பிரதமர் அலுவலகம்

புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேசச் சூரியசக்திக் கூட்டணி அமைப்பு மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 11 MAR 2018 2:31PM by PIB Chennai

  மாண்புமிகு அதிபர் மேக்ரான் அவர்களே, மாண்புமிகு அதிபர்களே, பிரதமர்களே, மரியாதைக்குரிய விருந்தினர்களே,

    சீமாட்டிகளே, கனவான்களே,  அனைவருக்கும் வணக்கம்.

    தி்ல்லியில் நடைபெறும் சர்வதேசச் சூரியசக்திக் கூட்டணி அமைப்பு மாநாட்டுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

   பாரீசில் 2015 நவம்பர் மாதம் நடைபெற்ற 21-வது தரப்பினர் மாநாட்டின்போது, வரலாற்றுச் சிறப்புமிக்க இன்றைய தினத்துக்கான விதை ஊன்றப்பட்டது.  இன்று அந்த விதையின் பசுமையான இலைகள் தோன்றத்தொடங்கியுள்ளன.

    இந்த இளம் செடியின் புதிய சாத்தியக்கூறுகள் பற்றிய நடவடிக்கைகளில் பிரான்ஸ் மதிப்பிடமுடியாத பெரிய பங்கினை ஆற்றியுள்ளது. உங்கள் அனைவரின் கூட்டுமுயற்சி மற்றும் உறுதிப்பாடு இல்லாவிட்டால் இந்த இளம் நாற்றான சர்வதேச சூரியசக்திக் கூட்டணி, நாட்டப்பட்டிருக்க முடியாது. எனவே நான் பிரான்சுக்கும் உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றியுடையவனாக உள்ளேன். இந்தக் கூட்டணியில் சேரத் தகுதியுள்ள 121 நாடுகளில் 61 ஏற்கெனவே சேர்ந்துள்ளன. இவற்றில் 31 கூட்டணிக்கான கட்டமைப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன. எனினும், இந்தக் கூட்டணியில், பங்கு நாடுகளாக உள்ள நம் அனைவருக்கும் கூடுதலாக சூரியக்கடவுள்தான் நமது மிகப்பெரிய கூட்டாளி. அவர்தான் வெளிச்சூழலுக்கு ஒளி வழங்குவதுடன் நமது தீர்மானத்திற்கு வலுவையும் சேர்த்துள்ளார். 

 நண்பர்களே,

  பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது புவி தோன்றா காலத்தில் இருந்தே சூரியன் ஒளியையும், உயிரையையும் உலகுக்கு வழங்கிவருகிறது. ஜப்பான் முதல் பெரு வரை அது கிரேக்கம் ஆகட்டும்,  ரோம் ஆகட்டும், எகிப்து ஆகட்டும், இங்கா சமுதாயம் ஆகட்டும், தொன்மையான மாயா நாகரீகம் ஆகட்டும் அனைவரும் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவத்தையும்  மரியாதையையும் அளித்துவந்துள்ளன.

    எனினும், இந்தியத் தத்துவத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சூரியனுக்கு வழங்கிவரும் மத்திய இடம் முன் எப்போதும் இல்லாத ஒன்று.

   இந்தியாவில், வேதங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே  சூரியன் உலகின் ஆன்மாவாகக் கருதப்படுகிறது. இந்தியாவில், உயிர் முழுமைக்குமே  ஆதாரமாகச் சூரியன் கருதப்படுகிறது. இன்று நான் பருவநிலை மாற்றச் சவாலை எதிர்கொள்ள பல்வேறு வழிகளைக் காண முயன்றுவரும் நிலையில்,  தொன்மையான தத்துவத்தின்  விரிவான அணுகுமுறை  மற்றும் சமச்சீர்மையைக் கவனித்தாக வேண்டும்.

