்களும் தங்களுக்கேயுரிய பாணியை உருவாக்கிக்கொண்டனர். இந்தப் பாணிக்குக் கடுமையான பயிற்சி தேவைப்படுவதில்லை என்ற வகையில் சாதாரண மக்களே இதில் பங்கேற்க முடியும் என்பதே இதன் தனிச்சிறப்பாகும்.

நமது கலாச்சாரத்தின் இத்தகைய நுணுக்கங்கள், அதன் விரிவான தளங்கள் ஆகியவை குறித்து உங்களில் பலருக்கும் நன்றாகவே தெரியும். எனினும் இன்றைய இளம் தலைமுறையினர் பெரும்பாலும் இவற்றைப் பற்றித் தெரிந்திருக்க மாட்டார்கள். இத்தகைய அக்கறையற்ற போக்கின் விளைவாகப் பல இசைக்கருவிகளும், இசைப்பாணிகளும் காணாமல் போகும் நிலை உள்ளது. சிறுவர்கள் பலருக்கும் கிடார்  இசைக்கருவியின் பல்வேறு வகைகளைப் பற்றித் தெரிந்திருக்கும். ஆனால் சரோத், சாரங்கி ஆகிய நமக்கேயுரிய இசைக்கருவிகளுக்கு இடையேயுள்ள வேறுபாடுகளைப் பற்றி மிக அரிதாகவே  தெரிந்திருக்கும். இத்தகையதொரு நிலை விரும்பத்தக்கதல்ல.

நமது நாட்டின் பாரம்பரியமான இந்திய இசை என்பது நம் அனைவருக்குமான வரப்பிரசாதம் ஆகும். இந்தப் பாரம்பரியத்திற்கே உரித்தான வலிமையும் ஆற்றலும் உண்டு. நமது வேதங்கள்  “சுதந்திரத்திற்கு நாம் தர வேண்டிய விலை நிரந்தரமான விழிப்புணர்வு” என்று குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு தருணத்திலும் நாம் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். நமது பாரம்பரியத்திற்காக ஒவ்வொரு தருணத்திலும் நாம் செயலாற்ற வேண்டும்.

நமது பாரம்பரியம் குறித்து நாம் எப்போதுமே அலட்சியமாக இருத்தல் கூடாது. நமது கலாச்சாரம், கலை, இசை, இலக்கியம், நமது பல்வேறு வகையான மொழிகள், நமது இயற்கை ஆகிய அனைத்துமே நமது விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் பகுதிகள் ஆகும். தனது பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை மறந்துவிட்டு எந்தவொரு நாடும் முன்னேற இயலாது. இந்தப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், அதனை மேலும் வலுப்படுத்தவுமான கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

நண்பர்களே, இன்று உலகச் சுற்றுச்சூழல் தினம். நமது இசையும், நமது கலைகளும் நம் இயற்கையைக் காப்பாற்ற வேண்டுமென்ற செய்தியை தொடர்ந்து நமக்குக் கொடுத்துவருகிறது.

இன்றைய தினம், பருவநிலை மாற்றம் என்ற விஷயம் உலகம் முழுவதிலும் மிக முக்கியமான விஷயமாக நீடித்துவருகிறது. வரவிருக்கும் தலைமுறையினருக்காக நமது சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகக் கடந்த மூன்றாண்டுகளாக இந்தியா எடுத்துவந்துள்ள நடவடிக்கைகள் உலகம் முழுவதிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இப்போது உலகம் முழுவதுமே இந்தியாவை எதிர்நோக்கி வருகிறது. எனவே நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது; தங்களது பாரம்பரியத்தைப் பாதுகாப்பது ஆகியவை குறித்த விழிப்புணர்வு கொண்டவர்களாக இளைஞர்கள் இருக்க வேண்டியது மிக அவசியமானதாகும்.

ஆண்டிற்கு 7,000லிருந்து 8,000 நிகழ்ச்சிகளை நீங்கள் ஏற்பாடு செய்து வருகிறீர்கள். கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்தியை நீங்கள் கொண்டுசெல்கிறீர்கள். உங்கள் நிகழ்ச்சிகளில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க முன்னுரிமை வழங்கினீர்களெனில், அது மனித குலத்திற்குச் செய்யும் மகத்தான சேவையாக அமையும்.

“ஒரே இந்தியா- சிறந்த இந்தியா இயக்கம்” என்ற அரசின் திட்டத்தை வலுப்படுத்துவதில் மிக முக்கியமானதொரு பங்கினை உங்கள் அனைவராலும் செய்ய முடியும். இந்த இயக்கம் நாட்டின் பல்வேறுபட்ட கலாச்சாரத்தடை வலுப்படுத்த இந்தியாவின் பல்வேறு வகையான பாரம்பரியங்கள், மொழிகள், சாப்பிடும், வாழும் முறைகள் ஆகியவை பற்றி நாட்டின் குடிமக்கள் அறிந்துகொள்ளச் செய்வதற்கான முயற்சியே ஆகும்.

