பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒப்பந்தத்தின் கீழ் வரும் பகுதிகளில் நிலக்கரி படுகை மீத்தேன் (சி.பி.எம்.) துரப்பணத்துக்கும், பயன்படுத்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 11 APR 2018 1:51PM by PIB Chennai

மத்திய பெட்ரோலியம், இயற்கை வாயு அமைச்சகம் வெளியிட்ட 3.11.2015 தேதியிட்ட அறிவிக்கையின் பிரிவு 3 (xiii) –ஐ எண்ணெய் வயல்கள் வரன்முறை மற்றும் மேம்பாடு சட்டம் 1948-ன் பிரிவு 12-ன் கீழ் திருத்தி அறிவிக்கை வெளியிடுவதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.

இந்தத் திருத்தத்தின் காரணமாகப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு விதிகள் 1959-ன் கீழ், சில சலுகைகள் இந்திய நிலக்கரி நிறுவனத்திற்கும், அதன் துணைநிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு விதிகள் 1959-ன் கீழ், நிலக்கரி அதிகம் உள்ள பகுதிகளின் கீழ் நிலக்கரி படுகை மீத்தேனை எடுப்பதற்கு உரிமம்/ குத்தகை பெறுவதற்கு இவற்றை விண்ணப்பிக்கத் தேவையில்லை.

தாக்கம்:

இந்த முடிவு “வர்த்தகம் புரிதலை எளிதாக்குதல்” என்ற அரசின் திட்டத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது. இதன் காரணமாக நிலக்கரி படுகை மீத்தேன் துரப்பணமும், பயன்பாடும் விரைவுபடுத்தப்படும், இயற்கை வாயு கிடைப்பது அதிகரிக்கும், இயற்கை வாயு தேவை மற்றும் வழங்கல் ஆகியவற்றுக்கு இடையேயுள்ள இடைவெளி குறையும். நிலக்கரி படுகை மீத்தேன் வாயு துரப்பணம் மற்றும் பயன்பாடு பணிகள் பொருளாதாரச் செயல்பாடுகளைத் தோற்றுவிக்கும். இதனையடுத்து நிலக்கரி படுகை மீத்தேன் செயல்பாடு மற்றும் தொழில்துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் திறன் பெற்றதாக அமையும்.

பின்னணி:

இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் நிலக்கரி சுரங்கப் பணிகளுக்கான குத்தகை பெற்றுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து நிலக்கரி பகுதிகளிலும் நிலக்கரி படுகை மீத்தேன் துரப்பணம் மற்றும் பயன்பாட்டுக்கு உரிமை பெற்றவை என்ற அறிவிக்கையை 3.11.2015 அன்று மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிக்கையின் பிரிவு 3 (vi) –ன்படி குத்தகை பெற்றவர் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு விதிகள் 1959-ன் கீழ் “நிலக்கரி படுகை மீத்தேனுக்கான சுரங்கக் குத்தகையைப் பெறுவதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்திற்கு மத்திய சுரங்கத் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தின் விரிவான பரிந்துரைகளுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்”.(Release ID: 1528634) Visitor Counter : 119


Read this release in: English , Marathi