நண்பர்களே,

  நமது பசுமை எதிர்காலம் நாம் எல்லோரும் இணைந்து என்ன செய்ய முடியும் என்பதைப் பொறுத்தே உள்ளது. மகாத்மா காந்தியின் வார்த்தைகள் என் நினைவுக்கு வருகின்றன. ”நாம் செய்வதற்கும் நாம் எதைச் செய்ய இயலும் என்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு உலகின் பிரச்சினைகளில் பலவற்றைத் தீர்க்கப் போதுமானது” என்று காந்தியடிகள் கூறினார்.

   இன்று உலகத் தலைவர்கள் இங்குக் கூடியிருப்பது மனிதகுலத்தின் எரிசக்தித் தேவைகளை நிலையான வழியில் சந்திப்பதற்குச் சூரியசக்தி திறம்பட்ட ஏற்புடைய தீர்வை வழங்குகிறது என்ற உண்மையை எதிரொலிப்பதாக  உள்ளது.

 நண்பர்களே,

  உலகிலேயே மிகப்பெரிய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி விரிவாக்கத் திட்டத்தை இந்தியாவில் தொடங்கியுள்ளோம். புதுப்பிக்கக்கூடிய  ஆதாரங்களிலிருந்து 175 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உள்ளோம். அதில் 100 கிகாவாட் மின்சாரம் சூரியசக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும்.

  நாங்கள் ஏற்கெனவே இருபது கிகாவாட் அளவுக்குச் சூரியசக்தி மின்உற்பத்தித் திறனை நிறுவியுள்ளோம். இந்தியாவில் புதுப்பிக்கக் கூடிய ஆதாரங்கள் மூலம் பாரம்பரிய எரிசக்தி ஆதாரங்களைவிட அதிகமான உற்பத்தித் திறனைச் சேர்த்துவருகிறோம்.   

  இந்தியாவில் அடல் ஜோதி திட்டத்தின் நோக்கம் மின்சாரப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் சூரியசக்தி அடிப்படையிலான தெருவிளக்குகளை நிறுவுவது ஆகும். சூரியசக்தி படிப்பு விளக்குகள் திட்டம் பள்ளி செல்லும் சுமார் 70 லட்சம் மாணாக்கர்களுக்கு ஒளி வழங்கி வருகிறது.

  சூரியசக்தியை இதர தொழில்நுட்பங்களுடன் இணைத்தால் முடிவுகள் இன்றும் சிறப்பாக இருக்கும். உதாரணமாக, அரசு வழங்கிய 28 கோடி எல் இ டி பல்புகள் கடந்த மூன்று ஆண்டுகளில் 200 கோடி டாலர் பணத்தை மிச்சப்படுத்தியிருப்பதுடன் 4 கிகாவாட் மின்சாரத்தையும் சிக்கனப்படுத்திச் சேமித்துள்ளது. அத்தோடு மட்டுமின்றி கார்பன்டை ஆக்ஸைடு உற்பத்தியும், 30 மில்லியன் டன் அளவு குறைந்துள்ளது.

நண்பர்களே,

   சூரியசக்தி புரட்சி இந்தியாவில் மட்டுமின்றி மொத்த உலகிலுமே ஏற்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவில் பயிற்சி பெற்ற சூரியசக்தி அன்னையர்களின் பாட்டுக்கள், பேச்சுக்கள், வீடியோக்களை நீங்கள் பார்த்தீர்கள். இப்போது நீங்கள் அனைவரும் இந்தச் சூரியசக்தி அன்னையர் பற்றி நன்கு அறிந்துள்ளீர்கள். அவர்களது கதை மிகவும் சுவராஸ்யம் நிறைந்தது, ஆர்வமூட்டுவது.