இதன் கீழ் இரண்டு வேறுபட்ட மாநிலங்கள் ஒன்றாக, ஓர் இணையாக வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இணையாக ஒரே மேடையில் கொண்டு வரப்பட்ட பிறகு, ஒரு மாநிலத்தின் மக்கள் மற்ற மாநிலத்தின் பாரம்பரியங்களை அறிந்துகொள்ளும் ஏற்பாடு செய்யப்படுகிறது. வினா-விடை போட்டிகள், நாட்டியப் போட்டிகள், உணவுப் போட்டிகள் போன்றவை அடுத்த மாநிலத்தின் மொழியின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன.

இந்த இயக்கத்தை முன்னெடுத்துச்செல்வதில் உங்களைப் போன்ற அமைப்புகள் எங்களுக்கு உதவ முடியும்.  உங்கள் நிகழ்ச்சிகளுக்காகப் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்குச் செல்கிறீர்கள். இதே போன்ற இணையை அந்தப் பள்ளிகளுக்கு இடையேயும் உருவாக்கி, தங்களிடையே கலாச்சாரப் பரிமாற்றங்களை மேற்கொள்ள அவர்களை அனுமதிக்கலாம்.

இளைஞர்களின் சக்திக்குப் புதியதொரு திசைவழியைக் கொடுக்க கடந்த 40 ஆண்டுகளாக நீங்கள் முயற்சி செய்துவந்துள்ளீர்கள். இப்போது நமது நாடு உலகத்திலேயே அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது. இளைஞர்களின் உற்சாகம் நிரம்பியதாகவும் உள்ளது.  நாட்டை உருவாக்குவதில் இந்தச் சக்தியை முறையாக வழிப்படுத்துவதில் இதைப் போன்ற நிறுவனங்கள் பெரும் பங்கை ஆற்ற முடியும். நாட்டின் இளைஞர்கள் நாட்டை உருவாக்குவதில் முன்னேறிச்செல்லும்போது வளர்ச்சியின் புதிய உச்சங்களை அவர்களால் எட்ட முடியும்  என்ற உண்மைக்கு வரலாறே சாட்சியாக உள்ளது.

நண்பர்களே, 2022ஆம் ஆண்டில் நமது நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை விழாவாகக் கொண்டாடஇருக்கிறோம். அதற்கு முன்பாக, நமது நாட்டை அதன் பலவீனங்களில் இருந்து விடுவித்து புதிய இந்தியாவை உருவாக்குவதை நோக்கி அதை எடுத்துச் செல்ல வேண்டும். புதிய இந்தியா என்ற இந்த உறுதிப்பாடு நமது நாட்டின் ஒவ்வொரு நபரின், ஒவ்வொரு குடும்பத்தின், ஒவ்வொரு வீட்டின், ஒவ்வொரு நிறுவனத்தின், ஒவ்வொரு அமைப்பின், ஒவ்வொரு நகரத்தின், ஒவ்வொரு கிராமத்தின் உறுதிப்பாடாக இருக்க வேண்டும். இந்த உறுதிப்பாட்டை நிறைவேற்ற, நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

2002ஆம் ஆண்டை மனதில் இருத்திக் கொண்டு நீங்களும் ஒருசில இலக்குகளை உருவாக்கிக்கொள்ளுங்கள் என்று உங்கள் அனைவரையும் இத்தருணத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே, ‘பாரம்பரியத்திற்கும்’ ‘இன்றைய யுகத்திற்கும்’ இடையே கலந்துரையாடல் இருக்கும்போதுதான் கலாச்சாரங்கள் உயிரோட்டத்துடன் நீடிக்கின்றன. ‘ஸ்பிக் மகாய்’ அதைத்தான் செய்துவருகிறது. உங்களின் ஒவ்வொரு பிரதிநிதியுமே நாட்டின் கலாச்சாரத்தை, நாகரிகத்தை முன்னெடுத்துச்செல்பவராக விளங்குகின்றனர். இந்த முன்னெடுப்பு தொடர்ந்து நீடிக்கட்டும்; உங்களது உற்சாகமும் ததும்பிவழியட்டும். எனது நல்வாழ்த்துகளுடன் உரையை முடிக்கிறேன். இந்த நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!

***



(Release ID: 1528844) Visitor Counter : 72


Read this release in: English