  சர்வதேசச் சூரியசக்தியின் கூட்டணியின் தொகுப்பு நிதியத்திற்குப் பங்களித்ததுடன்  கூடுதலாகச்  சர்வதேசச் சூரியசக்திக் கூட்டணிச் செயலகம் அமைப்பதற்கு 62 மில்லியன் டாலர் அளித்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆண்டுதோறும் இந்தக் கூட்டணியின் உறுப்பினர்களுக்குச் சூரியசக்தித் துறையில் பயிற்சியளிக்க 500 இடங்களை ஒதுக்கிவைத்து வழங்குவோம் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    உலகெங்கிலும் 143 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் 13 சூரியசக்தித் திட்டங்களை நிறைவு செய்துள்ளோம் அல்லது அமல்படுத்தி வருகிறோம்.  15 இதர வளரும் நாடுகளில் மேலும் 27 திட்டங்களுக்கு 140 கோடி டாலர் உதவியை இந்தியா வழங்க உள்ளது. 

   உறுப்பு நாடுகளுக்கு வங்கிகளில் கடன் பெறும் தகுதியுள்ள திட்டங்களை வடிவமைத்துத் தர ஆலோசனை சேவை வழங்குவதற்கு எனத் திட்டத் தயாரிப்பு வசதி அமைக்க உள்ளோம்.

  சூரியசக்தி தொழில்நுட்பத்தில் உள்ள இடைவெளிகளை  நிரப்புவதற்காக இந்தியா சூரியசக்தி தொழில்நுட்ப இயக்கம் ஒன்றைத் தொடங்க உள்ளது என்பதை அறிவித்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த இயக்கம் சர்வதேச அளவில் கவனம் செலுத்துவதாகவும், சூரியசக்தித் தொழில்நுட்பத்துறையில் ஆராய்ச்சி மேம்பாட்டுப் பணிகளில் தலைமையேற்றி நடத்திச்செல்வதாகவும் அமையும். எமது அரசுத்துறை, தொழில்நுட்பத்துறை, மற்றும் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த  முயற்சி ஆகியன இதில் இடம் பெற்றிருக்கும்.

 நண்பர்களே,

  காற்றைப்போல மிக அதிக அளவில் கிடைக்கக்கூடிய சூரிய சக்தியை மேம்படுத்திப் பயன்படுத்துவதால் புவியின் கார்பன் அளவுகள் குறைவதுடன் நம் அனைவரையும் வளமிக்கவர்களாகவும் அது மாற்றும்.

நண்பர்களே,

   சில விஷயங்களை, நாம் மனதில் கொள்ளவேண்டும் அவையாவன: அநேக நாடுகளில் சூரியன் ஆண்டு முழுவதும் தனது ஒளிச்சக்தியைத் தொடர்ந்து அளித்து வரும் நிலையிலும், இதர ஆதாரங்களும் தொழில்நுட்பமும் அதனை மின்உற்பத்திக்குப் பயன்படுத்தத் தடையாக உள்ளன.

    மறுபுறம், சில நாடுகள் மற்றும் தீவுகளில் பருவநிலை மாற்றம் காரணமாக அவை மூழ்கிபோகும் நேரடி அபாயம் ஏற்பட்டுள்ளது. மூன்றாவதாக வெளிச்சத்திற்கு மட்டுமின்றி சூரியசக்தி இதர துறைகளான போக்குவரத்து, தூய்மையான சமையல், விவசாயம், சூரியசக்தி பம்புகள், சுகாதார பராமரிப்பு ஆகியவற்றிலும் பயன்படக்கூடியது.

   தொழில்நுட்பம் கிடைத்தல் மற்றும் மேம்பாடு, நிதி ஆதாரங்கள், செலவினக்குறைப்பு, சேமிப்புத்தொழில்நுட்ப மேம்பாடு, மொத்த உற்பத்தி, புதுமைப்படைப்புக்கான சூழல் அமைப்பு ஆகியவை அனைத்தும் சூரியசக்திப் பயன்பாட்டை ஊக்குவிக்க மிகவும் அத்தியாவசியமானவை.

நண்பர்களே,

   முன்னோக்கிச் செல்லும் பாதை எது என்பது குறித்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். என் மனதில் பத்து செயல்திட்ட விஷயங்கள் உள்ளன, அவற்றை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலாவதாக சிறப்பான, குறைந்த விலையிலான சூரியசக்தித் தொழில்நுட்பம் நாம் அனைவருக்கும் எளிதாகவும், வசதியாகவும் கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

   நமது சக்தி ஆதாரங்கள் கலவையில், சூரியசக்தி விகிதாச்சாரத்தை உயர்த்த வேண்டும். நாம் அனைவரும் புதுமை படைத்தலை ஊக்குவிக்க வேண்டும், அப்போதுதான் பல்வேறு தேவைகளுக்கான சூரியசக்தித் தீர்வுகள் ஏற்படும்.

     சூரியசக்தித் திட்டங்களுக்குச் சலுகை நிதியுதவி, இடரில்லாத  நிதியுதவி, கிடைக்க வழி செய்யவேண்டும். சூரியசக்தித் தீர்வுகளை உருவாக்கிக் கடைப்பிடிப்பதில் புதிய வேகத்தை ஏற்படுத்துவதுடன் இது சம்பந்தமாகக் கட்டுப்பாடு மற்றும் தர அம்சங்களை உருவாக்க வேண்டும். வளரும் நாடுகளில், வங்கிக்கடனுதவி பெறத் தகுதி உள்ள திட்டங்களுக்கு ஆதரவளிக்க ஆலோசனை அமைப்புகள் ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

  நமது முயற்சிகளில் கூடுதலான அனைத்தையும் உள்ளடக்கிய நிலை மற்றும் பங்களிப்பு வலியுறுத்தப்பட வேண்டும். விரிவான மீச்சிறப்பு மையங்களின் கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும். இந்தக் கட்டமைப்பு உள்ளூர் காரணிகளையும் நிலைகளையும் கருத்தில் கொண்டதாகச் செயல்பட வேண்டும்.

   சூரிய எரிசக்திக் கொள்கையை முழுமையான மேம்பாட்டுப் பின்னணியில் நாம் பார்க்கவேண்டும். அப்போதுதான் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் அதிகமான பங்களிக்க இயலும். சர்வதேசச் சூரியசக்திக் கூட்டணி செயலகத்தை வலுவானதாகவும் தொழில் திறன் மிக்கதாகவும் அமைக்க வேண்டும்.

நண்பர்களே,

   சர்வதேச சூரியசக்தி கூட்டணி மூலம் இந்தச் செயல் திட்டங்கள் அனைத்திலும் விரிவாக முன்னேற நம்மால் முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

நண்பர்களே,

   இன்றைய தினத்தின் இந்த நிகழ்வு நமது பயணத்தின் ஒரு தொடக்கம் தான். நமது கூட்டணி சூரியனின் ஒளி உதவியுடன் நமது வாழ்க்கையை மேலும் பிரகாசமானதாக மாற்ற முடியும். ” நாம் சூரியனை மேலும் பிரகாசமானதாகச் செய்வோம்” என்ற கூற்றினை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்ற முடியும். இந்தியத் தத்துவத்தின் ஆன்மா போன்றது. உலகம் முழுமையுமே ஒரு குடும்பம் என்று பொருள்படும் வசுதைவக் குடும்பகம் என்பதாகும்.

   முழு உலகின் மேம்பாட்டை நாம் தேடினால், மனிதகுலம் மொத்தத்திற்குமான மேம்பாட்டை நாம் தேடினால், நாம் நமது முயற்சிகளிலும் நோக்கங்களிலும் ஒற்றுமையையும் ஒருங்கிணைந்த தன்மையையும் உருவாக்க முடியும்.

நண்பர்களே,

     இருளிலிருந்து ஒளியை நோக்கி நடப்போம் என்று பொருள்படும் தமசோ ம ஜோதிர்கமய என்ற தொன்மைக்கால ஞானிகளின் பிரார்த்தனையில் அடங்கியுள்ள அதே பாதையில் நமது பயணமாக அது அமையும்.

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி

உங்களுக்கு நன்றி

-------



(Release ID: 1528528) Visitor Counter : 261


Read this release in: English , Urdu , Hindi , Assamese